Saturday, February 12, 2022

அகமகிழ்வோம். ஏனெனில், வானகத்தில் நமது கைம்மாறு மிகுதியாகிக் கொண்டிருக்கிறது.

.அகமகிழ்வோம். ஏனெனில்,  வானகத்தில் நமது கைம்மாறு மிகுதியாகிக் கொண்டிருக்கிறது.

"நமக்கு உதவி செய்கின்றவர்கள் மீது நமக்கு கோபம் வரலாமா, தாத்தா?"

"இப்போ எதற்கு இந்த திடீர்க் கேள்வி?"

"திடீர்க் கேள்வி அல்ல. உங்களிடம் கேட்க வேண்டும் என்று நான் விடிய விடிய திட்டமிட்டிருந்த கேள்வி."

",இதற்குக் கூட விடிய விடிய திட்டமிட வேண்டுமா?"

"நேற்று படுக்கப் போகும்போது ஒரு பைபிள் வசனம் வாசித்தேன்.  அதிலிருந்து விடிய விடிய யோசித்துக் கொண்டிருந்தேன். விடிந்தவுடன் உங்களிடம் வந்துவிட்டேன்."

"என்ன வசனம்?"

."மனுமகன் பொருட்டு மனிதர் உங்களை வெறுத்துப் புறம்பாக்கி வசைகூறி, உங்கள் பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது நீங்கள் பேறுபெற்றவர்கள்.

அந்நாளில் துள்ளி அகமகிழுங்கள். ஏனெனில், இதோ! வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்."
(லூக்.6:22, 23)

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்மை வெறுத்து ஒதுக்குபவர்கள் நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள்.

நற்செய்தியின்படி இப்போது நாம் துள்ளி அகமகிழ வேண்டும். 

ஏனெனில் விண்ணகத்தில் நமக்கு கைமாறு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் 

நமக்கு மகிழ்ச்சி வருவதற்குப் பதிலாக 

அவர்கள்மீது கோபம் வருகிறதே, இது தவறு இல்லையா?"

",தவறுதான். அவர்கள்மீது நமக்கு கோபம் வரக்கூடாது.

அவர்களது நிலைக்காக வருத்தப்படுவதோடு, ஆண்டவரிடம்  அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

அவர்களுக்காகவும்தானே இயேசு பாடுபட்டு மரித்தார்.

அவர்களும்தானே மீட்கப்பட வேண்டும்.

இறைவனில் அவர்களும் நமது சகோதரர்கள்தானே.

ஆகவே அவர்களுக்காக நாம் தினமும் செபிக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை 
வெறுக்கும்போது நாம் பாக்கியவான்கள்.

நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் விண்ணகத்தில் பேரின்பமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இயேசுவுக்காக நாம் வேத சாட்சிகளாக மரித்தால், 

நாம் நேரடியாக நமக்காக காத்துக் கொண்டிருக்கும் பேரின்பத்தை அனுபவிக்க விண்ணகத்திற்கு சென்றுவிடுவோம். 

நமக்காக காத்துக் கொண்டிருக்கும் நித்திய வாழ்வை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்."

"ஆனால் நாம் போராட அல்லவா ஆசைப்படுகிறோம்!"

",நமக்கு நமது ஆண்டவர் தான் முன்மாதிரிகை.

அவரை யூதர்கள் கைது செய்தபோது அவர் அவர்களை எதிர்த்து போராடவில்லை.

அப்போஸ்தலர்களையும் போராடச் சொல்லவில்லை.

அவரைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னை மரியாள் கூட
 போராடவில்லை.

பரிசுத்த ஆவியின் வரவுக்குப்பின் அப்போஸ்தலர்கள் தங்கள் உயிரை கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்.

போராடி அறிவிக்கவில்லை.

வேத சாட்சிகளின் ரத்தத்தில்தான் திருச்சபை வளர்ந்திருக்கிறது."

"இந்தியாவிலும் அதே போல் வளரும் என்று நினைக்கிறீர்களா?"

",நிச்சயமாக வளரும். ஆண்டவர் வாழ்வில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு உயிர்த்த ஞாயிறு வந்தது.

நாம் இப்போது வெள்ளிக்கிழமையில் ஆண்டவரைப் பின்பற்றி கொண்டிருக்கிறோம்.

நமக்கும் ஈஸ்டர் ஞாயிறு வரும்.

ஆகவே அகமகிழ்வோம், அக்களிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment