Friday, February 11, 2022

"பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்."(மாற்கு.7:34)

"பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்."
(மாற்கு.7:34)

செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனைக் குணமாக்க இயேசு கூறிய வார்த்தைகள் இவை.

அவனை இயேசுவிடம் அழைத்து வந்தவர்கள் அவனது உடல்ரீதியான நோயைக் குணப்படுத்தவே அழைத்து வந்திருப்பார்கள்.

ஆனால் அவன்  தான் பெற்ற குணத்தை  இயேசுவின் போதனையை கேட்கவும்,

 அவர் செய்த புதுமையை சென்றவிடமெல்லாம் சொல்லி அவரது புகழைப் பரப்பவும் பயன்படுத்தினான். 

அவனை அழைத்து வந்தவர்களும் அதையே செய்தார்கள்.

இயேசு தான் படைத்த மக்களுக்கு உடலைத் தந்திருப்பது வெறுமனே உலக வாழ்வு வாழ்வதற்கு மட்டுமல்ல.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கே.

ஆன்மா வாழ உதவி செய்வதே உடல் படைக்கப்பட்டதன் நோக்கம். 

இறைமகன் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் உடலைச் சார்ந்த நோய்களை குணமாக்குவது அல்ல, ஆன்மீக நோயைக் குணமாக்குவதுதான்.

உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதே மக்களைத் தன்பால் ஈர்த்து, ஆன்மாவை சார்ந்த நற்செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதற்காகத்தான். 

பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடுவது மாணவர்களை கல்வி கற்க வரவழைப்பதற்காகத்தான்,

சாப்பிட வரவழைப்பதற்காக அல்ல.

இயேசு சென்றவிடமெல்லாம் நோய்களைக் குணமாக்கியது 

தனது நற்செய்தியால் மக்கள் பயன் பெறுவதற்காகத்தான்.

செவிடனும் திக்கு 
வாயனுமானவனுக்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகளை இன்று நமக்கும் சொல்ல வேண்டும்,

"எப்பெத்தா" -- "திறக்கப்படு".

அநேக சமயங்களில் நாம் உடல்ரீதியாக நன்கு காது கேட்பவர்களாகவும், பேசுபவர்களாகவும் இருக்கிறோம்.

ஆனால் ஆன்மீக ரீதியாக செவிடர்களாகவும், ஊமைகளாகவுமே இருக்கிறோம்.

கோவிலுக்கு போகும்போதும் பேசுகிறோம், மற்றவர்கள் பேசுவதையும் கேட்கிறோம்.

ஆனால் செபம் சொல்ல வேண்டிய நேரத்திலும்,

வாசகங்களையும், பிரசங்கத்தையும் கேட்கவேண்டிய நேரத்திலும்

ஊமைகளாகவும், செவிடர்களாகவும் மாறிவிடுகிறோம்.

வாயினால் சத்தமாக செபம் சொல்லும்போதுகூட நமது மனது எங்கேயோ சென்றுவிடுகிறது.

அதேபோல்தான் 
சுவாமியாருடைய பிரசங்கம் காதில் விழுகிறது, கருத்தில் விழுவதில்லை.

ஆன்மரீதியாக வாயும் பயன்படவில்லை, காதும் பயன்படவில்லை.

எங்கெல்லாமோ போகிறோம். யாரிடமெல்லாமோ, என்னவெல்லாமோ பேசுகிறோம்.

அரசியல் பேசுகிறோம். 
அறிவியல் பேசுகிறோம்.
சுகாதாரம் பேசுகிறோம்.
உணவு வகைகள் பற்றி பேசுகிறோம்.
சமூகத்தை விமர்சிக்கிறோம்.
பட்டி மன்றம் பேசுகிறோம்.

ஆண்டவரைப் பற்றி யாரிடமாவது பேசுகின்றோமா?

நற்செய்தியை யாருக்காவது அறிவிக்கின்றோமா?

லௌகீக வாழ்வில் ஐந்து உறுப்புக்களும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

ஆன்மீக வாழ்வில் எல்லா உறுப்புக்களும் படுத்துக் கொள்கின்றன.

 கிறிஸ்மஸ் போன்ற திருவிழா கொண்டாட்டங்களில் கூட என்றும் நினைவில் நிற்பது நாம் சாப்பிடும் பிரியாணி விருந்துதானே!

செலவின்றி பார்க்கும் திருப்பலியைவிட, இலட்சங்கள் செலவழித்து பவனி வரும் சப்பரப் பவனியைத்தானே அதிகம் விரும்புகிறோம்!

"ஆண்டவரே! ஆன்மீகத்தில் நாங்களும் செவிடர்களும், பேசத் தெரியாதவர்களுமாகவே இருக்கிறோம்.

எங்கள் மீதும் உம்முடைய கையை வைத்து,

"எப்பெத்தா" -- "திறக்கப்படு".

என்று சொல்லும்.

நாங்களும் குணமாகி, உமது புகழை உலகெங்கும் பரப்புவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment