Sunday, February 27, 2022

"கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" (மாற்கு. 10:15)

"கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" 
(மாற்கு. 10:15)

"ஏங்க, நமக்குக் குழந்தை பிறந்தால் அது வளர்ந்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்றுதானே ஆசைப் படுவோம்.

ஆனால் நம்ம ஆண்டவர் வித்தியாசமாகச் சொல்கிறார்.

கடவுளின் அரசு நிரந்தரமானதுதானே.

அதற்குள் நுழைய விரும்புவோர் குழந்தையைப் போலவே இருக்க வேண்டும்  என்று ஆண்டவர் சொல்கிறார்.

அப்போ வளர்ந்தவர்களுக்கு மோட்சத்தில் இடமில்லையா?"

", ஏன்டி உன் இஷ்டம்போல் அர்த்தம் சொல்ற.

ஆண்டவர் 'குழந்தையைப் போலவே' என்றுதான் சொன்னார்.

'குழந்தையாகவே' என்று சொல்லவில்லை.''

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

", விசுவாச வாழ்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு இருக்க வேண்டிய  சில நல்ல குணங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன.

கடவுளின் அரசுக்குள் நுழைய விரும்புவோருக்கு அந்த குணங்கள் இருக்க வேண்டும்."

"நீயும் குழந்தையைப் பெற்றவள்தானே. உன் மகன் குழந்தையாய் இருந்தபோது அவனிடம் இருந்த உனக்குப் பிடித்தமான குணங்களைச் சொல்லேன்."

"அவனுக்கு என் மேல் அளவுக்கு மேலான பாசம் இருந்தது.

என் மேல்  அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது.

எப்போதும் என்னுடனே இருக்க ஆசைப்படுவான். இடுப்பை விட்டு இறங்கவே மாட்டான்.

நான் என்ன சொன்னாலும்  அப்படியே நம்புவான். 'ஏன், எப்படி' என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டான்."

". கொஞ்சம் பொறு. தொடருமுன் இந்த இரண்டு குணங்களையும் அப்படியே ஒரு விசுவாசிக்குக்  கொடு."

"உண்மையான விசுவாசிக்கு கடவுள்மேல் அளவு கடந்த பாசம் இருக்கும். இறைவன் நினைவு எப்போதும் அவன் மனதில் இருக்கும்.

தாய்த் திருச்சபை மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கும்.

திருச்சபை சொல்வதை எதிர்க் கேள்வி கேட்காமல் விசுவசிப்பான். திருச்சபையால் பொய் சொல்ல முடியாது என்று உறுதியாக நம்புவான்."

", இந்த இரண்டு குணங்கள் இருந்தாலே விசுவாசிக்கு விண்ணகம் உறுதி.

குழந்தையிடம் இருக்கும் இந்த குணங்கள் பெரியவர்களிடமும் இருக்க வேண்டும்.

இருந்தால் அவர்கள் குழந்தையைப் போன்றவர்கள்.

நம்மில் எத்தனை பேர் எப்போதும் இறைச் சந்நிதானத்தில் வாழ்கிறோம்.

இறைச் சந்நிதானத்தில் வாழ்பவர்களால் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்ய முடியாது.

குழந்தை  தாயை நம்புவது போல திருச்சபையை நம்பியிருந்தால்  சீர்திருத்தம் என்ற பெயரில் இத்தனை பிரிவினை சபைகள் தோன்றியிருக்குமா?

பைபிளை வாசிக்கும் நம்மில் எத்தனை பேர் பைபிள் வசனங்களுக்குத் தாய்த் திருச்சபை கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம்?

எத்தனை பேர் பிரிவினை சபையாரது விளக்கத்துக்கு செவி மடுக்கிறோம்?

எத்தனை பேர் சொந்த விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்?

ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தைக் கேட்பவர்களில்  எத்தனை பேர் சுவாமியார் கூறும் கருத்துக்களைக் கவனிக்கிறோம்.

எத்தனை பேர் ஏதாவது குறைகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்?"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது."


", என்ன பயம்?"

"மக்களில் பலர் குழந்தைகள் போல இருப்பது போல் தெரியவில்லை.

குழந்தையாய் இருக்கும் போது பெற்றோர்களைச் சுற்றிவந்த பையன்களில் அநேகர் வளர்ந்தபின் அவர்களை ஏறிட்டும் பார்ப்பதில்லை.

பெற்றோரை உறுதியாக நம்பியவர்கள் அவர்களைப் பற்றி மற்றவர்கள் கூறுவதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனால்தான் அநேக விசுவாசிகள் பிரிவினை சபையார் கூட்டங்களுக்கு அடிக்கடி போக ஆரம்பிக்கிறார்கள்."

", ஒரு குழந்தை எப்படி தன் தாயின் மடியில் அமர்ந்து, அவளது முகத்தையே பார்த்து புன்முறுவல் பூக்க ஆசிக்கிறதோ

அதேபோல ஒவ்வொரு விசுவாசியும் தன்னைப் படைத்தவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டினால்

அவனது உள்ளத்தில் கடவுளது எண்ணத்தைத் தவிர வேறு எண்ணம் இருக்காது.

அவருக்கு தன் அன்பைக் காட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பான்.

தனது ஒவ்வொரு செயலையும் தனது அன்பின் காணிக்கையாக அவருக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டேயிருப்பான்.

கடவுளையே  நினைத்துக் கொண்டிருப்பவன் விண்ணக பேரின்பத்தை உலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்.

அவனுக்கு உலக இன்பங்களின் மேல் நாட்டம் இருக்காது.

கொரோனா போன்ற தொற்றுக் காலத்தில் கூட அவனுக்குப் பயம் ஏற்படாது.

ஏனெனில் இருந்தாலும், இறந்தாலும் கடவுள் மடியிலேயே இருக்க விரும்புகிறவன் எதற்கு இறப்புக்குப் பயப்பட வேண்டும்?"

"ஒரு குழந்தைக்குத் தாய் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதுபோல 

ஒரு விசுவாசிக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவருடைய பராமரிப்பிற்குள் தன்னை ஒப்படைத்து விட்டு கவலை இல்லாமல் வாழ்வான்.

தனக்கு என்ன நடந்தாலும் அது இறைப் பராமரிப்புக்கு உட்பட்டதுதான் என்று  அவன் நம்புவதால்

என்ன நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்லுவான்.

அவனது வாழ்வின்போது நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவனின் நித்திய திட்டத்திற்கு உட்பட்டது.

நமக்கு நாளை என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது, ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

ஆகவே கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன்னைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

கடவுளுக்கு சேவை செய்வதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துவான்.''

", குழந்தைக்குச் சொந்தமான,
உனக்குப் பிடித்தமான இன்னொரு குணத்தைச் சொல்லு."

(தொடரும்)

லூர்து செல்வம்.







 
.

No comments:

Post a Comment