(மாற்கு. 9:41)
"தாத்தா, ஆண்டவர்
'நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக
உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன்,
கைம்மாறு பெறாமல் போகான்' என்று சொல்கிறாரே,
அப்படியானால் கிறிஸ்துவைச் சாராதவர்களுக்குக் கொடுத்தால் சன்மானம் கிடைக்காதா?"
", கிறிஸ்து சொல்லும் வார்த்தைகள் கொடுப்பவர்களைப் பற்றியா? பெறுபவர்களைப் பற்றியா?"
"சன்மானம் பெறப்போவது கொடுப்பவர்கள்தானே, அவர்களைப் பற்றிதான்."
",பெறுபவர்கள் அனைவரும்,
அதாவது மனிதர்கள் அனைவரும்,
கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள்தான்.
அதாவது அவரால் படைக்கப் பட்டு அவரது பராமரிப்புக்கு உட்பட்டவர்கள்தான்.
பெறுபவர்கள் மனிதர்கள் என்பதற்காக அல்ல,
அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதற்காக கொடுப்பவர்கள் கொடுக்க வேண்டும்.
கடவுளின் பிள்ளைகள் என்பதற்காகக் கொடுத்தால்தான் கடவுளின் சன்மானம் இறந்த பிறகு விண்ணுலகில் கிடைக்கும்.
வெறுமனே மனிதர்கள் என்பதற்காக,
அதாவது மனிதாபிமான அடிப்படையில் மட்டும் கொடுத்தால்,
கடவுளின் சன்மானம் கிடைக்காது."
"ஏன் அப்படி?"
",கடவுளின் பிள்ளைகள் என்பதற்காகக் கொடுத்தால் கடவுளுக்காகக் கொடுக்கிறோம்.
அவருடைய சன்மானம் கிடைக்கும்."
" ஏன் என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்."
",கொடுப்பது எதன் விளைவாக?"
"அன்பின் விளைவாக."
", யார் மேல் கொண்டுள் அன்பின் விளைவாக?"
"கடவுள் மீது கொண்டுள்ள அன்பின் விளைவாக."
", இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.
இறைவனை நேசிப்பவனால் அவரது பிள்ளைகளையும் நேசிக்காமல் இருக்க முடியாது.
நமது எல்லா செயல்களிலும் இறையன்பும் பிறரன்பும் இருக்க வேண்டும்.
இறைவனை அவருக்காக நேசிப்பதுபோல, நமது பிறனையும் இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.
நமது பிறனுக்கு நாம் என்ன செய்தாலும் இறைவனுக்காகவே,
அவன் இறைவனுடைய பிள்ளை என்பதற்காகவே
செய்ய வேண்டும்.
அப்போதுதான் விண்ணகத்தில் அதற்கான சன்மானம் உண்டு.
அதனால் தான் இயேசு,
"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான்"
என்று சொன்னார்."
"அப்போ மனிதாபிமானச் செயலுக்கு விண்ணகத்தில் பலன் கிடையாதா?"
",மனிதனை மனிதன் என்று ஏற்றுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.
அதில் தவறு இல்லை.
ஆனால் இறைவனின் சன்மானம் வேண்டுமென்றால் அவனை அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பிறந்தவர்களை இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்வது நாட்டுப் பற்று.
அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வது இறைப்பற்று.
நாட்டில் வாழ நாட்டுப் பற்று வேண்டும்.
விண்ணில் வாழ இறைப்பற்று வேண்டும்.
நமது ஆன்மீக வாழ்வின் மையம் இறைப்பற்றுதான்.
நமது பிறரன்புச் செயல்கள் அனைத்தும் ஆன்மீகத்தைச் சார்ந்தவை.
இறைவனை மையமாகக் கொண்டதுதான் ஆன்மீகம்.
இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் கூட மனிதனை மனிதன் என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.
அவர்கள் மனிதாபிமானம் என்ற பெயரில் என்ன செய்தாலும்
அவர்களிடம் இறையன்பு இல்லாததால் விண்ணக சன்மானத்திற்கு இடம் எங்கே இருக்கிறது?
ஆனால் இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறைவன் அன்பு செய்கிறார்.
அவர்கள் இறைவனையும், அவரது அன்பையும் ஏற்றுக் கொண்ட வினாடி அவர்களுக்கும் விண்ணக வாசல் திறந்திருக்கும்.
இறைவனை வெறுப்பவர்களையும் இறைவன் நேசிக்கிறார்,
அவரது அன்பு மாறாதது.
சாத்தான் இறைவனை வெறுக்கிறான்,
ஆனால் அவனையும் இறைவன் நேசிக்கிறார்."
"கடவுளின் பிள்ளைகளுக்கு உதவி செய்யும்போது விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.
உபத்திரவம் செய்யும்போது?"
", பாவத்திற்காக என்ன காத்திருக்குமோ அது காத்திருக்கும்."
"அப்போ பிறருக்கு உபத்திரவம் கொடுத்தால் பாவமா?"
", இறைவனுடைய கட்டளைக்கு எதிராக என்ன செய்தாலும் பாவம்தான்.''
"அப்படியானால் இயன்ற மட்டும் நம் அயலானுக்கு உதவ வேண்டும்.
உதவ முடியாவிட்டால் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும்."
", ஆன்மீகத்தில் வளர வேண்டுமானால் பாவத்தை விலக்கினால் மட்டும் போதாது,
புண்ணியம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
ஆன்மீக வளர்ச்சிதான் நமது செயல்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் நற்செயல்கள்தான் நம்மை விசுவாசத்தில் வளரச் செய்யும்.
நற்செயல்களை,
அதாவது பிறர் உதவிச் செயல்களைச்,
செய்வோம்,
செய்து கொண்டேயிருப்போம்.
விண்ணகத்தில் நமக்கான சன்மானம் வளர்ந்து கொண்டேயிருக்கும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment