Tuesday, February 8, 2022

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்"(லூக்.5:5)

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்"
(லூக்.5:5)

இராயப்பர் இரவு முழுவதும் மீன் பிடிக்க முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை.

காலையில் வெறும் வலைகளை அலசிக்கொண்டிருந்தார்.

இயேசு அவரது படகில் ஏறி மக்களுக்குப் போதித்தார்.

போதித்து முடிந்தபின் ஆண்டவர் இராயப்பரை நோக்கி,

 "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.

இராயப்பர் இயேசுவைப் பார்த்து,

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: 

ஆயினும் உமது சொல்லைக் நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.

ஆண்டவர் சொன்னபடி வலைகளைப் போட்டார்.

ஏராளமான மீன்கள் கிடைத்தன. 

வலைகளைப் போட்டதையும், மீன்கள் ஏராளமாக கிடைத்ததையும் விட, இராயப்பர் கூறிய வார்த்தைகள்தான் முக்கியம்.

"நான் இரவு முழுவதும் வலைகளைப் போட்டிருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை.

ஆயினும் உமது சொல்லை நம்பி போடுகிறேன்."

இராயப்பருக்கு தனது அனுபவத்தின் மீது நம்பிக்கை இல்லை.

ஆனால் இயேசுவின் வார்த்தைகள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தது.

அந்த நம்பிக்கையை செயல் படுத்தினார். வெற்றியும் பெற்றார்.

திருச்சபையின் தலைமைப் பதவிக்குப் பொறுத்தமான ஆள் என்பதை ஆரம்பத்திலேயே நிரூபித்துவிட்டார்.

ஆண்டவர்மீது அவருக்கு இருந்த முழுமையான நம்பிக்கை

இறைவனோடு நமக்கு உள்ள உறவின் ஒவ்வொரு வினாடியும் நமக்கும் இருக்க வேண்டும்.

  சீமோன் இராயப்பரின் சகோதரரான பெலவேந்திரர்

"மெசியாவைக் கண்டோம்"

என்று கூறித்தான் அவரை ஆண்டவரிடம் அழைத்துச் சென்றார்.

ஆண்டவரைக் காணும் முன்னே இராயப்பர் அவரை மெசியா என்று விசுவசித்தார்.

முதல் சந்திப்பிலேயே
இயேசு அவரை உற்றுநோக்கி,

 "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

 கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள். .

அவரை இராயப்பர் என்று அழைத்ததில்  
 
அவர்மேல் திருச்சபையை கட்டுவதென்ற இயேசுவின் நித்திய திட்டம் தெரிகிறது.

இராயப்பர் மெசியாவை விசுவசித்தது மட்டுமல்ல அவர் மீது முழுமையான நம்பிக்கையும் கொண்டார்.

இந்த நம்பிக்கைதான் இயேசு வலைகளை வீசச் சொல்லும்போது வெளிப்பட்டது.
 
நம்பிக்கை இருந்தால்தான் விசுவாசம் வெற்றி பெறும்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது விசுவாசத்தையும் பெறுகிறோம்.

இவ்வுலகில் நாம் செய்யவிருப்பது விண்ணகத்தை நோக்கிய ஆன்மீகப் பயணம் என்பதை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறோம்.

பயணத்தின் இறுதியில் நாம் உறுதியாக விண்ணக வாழ்வை அடைவோம் என்ற நம்பிக்கையுடன்தான் விசுவசிக்க ஆரம்பிக்கிறோம்.

இறைவனை விசுவசிப்பது மட்டுமல்ல ஒவ்வொரு வினாடியும் அவரை நம்பவும் வேண்டும்.

நமது நம்பிக்கைதான் நமது விசுவாசத்திற்கு வெற்றியைத் தரும்.

கஷ்டங்கள் ஏற்படும் போது நமது நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது.

தளர்ச்சி ஏற்படுவது போல் தெரிந்தால் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

தேவத் திரவிய அனுமானங்களை அடிக்கடி பெற்றால் நமது நம்பிக்கை உறுதியாக இருக்கும்.

பச்சாத்தாபம், திவ்ய நற்கருணை 
போன்ற தேவத் திரவிய அனுமானங்களை அடிக்கடி பெற வேண்டும்.

அடிக்கடி திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

இயேசு அடிக்கடி நமக்குள் உணவாக வரும்போது அவரோடு நமக்கு உறவின் நெருக்கம் அதிகரிப்பதால்

அவரோடு உறுதியாக விண்ணகத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கையும் அதிகரிக்கும்.

இயேசுவும் நம்மோடே பயணிப்பதால் நாம் அவருக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டோம்.
எதற்கும் பயப்படவும் மாட்டோம்.

நமது ஆன்மீக பயணத்தில் உதவியாய் இருக்கும் விசுவாசமும், நம்பிக்கையும் பயணம் முடியும் வரைதான் நம்மோடு இருக்கும்.

பயணம் முடிந்து விண்ணகத்திற்குள் நுழையும் போது இரண்டுமே காணாமல் போய்விடும்.

ஏனெனில் விசுவசித்ததை எல்லாம் நேரில் பார்ப்போம்.

நம்பினது எல்லாம் நிறைவேறி விடும்.

இனிமேல் விசுவாசத்துக்கும்,
 நம்பிக்கைக்கும் வேலை இல்லை.

   அப்புறம் நித்திய காலமும் நம்மோடு இருப்பது அன்பு மட்டும்தான்.

நமது அன்பின் அளவுக்கு ஏற்பதான் நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment