Monday, February 28, 2022

குழந்தையைப் போல வாழ்வோம்.

குழந்தையைப் போல வாழ்வோம்.



", குழந்தைக்குச் சொந்தமான,
உனக்குப் பிடித்தமான இன்னொரு குணத்தைச் சொல்லு."

"குழந்தை மாசற்றது. (Innocent)
நாமும் குழந்தையைப் போல மாசற்றவர்களாக இருந்தால் இறையரசுக்குள் நுழைவது மிக எளிது."

",குழந்தையைப் போல மாசற்றவர்களாக இருந்தால் இறையரசுக்குள் நுழைவது மிக எளிது.

ஆனால் மாசற்றவர்களாக இருப்பது எளிதா?"

"அது குழந்தையாகவே இருந்தால்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அது முடியாதே!

நாம் குழந்தையாகவே இருக்க முடியாது என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆனால் முடியாத ஒன்றைக் கடவுள் சொல்ல மாட்டார் என்று நமக்குத் தெரியும்."

", நிச்சயமாக. ஆனால் குழந்தையின் மாசற்ற தன்மைக்கு காரணத்தைக் கண்டறிந்து அதன்படி வாழ முடியும் என்று நினைக்கிறேன்."

"மாசற்ற தன்மை என்றால் பாவம் இல்லாத தன்மை தானே?"

", ஆமா. குழந்தை ஏன் பாவம் இல்லாமல் இருக்கிறது?"


"ஏனெனில் குழந்தையால் பாவம் செய்ய முடியாதே."

", ஏன் பாவம் செய்ய முடியாது?"

''பாவம் செய்ய வேண்டுமென்றால் கடவுளின் கட்டளைகள் தெரிந்திருக்க வேண்டும்.

அவற்றை மீறுவது பாவம் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டும் குழந்தைக்கு தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும்.

ஆகவேதான் குழந்தையால் பாவம் செய்ய முடியாது. நம்மால் முடியும்.''


",பின் ஏன் கடவுள் ஏன் நம்மை குழந்தையைப் போல் இருக்க வேண்டும் என்கிறார்?"

"அதுதான் தெரியவில்லை."

",கடவுள் முன் உட்கார்ந்து தியானித்து பார். தெரியும்." 

"அப்படியானால் குழந்தையின் பாவம் செய்ய முடியாமைக்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும்.

கொஞ்சம் பொறுங்கள்.

ஏதோ மனதில் தோன்றுகிறது.

வேறொரு காரணம் இருக்கிறது.

குழந்தைக்கு சூதுவாது தெரியாது. யாருக்கும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைக்காது.

கட்டளைகளை மீறுவதுதான் பாவம். ஆனால் யாருக்கும் தீங்கு நினைக்காதவன் கட்டளைகளை மீற மாட்டான்.

'உன்னைப் போல் உனது அயலானையும் நேசி' என்று ஆண்டவர் கட்டளை கொடுத்திருக்கிறார்.

யாராவது தனக்கு யாரும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பார்களா?

நிச்சயமாக நினைக்க மாட்டார்கள்.

தங்களை தாங்களே நேசிப்பவர்கள் தங்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்.

தங்களை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பவர்கள் மற்றவர்களுக்கு 
தீங்கு நினைக்க மாட்டார்கள்.

அப்படியானால் மற்றவர்களுக்கு 
தீங்கு நினைக்காதவர்கள்

மற்றவர்களை நேசிப்பவர்களுக்குச் சமம்தானே!

குழந்தைகளைப் போல மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதவர்கள்

பிறருக்கு எதிரான எந்த பாவத்தையும் செய்ய மாட்டார்கள்.

குழந்தைகளுக்கு அன்பைப் பற்றியோ, தீங்கைப் பற்றியோ, கட்டளைகளைப் பற்றியோ கொள்கை ரீதியாக (Theoretically) எதுவும் தெரியாதிருக்கலாம்.

ஆனால் செயல் முறையில் (Practically) அவர்கள் கட்டளைப் படிதான் வாழ்கிறார்கள்.

நாமும் குழந்தைகளைப் போல பிறருக்குத் தீங்கு நினையாதிருப்போம்.

பிறருக்கு எதிரான எந்த பாவத்தையும் செய்ய மாட்டோம்."

", நாம் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போதே ஞான உபதேசம் கற்றோம். இப்போ பைபிள் வாசிக்கிறோம். அதுவும் போக ஞான விஷயங்கள் போதிக்கப்படும் கூட்டங்களுக்குப் போகிறோம்.

 இவற்றிலிருந்து கடவுள், உலகப் படைப்பு, கட்டளைகள், பாவம், புண்ணியம், நரகம், மோட்சம் பற்றி நிறைய அறிவு பெற்றிருக்கிறோம்.

இவற்றைப் பற்றி பட்டிமன்றம் போட்டால் வெற்றிகரமாகப் பேசுவோம்.

இவ்வளவு அறிவு பெற்றிருந்தாலும் பாவங்களுக்குப் பஞ்சமில்லையே! 

அறிவுக்கும் பாவம் செய்யாமைக்கும் சம்பந்தமில்லை.

நற்கருணையில் ஆண்டவர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் தயாரிப்பு இன்றி நற்கருணை வாங்குவோம்.

ஆனால் நம்மில் சிலர் பள்ளிக்கூடம் போயிருக்க மாட்டார்கள்.

எழுத, வாசிக்கத் தெரியாது.

ஞான உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாது.

பைபிள் வாசிக்கத் தெரியாது.

பைபிளைப் பற்றி தெரியாது.

அறிவைப் பொறுத்த மட்டில் குழந்தைகள் மாதிரியே இருப்பார்கள்.

ஆனால் பக்தி உள்ளவர்களாக
 இருப்பார்கள்.

கடவுளையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும் அளவு கடந்து நேசிப்பார்க்ள்.

பங்கு சாமியார் பிரசங்கம்தான் அவர்களுக்குப் பைபிள்.

பிரசங்கத்தில் கூறியபடி வாழ்வார்கள்.

வாழத் தவறினால் உடனே பாவ சங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.

தகுந்த ஆன்மீக தயாரிப்போடுதான் நற்கருணை வாங்குவார்கள்.

எப்போதும் ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக நடப்பார்கள்.

படித்து, பட்டம் பெற்று, நிறைய அறிவை சேமித்து வைத்திருப்பவர்களின் ஆன்மாக்களை விட,

பக்தி மிகுந்த படிப்பறியாத பாமர மக்களின் ஆன்மாக்கள் தான் கடவுளுக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.

மீட்பைத் தருவது கடவுளைப் பற்றிய அறிவு அல்ல,

 அன்பு நிறைந்த, பாவம் இல்லாத வாழ்க்கைதான்.

குழந்தையிடம் அன்பு இருக்கிறது, பாவம் இல்லை.

நாமும் குழந்தையைப் போல அன்புடனும், பாவம் இல்லாமலும் வாழ்ந்தால்

இறையரசில் நுழைவது மிக எளிது."

"உண்மைதாங்க.

அறிவு வேண்டாமென்று சொல்லவில்லை.

அன்பில்லாத, பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்வோருக்கு அறிவால் எந்த பயனும் இல்லை.

ஆகவே, குழந்தையைப் போல,

யாருக்கும் தீங்கு நினைக்காமல் அன்புடன் வாழ்வோம்.

பாவம் நம்மை நெருங்காது.

பாவம் இல்லாத பரிசுத்தமான ஆன்மாவிற்கு விண்ணக வாசல் எப்போதும் திறந்தேயிருக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment