Thursday, February 24, 2022

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்."(மாற்கு. 9:49)

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்."
(மாற்கு. 9:49)

நெருப்பு என்று சொன்னவுடன் நமது ஞாபகத்துக்கு வருபவை சமையல், சுத்திகரிப்பு, வேண்டாதவற்றை அழித்தல், வேதனை.

சில உணவுப் பொருட்களை அப்படியே உண்கிறோம். 
சிலவற்றை நெருப்பில் வேக வைத்து, பக்குவப். படுத்தினால்தான் சாப்பிட முடிகிறது. நெருப்பு இல்லாமல் சமையல் இல்லை, சமையல் இல்லாமல் சாப்பாடு இல்லை, சாப்பாடு இல்லாவிட்டால்
வளர்ச்சி இல்லை.

தங்கத்தை உருக்கி சுத்தப் படுத்த நெருப்புதான் பயன்படுகிறது.

வீட்டில் வேண்டாத கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கவும் நெருப்பு
பயன்படுகிறது.

இவ்வளவு நல்ல காரியங்களுக்குப் பயன்படும் நெருப்பைத் தொட்டால் சுடும், உடலுக்கு வேதனை ஏற்படும்.

உப்பு என்று சொன்னவுடன் நமது ஞாபகத்துக்கு வருவது சாப்பாட்டை ருசியாக்க பயன் படும் உப்புதான்.

உப்பு உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் (Preservative ஆக ) பயன்படுகிறது. மீன் கெடக்கூடியது. ஆனால் உப்பில் போட்டு வைக்கப்படும் மீன் கருவாடாகி கெடாது.

ஆண்டவர் ஏன் நம்மை,
"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்." என்கிறார்.

இக்கேள்விக்கு விடை காண முந்திய வசனங்கள் வழியே வரவேண்டும்.



42 ஆம் வசனத்தில் மற்றவர்களுக்கு இடரலாய், அதாவது, துர்மாதிரிகையாய் இருப்பவர்கள்,

அதாவது மற்றவர்கள் பாவத்தில் விழ காரணமாய் இருப்பவர்கள்,

 கடலில் ஆழ்த்தப் பட வேண்டும் என்கிறார்.

43 - 47 வசனங்களில் நமது உடல் உறுப்புக்கள் நாம் பாவம் செய்ய காரணமாய் இருந்தால் அவற்றை வெட்டி எறிய வேண்டும் என்கிறார்.

எல்லா உறுப்புக்களோடும் நரக நெருப்பில் விழுவதை விட, உறுப்புக்கள் இல்லாமல் மோட்சத்துக்குப் போவது நலம் என்கிறார்.

பாவத்திற்கு காரணமான உறுப்புகளை வெட்டி எறிவது வேதனை தரும் நெருப்புக்கு நிகரானது.

எப்படி தொட்டால் சூடும் வேதனையும் தரும் நெருப்பு வாழ்க்கைக்குப் பயனற்ற கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கிறதோ

அப்படியே பாவத்திற்கு காரணமானவற்றை வெட்டி அகற்றுவது 

ஆன்மீக வாழ்க்கைக்குப் பயனற்ற கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கிறது.

கடவுள் இந்த ஆன்மீக நெருப்பினால் நமது ஆன்மாவை உப்பிடுகின்றார்,

 அதாவது, உப்பு உணவைக் கெடாமல் பாதுகாப்பது போல வேதனை தரும் ஆன்மீக நெருப்பாகிய துன்பங்களால் (Sufferings) 

ஆன்மாவைக்  கெடாமல் பாதுகாக்கிறார்.

இதைத்தான் 

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்." என்ற பைபிள் வசனம் கூறுகிறது.

துன்பங்கள் மூலம் நமது ஆன்மாவைப் பக்குவப் படுத்தி பாதுகாப்பதைத்தான்

"நெருப்பினால் உப்பிடப்படுதல்"
(salted with fire) என்கிறோம்.

கடவுள் நமக்கு துன்பங்களை அனுப்புவது நம்மை துன்பப் படுத்துவதற்காக அல்ல,

நமது ஆன்மாவைப் பாவத்தில் விழாமல் பாதுகாத்துப் பக்குவப் படுத்துவதற்காகத்தான்.  

