Thursday, February 10, 2022

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"(மாற்கு. 7:27)

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
(மாற்கு. 7:27)

இன்றைய இறைவாக்கைத் தியானிப்பதற்கு முன்பு,

வார்த்தைகளுக்குப் பொருள் காண்பதற்கான இரண்டு அடிப்படை விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

வார்த்தைகளுக்கான பொருள் வார்த்தைகளிலோ, அகராதியிலோ இல்லை.

அவற்றைக் கூறுபவர்களிடம்தான் உள்ளது.
கூறுபவர்களின் தன்மையை வைத்துதான் பொருள் கூற முடியும்.

வார்த்தைகளின் அகராதிப் பொருளை வைத்து கூறுபவர்களின் தன்மையைத் தீர்மானிக்கக் கூடாது. கூறுபவர்களின் தன்மையை வைத்துதான் வார்த்தைகளின் பொருளைத் தீர்மானிக்க வேண்டும்.

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"

என்ற வார்த்தைகளுக்கு அகராதிப்படி பொருள் பார்த்தால், 

ஏதோ உதவி கேட்போருக்கு அன்பே இல்லாமல் கூறப்படும் பதில் போல தோன்றும்.

ஆனால் நற்செய்தி நூலில் அவற்றைக் கூறுபவர் அன்பே உருவான இறைமகன் இயேசு.

அன்பே உருவானவர் கூறும் வர்த்தைகளில் அன்பைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

இயேசுவின் தன்மையை வைத்துதான் வார்த்தைகளுக்குப் பொருள் காணவேண்டும்.

இயேசு எப்படிப்பட்டவர்?

அன்பே உருவானவர்.

நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்பதற்கு என்றே மனிதனாய்ப் பிறந்து,
பாடுபட்டு, மரித்தவர்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு உறுதியாக உதவக் கூடியவர்.

நன்மை மட்டும் செய்யக் கூடியவர்.

அவரது பொது வாழ்வின்போது சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கியவர்.

அப்படிப் பட்டவர் இந்த கடினமாகத் தோன்றும் வார்த்தைகளை ஏன் கூறினார்?

(அவற்றுக்குள் இயேசுவின் அன்பு மறைந்திருக்கிறது. தியானிக்கும்போது வெளிப்படும்.)

சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்த ஒரு பெண் தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறாள்.

அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். 

பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்கிறார்.

அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்கிறாள்

அதற்கு அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்: பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்கிறார்.

உடனே சிறுமியிடமிருந்து , பேய் அகன்று விடுகிறது.

உதவி கேட்ட பெண் புற இனத்தவள்.

இயேசுவைப் பொறுத்த மட்டில் உதவி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் விசுவாசம் இருக்க வேண்டும்.

இயேசு கடவுள். யார் யாருக்கு எந்த அளவு விசுவாசம் இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

ஆயினும் நமது விசுவாசத்தை நாம் அறிக்கையிட்டால் அவர் மிகவும் மகிழ்வார்.

அந்த புற இனத்துப் பெண் தன் விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு வசதியாகவே இயேசு அந்த வார்த்தைகளைக் கூறினார்.

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"

என்று இயேசு கூறியதும் அவள் உதவி கேட்பதை நிறுத்தி விடவில்லை.

இயேசு மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. 

மாறாக அவர் மீது அவள் கொண்டிருந்த விசுவாசமும், அவளது தாழ்ச்சியும் அவளை இயக்க ஆரம்பித்தன.

அவள் மிகுந்த தாழ்ச்சியுடன்,

"பிள்ளைகளுக்கு உணவு போடும்போது கீழே சிந்தும் உணவை நாய்க் குட்டிகள் சாப்பிடும், ஆண்டவரே." என்றாள்.

அதாவது 

"நான் பிள்ளையாக இல்லாவிட்டாலும் சிந்தும் உணவைத் தின்னும் நாய்க் குட்டியாக இருந்து விடுகிறேனே.".

என்ற பொருள்பட அவ்வாறு கூறினாள்.

அவளது விசுவாசமும், தாழ்ச்சியும் இயேசுவுக்கு மகிழ்ச்சியைத் தந்தன.

அவற்றின் நிமித்தம் அவளது மகளைக் குணமாக்கினார்.

இந்தப் புதுமையிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விசுவாசத்தோடும், தாழ்ச்சியோடும் செபிக்க வேண்டும்.

நமது செபம் கேட்கப்படாதது போல் தோன்றினாலும் நமது விசுவாசத்தைக் கைவிட்டு விடக் கூடாது

ஆண்டவர் விரும்பும்போது நாம் கேட்டது கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து செபிக்க வேண்டும்.

இறுதிவரைக் கிடைக்கா விட்டாலும் நமது விசுவாசத்தை நாம் கைவிடக் கூடாது.

நாம் கேட்பது நமக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம்.

அது நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் கடவுளுக்கு தெரியும். ஆகவே நமது நன்மை கருதியே அதை அவர் நமக்கு தராமல் இருக்கலாம்.

நாம் கேட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் விசுவசிப்பது உண்மையான விசுவாசம் அல்ல.

இறைவனை அவரது 
நன்மைத்தனம் கருதி, அவருக்காகவே விசுவசிப்பதே உண்மையான விசுவாசம்.

நாம் எதைச் செய்தாலும் அவருக்காகவே செய்ய வேண்டும்.

அவருக்காக நமது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மரிப்பதே விசுவாச வாழ்வு.

நாம் கேட்டதைத் தராமல் இருப்பது நமது உண்மையான விசுவாசத்தை பரிசோதிப்பதற்காகக் கூட இருக்கலாம்.

பரிசோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும்.

நாம் கேட்பது கிடைப்பது முக்கியமல்ல.

விசுவாசத்தில் வெற்றி பெறுவதே முக்கியம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment