Saturday, February 29, 2020

நிலை வாழ்வும், நிலையா வாழ்வும்.

நிலை வாழ்வும், நிலையா வாழ்வும்.
******************************
உலகில் உயிர் வாழக்கூடிய அனைவருக்கும் உடலும் இருக்கிறது ஆன்மாவும் இருக்கிறது.

எல்லோருடைய உடலிலும் ஒரே மாதிரியான உறுப்புக்களே இருக்கின்றன.

எல்லோருக்கும் புத்தி இருக்கிறது,

 நினைவு ஆற்றல் இருக்கிறது,

 இருதயமும் இருக்கிறது,

எல்லோரிடமும் நம்பிக்கையும் இருக்கிறது,

ஆனாலும் எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லை.

ஏன்?

ஒரு தந்தைக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள்.

அவர்களுடைய அறிவுத் திறனை சோதிப்பதற்காக அவர் அவர்களுக்கு ஒரு சோதனை  வைத்தார்.

ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

ஆளுக்கு ஒரு வீட்டையும் கொடுத்தார்.

அவர்கள் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டை முழுவதும் நிரப்ப வேண்டும்.

மாலையில் தந்தை வீட்டைப் பார்வையிட வருவார், யாருடைய வீடு நிரம்பி இருக்கிறதோ அவனுக்கு அவருடைய சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு.

மாலையில் மூத்தமகன் வீட்டிற்குப் போனார்.

அவன் ஆயிரம் ரூபாயில் ஐந்நூறு ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி வீட்டை நிரப்பிவிட்டு, மீதி ரூபாயைச் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான்.

வைக்கோல் வாசல் வரைக்கும் இருந்ததால் வாசல் திறந்திருந்தும் உள்ளே போக முடியவில்லை.


அடுத்து இளைய மகன் வீட்டிற்குச் சென்றார்.

வாசலுக்கு முன்பே

"தந்தையே வருக"

என்று கோலம் போட்டிருந்தது.

அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது.

ஆனால் எல்லா அறைகளிலும் மெழுகுதிரிகள் எரிந்து, வீடு முழுவதும் ஒளியால் நிரம்பியிருந்தது.

ஊது பத்தி மணம் எங்கும் வீசிக் கொண்டிருந்தது.

நடு ஹாலில் பூப் போட்ட துணியினால் போர்த்தப்பட்ட மேஜை ஒன்று போடப்பட்டிருந்தது.

மேஜை மேல் மணம் வீசும் பூச்சாடி வைக்கப் பட்டிருந்தது.

அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியைக் காண்பித்து 

"உட்காருங்கள் அப்பா "

என்றான் இளைய மகன்.

ஒரு தட்டில் பழங்களையும், அப்பாவுக்கு  புது dress ஐயும், காணிக்கையாக ஐந்நூறு ரூபாயையும் வைத்து,

தந்தையிடம் கொடுத்து,

"ஆசீர்வதியுங்கள், அப்பா." என்றான்.

கொடுக்கப் பட்டதோ ஆளுக்கு ஆயிரம் ரூபாய்தான். 

ஆனால், பயன்படுத்திய விதம்?


செயல் சுதந்திரம் தரப்படாத தாவரங்களும், மிருகங்களும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டே செயல் புரிகின்றன.

சுதந்தரம் தரப்பட்ட மனிதன்தான் தனது சுதந்தரத்தை இஷ்டம் போல் 

வித்தியாசம், வித்தியாசமாகப் பயன்படுத்தி உலகை இன்றைய நிலைக்குக்  கொண்டுவந்துள்ளான்.


ஆன்மீக வாழ்வின் அடிப்படை நம்பிக்கை.

எல்லோருக்கும் ஆன்மீகம் இருக்கிறது.

ஆனால் அநேகர்

இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

வாழ்வு இருவகை:

நிலை வாழ்வு.

நிலையா வாழ்வு.

நிலை வாழ்வு என்றென்றும் நீடிக்கக் கூடியது.

நமது ஆன்மீகப் பயணம் நிலை வாழ்வை நோக்கியே இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் படைக்கப் பட்டோம்.


நிலையா வாழ்வு தற்காலிகமானது.

ஒரு நாள் முடிவுக்கு வரக்கூடியது.

அதாவது ஒரு நாள் இல்லாமல் போகக்கூடியது.

நிலை இல்லாத வாழ்வின் மேல் முழு நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் அந்த வாழ்வு முடிவுக்கு வரும்போது ஏமாந்து போவார்கள்.

இதை நம்பி

கஸ்டப்பட்டு படிப்பார்கள்.

வேலையில் சேர்ந்தோ, சுயமாக உழைத்தோ சம்பாதிப்பார்கள்.

சம்பாதித்ததைச் சேர்த்து வைப்பார்கள்.

சேர்த்து வைத்ததை முழுமையாக அனுபவிக்க முடியாமல்

போய்விடுவார்கள்!

மகா அலெக்சாண்டருக்கு ஆசை ஆசியாவை வென்று 
கிரேக்க நாட்டோடு இணைக்க வேண்டுமென்று.

இந்தியா வரை வந்து அநேக நாடுகளை, 

இந்தியாவின் சிந்து பகுதி உட்பட,

வென்று

வெற்றி வீரனாய் திரும்பியவன் கிரீஸ் போய்ச் சேரவில்லை.

பாபிலோனைக் கடக்குமுன்பே கொசுக்கடியால் இறந்தான்.

பெரிய பெரிய மன்னர்களின் கதை எல்லாம் இப்படி அரைகுறையில்தான் முடிந்திருக்கிறது!



இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது எனத் தெரிந்தும் அதன் மேல் நம்பிக்கை வைத்து ஏமாந்து போவதுதான் இதில் கொடுமை.

பணமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவன்

பணத்தாலேயே ஏமாற்றப்படுவான்.

ஒண்ணு சேர்த்து வைத்த பணத்தை செலவழிக்க முடியாமலேயே இறந்து போவான்.

அல்லது திடீரென அவனை ஏமாற்றி விட்டு அது போய்விடும்.

சிற்றின்பத்திற்காக வாழ்பவன் ஆன்மாவோடு உடலையும் நாசமாக்குவான். 

உலக அதிகாரத்திற்காக வாழ்பவன் மனசாட்சியை அடகு வைத்து விட்டுதான் களத்தில் இறங்குவான்.

அவனையே அடகு வைக்கத் தயாராக இருக்கும் எதிரிகளோடு போராடுவதிலேயே அவன் வாழ்நாள் கழியும்.

இன்றைய உலகில் வாழும்  அநேகர் இவ்வுலக வாழ்வு நிலையற்றது எனத் தெரிந்திருந்தும்,

நிலை வாழ்வைத் தேடாமல் 

இவ்வுலக இன்பத்தைத் தேடுவதிலேயே தங்கள் வாழ்வை வீணாக்குகிறார்கள்.

இவ்வுலக வாழ்வையும் வீணாக்கி

மறுவுலக நிலை வாழ்வையும் இழக்கிறார்கள்.



நாம் நம்பிக்கை வைக்க வேண்டியது நமக்கு நிலைவாழ்வைத் தரவிருக்கும் என்றும் வாழும் இறைவனிடம்.

ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிலையற்ற உலகைப் படைத்தவரும், அதிலே நம்மை  வாழ வைத்திருப்பவரும்
இறைவன்தான்.

காரணமாகத்தான்.

நமது நிலைவாழ்விற்கான பயணப் பாதை நிலையற்ற வாழ்வின் வழியாகத்தான் இருக்கிறது.

காரணம் நமது ஆன்மா நிலை வாழ்விற்காகப் படைக்கப் பட்டிருந்தாலும், நமது உடல் இவ்வுலகைச் சார்ந்தது.

நமது அழியக்கூடிய உடலின் உதவியோடுதான் நமது ஆன்மா அழியா உலகை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது.

நமது ஆன்மீகப்பயணத்தை ஒரு நாடகமாகக் கற்பனை செய்து கொண்டால்

கதாநாயகன் நமது ஆன்மா.

பிரயாணத்தில் உதவி செய்யத் தோழன் ஒருவன் உடன் வருவான்.

அவனோடு இடைஞ்சல் மட்டுமே செய்து நமது பயணத்தைக் கெடுக்க வில்லன் ஒருவனும் வருவான்.

கடவுள் அருளின் துணைகொண்டு 

தோழனின் உதவியோடு

 வில்லனது முயற்சிகளை முறியடித்து 

நாம் நமது ஆன்மீகப் பயணத்தைத் தொடர வேண்டும்.

ஆனால் இதில் வேடிக்கையான விசயம் என்ன என்றால் தோழனும், வில்லனும் ஒரே ஆள்தான்.

அது தான் நமது உடல்.

நமது உடல் நமது ஆன்மாவிற்கு இறைவனால் தரப்பட்ட அன்புப் பரிசு.

அதன் துணையோடு தான் நாம் விண்ணகத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் காரணமாக தோழனிடம் வில்லன் தன்மையும் புகுந்து விட்டது.

விலக்கப்பட்ட கனியை விழுங்கியது நமது உடல் தானே!

பாவம் என்ற விஷம் நமது உடலை இச்சைகளால் நிரப்பி விட்டது.

இந்த இச்சைகள் தான் நமது விண்ணகப் பயணத்திற்கு எண்ணற்ற இடைஞ்சல்களைத் தந்து கொண்டிருக்கின்றன.

இந்த இச்சைகளைத் திருப்திப் படுத்தும் போதுதான் பாவங்களுக்குள் விழுகிறோம்.

தண்ணீரால் ஏற்பட்ட சகதியை தண்ணீரால் தான் கழுவ வேண்டும்.

அதனால்தான் நமது உடல் ஆசைகளால் கவரப்பட்டு

நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மாசு மரு அற்ற தன் உடலையே இயேசு பயன்படுத்திக் கொண்டார். 

இரத்த வியர்வை வேர்க்க, ,

 தசைகளால் அடிபட, 

முண்முடி சூட்டப்பட,

 சிலுவையைச் சுமக்க,

 சிலுவைப்  பாரம் தாங்க மாட்டாமல் கீழே விழ,

 ஆணிகளால் சிலுவையில்
அறையப்பட,

ஈட்டியால் குத்தப்பட 

தன் உடலைத்தான் கையளித்தார்!

நாம் நமது உடலால் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால்  வரை தன் உடலைப் பலியாக்கினார்.

நாம் நமது தோழனுக்குள் இருக்கும் வில்லனை அழிக்க வேண்டும்.

அதாவது உடல் இச்சைகளை முற்றிலுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

நமது விழுந்த இயல்பு (Fallen nature) நம்மோடு போராடும்.

போராட்டத்தில் வெற்றி பெற நம்மைப் படைத்த இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்வதோடு

 அவரது அருள் வரங்களைக் கேட்டு மன்றாடவேண்டும்.


உடலை நம் தோழனாக மாற்றி விட்டால் நமது ஆன்மீக வளர்ச்சியில் உதவியாக இருப்பான்.

ஐம்பொறிகளையும் இறைவனை நோக்கியே திருப்புவான்.

காலையில் சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு உரிய நேரத்தில் எழுவான்.

ஜெபம் சொல்ல முட்டியைப் போட்டு கையைக் குவிப்பான்.

கண்ணை மூடிக்கொண்டு தியானத்திற்கு உதவுவான்.

கோவிலுக்கு நேரத்தோடு வருவான்.

பீடத்தை விட்டு கண்ணை எடுக்க மாட்டான்.

இறைவசனத்தைக் கேட்க காதுகளைத் திறந்து வைத்திருப்பான்.

நாம் பிறருக்கு  உ தவி செய்ய விரும்பும்போதெல்லாம்
ஒத்துழைப்பான்.

ருசிக்காக இல்லாமல் பசிக்காக மட்டும் அளவோடு சாப்பிடுவான்.

உடல் வலி வேதனைகளை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க உதவியாய் இருப்பான்.

நமது சிலுவையைச் சுமப்பான்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து விட்டு, 

ஆண்டவர் நம்மை அழைக்கும்போது நம்மை விண்ணகத்திற்கு அனுப்பி விட்டு,

அமைதியாக, வந்த இடத்திற்கே (மண்ணுக்குள்ளே) போய் படுத்துக் கொள்வான்.

இதெல்லாம் நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தால் மட்டும் நடக்கும்.

நிலையற்ற வாழ்வுக்காக வாழாமல், அதை, நமது நிலை வாழ்வை அடைய பயன்படுத்திக் கொள்வோம்.


லூர்து செல்வம்.




.

Thursday, February 27, 2020

"இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்.(இசை. 58:3)

"இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்.(இசை. 58:3)
   ******************************
"ஆண்டவரே! எனக்காக இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா?"

"நித்திய காலமாகவே உன் நினைவாகவே இருக்கும் என்னிடம் வந்து இரண்டு நிமிடம் கேட்கிறாய்!

இதைத்தான் Self reflection என்பார்கள்."

"அப்படீன்னா?"

"தன்னையே மற்றவர்களிடம் காண்பது. நீ என்னை மறந்திருந்து விட்டு உன்னைப் போலவே என்னையும் நினைக்கிறாய்.

நித்திய  காலமாய் நான் உன் நினைவாகத்தான் இருக்கிறேன்."

"அதெப்படி ஆண்டவரே, நான் பிறந்தே 83 ஆண்டுகள் ஆகின்றன. 

பிறக்கு முன் நானே இல்லை. இல்லாத என்னை எப்படி நினைத்திருக்க முடியும்?" 

"நீ குடியிருக்கும் வீட்டை எந்த ஆண்டு கட்டினாய்?"

"1961ல், "

"திடீரென்று ஒரு நாள் எழுந்து வீட்டைக் கட்டி முடித்தாயா? அல்லது .....?"

"இரண்டு ஆண்டுகளாக திட்டம் போட்டேன்."

" அதாவது நீ வீட்டைக் கட்டு முன்னேயே அது  உன் நினைவில் இருந்தது. அப்படித் தானே?"

"ஆண்டவரே, திட்ட வடிவில் இருந்தது."

"நீ பிறந்தது 1938ல். ஆனால் உன்னைப் பற்றி நித்திய காலமாய் திட்டமிட்டிருந்தேன்.

நீ எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த பெற்றோருக்கு, எப்போது பிறக்க வேண்டும் என்பது
எனது நித்திய காலத்திட்டம்.


நாளை உனக்கு என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியாது."


"உன் எதிர்காலம் உனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்."

". இப்போது நான் இரண்டு நிமிடம் கேட்டது தவக்காலத்தில் தவ முயற்சிகள் பற்றி உம்மோடு பேச,"

"சரி. சொல்லு."

"ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உண்ணா நோன்பு இருக்கிறோமே, எங்களுக்கு 
எவ்வளவு அருள் கிடைக்கும்?" 

"முதலில் எனது அருளை அளக்க உங்களிடம் அளவுகோல் கிடையாது.

இரண்டாவது இப்போது இருக்கும் நோன்புக்கு ஆறுதல் அருள்தான் கிடைக்கும்.

போட்டியில் கலந்து கொள்வோர் எல்லோருக்கும் நீங்கள் ஆறுதல் பரிசு கொடுப்பது மாதிரி."

"ஏன் ஆண்டவரே, நன்றாகத்தானே இருக்கிறோம்.

ஒரு நேரம் மட்டும்தான் முழு உணவு சாப்பிடுகிறோம். 

மற்ற நேரங்களில் எதுவுமே சாப்பிடுவது இல்லையே!

 எங்களை நாங்களே ஒடுக்கியும் , நீர் அதை ஏன் கண்டு கொள்வதில்லை?"

"ஒரு நாளைக்கு மூன்று நேரமும், மாலை சிற்றுண்டியும், அப்பப்போ tea யும் சாபபிட எவ்வளவு செலவாகும்?"

"ஒரு முந்நூறு ரூபாய்  ஆகும்."

"ஒரு வேளை உணவுக்கு நூறு ரூபாய் போக மீதி இரு நூறு ரூபாய் உனக்கு மிச்சம்."

"ஆமா."

"அதை என்ன செய்வாய்?"

"அது என்னிடம்தான் இருக்கும்.".

"அதாவது சாப்பாடு வடிவில் வயிற்றுக்குள் இருப்பதற்குப் பதில் ரூபாய் வடிவில் உனது purse ல் இருக்கும். அப்படித்தானே."

"ஆமா, ஆண்டவரே."

"அதைக் கொண்டு என்ன செய்வாய்?"

"மற்ற சமயங்களில் செலவழிப்பேன்."

." நான் சொல்லட்டுமா? 

தவக்காலத்தில் மிச்சம் பிடித்து அந்தக் காசைக் கொண்டு ஈஸ்டர் அன்று மட்டன் பிரியாணி தயாரித்துச் சாப்பிடுவாய். சரியா?"

"ஆண்டவரே, மட்டன் பிரியாணி சாப்பிடுவது தப்பா?"

"பிரியாணி சாப்பிடுவது தப்பில்லை. நோன்பிருந்து மிச்சம் பிடித்த காசைக் கொண்டு மற்றவர்கட்கு  உதவி செய்தால் எனக்குப் பிடிக்கும்.

மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம்.

நீ  உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உன்  விருப்பத்தையே தேடுகிறாய்.
 

நீயே மிச்சம் பிடித்து அதை நீயே சாப்பிட்டு விட்டால்

உன் வயிறு நிறையும்.

ஆன்மா நிறைய வேண்டுமானால் அயலானுக்கு உதவ வேண்டும்.

பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு.

 ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு.

 ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து.

 யாரையும் அவமதிக்காதே. இதுதான்  நான்விரும்பும் மேலான நோன்பு.


 உண்ணா நோன்பிருக்கும் போது, மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால். உன் நோன்பினால் என்ன பலன்?

நான் உன்னைப் படைத்ததின் நோக்கமே என்னையும் உன் அயலானையும் அன்பு செய்வதற்காகத்தான்.

பிறர் அன்புக்கு உதவாத நோன்பு நோன்பே இல்லை



நீ உன்னையே  வதைத்துக் கொள்வதில்   நோன்பு இல்லை.

கோணி ஆடையை உடுத்தி , சாம்பலில் உட்காருவதில்  நோன்பு இல்லை.


ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் வாழச் செய்வதில் தான் உண்மையான நோன்பு இருக்றது."

"அப்போ உண்ணா நோன்பு  இருப்பது உண்மையான நோன்பு இல்லையா?"


"வாழைப்பழம் பார்த்திருக்கியா?"

"பார்த்திருக்கேன். ''

"சாப்பிட்டிருக்கியா "

"சாப்பிட்டிருக்கேன்.".

"முழு வாழைப்பழதில தொலி, உள்ளிருக்கும் பழம் என இரண்டு பகுதி ......."

"ஆண்டவரே, புரிஞ்சிக்கிட்டேன்.

தொலிக்கு உள்ள பழம் இருக்கு. ஆனால் பழம் இல்லாம தொலியால எந்த பயனும் இல்லை.

அதே போல் பிறகுதவியும், பட்டினியும் சேர்ந்து இருந்தால்தான் நோன்பு.

பிறருதவி இல்லாம பட்டினி மட்டும் இருந்தால்,

பழம் இல்லாத தொலி மாதிரிதான், ஒரு பயனும் இல்லை."

"நீ உண்ணா நோன்பிருக்கும் போது, எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

 உன் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்தால் 

நீ இருப்பது நோன்பு அல்ல, வெறும் பட்டினிதான்.

அதனால் ஆன்மாவிற்கு ஒரு பயனும் இல்லை."

நமது ஒவ்வொரு செயலும் இறைச் சித்தத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

இறைச் சித்தத்தை நிறை வேற்றாமல் நாம் வாழ்ந்தும் பயனில்லை.

லூர்து செல்வம்.

தவ முயற்சிகளில் சில.(தொடர்ச்சி )

தவ முயற்சிகளில் சில.

(தொடர்ச்சி )
******************************
விவசாயி வயலுக்குள் நுழைவது விவசாயம் சம்பத்தப்பட்ட வேலைகளை செய்ய, 

வீட்டுக் கணக்கு போடுவதற்கு அல்ல.

பள்ளிக்கூடம் போவது பாடங்களை படிக்க, 

படுத்து தூங்குவதற்கு அல்ல. 

தவக்காலத்துக்குள்  நுழைவது தவம் செய்ய,

ஓய்வு எடுக்க அல்ல.

தவக்காலம் தமது ஆன்மா பாவம் நீங்கி பரிசுத்தம் அடைய தரப்பட்டிருக்கும் காலம்.

குளித்துவிட்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிப்பது போலவும்,

கைகளை நன்கு கழுவி விட்டு
சாப்பிட ஆரம்பிப்பது போலவும்,

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து ஆன்மாவைத் தூயதாக்கி 

பரிசுத்தமான ஆன்மாவோடு தவக்காலத்தை ஆரம்பித்தால்

அதன் ஒவ்வொரு நிகழ்வும் தவ முயற்சியாக மாறி நமக்கு அருள் வரங்களை அள்ளித் தரும்.

நமது அன்றாட வாழ்வில் வரும் சாதாரண நிகழ்வுகளை தவ முயற்சிகளாக மாற்றி,

 ஆண்டவரது அருள் வரங்களை அபரிமிதமாகப் பெறும் சக்தி நம்மிடம்தான் உள்ளது.

அதைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.

நமது வாழ்வில் நாம் விரும்பும் காரியங்களும் நடக்கும்,

விரும்பாத காரியங்களும் நடக்கும்.

விரும்பும் காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதின் ஆண்டவரின் அருள் வரங்களைப் பெறலாம்.

விரும்பாத காரியங்களைத் தவ முயற்சிகளாக மாற்றுவதன் மூலம் ஆண்டவரின் அருள் வரங்களைப் பெறலாம்.

விரும்பாத நிகழ்வுகள் மாறுவேடத்தில் நம்மை அசத்த வரும் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள்.

Undesired for happenings are God's blessings in desguise.

நாம் கழிவுப் பொருட்களையும் நமது தாவரங்களுக்கு உணவுப் பொருளாகப் (manure) பயன்படுத்துகிறோம்.

தாவரங்கள் அவற்றை உணவாக மாற்றி நம்மிடமே சாப்பிடத் தருகின்றன.

கழிவுப் பொருட்கள்  கழிவுப் பொருட்கள் அல்ல.

மாறுவேடத்தில் வரும் உணவுப் பொருட்கள்தான்.

நமக்கு வரும் கஷ்டங்களும்,
நஷ்டங்களும் நமக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்


உதாரணத்திற்குச் சில.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதும், 

அதனால் அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் எல்லா குடும்பங்களிலும் இயல்பானதுதான்.

அவற்றை  ஆசீர்வாதங்களாக மாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?

"அடியே, ஒரு கப் காபி கிடைக்குமா?"

"அடிக்கடி காபி குடிக்கிறது உடலுக்குக் கெடுதி. 

தாகமா இருந்தா தண்ணீர் குடிங்க.".

இப்படி ஆரம்பித்த உரையாடல்

" உன் காபியும் வேண்டாம், நீயும் வேண்டாம், சீ,  இனிமேல உங்கிட்ட எதுவும் கேட்டால் செருப்ப கழற்றி அடி"

யில் போய் முடிந்தது.

சாப்பிடாமலேயே ஆபீசுக்குப் போய்விட்டான்.

ஆபீசில் வேலை ஒன்றும் ஓடவில்லை.


தவக்கால ஆரம்பத்திலேயே இப்படி ஆகிவிட்டதே.

எப்படியும் சரி செய்துவிட வேண்டும்.

பூ வாங்கிக்கொண்டு போவோமா?

இல்லை. தபசு காலத்தில் பூ கூடாது.

ஆண்டவரைக் கூட்டிக் கொண்டு போவோம்.

"என்னோடு வாரும் ஆண்டவரே. சமாதானத்தின் ஆண்டவரே, என்னை மன்னித்து எங்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தும்."


ஆண்டவர் வழி காட்டுவார்.

வீட்டிற்குச் சென்றான்.

சமையலறையில் நின்று கொண்டிருந்த மனைவியின் பின்னால் போய்நின்றான்.

அவள் அவனது காற்று பட்டு திரும்பினாள்.

படாரென்று அள்ளி எடுத்து அரவணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்தான்.

பெண்களிடம் ஒரு சுபாவம் உண்டு.

எதைக் கொடுத்தாலும் ஒன்றுக்குப் பத்தாய் திரும்பிக் கொடுப்பார்கள்.

பெற்றுக் கொண்டான்.

போருக்குப் பின்  சமாதானம்.
ஆண்டவர் அருளால்.

ஆண்டவரே நன்றி!

"ஆண்டவரே, இதை என் தவக்காலப் பரிசாக உமக்கு அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளும்."

                &

மகன் progress Cardல் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதைப் பார்த்த அப்பா கோபத்தில் வாயால் மட்டுமல்ல, கையாலும் பேசிவிட்டார்.

மகன் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தான்..

அப்பாவுக்கு அன்று முழுவதும்  ஒன்றும் ஓடவில்லை.

பையன் கொஞ்சம் அழுது விட்டு, பின் ஏன் அழுதோம் என்பதையே மறந்து விளையாடப் போய்விட்டான்.

மாலையில் அப்பா பையனைக் கூப்பிட்டார். வந்தான்.

உட்கார்ந்து கொண்டு, பையனை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு  காலையில் அடித்த இடத்தைக் கையால் தடவிக் கொடுத்தார்.

"இனிமேல் நல்ல மார்க் எடுப்பேன் அப்பா."

அவர்களது காவல் சம்மனசுக்கள் மகிழ்ச்சியால் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக உறவுகளுக்குள் ஏற்படும் ஒவ்வொரு உரசலையும் தவமுயற்சியாக மாற்றி ஆண்டவரது அருள் வரங்களை அள்ளலாம்.

குறைந்த முயற்சியில் நிறைந்த அருள் தரும் 'ஆடிக்கழிவு' தவ முயற்சிகள் ஏராளம் உள்ளன.

நம்மைப் பார்த்தவுடன் முறைக்கிறவர்களுக்கு 
.
ஒரு புன்முறுவலைப் பதிலாகக் கொடுக்கலாம்.

12 மணிக்கு சாப்பிடுகிற சாப்பாட்டை 12.15க்குச் சாபாட்டு 15 நிமிடத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கலாம்.

இருமல் வருகிறது, தும்மல் வருகிறது, கால் உளைகிறது, தலைவலிக்கிறது இவை எல்லாம் ஆண்டவருக்கு ரொம்ப பிடிக்கும். வரும் போதெல்லாம் ஒப்புக் கொடுக்கலாம். அதிக அருள் வரம் கொடுத்தே வாங்கிக் கொள்வார்.

பேசுபவர் First person. கேட்பவர் Second person.
பேசப்படுபவர் Third person.

Third person.ன் குறைகளைப் பற்றி பேசாதிருப்பதே கஷ்டமே படாமல் செய்யும் தவ முயற்சி.

திருப்பலி நேரம் முழுவதும் பீடத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது மிகப்பலன் உள்ள தவ முயற்சி. 

படிப்பில் மோசம் என்று ஆசிரியர் திட்டுகிறாரா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

அம்மா Tea யில் Sugar போட மறந்துவிட்டார்களா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

அம்மா வைத்த சாம்பார் ருசியாய் இல்லையா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.


திடீர் என்று மின்சாரம் Cut ஆகிவிட்டதா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

நமக்கு விருப்பம் இல்லாதது எது நடந்தாலும்
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

நம் வாழ்வே தவ வாழ்வாக மாறிவிடும்.

லூர்து செல்வம்

Wednesday, February 26, 2020

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்(யோவேல். 2.13)"

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்
(யோவேல். 2.13)"
*****  ****  ****** *****     ******
விபசாயி தனது சாதாரண உடையை அவிழ்த்து வைத்துவிட்டு , 

வெறும் கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு வயல் சகதிக்குள் இறங்குவது போல,

நாம் ஆடம்பரத்தை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு 

ஒறுத்தல் முயற்சிகளுடன் தவக்காலத்திற்குள் நுழைந்துள்ளோம்.

விபசாயியைப் பொறுத்தமட்டில்

வயலுக்குள் இறங்க வேண்டியது உடை அல்ல. அவனது உடல்.
 
ஆன்மீகத்தைச் சார்ந்த தவத்தைப் பொறுத்த  மட்டில்

 முக்கிய பங்கு வகிப்பது ஆன்மா,

உடல் அல்ல.


தவம் செய்யும் காலம் தவக்காலம்.

தவம் என்றால் என்ன?

அக்காலத்தில் முனிவர்கள் ஆடம்பரத்தால் அலைமோதிக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு,

மனித நடமாட்டம் அற்ற காட்டிற்குள் சென்று,

 தங்கள் ஐம்பொறிகளையும் அடக்கி 

ஆன்மாவை ஆண்டவரோடு ஒரு நிலைப் படுத்துவதையே தவம் என்றார்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் புற வாழ்வை விடுத்து விட்டு, ஆண்டவரோடு ஒன்றிக்க,

அக வாழ்விற்குள் நுழைவதே தவம்.

ரத்தின சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 

அகமும், ஆண்டவரும் இணைவதுதான் தவம்.

தவத்தில் புறத்திற்கு வேலை இல்லை, முழு வேலையும் அகத்திற்குத்தான்.

அதனால்தான் இறை வார்த்தை சொல்கிறது,

"உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்."

தவத்தில் ஈடுபட வேண்டியது நமது 

உடைகளல்ல, (புறம்)

இதயங்களே. (அகம்)

இறைவன் நம்மைத் தனது சாயலாகப் படைத்தார்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.

நமது ஆன்மா இறைவனது உயிர் மூச்சு.

இறைவனது சாயலைப்
 பெற்றிருப்பது நம்முடைய ஆன்மா.

நாம் என்றாலே நமது ஆன்மாதான்.

நமது ஆன்மாவுடன்தான் இறைவன் தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார். 


நாம் செய்யும் பாவங்கள் நமது ஆன்மாவில் உள்ள இறைவனின்  சாயலைப் பாதிக்கின்றன.

Our sins damage God's image in us.

ஆகவே நமது ஆன்மாதான் தான் செய்த பாவங்களுக்கு தவம் மூலம் பரிகாரம் செய்ய வேண்டும்.

அக்காலத்தில் காட்டிற்குள் சென்ற முனிவர்களைப் போல 

காட்டிற்குள் செல்லவேண்டாம்,

 சமூகத்தில் இருந்து கொண்டே தவம் செய்யலாம்.

புறத்தை விட அகத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

லூர்தும் செல்வமும் சேர்ந்து இருந்தாலும், 

லூர்து குற்றம் செய்தால் செல்வமா பரிகாரம் செய்வாள்? 

குற்றம் செய்தவர்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

 கூட இருப்பவர்கள் வேறு வழி இல்லாமல் சேர்ந்து அனுபவிப்பார்கள்.

பாவம் செய்வது ஆன்மாதான், உடல் அல்ல.

பாவம் அடங்கி இருப்பது உடலின் செயலில் அல்ல, 

ஆன்மாவின் நோக்கத்தில்.(intention)

ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அடிபடாமல் தடுக்க அவனைத்  தள்ளிவிடுகிறோம்.

அவன் கீழே விழுந்ததில் கை முறிந்து விட்டது.

தள்ளிவிட்டதும், கை முறிந்ததும்   செயல்கள்.

தள்ளியதும், விழுந்ததும் உடல்.

ஆனால் தள்ளியதின் நோக்கம் விளத்தாட்டவோ  கையை முறிக்கவோ  அல்ல.

நாம் அடிபடாமல் தப்பிப்பதுதான் நோக்கம்.

விழுந்தது உடல்.

நோக்கம் ஆன்மாவுடையது.

நமது நோக்கம் சரியானது, ஆகவே நாம் குற்றம் செய்யவில்லை. 

சில சமயங்களில் நமது நோக்கம் பாவகரமானதாக இருக்கும். ஆனால் செயலே நடைபெற்றிருக்காது.

நமது நோக்கம் பாவகரமானதாக இருப்பதால் நமது நோக்கம் செயலில் நிறைவேறாவிட்டாலும் நாம் பாவம் செய்து விட்டோம்.

"நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று."
(மத். 5:28)

பாவம் செய்தது ஆன்மாவாகையால் ஆன்மாதான் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆன்மாவும் உடலும் சேர்ந்து இருப்பதால் 

உடல் வேறு வழி இன்றி ஆன்மாவின் பரிகாரத்தில் பங்கு எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆன்மா பாவம் செய்ய நமது உடலைப் பயன்படுத்திக் கொள்வதுபோல 

பரிகாரம் செய்யவும் நமது உடலைப் பயன்படுத்தி கொள்கிறது.

நோன்பு இருக்க வேண்டியது ஆன்மா.

அதற்காக ஆன்மா தனது உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

ஆனால் நோன்பு இருக்க உடலைப் பயன்படுத்திவிட்டு

 அது  கெட்ட எண்ணங்களில் சுற்றித் திரிந்தால்

 அது நோன்பு இருக்கவில்லை.

இது தான் இதயங்களைக் கிழித்துக் கொள்ளாமல் 

ஆடையை மட்டும் கிழிப்பதைப் போன்றது.

நமது உள்ளம் தூய்மையாய் இருந்தால் மட்டுமே நமது தவ முயற்சிகளுக்குப் பலன் உண்டு.

 அல்லது அவை வீண்.

ஒருசந்தி நாட்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு

 வாசிக்கக் கூடாத அசிங்கமான புத்தகங்களை வாசித்து கொண்டிருந்தால் அவனது ஒரு சந்தி வேஸ்ட்.

பாவ வாழ்க்கை வாழ்பவன் மனம் திரும்பி

 புனித வாழ்க்கைக்கு திரும்பினால் மட்டுமே

 அவனது தவ முயற்சிகள் ஆன்மாவிற்குப் பலன் தரும்.

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு 

எத்தனை சிலுவைப் பாதைகள் செய்தாலும் வேஸ்ட்.

மனதில் யாரைக் கெடுக்கலாம் என்று திட்டங்களை தீட்டி கொண்டு எத்தனை ஜெப மாலைகளை உருட்டினாலும் வேஸ்ட்.

வீட்டில் மனைவியைக் கொடுமை படுத்துவிட்டு அதற்காக கொஞ்சம் கூட வருந்தாமல்  காணும் திருப்பலியும் கலந்துகொள்ளும் திருவிருந்தும் வேஸ்ட்.

இப்படிப்பட்டவர்கள் உள்ளத்தை பசாசிடம் ஒப்படைத்து விட்டு, 

உடலை மட்டும் இயேசுவுக்குக் கொடுக்க எண்ணுகிறார்கள்.

நமது உடலை காப்பாற்றவா இறை  மகன் மனிதன் ஆனார்?

 ஆண்டவருக்கு வேண்டியது நமது உள்ளம்,

 மண்ணுக்குள் போகக்கூடிய உடல் அல்ல.
_

யாராவது நிலக்கடலையை உடைத்து பருப்பை மண்ணில் போட்டுவிட்டு 

வெளியே கொட்டவேண்டிய   கூட்டைத் தின்பார்களா?

வாழைப்பழத்தை உறித்து தோலைத் தின்றுவிட்டு பழத்தைக் குப்பையில் போடுவார்களா?

கரும்பை பிரிந்து சாற்றை வெளியில் கொட்டிவிட்டு,  சக்கையை மட்டும் சாப்பிடுவார்களா?

மனிதன் மட்டும் ஏன்  தன் ஆன்மாவை ஒதுக்கி வைத்துவிட்டு 

உடலை மட்டும் கொண்டாடிக் கொண்டிருக்கிறான்?

ஏன் இருதயத்தைக் கவனியாமல்

உடை அழகைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிக்கிறான்?


"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்கவேண்டாம்." 

நோன்பு இருக்கும்போது நமது வயிற்றைத்தான் பட்டினி போடுகிறோம்.

ஆனால் கடவுள் பார்ப்பது நமது வயிற்றை அல்ல.

நாம் என்ன மனநிலையுடன் வயிற்றைப் பட்டினி போடுகிறோம் என்பதைத்தான்.

நமது மனநிலை சரியாக இல்லாவிட்டால் வயிறு பட்டினி கிடந்தும் பயனில்லை.

ஆகவே முதலில் மனம் திரும்புவோம்.

 நமது இருதயத்தை தூய்மை படுத்துவோம் 

தூய்மையான இருதயத்தோடு தவ முயற்சிகளை செய்வோம்.

தவ முயற்சிகளில் சில:

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, February 25, 2020

"தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை."


"தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை."
**************        ************

ஒரு பையன் வகுப்பில பாடம் நடந்து கொண்டிருந்தபோது தூங்கிவிட்டான்.

ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு,

"இது தான் தூங்குகிற நேரமா?"

"தெரியாம தூங்கிட்டேன், சார், மன்னிச்சிடுங்க."

                 &


"ஏண்டா பரீட்சையில காப்பியடிச்ச?"

"தெரியாம  செஞ்சிட்டேன், சார், மன்னிச்சிடுங்க''

                    &

"ஏண்டா சுவர்ல 'வாத்தியார் ஒழிக'ன்னு எழுதின?

"தெரியாம எழுதிட்டேன், சார்.
Please, மன்னிச்சிடுங்க, சார்."

இப்படி தப்பு செய்தவங்கதான்
'தெரியாம செஞ்சிட்டேன்'னு சொல்லுவாங்க.

எந்த ஆசிரியராவது மாணவன் மன்னிப்புக் கேட்குமுன்னே,

"சரி, நீ தெரியாம செஞ்சிட்ட, மன்னிச்சிட்டேன், போ"ன்னு சொல்லுவாங்களா?

ஆனால் நம்ம ஆண்டவர் சொல்லிட்டாரே!

அவரைக் கொலை பண்ணினவங்க சிலுவையைச் சுற்றிதான் நிற்கிறாங்க.

 அவரைக்  கேலி செய்து கொண்டுதான் நிற்கிறார்கள்.

இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொல்கிறார்!

எவ்வளவு இரக்கம்!

நம்மைப் பார்த்து யாரும் முறைச்சாக்கூட நமக்குக் கோபம் வருது.

ஆனால் இயேசுவை அந்தப் பாடுபடுத்தியும் அவருக்குக் கோபமே வரவில்லையே!

கல் தூணில் கட்டிவைத்து ரத்தம் சொட்ட சொட்ட கசையால் அடித்தார்கள்.

தலையில் முள்ளால் ஆன முடியை வைத்து அடித்தார்கள்.

அவரைத் திட்டினார்கள்.

 காலால் உதைத்தார்கள்.

அவர் மேல் எச்சிலைத் துப்பினார்கள்.

பாரமான சிலுவையை அவர் மேல் ஏற்றி சுமக்க வைத்தார்கள்.

ஆணிகளால் அறைந்தார்கள்.

எதிர்மறை reaction ஒண்ணுமே அவர் 
கொடுக்கலியே!

நம்மை நினைத்தால் நமக்கே  வெட்கம் வருகிறது.

அவரது இந்த பாடுகளுக்குக் காரணமாக இருந்தது நாம் தானே!

வெட்கப்படாமல் நாம் செய்த பாவங்கள் தானே!

அவர் அறையப்பட வேண்டிய சிலுவையைச் செய்ததும் நாம்தானே!

நினைத்துப் பாருங்கள்.

குருத்து ஞாயிறு அன்று குருத்தோலைகளைக் கையிலேந்தி,

"தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா" 

என்று வாழ்த்துப் பாடியதும் நாமதான்,



வெள்ளிக்கிழமையன்று பாவங்கள் என்ற ஆணிகளால் அவரைச் சிலுவையில் அறைந்ததும் நாமதான்!

நாம் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும்,

இயேசு பெரிய மனது பண்ணி,

"இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள்,

இவர்களை மன்னியும், அப்பா." 

தந்தையிடம் வேண்டுகிறார்.

நமக்கு வெட்கமாய் இருக்கிறது.

"ஆண்டவரே! நாங்கள்தான் எங்கள் பாவங்களால் உம்மைச் சிலுவையில் அறைந்தோம்.

எங்கள் பாவங்களை ஏற்றுக் கொள்கிறோம், ஆண்டவரே.

வருந்துகிறோம், தேவனே!

எங்களை மன்னியும், அப்பா!

பாவங்களுக்குப் பரிகாரமாக சாம்பலைப் பூசி பரிகாரத்தை ஆரம்பிக்கிறோம், ஆண்டவரே!

இனி எங்கள் வாழ்வையே பரிகார வாழ்வாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம், ஆண்டவரே!
ஏற்றுக்கொள்ளும், அப்பா!"

தவக்காலத்தில் மட்டுமல்ல,
வாழ்நாளெல்லாம் தவம் செய்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 24, 2020

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (தொடர்ச்சி)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (தொடர்ச்சி)
***************************

இயேசு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு நற்செய்தியை அறிவித்த காலத்தில்

 அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி 

கடைசியில் அதை நிறைவேற்றிய விரோதிகளை

 சாகும் முன் நண்பர்களாக்கி காட்டியவர்.

சாத்தான் புகுந்ததால் யூதாஸ்

 ஆண்டவரை முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்தான்.

ஆனால் இயேசு அவனை 'நண்பா' என்றுதான் அழைத்தார்.

வெறும் பேச்சுக்கா அப்படி சொல்லியிருப்பார்?

அவர் நம்மைப்போலவா?

நாம் காரியம் ஆக வேண்டும் என்றால் சாத்தானையும்  காலைப் பிடிப்போம்.

'நானே சத்தியம்' என்று சொன்னவர் ஆண்டவர்.

ஆகவே சத்தியமாக 

யூதாசை தன் நண்பனாக சொன்னது 

வெற்று வார்த்தை இல்லை

 சத்தியமான வார்த்தை.

சாகும் முன் யூதாசும் ஆண்டவருடைய நண்பனாகி விடுவான் என்பதை உறுதியாக நாம் சொல்லலாம்.

ஆண்டவர் கைதாகி விட்டார் என்பதை அறிந்ததும்

 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்

 எதற்காக அவரைக் காட்டிக் கொடுத்தானோ

 அந்த காசை தூர எறிந்துவிட்டு மனதில் துக்கம் தாங்கமாட்டாமல் 

"ஐயையோ, மாசில்லாத ரத்தத்தை காட்டிக் கொடுத்து விட்டேனே"

என்று கத்தினான்.

தற்கொலை செய்துகொள்வது பாவம்தான்.

ஆனால் பாவத்தின் கனாகனத்தை எது தீர்மானிக்கிறது?

வெறும் செயலா?

இல்லை. 

செய்யும்போது செய்பவரிடம் இருக்கும் மனநிலை.

முதலில் செய்வது சாவான பாவம் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது  வேண்டுமென்றே (deliberately)
செய்திருக்க வேண்டும்.

உணர்ச்சி (emotion) புத்தியை பின்னால் தள்ளி விடுகிறது.

தன்னை மீறிய உணர்ச்சிவசப்பட்டு செய்யும் எந்த காரியத்திலும் deliberation அளவு குறையும்.

அதற்குத் தகுந்த படி கனாகனமும் குறையும்.

யூதாஸ் தற்கொலை செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு செய்தான்.

He was activated by intense emotions.

அவனது மனநிலை கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.

நாம் செயலைப் பார்க்கிறோம், கடவுள் மனதை பார்க்கிறார்.

'நண்பா' என்று அழைத்தவர் அவனை நண்பனாக்கிக் கொள்ள 

அருள் வரங்களை அவனது ஆன்மா மீது கட்டாயம் கொட்டி இருப்பார்.

நமக்குத் தெரியும் 

எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நோக்கி ஆண்டவரின் அருள் வெள்ளம் பாயும்,

 பாவியை மனம்  திருப்புவதற்காக.

அகுஸ்தீன் என்ற பாவியைப் புனிதராக மாற்றியது ஆண்டவரின் அருள் வெள்ளம்தான்.

யூதாஸ் சாகும் முன் ஆண்டவரின் அருள் வெள்ளம் அவனை மனம் திருப்பியிருக்கும் என்று நம்புவதில் என்ன தவறு?

மனம் திரும்ப ஒரு வினாடியின் சிறு துளி (a small fraction of a Second) போதுமே!

யாரையும் கெட்டவன் என்று தீர்ப்பளிக்க நமக்கு கொஞ்சம் கூட உரிமை இல்லை.

 ஆனால் ஒருவரைப்பற்றி நல்லபடியாக  நினைப்பது தவறு இல்லை.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது 

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" 

என்று  ஜெபித்தார்.

ஆண்டவரின் ஜெபம் ஒப்புக்கு செய்யப்பட்டது அல்ல. நிஜமாகவே செய்யப்பட்டது.

இயேசு தந்தையை நோக்கி ஜெபித்தார்.

தந்தை யார்?

கடவுள்.

இயேசு யார்?

கடவுள்.

இரண்டும் வெவ்வேறு கடவுளா?

ஒரே கடவுள்.

நம்மைப் பொறுத்தமட்டில் நமது ஜெபம் ஒரு விண்ணப்பம்.

நாம் வேறு .இறைவன் வேறு.

நாம் இறைவனிடம் விண்ணப்பிக்கிறோம். 

நமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள இறைவன் விரும்ப வேண்டும்.

தனது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் விண்ணப்பிக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன?

 கடவுள் தனக்குத் தானே விண்ணப்பிக்கிறார்
என்பதுதானே.

நண்பர் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டு வருகிறார்.

அப்போது நமக்குள் நாமே ஒரு விண்ணப்பத்தை அனுப்புகிறோம்.

அதாவது நண்பருக்கு உதவி செய்யலாம் என்று.

அதாவது நண்பருக்கு உதவி செய்ய தீர்மானிக்கிறோம்.

இதேபோல்தான் இயேசு தந்தைக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பும்போது அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அவரே  தீர்மானித்து விட்டார் என்பதுதான்  பொருள்.

விண்ணப்பிப்பவரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்பவரும் அதே கடவுள் தான் என்பது நமது உள்ளத்தில்  உறுதியாக இருக்க வேண்டும்.

அப்படியானால் இயேசுவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு உறுதியாகிவிட்டது.

சம்பந்தப்பட்டவர்கள்  தாங்கள் செய்த பாவத்திற்கு வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். 

இயேசு தீர்மானித்த பின் அவரது அருள் வெள்ளம் அவரை  கொன்றவர்களை நோக்கிபாயும் என்பது  உறுதி.

அவர்களும் இயேசுவின் அருளால் உந்தப்பட்டு தங்களது  பாவத்திற்கு மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

ஆக இயேசு தான் போதித்த படி தமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து தனது நண்பர்களாக ஏற்றுக்கொண்டார்.

குரு எவ்வழி,

 சீடனும் அவ்வழி.

நாமும் நமக்கு தீமை செய்தவர்களை  மனதார மன்னித்து நமது நண்பர்களாக ஏற்றுக்
 கொள்வோம்.

To err is human, 

To forgive is divine.

லூர்து செல்வம்.

Sunday, February 23, 2020

"கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்"

 "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" 
******************************
மெஸபொட்டோமியாவை
(இன்றைய ஈராக்) ஆண்ட
(கி.மு.1894 to 1595) பாபிலோனிய வம்சத்து ஆறாவது மன்னன் ஹமுராபி.

அவன் வகுத்த கிரிமினல் சட்டம் 'கண்ணுக்குக் கண்'
( “an eye for an eye.”) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சண்டையில் ஒருவனது  கண் பழுது அடைந்து விட்டால்,

அதற்குத் தண்டனையாக
பழுதாக்கியவனின் கண்ணைத் தோண்டி எடுத்து விடவேண்டும்.

அவன் கை முறிந்து விட்டால்,
இவன் கையையும் முறித்துவிட வேண்டும்.

அதாவது பழிக்குப் பழி.

இது அன்பே இல்லாத நீதியை அடிப்படையாகக் கொண்டது.


ஆனால் அன்பே உருவான கடவுள் மனிதனை அன்பு என்ற அடிப்படைப் பண்புடன் படைத்தார்.

அன்பே இல்லாதவன் மனிதன் என்ற பெயருக்கே பொருத்தமானவன் அல்ல.

மனிதன் எந்த வினைக்கு எதிர்வினை ஆக்கினாலும்
(Reaction to any action) அது அன்புக்கு எதிராக இருக்கக்கூடாது.

நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளையை மீறி  பாவம் செய்தனர்.


அவர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்புப் பெற வேண்டுமானால் அவர்கள் உரிய பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற கடவுளுக்கு எதிராக செய்த பாவத்திற்குப் போதுமான பரிகாரம் செய்ய முடியாது.

ஆனாலும் அன்பே உருவான கடவுள்  மனிதனை மன்னிக்க தீர்மானித்தார்.

ஆகவே அவரே மனிதனாகப் பிறந்து

 மனிதன்  செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவரே  பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பாவப் பரிகாரப்  பலியாக்கினார்.

இயேசு சொல்கிறார்,

""கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு."


"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்."

" விரோதியை நேசி, உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்."

அவர் வெறுமனே சொல்லி விட்டுப் போக வில்லை. சொன்னபடி வாழ்ந்து காண்பித்தார்.

நாம் அவரது சீடர்கள் தானே?

சீடன் என்றால் வெறுமனே குருவின் பின்னால் போகின்றவன் அல்ல.

அவர் வாழ்வது போல் வாழ்பவன்.

அவரது சொற்படி மட்டுமல்ல அவரையே வாழ்பவன்.

It is not enough that we follow Christ, we must live Christ.

நாம் உண்ணும் உணவு நாம் அல்ல, 

ஆனால் அதை உண்டபின் அது நாமாகவே மாறி விடுகிறது.

சோறு ரத்தம் அல்ல, 

ஆனால் நாம் அதைச் சாப்பிட்டபின் நமது ரத்தமாகவே மாறிவிடுகிறது.

கிறிஸ்து நாம் அல்ல 

ஆனால் திருவிருந்தில் கிறிஸ்துவை நாம் உண்டபின்

  நாம் கிறிஸ்துவாகவே மாற வேண்டும்.

இறைவார்த்தை நாம் அல்ல,

ஆனால் அதை கேட்டபின் அது நமது வாழ்க்கையாக மாறி விட வேண்டும்.

இயேசுவிற்கு விரோதிகள் கிடையாது,

 ஏனெனில் அவர் எல்லோரையும் நேசிக்கிறார்.

பாவம் செய்வோர்தான் இயேசுவைத் தங்கள் விரோதியாகக் கருதுகிறார்கள்.

நாம் பாவம் செய்யும்போது நாம்தான் இயேசுவின் அன்பை விட்டுப் பிரிகிறோம்,

 ஆனால் இயேசுவின் அன்பு நம்மை விட்டுப் பிரிவதில்லை.

மனிதர்களுக்கு இடையிலான உறவிலும் 

நம்மால் நேசிக்கப் படுகின்றவர்கள் நமது விரோதிகள் அல்ல.

அவர்கள் நம்மை விரோதிகளாகப் பார்த்தாலும் நாம் அவர்களை நமது நண்பர்களாகத்தான் கொள்ள வேண்டும்.

விரோதத்தை அழிக்க ஒரே வழி அன்பு செய்வது தான்.

விரோதிகளை அழிக்க வேண்டுமா?

சுருக்கமான வழி ஒன்று இருக்கிறது.

அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்வதுதான். 

நிபந்தனையற்ற அன்பு நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க வைக்கும்.

நம் ஆண்டவர் வெறுமனே சொல்லி விட்டு போகின்றவர் அல்ல.

தனது போதனையை தானே வாழ்ந்து காட்டியவர்.

இது வெறும் வார்த்தை அல்ல சத்தியமான வார்த்தை. 

(தொடரும்)

லூர்து செல்வம்

Friday, February 21, 2020

"தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."(யாகப்பர். 2:9)

"தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."
(யாகப்பர். 2:9)
******************************
வசதியான ஆள். 

வசதியான மட்டுமல்ல வசதியை அனுபவிக்கும் ஆள்.

 வசதியை மட்டுமே விரும்பும் ஆள்.

வசதியை மட்டுமல்ல வசதியானவர்களை மட்டுமே விரும்பும் ஆள்.

வசதியானவர்களை விரும்புவது மட்டுமல்ல 

வசதி அற்றவர்களை வெறுக்கும் ஆள்.

வெறுப்பது மட்டுமல்ல, பக்கத்திலே அண்ட விடாத ஆள்.



கற்பனை செய்து பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆள் ஒரு நாள் தனது மகிழ்வுந்தில்  பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் 

மகிழ்வுந்து நின்று விடுகிறது.

இறங்கி எஞ்சினைத் திறந்து பார்க்கிறார்.

நின்றதற்கான காரணம் புரியவில்லை.

அவருக்கு மகிழ்வுந்தை ஓட்டத் தெரியும்,

அனுபவிக்கத் தெரியும்.

அதற்கு மேல் ஒன்றும் தெரியாது.

மகிழ்வுந்து நடுரோட்டில்  நிற்கிறது.

அவ்விடத்தில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை.

யாராவது வந்தால்தான் அதை ஒரு ஓரமாகத் தள்ளிவிடலாம்.

யாருக்காவது phone பண்ணி வரச் சொல்ல வேண்டும்.

இலட்சக்கணக்கில் மதிப்புள்ள phone.

கையில் எடுத்து சாலையின் ஒரு ஓரமாக நின்றார்.

அவருடைய Status க்கு ஓரமாகப் போகக்கூட கார் வேண்டும்.

வேறு வழி இல்லை. நடந்துதான்  சென்று நின்றார்.

phone த் தடவ ஆரம்பித்தபோது என்ன காரணமோ தெரியவில்லை,

கை நடுங்கி phone கீழே விழுந்துவிட்டது.

அவ்வழியாகச் சென்றிருந்த எருமை மாடு குளுகுளு  என்று சாணி போட்டிருக்கிறது.

அதை அவர் கவனிக்கவில்லை.

நல்லவேளை அவர் சாணியின் மீது மிதிக்கவில்லை.

ஆனால் கைதவறி விழுந்த Phone நேராகச் சென்று சாணியின் நடுவில் விழுந்தது.

சாணி குளுகுளுவென்று இருந்ததால் விழுந்த phone அதற்கு உள்ளேயே போய் மறைந்து கொண்டது.

வாழ்க்கையின் முதன்முறையாக சாணியை உற்று நோக்கினார் நம்ம ஆள்.

முகம் கோணிக்கொண்டு போனது.

Phone ஐ எடுக்க வேண்டுமானால் குனிய வேண்டும்.

சாணிக்குள் கைவிட வேண்டும்.

அவரது Status அவரைத் தடுத்தது. அவர் சாணிக்குள் கைவிட்டால் அதன் மதிப்பு என்ன ஆவது!

சுற்று முற்றும் பார்த்தார், யாரும் வருகிறார்களா என்று.

ஒரே ஒரு ஆள் மட்டும் எதிர்த்திசையிலிருந்து  வந்து கொண்டு இருந்தான்.

Strong ஆன ஆள்தான். ஆனால் பிச்சைக்காரன்.

உலகிலுள்ள அத்தனை கலர்களும் கலந்து ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கு வேட்டி சட்டை.

தரியே  கண்டு பிடிக்கப்பட்டிராத காலத்தில் நெய்ய பட்டிருக்க வேண்டும்!

தையல் மிஷினே கண்டு பிடிக்கப்பட்டிராத காலத்தில் தைக்கப்பட்டிருக்க வேண்டும்!

அசிங்கமான மூஞ்சி!

கண்ணாடியில் பார்த்தால் அவனே பயந்து ஓடியிருப்பான்!

நம்ம ஆள் எப்படி பார்ப்பார்?

வேறு வழியில்லை.

 பார்த்துதான் ஆக வேண்டும்.

 பிச்சைக்காரன் மெதுவாக நகர்ந்து அருகில் வந்தான்.

"தம்பி!"

பிச்சைகாரனைப் பார்த்து தம்பி என்று கூப்பிட்ட முதல் ஆள் நம்ம ஆளாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போ அவன் சூழ்நிலையின் கைதி. தப்பிக்க முடியாது. வேறு வழி இல்லை. கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

"ஐயா, என்னையா கூப்பிட்டீங்க?"

"ஆமா. வா."

பிச்சை போடத்தான் கூப்பிடுகிறார் என்று எண்ணி கையை நீட்டிக்கொண்டே  அருகில் சென்றான்.

வேறு வழி இல்லாமல் நம்ம ஆள் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில்  போட்டான்.

"சாமி நல்லா இருக்கணும்." கும்பிட்டுக் கொண்டே சொன்னான்.

"ஒரு உதவி வேண்டுமே!"

பிச்சைகாரனைப் பார்த்து உதவி கேட்டது அவரது வாழ்நாளில் இதுவே முதல் தடவை.

"என்ன சாமி செய்யணும்?"

"இந்த சாணிக்குள் என்னுடைய போன் விழுந்து விட்டது.

அதை கொஞ்சம் எடுத்துத் தரவேண்டும்."

"கொஞ்சம் என்ன, முழுவதுமே எடுத்துத் தருகிறேன்."

குனிந்து சாணிக்குள் கையை விட்டு phone ஐ வெளியே எடுத்தான்.

Phone முழுவதும் சாணி ஒட்டி கொண்டிருந்தது.

பிச்சைக்காரனை பொறுத்தமட்டில் சாணி கையில் படுவது பெரிய காரியம் இல்லை.

ஆனால் நம்ம ஆளைப் பொறுத்தமட்டில் அது நடக்க கூடாத பெரிய காரியம்!

"தம்பி அதைக் கொஞ்சம் துடைத்துக் கொடேன்."

பிச்சைக்காரன் கொஞ்சம் கூட அசிங்கப் படாமல் தனது வேட்டியைக் கொண்டு phoneஐத்  துடைத்தான்.

வேட்டி சாணியை விட அழுக்காக இருந்தது.

phoneல் இருந்த சாணி அவனது வேட்டியில் ஒட்டிக்கொண்டது.

வேட்டியில் இருந்த அழுக்கு phoneல்  ஒட்டிக்கொண்டது.

நம்ம ஆளுக்கு தாங்க முடியவில்லை.

"தம்பி  ஒரு சுத்தமான துணியை  வைத்துத்  துடைக்கக் கூடாதா?"

"சாமி எங்கிட்ட இருப்பது இந்த  துணிதான்."

நம்ம ஆள்  தனது கைக்குட்டையை  எடுத்துக் கொடுத்தான்.

கைக்குட்டையின் மதிப்பு நூறு ரூபாய்.

நம்ம ஆளுக்கு அது ஒன்றும் பெரிதல்ல.

பிச்சைக்காரன் கைக்குட்டையைக் கொண்டு phone ஐ நன்கு  துடைத்தான்.

நம்ம ஆளிடம் (கடைசியில் இதுவே அவனது பேராக மாறிவிட்டது!) phone ஐக் கொடுத்தான்.

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் phone கையில் வாங்கினான்.

ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்து "உதவிக்கு நன்றி" என்று சொன்னான்.

ஒன்றும் கொடுக்காவிட்டால் அவனது status என்ன ஆவது!

"சாமி, கைக்குட்டை."

"நீயே வைத்துக் கொள்."

"சாமி, நீங்க நல்லா இருப்பீங்க!"


கதை சொல்லுவது நமது நோக்கம் அல்ல. கருத்தை வலியுறுத்தவே கதை.

வசதியான நபரும் பிச்சைக் காரனும் ஒரே பரலோக தந்தையின் பிள்ளைகள்.

அதாவது உடன்பிறந்த சகோதரர்கள்.

ஆனால் சகோதர உறவை இருவருமே தெரிந்து கொண்டதாக தெரியவில்லை.

இயல்பிலேயே ஏழைகளை வெறுக்கும் வசதியான நபர் வேறு வழி இல்லாமல் பிச்சைகாரனின் உதவியை நாடுகிறார்.

பிச்சைக்காரனும் அவரை சகோதரன்  என்று நினைத்து உதவவில்லை.

ஏதோ ஒரு ஆள் உதவி கேட்டார். அவன் உதவி செய்தான். பதிலுக்கு கொடுத்த பணத்தையும் வாங்கிக்கொண்டான்.

இங்கு சகோதர உறவு ஒன்றும் வெளிப்படவில்லை.



"ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."

என்று இறைவார்த்தை
 கூறுகிறது.

நம்மைச் சுற்றி வாழும் அனைவரும் நமது சகோதர சகோதரிகளே.

 ஆனால் நாம் எந்த அடிப்படையில் அவர்களோடு பழகுகிறோம்?

நமது குடும்பத்தில் அப்பா அம்மா அண்ணன் தங்கை உறவுகள் இவ்வுலகைச் சார்ந்தவை.

இவை அன்பை அடிப்படையாக  கொண்டவை.

இவை இந்த உலகத்தை சார்ந்தவையாக இருந்தாலும்,

இவை அடிப்படையாக கொண்ட அன்பு விண்ணுலகைச் சேர்ந்தது.

அன்பே உருவான கடவுள் நம்மைப் படைக்கும்போது நம்மோடு அவரது அன்பையே தாராளமாக பகிர்ந்து கொண்டார்.

 பரிசுத்த தம தமதிரித்துவ  கடவுள் தன்னுள் நிலவியஅளவற்ற அன்பை 
நம்மோடு பகிர்ந்து கொண்டபோது 

நாமும் அன்பினால் இணைக்கப்பட்டு ஒரே மனுக்குலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அன்பு கயிறு போன்றது.

அதற்குள் மாட்டியவர்களைப் பிரிய விடாமல்  கட்டிப்போடுகிறது.

நம்மை கடவுளோடு பிணைக்கும் அதே அன்பு

 நம்மை மனுக்குலத்தின் ஒவ்வொரு உறுப்பினரோடும் பிணைக்கிறது.

ஆகவே மனுக்குல உறுப்பினர்கள் அன்பு என்னும் உறவால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவேதான் மற்றவர்களோடு நமது உறவு அன்பை மட்டும் தான் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றவன்.

Each human being is unique.

ஒருவனைப் போல் மற்றவன் இருப்பதில்லை.

அவன் வாழும் சமுதாயத்திலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம், இருக்கும்.

அரசனும் குடிமகனும் சமூக அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள்.

அவ்வாறே

 தந்தையும்,மகனும்.

ஆசிரியரும், மாணவரும்.

முதலாளியும், தொழிலாளியும்.

நிர்வாகியும், நிர்வகிக்கப்படுகிறவர்களும்.

சமுதாய ரீதியில் இவர்களிடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்

 அன்பின் அடிப்படையில் எல்லோரும் சமமே.

இதைத்தான் சமத்துவம் என்கிறோம்.

அண்ணன் மூத்தவனாகவும் மகன் இளையவனாகவும் இருக்கலாம்.

அன்பு இவர்களைச் சமம் ஆக்கி விடுகிறது.

முதலாளி தொழிலாளியை விட அந்தஸ்தில் பெரியவராக இருக்கலாம்.

ஆனால் அவரும்  தன்னை தான் நேசிப்பது போல தொழிலாளியை நேசிக்க வேண்டும். இதுதான் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவ அன்புக்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

அதனால்தான் கடவுளாகிய இயேசு அன்பின் நிமித்தம் மனிதன் ஆனார்.

பரிசுத்தர் ஆகிய இயேசு அன்பின் நிமித்தம் பாவிகளோடும் அமர்ந்து உண்டார்.


"தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
(மத்.12:49, 50)

இயேசுவின் தாயாகிய
மரியாள் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தன் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்தாள். இந்த அற்பணத்தின் அடிப்படை அன்பு.

அன்பின் அடிப்படையில் தான் சீடர்களும் இயேசுவையே பின்பற்றுகிறார்கள். அவர்களும் மரியாளைப் போலவே இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.

ஆகவேதான் இயேசு தன் சீடர்களையும் தனது  'தாய்' என்கிறார்.

அன்பு அந்தஸ்தின் ஏற்றதாழ்வு உள்ளவர்களையும் சமம் ஆகிவிடுகிறது.

ஆகவே மற்றவர்களோடு நம்முடைய உறவு அன்பின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே ஒழிய 

அந்தஸ்தின் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் அல்ல.

முதலாளியிடம் காட்டும் அதே அன்பைத்தான் தொழிலாளர்களிடமும் காட்ட வேண்டும்.

முதலாளிக்கு கொடுக்கும் அதே மரியாதையைத்தான் தொழிலாளிக்கும் கொடுக்க வேண்டும் ஆகவேதான் புனித யாகப்பர் தனது மடல் மூலமாக நமக்குச் சொல்லுகிறார்,


".என் சகோதரர்களே, மாட்சிமை மிக்க நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள நீங்கள் மக்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை நடத்தாதீர்கள்."

செல்வந்தர் ஒருவர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

தன்னைப்போல வசதி உள்ளவர்களை மட்டும் விருந்துக்கு அழைத்தார்.

விருந்து நாளில் அழைக்கப்பட்டோர் டிப்டாப்பாக டிரஸ் செய்து தங்கள் பணக்கார திமிரைக காட்டிக்கொண்டு விருந்துக்கு வந்தார்கள்.

ஒரே ஒருவர் மட்டும் தான் மற்றவர்களைவிட பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் விருந்துக்கு வரும்போது சாதாரண உடை அணிந்து வந்தார்.

வாயில் காவலன் அவரைப்பார்த்து, 

"இப்படி உடை அணிந்தவர்களை உள்ளே விடக்கூடாது என்பது முதலாளியின் கட்டளை. ஆகவே நீங்கள் வீட்டுக்கு போகலாம், '' என்றான்.

அவன் வீட்டிற்கு சென்று, மற்றவர்களைப் போல டிப் டாப் உடை அணிந்து மறுபடியும் வந்தான்.

வாயிற்காவலன் அவனை உள்ளே அனுமதித்தான்.

விருந்து ஆரம்பம் ஆகியது.

அறுசுவை  உணவு பரிமாறப்பட்டது.

எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

முதலில் மறுக்கப்பட்டு பிறகு அனுமதிக்கப்பட்ட  நபர் வித்தியாசமாக சாப்பிட்டார்.

எல்லோரும் உணவை அள்ளி வாயில் வைத்தார்கள்.

இவர் மட்டும் உணவை அள்ளி தனது சட்டைப்பைக்குள்ளும், pants pocket க்குள்ளும் திணித்தார்.

திராட்சை ரசத்தை சட்டை மேல் ஊற்றினார்.

எல்லோரும் அவரைப்பார்த்து சிரித்தார்கள்.

விருந்துக்கு அழைத்தவர் இவர் அருகே வந்து

"இந்த பைத்தியத்தை உள்ளே விட்டது யார்?"

என்று கேட்டார்.

"வேறு யார்? உமது வாயில் காவலன் தான்."

" உன்னை அழைத்தது யார்?"

நண்பர் அழைப்பிதழை எடுத்துக் காட்டினார்.

"இதுதான் சாப்பிடும் லட்சணமா?''

''ஹலோ! லட்சணத்தைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்.

நான் முதலில் சாதாரணமான, லட்சணமான உடை அணிந்துதான் வந்தேன்.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டேன்.

மறுபடியும் டிப் டாப் ட்ரஸோடு வந்தபின்தான் அனுமதிக்கப்பட்டேன்.

இப்போது சொல்லுங்கள், விருந்துக்கு அழைக்கப்பட்டவன் நானா, என்னுடைய டிப் டாப் ட்ரஸா?

எனக்கு கிடைக்காத அனுமதி என் டிரஸ்சுக்குக் கிடைத்தது.

ஆகவேதான் அதற்கு உணவை ஊட்டிக் கொண்டிருக்கிறேன்.

இதில் என்ன தப்பு?"

அழைத்தவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நாமும் அநேக சமயங்களில் அவரைப்போல் தான் நடந்து கொள்கிறோம்.

நல்ல உடை அணிந்தவன் நம் அருகில் அமர்ந்தால் முகம்  மலர்கிறோம்.

பிச்சைக்காரன் நம் அருகில் அமர்ந்தால் நகர்கிறோம். 

பிறக்கும்போது டிப் டாப் ட்ரஸோடா பிறந்தோம்.

மனிதன் இறைவனால் படைக்கப்பட்டவன். அதற்குரிய மரியாதையை அவனுக்குக் கொடுப்போம்.

மதிப்போம் மனிதனை, தோற்றத்தை அல்ல.

லூர்து செல்வம்.

Wednesday, February 19, 2020

விண்ணுலகம் எங்கே இருக்கிறது?

விண்ணுலகம் எங்கே இருக்கிறது?
******************************

நாமே எதிர்பாராமல் நடந்தது நமது பிறப்பு.

அப்படியே நடக்கும் நமது மரணமும்.

பிறக்கும்போது மண்ணுலகிற்குள் நுழையும் நாம் ,

 இறக்கும்போது விண்ணுலகிற்குள் நுழைகிறோம்.

விண்ணுலகம் எங்கு இருக்கிறது?

அருகிலா? வெகு தூரத்திலா?

அருகில், தூரத்தில் என்பவை இட இடைவெளியை (distance between places) குறிப்பவை.

ஆனால் ஆன்மீக உலகமாகிய விண்ணுலகில் தூரமோ, நேரமோ கிடையாது.

ஆன்மாவிற்கு உருவம் இல்லாததுபோலவே ஆன்மீக உலகத்திற்கும் உருவம் இல்லை.

'எங்கே' என்ற வினாச்சொல் இடத்தைக் குறிக்கிறது.

இடமே தேவை இல்லாத பொருளை "எங்கே இருக்கிறது?" என்று கேட்பது பொருளற்றது.

ஆனால் இடத்திற்கும், (Where) நேரத்திற்கும் (When) கட்டுப்பட்டு வாழும் நம்மிடம்

அவற்றுக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றி கேட்பதற்கு   வார்த்தைகளே இல்லை.

ஆகவே வேறு வழி இல்லாமல் நமமிடம் உள்ள வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.

புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தாயின் வயிற்றில் (வயிறு ஒரு சடப்பொருள், matter) கருத்தரிக்கும் போது

 சடப்பொருளாகிய உலகிற்குள் (Material World) நுழைகிறோம்.

நமது ஆன்மா ஒரு ஆவி. (Spirit). 

நமது உடல் ஒரு சடப்பொருள். (Matter)

ஆகவேதான் இவ்வுலகில் இரண்டு வித வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது.

ஆன்மீக வாழ்க்கை, (Spiritual life)

லௌகீக வாழ்க்கை. (material life)

ஆன்மீக வாழ்க்கை நிரந்தரமானது.

லௌகீக வாழ்க்கை தற்காலிகமானது.

இவ்வுலகில் ஆரம்பித்த நமது 
ஆன்மீக வாழ்க்கை மறுவுலகிலும் தொடரும்.

நாம் உற்பவிக்கும்போது ஆரம்பித்த லௌகீக வாழ்க்கை நமது மரணத்தின்போது முடிந்துவிடும்.

 நாம் , அதாவது, நமது ஆன்மா,
மண்ணுலகில் ஆரம்பித்த ஆன்மீக வாழ்வை இடைவெளி இன்றி,

தேவைப்பட்டால் உத்தரிக்கிற ஸ்தலம் வழியாக,

 விண்ணுலகிலும் தொடர்வோம்.

நமது வாழ்க்கை பரிசுத்தமானது என்ற அடிப்படையில் பேசுகிறோம்.

நாம் பிறக்கும்போது சிரிக்கின்றவர்கள்,

 இறக்கும்போது 

நாம் அவர்களை விட்டு பிரிந்து செல்கிறோம் 

என்று நினைத்து அழுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நாம் எங்கும் போகவில்லை.

We do not leave them.  We remain with them.

அதெப்படி?

நாம்தான் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குள் போய் விட்டோமே

உண்மையில் நாம் எங்கும் போகவில்லை என்றால் என்ன அருத்தம்?

ஒரு ஒப்புமை. Analogy.

தகப்பனும், மகனும் இரவில் வெகு நேரம் வரை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேசி முடிந்ததும் Good Night சொல்லிவிட்டு அவரவர் அறைகளுககுச் சென்றுவிடுகிறார்கள்.

இரண்டும் பக்கத்து பக்கத்து அறைகள்.

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது, ஆனால் அருகருகே தான் இருக்கிறார்கள்.

'அருகருகேதான் இருக்கிறார்கள்' என்பதைப் புரியவைக்க மட்டும் இந்த ஒப்புமை.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்கிறார்கள்.

திடீரென்று எதிர்பாராமல் மனைவியின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து விண்ணகம் சென்றுவிடுகிறது.

இப்போது மனைவி எங்கே இருக்கிறாள்?

விண்ணகத்தில்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?

இறைவன் இருக்கும் இடத்தில்.

இறைவன் எங்கு இருக்கிறார்? நம்முடன்தான் இருக்கிறார்.

இங்கு,

கணவனோடு இருக்கிறார்.

விண்ணத்தில் ஆன்மா தனியாக இருப்பதில்லை,

இறைவனோடு இணைந்து இருக்கிறது.

The soul is united with God.

இறைவன் கணவனோடு இருக்கிறார்.

அப்படியானால், மனைவி?

விடையைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

The wife does not leave her husband. 

 She remains with him.

 Because, 

God , with whom she is united, is with him.

மனைவி கடவுளோடு இருக்கிறாள்.

 கடவுள் கணவனோடு இருக்கிறார்.

ஆகவே மனைவி கணவனோடு இருக்கிறாள்.


நமது நடைமுறை வாழ்வில் புனிதர்களோடு எப்படிப் பழகுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் இது தெளிவாகப் புரியும்.

புனித அந்தோனியார் கடவுளுடன் இணைந்து இருக்கிறார்.

பாவூர்ச்சத்திரத்தில் இருந்து கொண்டு நாம் அவரிடம் செபிக்கிறோம். (பேசுகிறோம்)

நமது செபத்தை அவர் கேட்கிறார். நாம் கேட்ட உதவியைச் செய்கிறார்.

நாம் செபிக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து கொண்டும் ஒருவர் அந்தோனியாரிடம் செபிக்கிறார். 

அவரது செபத்தையும் அந்தோனியார் கேட்கிறார்.

அவருக்கும் கேட்ட உதவியைச் செய்கிறார்.



ஒருவர் இருவர் அல்ல, கோடிக்கணக்கான பேர் அந்தோனியாரிடம் ஒரே நேரத்தில் செபிக்கிறார்கள்.

அத்தனை பேரின் செபத்தையும் கேட்டு அத்தனை பேருக்கும் உதவி செய்கிறார்.

இது எப்படி முடிகிறது?

அந்தோனியார் இணைந்திருக்கும் சர்வவல்லப கடவுள் எங்கும் இருக்கிறார்.

நமது செபம் அந்தோனியாரிடம் சென்று கடவுளிடம் வருவதில்லை.

நமது செபம் பயணிக்கிறது என்று கற்பனை செய்து கொண்டால்,

அது கடவுள் வழியாகத்தான் பயணிக்கிறது.

ஏனெனில் அந்தோனியார் கடவுளுக்குள்ளேதான் இருக்கிறார்.

கடவுளுக்குத் தெரியாமல் அந்தோனியாரிடம் செபிக்க முடியாது.

 நாம் செபிப்பதற்கே கடவுளின் தூண்டுதல்தான் முதலில் வேண்டும்.

இது அந்தோனியாருக்கு மட்டுமல்ல, அனைத்துப் புனிதர்களுக்கும் பொருந்தும்.

விண்ணுலகில் இறைவனோடு இணைந்து வாழும் அனைவருமே புனிதர்கள்தான்.

திருச்சபையால் புனிதர் பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமல்ல

விண்ணுலகிலுள்ள அனைவரிடமும் நாம் செபிக்கலாம்.

எல்லோரும் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே.

All the limbs of the body are  internally connected with one another.

உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துவின் ஞான உடலுக்கும் பொருந்தும்.

ஆகவே, விண்ணகம் நம் அனைவரிடமும்தான் இருக்கிறது.

விண்ணக வாசிகள் அனைவரும் நம்முடன்தான் இருக்கிறார்கள்.

நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள்  இருக்கிறோம்.

கிறிஸ்துவில் நாம் அனைவரும் உறவினர்கள்.

"புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.''

நமது விண்ணுலக உறவினர்கள் அனைவரும் நம்மைப் பார்க்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் இறைவனில் நம் அருகே இருந்தாலும் 

நமது ஊனக்கண்களால் அவர்களைப் பார்க்க இயலவில்லை.

விண்ணகம் சென்றபின் அவர்களை நேருக்கு நேர் பார்ப்போம்.

இப்போது நமது விசுவாசக்  கண்களால் பார்ப்போம்.

அவர்களோடு உரையாடுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, February 18, 2020

"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?"(மாற்கு, 8:21)

"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?"
(மாற்கு, 8:21)
******************************
இயேசு தன் சீடர்களோடு படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சீடர்களுக்கு ஒரு கவலை.

 அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். 

படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.

அவர்கள் எல்லோரும் உண்ண 
ஒரே ஓர் அப்பம் போதாது.
இது தான் அவர்களுக்குப் பெரிய கவலை.

அவர்களுடைய கவலையைப் பார்க்கும்போது  நமக்கு சிரிப்புதான் வருகிறது.

அவர்களுடன்  பயணிப்பவர் ஆண்டவராகிய  இயேசு.

 ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர். 

ஏழு அப்பங்களை கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தவர்.

உண்மையில்  அவருக்கு ஒரு அப்பம் கூட தேவை இல்லை.

இந்த பிரபஞ்சத்தையே ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியவருக்கு,

வேண்டிய அப்பங்களை ஒன்றுமில்லாமையிலிருந்து இருந்து உண்டாக்கத் தெரியாதா?

இயேசு புதுமைகள் செய்யும்போதெல்லாம் அவருடனே இருந்த சீடர்களுக்கு ஏன் இந்த உண்மையை புரியவில்லை?

5 அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு  உணவு அளித்தவர்

 ஒரு அப்பத்தை கொண்டு சீடர்களுக்கு மட்டும் உணவு அளிக்க முடியாமல் இருப்பாரா?

இது ஏன் சீடர்களுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை!

ஆனால் இவ்விஷயத்தில் நாமும் சீடர்களைப் போலவே இருக்கிறோம். 

நமக்கு நன்கு தெரியும்
நம்மைப் படைத்தவர் எல்லாம் வல்லவர் என்று.

நமக்கு நன்கு தெரியும்
இறைவன் நமது பாசமுள்ள தந்தை என்று.


நமக்கு நன்கு தெரியும்
இறைவன் நம்மை உயிருக்கு உயிராய் நேசிக்கிறார் என்று. 

நமக்கு நன்கு தெரியும்
நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் அவர் தான் நம்மைப் பராமரித்து வருகிறார் என்று.

நமக்கு நன்கு தெரியும்
நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று.

நமக்கு நன்கு தெரியும்
விசுவாசத்துடன் எது கேட்டாலும் கிடைக்கும் என்று.

நமக்கு நன்கு தெரியும்
இவ்வுலகம் நமக்குச் சதமானது அல்ல என்று.

நமக்கு நன்கு தெரியும்
நாம் விண்ணுலக வாழ்விற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் என்று.

நமக்கு நன்கு தெரியும்
வெளகீக வாழ்வை விட ஆன்மிக வாழ்வே முக்கியம் என்று.

நமக்கு நன்கு தெரியும்
சேவைகள் பெறுவதைவிட சேவைகள் செய்வதிலேயே இன்பம் அதிகம் உள்ளது என்று.

நமக்கு நன்கு தெரியும்
பைபிள் இறைவனின் வார்த்தை என்று.

நமக்கு நன்கு தெரியும்
பைபிள் வழியாக இறைவன் நம்மோடு பேசுகிறார் என்று.

நமக்கு நன்கு தெரியும்
பைபிள் வாசிப்பது அறிவை பெருக்குவதற்கு அல்ல,
 நல்ல வாழ்வு வாழ்வதற்கே என்று.

நமக்கு நன்கு தெரியும்
மரணம்  விண்ணுலகத்தின்வாசல் என்று.

நமக்கு நன்கு தெரியும்
இன்பத்தில் மிதக்கும் நீண்ட ஆயுளை விட
சிலுவையை பக்தியுடனும் சுமக்கும் குறுகிய ஆயுளே
 நித்திய பேரின்ப வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்று.

இவ்வளவும் தெரிந்திருந்தும் என்ன பயன்?

படைத்தவருக்காகப் படைக்கப்பட்ட பொருட்களைத் தியாகம் செய்ய மனது வரவில்லையே!

தெருவில் திரியும் பிச்சைக்காரனும் இறைவனால் படைக்கப்பட்டவனே.

 ஆனால் அவனை நமது உடன்பிறந்த சகோதரனாக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மனது வரவில்லையே!
 இறைவனைத் தந்தை என்று அழைத்து என்ன பயன்?


நாமும் இறைவனை உயிருக்கு உயிராக நேசிப்பதாகத்தான் சொல்லுகிறோம்.

தனிப்பட்டவர்களின் நேசத்தை பற்றி நமக்கு தெரியாது.

ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

கிறிஸ்மஸ் அன்றும், புத்தாண்டு அன்றும் கோவிலுக்கு வரும் மக்கள் உள்ளூரில் தான் இருக்கிறார்கள்.

 ஆனால் கிறிஸ்மஸ் அன்று கோவிலுக்கு வரும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வருவது இல்லையே?

கோவிலுக்கு வருவது கிறிஸ்மஸ் விழாவிற்காகவா அல்லது இறை அன்பிற்காகவா?

பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

பாவங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா அல்லது பக்தியின்  அளவு குறைந்துவிட்டதா?

உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தேவ அழைத்தல் குறைந்துவிட்டதா அல்லது 

தேவ அழைத்தலை ஏற்றுக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதா?

அமேசான் பகுதியில்
குருக்கள் பற்றாக்குறை காரணமாக திருமணமான முதியவர்களுக்கு குருப்பட்டம் கொடுக்கலாம் என ஆயர்களே ஆலோசனை கூறியுள்ளார்கள்.

நல்ல வேளை பாப்பரசர் அந்த
ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை!

இதற்கெல்லாம் காரணம் இறைவன் நம்மை நேசிக்கும் அளவிற்கு நாம் அவரை நேசிக்கவில்லை என்பதுதானே!

ஒவ்வொரு விநாடியும் இறைவன் நம்மை பராமரிக்கிறார் என்பது நமக்கு தெரியும்.

 ஆனால் நாம் ஏன் நமக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்கிறோம்?

படிக்கிறோம், வெற்றி பெறுவோமா?

 வெற்றி பெற்றுவிட்டோம், வேலை கிடைக்குமா?

 வேலை கிடைத்துவிட்டது போதிய சம்பளம் கிடைக்குமா?

சுகம் இல்லாது இருக்கிறோம்,
முழு குணம் அடைவோமா?

இறைப் பராமரிப்பில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த சந்தேகங்கள் ஏன் வருகின்றன?

நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்பும் நாம் ஏன் கஷ்டங்கள் வரும்போது வருத்தப்படுகிறோம்?

நன்மை நேர்வது நமக்குப் பிடிக்கவில்லையா?

இவ்வுலக வாழ்வு சதம் இல்லை, மறு உலக வாழ்வுக்காகவே நாம் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெரிந்தும் 

ஏன் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகின்றோம்?

பைபிள் வழியாக இறைவன் நம்மோடு பேசுகிறார் என்பது தெரிந்திருந்தும் 

தினமும் பைபிள் வாசிக்கும் நாம் அதன்படி ஏன் நடப்பதில்லை? 

லௌகீக வாழ்வை விட ஆன்மீக வாழ்வுதான் சிறந்தது என்பதை அறிந்திருந்தும் 

இறைவனின் அருள் செல்வத்தை விட 

இவ்வுலகில் பொருட் செல்வத்தை ஏன் அதிகமாகத் தேடுகின்றோம்?

மரணம் அடைந்த பின்புதான்  விண்ணுலகம் செல்ல முடியும் என்பதை அறிந்திருந்தும் 

ஏன்  மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்?

 விண்ணுலகில் வாழ பயமாக இருக்கிறதா?

சிலுவையை, அதாவது துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோமே,

 இயேசுவின் சீடர்களாக வாழ பயமாக இருக்கிறதா?

ஒன்று புரிகிறது. 

 அறிவது வேறு,  நடப்பது வேறு. 

அறிவது புத்தியைச் சார்ந்தது.

 நடப்பது இருதயத்தின் அன்பைச் சார்ந்தது.

நம்மைவிட சாத்தானுக்கு அறிவு அதிகம்.

 ஆனால் அன்பு? zero.

அன்பே இல்லாத அறிவாளிகள் சாத்தானுக்குச். சமம்.

ஒரு மரத்தின் தன்மை அதன் உருவத்தை வைத்து அல்ல,

 கனியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் தன்மையை அவனது அறிவை வைத்து அல்ல,

 அவனது அன்பை வைத்தும் அவன் செய்யும் நற்செயல்களை வைத்தும்தான்

தீர்மானிக்க முடியும்.

அன்பு செய்வதை தவிர வேறு எதுவும் 
தெரியாதவர்களுக்குத்தான் மோட்சத்தில் முதலிடம்.

புத்தி, மனது,  இதயம் என்ற மூன்று தத்துவங்களும் இறைவனால் நமக்கு இலவசமாக  தரப்பட்டவை.

 புத்தி அறிவதற்கு.

 மனது ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு.

 இதயம் அறிந்ததை அன்பு செய்வதற்கு. அன்புதான் வாழ்க்கை.

இறை வார்த்தையை அறிவோம்.

இறை வார்த்தையை மனதிற்கொள்வோம்.

இறை வார்த்தையை அன்பு செய்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 17, 2020

"அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு."(சீராக். 15:17)

"அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு."(சீராக். 15:17)
******************************.

"கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்து, அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்". 14

"ஆனால், தம் கட்டளைகளையும் சட்டங்களையும் கொடுத்தார்." 15


"கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் அவருக்கு நித்தியத்திற்கும் விருப்பமாய் நடக்கவும் உனக்கு மனமுண்டானால் அவைகள் உன்னைக் காப்பாற்றும்." 16

"மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான்."18


இறைவன் நம்மைத் தன் தமது சாயலாகப் படைத்தார்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் ஒன்றுதான் சிந்தனை, செயல் சுதந்திரம்.

எதைச் சிந்திக்க வேண்டும்,

அதை எப்படிச் செய்ய வேண்டும் எனபதைத் தெரிவு செய்ய நமக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். 
(அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்)



கடவுள் தனது விருப்பம்போல் செயலாற்ற அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

அவருடைய சுதந்திரத்தில் தலையிட யாராலும் முடியாது.

ஆனால் அவருடைய சுதந்தரத்துக்கும், நமது சுதந்தித்திற்கும் பாரதூர வித்தியாசம் உண்டு.

அவர் இயல்பாகவே சுதந்திரம்   உள்ளவர்.

அவருக்கு சுதந்திரத்தை யாரும் பரிசாக கொடுக்கவில்லை.

அவருக்கு கட்டளை இட யாரும் இல்லை.

 மீறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் நமக்குக் கடவுளே கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்.

கட்டளைகளின்படி நடக்கவா, வேண்டாமா என்பதைத் 
தேர்வு செய்ய நமக்குச் சுதந்திரத்தைத்  தந்திருக்கிறார்.

இந்தச் சுதந்திரத்தில் கடவுள் தலையிடுவதில்லை.

(மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும்  தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான். 18)

கட்டளைகளைக்  கடைப்பிடித்தால் நித்திய வாழ்வு.  இன்றேல் நித்திய சாவு.

தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.

நமக்குத் தோன்றும்,

கடவுள் சுதந்திரத்தை தராமல் இருந்திருக்கலாம். கட்டளைகளையும் தராமல் இருந்திருக்கலாம்,

என்று.

உண்மைதான். சுதந்தரத்தையும், கட்டளைகளையும் தராமல் இருந்திருந்தால் பாவம் இருந்திருக்காது.

கடவுளும் மனிதனாய்ப் பிறந்து பாடுபட  வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

ஆனால், 

சுதந்திரமும், கட்டளைகளும் இல்லாவிட்டால் நம்மால் பாவமும் செய்ய முடியாது,  புண்ணியமும் செய்ய முடியாது.

 புண்ணியத்திற்கான பரிசு தான் மோட்சம்.

புண்ணியமே செய்ய முடியாவிட்டால்? 


கடவுள் நம்மைப் படைத்ததன் நோக்கமே விண்ணக வாழ்வைத் தந்து நம்மை நித்திய காலமாக அவரோடு பேரின்பத்தில் வாழ வைக்கவே.

அவர்  சர்வ சுதந்திரம் உள்ளவர்.

அவர் நினைத்திருந்தால் நம்மை படைத்து நேரடியாக விண்ணக பேரின்ப வாழ்வை தந்திருக்கலாம்.

ஆனால் அவ அப்படி நினைக்கவில்லை.

விண்ணக வாழ்வை சுதந்திரமாக  , நமது முயற்சியால்   சம்பாதிக்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.

இது அவர் முழுச் சுதந்திரத்தோடு எடுத்த திட்டம்.

அவரால் படைக்கப் பட்டவர்கள் என்பதால் நாம் அதை ஏற்று தான் ஆகவேண்டும்.

 நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது சுதந்திரத்தை விண்ணக வாழ்வை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பயன் படுத்துவது தான்.

நித்திய வாழ்வை அடைய வேண்டுமென்றால் அவர் தந்துள்ள கட்டளைகளை அனுசரிக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டால் பள்ளி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆகிறோம். 

பள்ளி இறுதியில் வெற்றியோடு வெளியேற விரும்புகிறவர்கள் 

பாடங்களைக் கற்பதோடு, இறுதித் தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வில்  வெற்றி பெற வேண்டும்.

வெற்றி பெறாதவர்கள் தோற்றவர்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் மத்தியில் நடுநிலை என்று இல்லை.

அதேபோன்று, நித்திய வாழ்வு என்ற வெற்றியை அடைய நடைபெறும் தேர்வுதான் இவ்வுலக வாழ்க்கை.


நித்திய வாழ்வு என்ற வெற்றி கிட்டாவிட்டால்

நித்திய சாவு என்ற தோல்வியைத் தவிர்க்க முடியாது.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் நடுநிலை என்று இல்லை.

ஆகவே கடவுள் அப்படிச் செய்திருக்கலாமே,

இப்படிச் செய்திருக்கலாமே 

என்ற பயனற்ற கேள்விகளை கேட்பதைத் தவிர்த்து விட்டு,

அவர் தந்த சுதந்திரத்துக்கு நன்றி கூறி,

அதை அவர் விருப்பப்படிவே பயன்படுத்தி.

அதாவது, அவரது கட்டளை அனுசரித்து நடந்து

நித்திய வாழ்வை அடைவோம்.

 கடவுளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது.

அவர் நமக்கு சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்.

தந்ததை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடவுள் கோழிக்கு இரண்டு கால்களையும் மாட்டுக்கு நான்கு கால்களையும் கொடுத்திருக்கிறார்.

கோழி, "நமக்கு ஏன் இரண்டு கால்கள் ?
 மாட்டுக்கு ஏன் நான்கு கால்கள்?" 

என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இரண்டு கால்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும்.

நாமும் கடவுள் தந்த  சுதந்திரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும்.

கடவுள் நமது சுதந்திரத்தில் குறுக்கிட மாட்டார்.

 ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்த 

உதவி கேட்டால் கட்டாயம் தருவார்,

 ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

"இறைவா,  நான் 
 கேட்காமலேயே நீர் தந்துவிட்ட சுதந்திரத்தை நான் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நீர்தான் உமது அருள் வரங்களால் உதவி செய்ய வேண்டும்"

 என்று இறைவனை நாம் மன்றாட வேண்டும்.

நமது மன்றாட்டுக்கு அவர் கட்டாயம் செவி
மடுப்பார்.

இறைவனின் அருள்வர உதவியோடு 

நாம் பெற்ற சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தி

 விண்ணக வாழ்வை சுதந்தரிப்போம்.

லூர்து செல்வம்.

Friday, February 14, 2020

"சென்று வாருங்கள்."

சென்று வாருங்கள்.
******************************.

தமிழில் பேசும்போது நாம் வெறுமனே நினைப்பதை மட்டும் வாயினால் சொல்வது இல்லை.

நமது கலாச்சாரப் பண்புகளையும் வெளியிடுகிறோம்.

மிகவும் பெயர் பெற்ற எடுத்துக்காட்டு:

"வருகிறேன்."

"வாருங்கள். "

இரண்டு ஒரு சொல் வாக்கியங்களும் சந்தித்தவர்கள் பிரியும்போது பயன்படுத்துபவை.

நண்பர்கள் சந்தித்துவிட்டு பிரியும் போது,

"போகிறேன்"  என்று சொல்லாமல் 

"வருகிறேன்." என்றுதான் சொல்கிறார்கள்.

விடைகொடுப்பவரும்

"வாருங்கள். " என்றுதான் சொல்கிறார்.

குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது பிரிக்க முடியாத உறவைத்தான் இந்த சிறிய உரையாடல் சுட்டிக் காண்பிக்கிறது.

ஒவ்வொரு திருப்பலியின்
முடிவிலும் குருவானவர் சொல்கிறார்,

"சென்று 
வாருங்கள்,

திருப்பலி நிறைவேறிற்று."


"இன்றைய திருப்பலி நிறைவேறிவிட்டது.

இல்லத்திற்குச் சென்று அதன் பலன்களை அனுபவித்துவிட்டு

அடுத்த திருப்பலிக்கு மீண்டும் வாருங்கள்."

என்று குரு அழைக்கிறார்.

அதாவது

சென்று வாருங்கள் 

என்ற சொற்றொடர் தொடர்ந்து நடைபெறவிருக்கும் திருப்பலிகளை ஒன்றோடொன்று இணைக்கும் கொக்கியாக (link) பயன்படுகிறது.

ஒரு திருப்பலி முடிந்து செல்வதே அடுத்த திருப்பலிக்கு வருவதற்காகத்தான்.

 பங்கெடுத்துச் சென்ற திருப்பலிக்கும்

 அடுத்து பங்குபெற வரவிருக்கும் திருப்பலிக்கும் இடையிலுள்ள நமது வாழ்க்கை

 திருப்பலியின் போது நாம் பெற்ற அருள் வரங்களால் பலன் பெற்றிருக்க வேண்டும்.

திருப்பலியின் போது திருவிருந்தில் கலந்து கொள்கிறோம்.

 நமது ஆன்மீக உணவாக நம்மிடம் வரும் நம் ஆண்டவர்

 அன்றைய நாளில் ஆன்மீக வாழ்வில் ஊட்டமாக இருந்து நம்மை வழிநடத்துவார்.

எப்படி நமது உடல் ஒவ்வொரு நாளும் உழைக்க சத்துள்ள உணவு தேவை படுகிறதோ

 அவ்வாறே நமது ஆன்மீக வாழ்வும் உற்சாக நடைபோட ஆன்மீக உணவு அத்தியாவசியம்.

இதைத் திருப்பலியின் போதுதான் பெறுகிறோம்.

பிறந்தவுடன் திருப்பலியின் போதுதான் ஞானஸ்நானம் பெறுகிறோம்.

அதில் ஆரம்பித்த திருப்பலித் தொடர் நாம் கல்லறைக்குச் செல்ல விடைபெறும் வரை நீடிக்கிறது.

இந்த திருப்பலித் தொடர்தான் நமது வாழ்வின் ஆரம்பமாகவும், மையமாகவும், முடிவாகவும் விளங்குகிறது.

இதிலிருந்து திருப்பலி நமது வாழ்வில் வகிக்கும் முக்கியத்துவத்தை உணரலாம். 

ஒவ்வொரு திருப்பலியிலும் எல்லாம் வல்ல இறை மகனையே இறைத் தந்தைக்கும் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

பலிப்பொருளின் தன்மைக்கு ஏற்ப நாம் பெறும் பலனும் இருக்கும்.

பலிப்பொருளாகிய இயேசு அளவற்றவராய் இருப்பதால் நாம் பெறக்கூடிய பலனும் அளவற்றதாக இருக்கிறது.

ஆனாலும் நாம் எந்த அளவிற்கு திருப்பலியில் ஈடுபாட்டோடு இருக்கிறோமோ அந்த அளவிற்கு பலனின் அளவும் இருக்கும்.

நம் முன்னால் பெரிய கடல் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

கடல் முழுவதும் நமக்குத்தான்.

 அதிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்,

ஆனால் நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவுதான் நம்மால் எடுக்க முடியும்.

பெரிய பாத்திரமாக இருந்தால் அதிக அளவு நீர் எடுக்கலாம். 

பாத்திரம் சிறியதாக இருந்தால் எடுக்கும் நீரும் குறைவாகத்தான் இருக்கும்.

திருப்பலியின் போது  நம் முன் அருட்கடல் ஒன்று முழுவதுமாக  நமக்காக காத்திருக்கிறது.

திருப்பலியில் நமது ஈடுபாடு, ஒன்றிப்பு என்ற பாத்திரம் நம் கையில் இருக்கிறது,

ஒன்றிப்பில் அளவை ஒட்டியே பாத்திரத்தின் அளவும், நாம் அள்ளக் கூடிய அருள் நீரின் அளவும் இருக்கும்.

ஆகவே திருப்பலியோடு ஒன்றித்து, ஈடுபாட்டோடு கலந்து நமது அருள் பெரும் பாத்திரத்தின் அளவை பெரியதாக்கி கொள்ள வேண்டும்.

சிலர் கிறிஸ்மஸ் பூசைக்காரராக இருப்பார்கள்.

சிலர் ஞாயிற்றுக் கிழமை
பூசைக்காரராக இருப்பார்கள்.

சிலர் தினசரி பூசைக்காரராக இருப்பார்கள்.

அவர்கள் பங்கெடுக்கும் பூசைகளின் அளவிற்கும்,
ஈடுபாட்டின் அளவிற்கும் 
ஏற்ப அவர்கள் ஈட்டும் பலன்கள் இருக்கும்.

ஈட்டும் பலன்களுக்கு ஏற்ப விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

மற்றெல்லா செபங்களையும் விட திருப்பலி என்னும் செபத்துக்குதான்  பலன் அதிகம்.

ஆகவே இறை அருளை அதிகம் ஈட்ட ஆசைப்படுவோர் திருப்பலியில் பங்கெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.

வருடம் ஒரு முறை பூசை கண்டால் உயிரோடு இருப்போம். அவ்வளவதான்.

வாரம் ஒரு முறை தோசை கண்டால் நடப்போம்.

தினமும் பூசை கண்டால் ஓடுவோம்.

ஆண்டவருக்குப் பிடித்தமான ஆன்மீக வாழ்வு வாழ

 நாம் அடிக்கடி,

 முடிந்தால் தினமும்,

 திருப்பலியில் கலந்துகொண்டு 

அபரிமிதமான அருள் வரங்களை அள்ளிச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியிலும் குருவானவர் நம்மைப் பார்த்து,

" ஆண்டவர் உங்களோடு இருப்பாராக."

 என்று வாழ்த்துகிறார்.

 இந்த வாழ்த்தை எவ்வளவு அதிகமாகப் பெறுகிறோமோ

 அவ்வளவு அதிகமாக ஆண்டவரோடு நமது நெருக்கமும் இறுக்கமும் இருக்கும்.

ஆண்டவரோடு நமது நெருக்கம் அதிகமானால்  நம்மிடையே பாவம் புக முடியாது.

அதுமட்டுமல்ல  ஆண்டவரும் அவரது அருள் வரங்களும் எப்போதும் நம்மோடு  இருப்பதால் 

நமது வாழ்வு அருள் மிகுந்ததாக இருக்கும்.

ஆண்டவர் அன்னை மரியின் வயிற்றில் தங்கியதால்தான் மரியாள் அருள்  நிறைந்தவள்
ஆனாள்.

அன்னை மரியின் அளவிற்கு நம்மால் அருள் நிறைய பெற முடியாவிட்டாலும் 

நம்மால் இயன்ற அளவு அதிகமாக பெற முயற்சிக்கலாமே! 

இறை அருள்தான் நமது ஆன்மீக வாழ்வின் ஊட்டச்சத்து.

ஜெபத்தின் மூலமாகவும் நற்செயல் மூலமாகவும் நாம் அருள் வரங்களைப் பெறுகிறோம்.

எல்லா  செபங்களிலும் மேன்மையானதாக இருப்பது திருப்பலி என்னும் செபமே.

அதில் எவ்வளவு அடிக்கடி கலந்து கொள்ள முடியுமோ அவ்வளவு அடிக்கடி கலந்து கொள்வோம்.

திருப்பலியின் முடிவில்

 "சென்று வாருங்கள்" 

என்று அழைப்பது நம் ஆண்டவராகிய இயேசுவே.

அவரது சொற்படி நடப்போம்.

லூர்து செல்வம்.








Thursday, February 13, 2020

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"(மாற்கு, 7:27)

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
(மாற்கு, 7:27)
******************************.
ஒரு சிறிய ஒப்புமை. (Analogy)

ஒரு குடும்பம். கணவன்  மனைவி பிள்ளைகள்.

அன்பு  கயிற்றால் பிணைக்கப்பட்ட குடும்பம்.

குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்.

கணவன் தன்னை நேசிக்கிறான் என்று மனைவிக்கு தெரியும்.

ஆனாலும் தனது அன்பை கணவன் வார்த்தைகளால் மனைவிக்கு வெளிப்படுத்தும்போது அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

மனைவி மட்டும் அல்ல

 குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்கள் அனைவருமே

 ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வார்த்தைகளால், முகபாவத்தால், புன் சிரிப்பால்

அடிக்கடி வெளிப் படுத்திக் கொண்டால் குடும்பத்தின் மகிழ்ச்சி வெளிப்படையாகவே அதிகரிக்கும்.

எத்தனையோ காதலர்கள் தங்கள் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்த தவறியதால் இணையாமல் போயிருக்கிறார்கள்.

"I love you." என்ற எட்டெழுத்து
 மந்திரத்தால் சாதிக்க முடியாத காரியங்களே கிடையாது. 

கடவுள் நமக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதே அதைப் பயன்படுத்தி நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

சுதந்திரமாக நாம் கடவுளை நேசித்தால் மட்டும் போதாது நமது நேசத்தை அவரிடம் அடிக்கடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

நாம் கடவுளை நேசிப்பது அவருக்கு தெரியும்.

அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசமும் அவருக்கு தெரியும்.

 ஆனாலும்,

"Jesus, I love you!"

" Jesus, I believe in you!"
இன்று நாம் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று நம் ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.

சில சமயங்களில் நாம் எவ்வளவு விசுவாசத்துடன்  ஜெபித்தாலும் நமது ஜெபம் கேட்கப்படாதது போல் தோன்றும்.

நமது விண்ணப்பத்தை அன்பு, விசுவாசம் என்ற  தேனோடு கலந்து நம் ஆண்டவரிடம்  கொடுத்தால்

ஜெபத்தின் சக்தி அதிகரிக்கும். 

சீரோபெனீசிய குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இயேசுவிடம் வந்து ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறாள்.

அவளுடைய மகளை ஒரு
அசுத்த ஆவி பிடித்திருந்தது.


அதை  ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.

இயேசுவுக்கு அவளுடைய விசுவாசத்தைப் பற்றி நன்கு தெரியும்.

 ஏனெனில் அவர் கடவுள்.

ஆயினும் அவளுடைய வாயிலிருந்து அவளது விசுவாச அறிக்கையை வெளிக்கொணரத் தீர்மானித்தார்.

 அவர் அவளைப் பார்த்து,

 "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.

இயேசு தேர்ந்தெடுக்கப்பட்ட  யூத குலத்தில் பிறந்திருந்தாலும் அவர் உலக மக்கள் அனைவரது மீட்பிற்காகவும் தான்  பிறந்தார்.

ஆனாலும் அவள் வாயிலிருந்து விசுவாச அறிக்கையை வெளியே கொண்டு வரவே அவ்வாறு கூறினார்.

 அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.

அவளுடைய இந்த அறிக்கையால் அவளுடைய  ஆழ்ந்த விசுவாசமும் தாழ்ச்சியும் வெளிப்பட்டது.

 அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்: பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்றார்

அவளது விசுவாச அறிக்கைக்கு கிடைத்த பரிசு.

ஆசிரியருக்கு தன் மாணவர்கள் நன்கு படிக்கிறார்கள் என்பது தெரியும்.

 ஆனாலும்  தேர்வு வைத்தால்தான் மாணவர்களுக்கு மதிப்பெண் பதிந்த சான்றிதழ் கொடுக்க  முடியும்.

இறைவனும் நமக்கு அப்பப்போ தேர்வுகள் வைக்கிறார்.

நம்மைப் பற்றி அவர் அறிந்து கொள்வதற்காக அல்ல. நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக.

உதாரணத்திற்கு,

ஒரு வேலைக்காக நேர்காணலுக்கு போய் வந்திருக்கிறோம்.

 அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.

நமது வேண்டுதல் கேட்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

ஆனால் கடவுள் நமக்கு ஒரு தேர்வு வைக்கிறார்.

அந்த வேலையை நமக்குப் பெற்றுத் தரவில்லை.

அப்போது நமது மனதில் ஏற்படும் எதிர்வினை (Reaction) நமது விசுவாச நிலையை நமக்கே வெளிப்படுத்தும்.

வேலை கிடைக்காத போதும் "எது நடந்தாலும் நமது நன்மைக்கே. 

எல்லாம் இறைவன் சித்தம்.

 இறைவனது சித்தத்திற்கு பணிவதே நமது கடமை." 

என்று இறைவன் சித்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் நாம். உண்மையான விசுவாசிகள். 

அந்நிலையில்  நமக்கு ஆண்டவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் நாம் பெயருக்குதான் விசுவாசிகள்.

ஒரு முறை மாணவர்கள் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர்  சொன்னார்,

"நீங்கள் படித்தது விரல் நுனியில் தயாராக இருக்க வேண்டும்.

Everything must be ready at the tip of your fingers.

அப்போதுதான் கேள்வியை வாசித்தவுடனே பதில் எழுத முடியும்.'' என்றார்.

தேர்வு எழுதி முடிந்து வந்த ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்டார்,

"எப்படி எழுதி இருக்கிறாய்."

மாணவன் சொன்னான்.

 "நான் படித்த எல்லாவற்றையும் விரல்நுனியில் வைத்திருந்தேன்.

 ஆனால் தேர்வு எழுத செல்லும்போது,

" நகத்தை  வெட்டிட்டுப் போடா, அசிங்கமா இருக்கு." என்று அம்மா சொன்னார்கள்.

 நானும் அவர்கள் சொற்படி நகத்தை வெட்டி விட்டுப் போனேன்.

 விரல்  நுனியில் இருந்ததெல்லாம் நகத்தோடு போய்விட்டது." என்றான்!

அதே போல்தான் சிலரது விசுவாசம் தோல்மேல் இருக்கும். தண்ணீர் பட்டவுடன் போய்விடும்.

ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும்,

"கடவுள் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? "

என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்து வந்தாலும்,

"கொடுத்தது நீர்தானே. தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளும்."

என்று கூறுபவர்களும்    இருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில்

 'பிறந்தால் இவ்வுலகம்,

 இறந்தால் விண்ணுலகம்.'

அவர்கள்தான் ஆழமான விசுவாசிகள்.

நமது விசுவாசத்தின் ஆழத்தை நாம் தெரிந்து கொள்ளத்தான் 

இறைவன் நமக்கு சோதனைகளையும் துன்பங்களையும் வர விடுகிறார்.

துன்பங்களின் அளவு  அதிகரிக்க அதிகரிக்க நமது அன்பும் விசுவாசமும் அதிகரிக்க வேண்டும்.

சாதாரணமாகச் செல்லும்போது தாயின் கையை மட்டும் பிடித்துச் செல்லும் குழந்தை 

ஏதாவது ஆபத்தைக் கண்டால் தாயைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறது.

நாமும் ஏதாவது பிரச்சினை வந்தால் 

ஆண்டவரைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

நாம் அவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதிக துன்பங்களை அனுப்புகிறார்.

சோதனைகள் வரும் போதெல்லாம்

"Jesus, I love you." 
"Jesus, deepen my faith.''

என்று சொல்லுவோம்.

விசுவாசம் என்ற செடி வளர துன்பங்கள் என்ற உரத்தை பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.


Wednesday, February 12, 2020

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"(லூக்.17:21)

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
(லூக்.17:21)
******************************
''கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்."
(மத். 6:33 )

"ஆண்டவரே, உமது அரசு எங்கே இருக்கிறது?"

"எனது  அரசு இதோ! உங்களிடையே உள்ளது"

உலக காரியங்களில் ஆர்வம்  காட்டுவதை  விட்டு விட்டு இறையரசைத்  தேடுவதில்  ஆர்வம் காட்டும்படி இயேசு கூறுகிறார்.

 இறையரசு எங்கே இருக்கிறது என்பதையும் அவரே கூறுகிறார்.  

"இறையரசு உங்களிடையேதான் உள்ளது."

இறைவன் எங்கும் இருக்கிறார்.

 இறைவன் இருக்கும் இடத்தில் தான் அவரது அரசும் இருக்கும்.

 ஆகவே இறை அரசும் எங்கும் இருக்கிறது. 

குறிப்பாக நமது இதயத்தை இறைவன் வாழும் ஆலயம் என்கிறோம்.

 நமது இதயத்தில் இறைவன் வாழ்கிறார். ஆகவே நமது இதயத்திலும் இறையரசு இருக்கிறது. 

இறைவனை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறையரசு இருக்கிறது.

இறைவன் நமது உள்ளத்திலிருந்து நம்மை ஆட்சி புரிகிறார்.

அவரது அரசு இவ்வுலக அரசை போன்றது அல்ல.

இவ்வுலக அரசுக்கு  எல்கை உண்டு,  இறையரசுக்கு எல்கை இல்லை.

இவ்வுலக அரசு நம்மிடம் வரி வாங்கி நமக்கு நன்மை செய்கிறது.

இறையரசில் இறைவன் நமக்குத் தருவது எல்லாம் இலவசம்.

இவ்வுலக அரசில்  நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டிக்கிறது.

இறையரசில் இறைவனே நீதிபதி. 

நமக்கு சார்பாக வாதாடும் வக்கீலும் இறைவனே.

நமது குற்றங்களுக்கு நம் சார்பாக பரிகாரம் செய்பவரும் இறைவனே.

நமது குற்றங்களை மன்னிக்கிறவரும் இறைவனே.

எல்லாம் இயேசுவே,

 நமக்கு எல்லாம் இயேசுவே.


நமது உள்ளத்தில் நமது அரசராம் இறைவன் உறைவதால்

 நாம் எப்போதும் அவரது பிரசன்னத்தில்தான் வாழ்கிறோம்.

அவரது அரசு   ஆன்மீக அரசாகையால்  அவர் நமது லௌகீக காரியங்களை விட ஆன்மீக காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

ஆன்மீகத்துக்காக லௌகீகத்தை நாம் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு முன்மாதிரியாக 

நமது அரசரே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக

 தன்னையே உயிர்த்தியாகம் செய்ததை 

நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நாம் பேரின்பம் நிறைந்த  நித்திய வாழ்வு  வாழ வேண்டும் என்பதற்காக

துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே மனுவுரு எடுத்தவர் நம் அரசர் என்பதையும் மறந்து விடக்கூடாது. 

நமது ஆன்மீக நலன் ஒன்றையே சதா நினைத்துக் கொண்டிருப்பவர் நம்  அரசர் என்பது நமது நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்றால் உணவு வேண்டும்,

 ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆன்மீக உணவு வேண்டும்.

 நமது ஆன்மீக அரசர்  ஆகிய ஆண்டவர் இயேசு நமது ஆன்மீக வாழ்விற்கான உணவாக தன்னையே,

 தனது உடலையும் இரத்தத்தையும்

 அளிக்கிறார்.


குழந்தையைப் பெற்ற  தாய் தன்  பாலை ஊட்டி வளர்க்கிறாள்.

 ஆனால் இயேசு நமது ஆன்மீக உணவாக  தன்னையே ஊட்டி வளர்க்கிறார்.

தாயினும் மேலான அன்பு.


உலக அரசர் தன் அரண்மனையில் இருந்துகொண்டு உத்தரவுகளைப்  பிறப்பித்துக் கொண்டு இருப்பார்.

ஆனால் நமது அரசர் நமக்குள்ளேயே இருப்பதால் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் வருகிறார்.

 என்ன செய்தாலும் நம்மோடு இருக்கிறார்.

 தனது அருள் வரங்களால் நமக்கு உதவி செய்து கொண்டே சதா நம்மோடு இருக்கிறார்.

 நமது உயிர் நம்மோடு இருப்பது போல

 ஆன்மீக உயிராகிய இயேசுவும் எப்போதும்

 இரவும் பகலும்,

 நாம் தூங்கும்  போது கூட நம்மோடிருக்கிறார்.

இயேசுவை அரசராக  ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறையரசு இருக்கிறது.

எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பது ஒரே இறையரசு தான்.

ஆகவே நாம் அனைவரும் இறை அரசால் இணைக்க படுகிறோம்.

அரசர் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி. 

இயேசு எப்படி தன் வாழ்நாளில் சென்ற இடமெல்லாம் சேவை செய்து கொண்டு சென்றாரோ

 அதுபோல நாமும் செல்லும் இடமெல்லாம் சேவை செய்வோம்.

நாம் யாருக்குச் சேவை செய்தாலும் அவர்கள் உள்ளத்தை ஆளும் இயேசுவுக்கே சேவை செய்கிறோம்.

பிறர் பணியின் மற்றொரு பெயர்  இறைப்பணி. 

ஏனெனில் எல்லோரும் ஒரே இறைவனின் மக்களே,

 ஒரே அரசரின் குடிமக்களே.

நம் எல்லோரின் ஆன்மாவிலும் ஓடுவது ஒரே இறைவனின் அருள்  இரத்தமே.

எல்லோரும் இணைந்து வாழ்வோம் இறையரசில்.

லூர்து செல்வம்.