நெருப்பு எவ்வாறெல்லாம் நமது ஆன்மாவை உப்பிடுகிறது?

வேறு வார்த்தைகளில்,

துன்பங்கள் எவ்வாறெல்லாம் நமது ஆன்மாவை பக்குவப் படுத்துகின்றன?

அழுக்கு உள்ள தங்கத்தை நெருப்பில் இட்டால் அது உருகி அழுக்கு நீங்கி தங்கம் சுத்தமாவது போல,

நமக்கு வரும் துன்பங்களை நமது ஆன்மா,

 பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னிக்கப்பட்ட தனது பாவங்களுக்குப் பரிகாரமாக முழு மனதோடு ஏற்றுக் கொண்டு, 

அவற்றை அனுபவித்து, ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால்

ஆன்மா பாவ அழுக்கு நீங்கி பரிசுத்தமாகும்.

உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை குறையும்.

நெருப்பு நமது உணவுப் பொருட்களை வேகவைத்து உணவாக பக்குவப் படுத்துவதுபோல,

துன்ப வடிவில் நாம் அனுபவிக்கும் தவ முயற்சிகள் பட்டினி கிடத்தல் போன்ற சாதாரண நிகழ்ச்சிகளை

ஆண்டவரது அருளை ஈட்டும் ஆன்மீக நிகழ்ச்சிகளாக மாற்றுகின்றன.

நெருப்பு வேதனை தருவதுதான், ஆனால் அதுவே உலகில் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

துன்பங்கள் வேதனை தருபவைதான், ஆனால் அவைதான் நம்மை விண்ணுலக வாழ்வுக்குத் தயாரிக்கின்றன.

ஆண்டவர் பட்ட பாடுகளால்தான் நாம் விண்ணுலக வாழ்வுக்கு ஏற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.

வேத சாட்சிகள் பட்ட வேதனை நிறைந்த துன்பங்களாலும், அனுபவித்த மரணத்தினாலும் தான் நேரடியாக விண்ணகம் சென்றதோடு,

அங்கு புனிதர்களாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஆன்மா எவ்வாறு உப்பிடப்படுகிறது?

உப்பு நாம் உண்ணும்  உணவை ருசி உள்ளதாக மாற்றுகிறது.

நமது ஆன்மீக வாழ்வை உணவாக எடுத்துக் கொண்டால்,

அதற்கு ருசி கொடுப்பது இறைவனது அருள்.

எவ்வளவுக்கெவ்வளவு நமது ஆன்மீக வாழ்வில் இறையருள் கலக்கிறதோ  அவ்வளவுக்கவ்வளவு ஆன்மீக வாழ்வு அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும்.

நமக்கு அபரிமிதமான அருளை ஈட்டித்தருவது இறைவனுக்கு நாம் ஒப்புக் கொடுக்கும் நமது துன்பங்கள்தான்.

இயேசு சிலுவையில் மரிக்கும்போது அவரது தந்தைக்கு ஒப்புக் கொடுத்த அவரது பாடுகள்தான்

நமக்கு இரட்சண்ய அருளைப் பெற்றுத் தந்தன.

இயேசுவின் முன்மாதிரிகையை நாமும் பின்பற்றுவோம்.

உப்பு நமது உணவைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதுபோல,

இயேசுவுக்கு நாம் ஒப்புக் கொடுக்கும் நமது துன்பங்களும் இயேசுவுடனான நமது உறவைக் கெடாமல் பாதுகாக்கின்றன.

நாம் சுமக்கும் சிலுவைதான் நம்மை இயேசுவின் சீடனாக்குகிறது.

வாழ்வின் இறுதி வரை நாம் இயேசுவின் சீடனாக வாழ்ந்து மரிக்க துன்பங்கள்தான் உதவுகின்றன.

துன்பங்கள் என்னும் நெருப்பினால் உப்பிடப் படுவோம்.

பரிசுத்தமாய் வாழ்ந்து இயேசுவுடன் பரலோக வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment