Thursday, January 30, 2020

வசனங்களுக்கான விளக்கம் வசனங்களில் இல்லை.

வசனங்களுக்கான விளக்கம் வசனங்களில் இல்லை.

*****      *****     *****      *****


"ஹலோ! தம்பி, பைபிளும், கையுமாக வருகிறது மாதிரி தெரியுது!"


"மாதிரி தெரியவில்லை. பைபிளும் கையுமாகத்தான் வருகிறேன்.


இரண்டு வசனங்களுக்கு விளக்கம் தேவை."


"உட்காருங்கள் வசனங்களை வாசியுங்கள்.''


.''வாசிக்கிறேன்."




."கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.


12 எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, " பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே "  என்றார். (மாற்கு, 4:12)




"புறத்தே இருப்பவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி," 


என்று ஆண்டவர் கூறுகிறாரே,


 எல்லோரும் மனம் திரும்பி மன்னிப்பு பெற வேண்டும் என்பது தானே ஆண்டவரின் ஆசை, 


பின் ஏன் அப்படிக் கூறுகிறார்?"


"பைபிளை வாசிக்கும்போது ஒரு அடிப்படை உண்மையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


வசனங்களுக்காக விளக்கம் வசனங்களில் இல்லை."


"பின் எங்கே இருக்கிறது?,"


"வசனங்களை கூறுபவரிடம் இருக்கிறது.


 இங்கு இயேசுவிடம் இருக்கிறது."


"இயேசுவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றால் நான் மோட்சத்திற்குச் சென்ற பின்புதான் கேட்க முடியும்."


"நான் சொல்வது உனக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.


நீங்கள் ஒரு ஆசிரியர் தானே.


என்றாவது ஒரு மாணவனிடம்,


'உனக்குப் பாடம் நடத்துவது வேஸ்ட்.  பேசாம ஒரு எருமைமாட்ட பத்திகிட்டு மேய்க்கப் போடா.' ன்னு


 சொல்லி இருக்கீங்களா?"


"இந்த மாதிரி மட்டுமில்ல, இதைவிட கடுமையாகவும் சொல்லியிருக்கிறேன்."


"எந்த பயனாவது அவனுடைய அப்பாவிடம்,


'அப்பா ஒரு எருமை மாடு வாங்கித் தாங்க, மேய்க்கப் போகிறேன்.

வாத்தியார் தான் சொன்னாரு.' என்று சொல்லிருக்கானா?  


"அது எப்படிச் சொல்லுவான்.


 வாத்தியார் அந்த அருத்தத்தில் சொல்லவில்லை என்று அவனுக்குத் தெரியுமே. 


'நேரத்தை  வீணாக்காம பாடத்தை ஒழுங்கா படி'


என்ற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன் என்று அவனக்கு தெரியுமே.


இதைவிட கடுமையான வார்த்தைகளை என் மனைவி என் மக்களிடம் சொல்லியிருக்கிறாள்.


'உங்கள பார்த்தா என் வயத்தில பிறந்த பிள்ளைகள் மாதிரி தெரியல.


 ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது யாரோ என் பிள்ளைகளுக்கு பதில் உங்களை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.''


"ஆனா அந்த அருத்தத்திலா  அவங்க சொன்னாங்க?"


"அதெப்படி? 


தனது நல்ல குணங்கள் எதுவும் பிள்ளைகளிடம் தென்படவில்லையே என்ற வருத்தத்தில் சொன்ன வார்த்தைகள் அவை.


அம்மாவைப் பார்த்து நல்ல குணங்களைக் கத்துக்கங்கடா" 


என்ற  அர்த்தத்தில் தானே அவள் சொன்னாள்.


 சொன்னாலும் அவளுடைய  அன்பும் பராமரிப்பும் கொஞ்சம் கூட குறைய வில்லையே, அதிகரிக்க தானே செய்தன.


"இப்போ தெரிகிறதா, வார்த்தைகளின் அர்த்தம் அவற்றில் இல்லை, அவற்றை சொன்னவரிடம்தான் உள்ளது என்று? 


இயேசுவின் வசனங்களுக்கு பொருள் காண இயேசுவைத்தான் பார்க்க வேண்டும், வசனங்களை அல்ல.


இயேசு கடவுள்,


 சர்வ வல்லவர். 


மனிதனை மீட்பதற்காகவே   மனித உரு எடுத்து,  


பல துன்பங்களுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டவர்.


மக்கள் மனந்திரும்பி பாவ மன்னிப்புப் பெற வேண்டும்  என்பதற்காகவே நற்செய்தியை அறிவித்தவர்.


எது நடை பெற வேண்டும்  என்பதற்காக வந்தாரோ, 


அது நடைபெறக் கூடாது என்று அவரே  சொல்லுவாரா?


சிலர் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது


 செய்தியை கேட்டு பயனடைய வேண்டும் என்பதற்காக அவரைப்

 பின்தொடர்ந்தனர். 


அப்போஸ்தலர்களும் சீடர்களும் இந்த வகையினர்.


சிலர் அவரது பேச்சில் குற்றம் குறை காண வேண்டும் என்பதற்காகவே அவரைப் பின் தொடர்ந்தனர்.


அவரது செய்தியைக் கேட்டும் உணரக்கூடாது என்ற கடினமான மனநிலையுடன் அவரை பின் தொடர்ந்தனர்.


பரிசேயரும் சதுசேயரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.


அவர்களது மனநிலையை கண்டு இயேசு வருந்தினார்.


 தனது வருத்தத்தை இந்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.


"எல்லோருக்கும் நான்  உவமைகளைப் பயன்படுத்தியே உண்மையை போதிக்கின்றேன்.


 அவர்கள் மனந்திரும்பி


தங்கள் பாவங்களுக்கு. மன்னிப்புப் பெற வேண்டும் என்பதற்காகவே நான் போதிக்கிறேன்.


நான் செய்யும் புதுமைகளைப் பார்க்கும்போது 


அவர்கள் உண்மையை காண வேண்டும். 


என் வார்த்தைகளைக் கேட்கும்போது உண்மையை   உணர வேண்டும்.


அவர்கள்   பார்த்தும் காணாதிருப்பதும் ,  கேட்டும் உணராமல்  இருப்பதும் 

எனக்கு வருத்தத்தை தருகிறது." 


என்ற  பொருளில்தான் நீங்கள் வாசித்த வசனங்களை இயேசு கூறினார்.


 இறை வசனங்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்போர் ஒரு அடிப்படை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.



பைபிள் வசனங்களில் அடங்கி இருக்கும்  இறைச் செய்திதான் சொற்களை விட முக்கியம். 


சிலர் செய்தியைத் தரும் வார்த்தைகளை மட்டும் பிடித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருப்பர்.


ஒரு நண்பர் சொன்னார்,


"சார் உங்கள் பைபிள் பொய்யில் தான்  ஆரம்பிக்கிறது அதை நீங்கள் நம்புகிறீர்கள்."


"அப்படியா? எந்த  பொய் 

சொல்லுங்கள். "



"கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று.


அது எப்படி சார் சூரியன் வருமுன் ஒளி வரும்?


முதலில் ஒளி உண்டாயிற்று என்று சொல்வது பொய்தானே?"


நண்பரின் பிரச்சனைக்கு காரணம் 


அவர் வார்த்தைகளை பிடித்து அகராதிப்படி பொருள்  சொல்லிக்கொண்டு இருப்பதுதான்.


பரிசுத்த ஆவியின் ஏவுதலால் ஆதி ஆகமத்தை எழுதிய மோயீசன் 


பூமி எவ்வாறு உண்டாயிற்று என்ற பூகோள  உண்மையை விளக்குவதற்காக எழுதவில்லை.


அவர் காலத்து மக்களுக்கு பூமி உருண்டை  என்றோ 


அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்றோ 


அதனால்தான் இரவு பகல் ஏற்படுகிறது என்றோ தெரியாது.


பைபிள் அதைத் தெரியப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் அல்ல.


ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் உலகம் எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி பூகோள  ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ மக்களுக்கு எடுத்துரைக்கும் அதிகாரம் அல்ல.


படைப்பு பற்றிய இறைச்செய்தியைத் 

தருவதற்காக மட்டும் எழுதப்பட்டது.


பைபிள் தரும் இறைச் செய்தியை வாசிக்க வேண்டுமே தவிர 


'நமது கருத்துக்களை அதற்குள் புகுத்தக்கூடாது.



முதல் அதிகாரம் கடவுள் தனது வல்லமையால் உலகையும், விண்ணிலுள்ள நட்சத்திரங்களையும் படைத்தார் எந்த இறைச் செய்தியை தருகிறது.


இதன் மூலம் இறைவன் சர்வ வல்லவர் என்பதையும்,


 படைப்புகளுக்கெல்லாம் ஆதி காரணர் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.


மற்றபடி முதல் அதிகாரத்தை பூகோள கண்ணாலோ அறிவியல் கண்ணாலோ வாசிக்க கூடாது.


பைபிள் ஒரு அறிவியல் நூலும் அல்ல, பூகோள நூலும் அல்ல.


இரண்டாம் அதிகாரம் கடவுள் தனது வல்லமையால் மனிதனைப் படைத்தார் என்ற இறை செய்தியை தருகிறது.


மூன்றாம் அதிகாரம் மனிதன் பாவம் செய்தான் என்ற  செய்தியையும் இறைவன் அவனுக்கு மீட்பரை வாக்களித்தார் என்ற செய்தியையும் தருகிறது.


இந்த இறைச் செய்திகளைத் தவிர வேறு எந்த உலகியல்  செய்தியையும் முதல் மூன்று அதிகாரங்கள் தரவில்லை.


இறைச் செய்திகளைத் தவிர உலகியல் செய்திகளை தருவதற்காக பைபிள் எழுதப்படவில்லை."


"இப்போது புரிகிறது.


 இயேசுவைப் பற்றி முதலில் நன்கு அறிவோம்.


அப்புறம் பைபிள் வாசிப்போம்.


லூர்து செல்வம்

Tuesday, January 28, 2020

நம் விலை என்ன?

நம் விலை என்ன?
*****      *****     *****      *****

நாம் ஒரு பொருளை வாங்க விரும்பும் முன்

அந்தப் பொருள் நமக்கு பயன்படக்கூடியதா,

அது கூறப்படும் விலைக்கு ஏற்றதா,

அது தரம் வாய்ந்ததா,

போன்ற பல வினாக்களுக்கு விடை காண்போம்.

நமது வினாக்களுக்கு ஆம் எந்த விடை கிடைத்தால் வாங்குவோம்,

இன்றேல்  விட்டுவிடுவோம்.

ஒருவரது நட்பிற்குள் நுழையும் முன் அவரது நட்பு நமக்கு பயன் தருமா

என்பதை முதலில் ஆலோசிப்போம்.

பயன் தரும் நட்பு என்றால் தொடர்வோம்,

இன்றேல் விட்டுவிடுவோம்.

கடவுள் நம்மை நித்திய காலமாக நேசிக்கிறாரே,

நம்மிடம் உள்ள எந்த தகுதியை பார்த்து?

நாம் யார் என்று நமக்கே தெரியாத காலத்திலிருந்தே கடவுள் நம்மை நேசிக்கிறார்.

அவர் நித்திய காலமாக நம்மை நேசித்துக் கொண்டு இருந்தபோது நாமே இல்லை.

இல்லாதவர்களாக இருந்த நம்மை வாழ்வுக்குள் கொண்டு வந்தவரே அவர்தான்.

நாமும் நமக்கு உள்ளவைகளும் அவருக்கே சொந்தம்.

எதுவுமே சொந்தமில்லாத நம்மை கடவுள் நேசிக்கிறார் என்றால்

அவர் நமது தகுதி கருதி நேசிக்கவில்லை.

பின் எது கருதி நம்மை நேசிக்கிறார்?

அவர் நேசிக்கிறார், ஏனென்றால் நேசிப்பது அவர் சுபாவம்.

It is His nature to love.

அவர் அன்பு மயமானவர்.

அன்பினால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

நம் மேல் அவருக்கு உள்ள அன்பு நிபந்தனை அற்றது.

He loves us unconditionally.

நமது முதல் பெற்றோரை பாவம் இன்றி பரிசுத்தர்களாய் படைத்தார்.

பரிசுத்தர்களாய் இருந்த நமது முதல் பெற்றோரை அவர் அளவில்லாத விதமாய் நேசித்தார்.

அவர்கள் பாவம் செய்து தங்கள் பரிசுத்தத்தை இழந்தார்கள். பாவிகளாய் மாறினார்கள்.

அப்பொழுதும் ஆண்டவர் அவர்களை நேசித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

அவர்கள் பரிசுத்தர்கள் என்பதற்காக அவர்களை நேசிக்கவில்லை.

பாவிகள் என்பதற்காக தனது அன்பை விடவும் இல்லை.

தனது படைப்புகள் ஆகிய அவர்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்  நேசித்தார்,

வேறு காரணம் எதுவும் இல்லை.

அவரது அன்பிற்குக் காரணம் அவரது அன்பு தவிர வேறு எதுவும் இல்லை.

தீக்குள் கைவிட்டால் சுடுகிறது. ஏன்?

ஏனென்றால், அது தீ.

சுடுவது அதன் சுபாவம்.

நாம் பாவிகளாகப் பிறந்தோம்,

பாவிகளாக  வளர்ந்தோம்,

பாவிகளாக இருக்கிறோம்.

ஆனாலும் கடவுள்

எந்தவிதமான மாற்றமும் இன்றி

நம்மை நேசிக்கிறார்.

கடவுள்  நல்லவர்களையும் நேசிக்கிறார்,

கெட்டவர்களையும் நேசிக்கிறார்,

ஆத்திகர்களையும்  நேசிக்கிறார்,

நாத்திகர்களையும் நேசிக்கிறார்.

கடவுளது நிபந்தனை அற்ற  அன்பைப் புரிந்துகொண்டால் நாமும் அவரை நிபந்தனை  இன்றி நேசிப்போம்.

அதாவது கடவுளை கடவுள் என்பதற்காகவே நேசிப்போம்.

அன்பை அன்பு என்பதற்காகவே நாம் அன்பு செய்வோம்.

நம்மைப் படைத்ததற்காக அல்ல,

நம்மைக் காப்பாற்றிக்  கொண்டிருப்பதற்காக  அல்ல,

நமக்கு விண்ணகத்தைத்  தருவார் என்பதற்காக அல்ல,

அவர் அன்பு என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.

அன்பு அன்பை ஈர்க்கும்.

கடவுள் நம்மை நேசிப்பது மட்டுமல்ல நம்மை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறார்.

இதை ஊதாரிப்  பிள்ளையின் உவமை நன்கு புரிய வைக்கும்.

இளைய மைந்தன் தந்தையின் சொத்துக்களில் பங்கு கேட்டபோது ஏன் எதற்கு என்று கேட்காமல் அவனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

அவன் சொத்துக்களை எல்லாம் வீணடித்து விட்டு திரும்பி வந்த போதும்

அவனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் அவனை  அப்படியே ஏற்றுக்கொண்டார்.

நம்மை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.

ஆகவே நாம் அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோதும் அவர் குறுக்கே வரவில்லை.

நாம் மனம் வருந்தி அவரிடம் திரும்பி வரும்போதும் நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்.

நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும், எத்தனை முறை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் ஆண்டவரிடம் திரும்பி வரலாம்.

அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். 

ஒருவன் வாழ்நாள் எல்லாம் பாவியாக வாழ்ந்துவிட்டு

கடைசி வினாடியில்

"தந்தையே மன்னியும்"

என்று கேட்டால்

கடவுள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.

அவரது மன்னிப்பிற்கு அளவே கிடையாது.

ஒரு முறை அல்ல, ஓராயிரம் முறை நாம் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்கும்போதெல்லாம் மன்னிக்கிறார்.

வெட்கப்படாமல் பாவம் செய்தவர்கள் கடவுளிடம் திரும்பி வரவும் வெட்கப்பட வேண்டாம்.

பாவம் செய்வது நமது சுபாவம் என்றால் மன்னிப்பது அவர் சுபாவம்.

To err is human.
To forgive is divine.

நமக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றம் செய்தால் அவர்களை நாமும் நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்.

இலவசமாக பெற்றுக்கொண்டதை இலவசமாக கொடுப்போம்.

நமக்கு மன்னிப்பு இலவசமாக கிடைக்கிறது,

நாமும் அதை மற்றவர்களுக்கு அப்படியே கொடுப்போம்.

நாம் உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பீடு (value) வைத்திருக்கிறோம்.

உலகத்தின் பொருள்களுக்கு தன்னிலே எந்த மதிப்பீடும் கிடையாது.

தேவைதான் (demand) அதன்
value வைத் தீர்மானிக்கிறது.

விலை உயர்ந்ததாக கருதப்படும் தங்கத்தை யாருமே விரும்பாவிட்டால் அது மதிப்பு அற்றதாக மாறிவிடும்.

யாருமே வெங்காயத்தை வாங்காவிட்டால் அதன் விலை சரிந்துவிடும்.

நாம் எந்த பொருள் மீது ஆசை வைக்கிறோமோ, அந்த பொருளுக்கு நமது ஆசையின் அளவின் அடிப்படையில் விலையும் இருக்கும்.

நமது விலை என்ன? அதாவது நமது value என்ன?

களிமண்ணால் ஆன உடலையும், பாவத்தால் நிறைந்த ஆன்மாவையும் கொண்ட நமக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

Weight அடிப்படையில் நமக்கு விலை போட்டால், ஒரு கொழுத்த பன்றிக்குக் கிடைக்கும் விலை நமக்குக் கிடைக்காது.

தேவை அடிப்படையில் போட்டாலும் தண்ணீருக்கு உள்ள விலை நமக்குக் கிடைக்காது.

ஆனாலும் நாம் விலை மதிப்பற்றவர்கள்.

எப்படி?

களிமண்ணில் இருந்து நமக்கு உருக் கொடுத்தவர் சர்வ வல்லப கடவுள்.

நமக்குள் இருப்பது அவர் ஊதிய உயிர் மூச்சு.

நாம் பெற்றிருப்பது அவரது சாயல்.

ஆனால் நாம் செய்த பாவத்தினால் நமது மதிப்பை  முழுவதுமாக இழந்தோம்.

இறைவனின் பிள்ளைகளாக இருந்த நாம் சாத்தானின் பிள்ளைகளாக மாறினோம்.

நமக்காக எப்பொழுதும் திறந்தே இருந்த மோட்ச வாசலை நாமே இழுத்து மூடினோம்.

ஆனால் நம்மை படைத்தவர் நம்மை கைவிடவில்லை.

தானே மனிதனாய் பிறந்து,

தமது விலை மதிப்பு இல்லாத ரத்தத்தைச் சிந்தி, 

சிலுவை மரத்தில் உயிரைக் கொடுத்து,

தன்னையே பலியாக்கி

தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை சாத்தானின் பிடியிலிருந்து மீட்டார்.

திரும்பவும் சொல்லுகிறேன் 

தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்டார்.

கொடுக்கப்படுகிற விலைதான் வாங்கப் படுகிற பொருளின் மதிப்பு.

இயேசு தன்னையே விலையாகக் கொடுத்து நம்மை வாங்கியதால்

நம்மை அவர் அளவிற்கு உயர்த்தி இருக்கிறார்.

அதனால் தான் நமக்கு அவரது தந்தையை

"விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"

என்று அழைக்க அனுமதி கொடுத்தார்.

இயேசு தந்தை இறைவனின் மகன்.

நாமும் தந்தை இறைவனின் மக்கள்.

இறைவன் அரசர் என்றால் நாம் அனைவரும் இளவரசர்கள்.

றை அரசுக்கு உரிமையாளர்கள்.

நமது மதிப்பை  உணர்ந்து அதற்கு எந்தவித பங்கமும் ஏற்படாத வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும். 

நம்மைப் பார்ப்பவர்கள் நமது நடை, உடை, பாவனையைக் கொண்டு

நாம் இறையரசின் இளவரசர்கள் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நடை, உடை, பாவனையே விண்ணரசையும்
இயேசுவின் செய்தியையும் உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

நாம் நடமாடும் பைபிள்களாக மாற வேண்டும்.

நம்மைப் பார்ப்போர் நம்மில்  இறை வார்த்தையை வாசித்து அதன்படி நடக்க வேண்டும்.

அதாவது நாம் இறைவார்த்தையை வாழ வேண்டும்.

அதாவது நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக,

இறைவார்த்தையின் படி நடக்க வேண்டும்.

உம் வார்த்தையை எம் வாழ்வாக்க வரம் அருளும் இறைவா!

லூர்து செல்வம்.


Sunday, January 26, 2020

இறைவன் என்னோடு இருக்கும்போது யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?

இறைவன் என்னோடு இருக்கும்போது யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? 
*****      *****     *****      *****
தாயின் கையில் இருக்கும் குழந்தை யாருக்கும் அஞ்சாது.

 குழந்தைக்கு தன்மேல் உள்ள நம்பிக்கையை விட தாயின் மேல்  நம்பிக்கை அதிகம்.

சர்வ வல்லப கடவுளின் கையில் இருக்கும் நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்? 

சூரிய ஒளியே படாத  இடங்கள் இருக்கின்றன.

காற்றே இல்லாத இடங்கள் இருக்கின்றன.

ஆனால் கடவுளே இல்லாத இடம் எதுவும் இல்லை.

நாம் எங்கே இருந்தாலும் கடவுளுக்குள்தான் இருக்கிறோம்.

கடவுள் நமக்குள்ளும் இருக்கிறார்.

 கடலுக்குள் வாழும் மீன்  அங்கே இருக்கு மட்டும்  பாதுகாப்பாய் இருக்கிறது.

கடலுக்கு வெளியே வந்துவிட்டால் மரணம் அடைகிறது.

ஆனால் மனிதன் கடவுளை விட்டு வெளியே வரவே  முடியாது.

பிறப்போ இறப்போ நம்மை கடவுளை விட்டு பிரிக்க முடியாது.

ஏனெனில் அவர் இவ்வுலகிலும் இருக்கிறார்,

மறுவுலகிலும் இருக்கிறார்.

நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்.

 எப்பொழுதும் கடவுளின் பிரசன்னத்தில் வாழ வேண்டும். 

அதாவது கடவுள் எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்ற 

 அசைக்கமுடியாத உணர்வுடன் எப்போதும் வாழவேண்டும்.

கடவுளின் பிரசன்னத்தில் வாழாவிட்டால் 

நம்மை நாமே கடவுளிடமிருந்து பிரித்து வைத்துக் கொள்கிறோம்.

இறைப்பிரசன்னத்தில் வாழும்போது நாம் இறைவனுடனே அவருடைய அரவணைப்பில் வாழ்கிறோம்

நாம் நமது அன்புக்கு உரியவர்களோடு  இருந்தால் அமைதியாக இருப்போமா?

நாமும் அவர்களோடு பேசுவோம், அவர்களையும் நம்மோடு  பேச விடுவோம்.

அவர்களோடு உரையாடுவோம்.

அன்பர்கள் இருவர் அருகருகே அமர்ந்துவிட்டால் அகில உலகமே அவர்களின் நாவிற்குள் வந்துவிடும்.

கடவுளே நம் அருகில் இருக்கும்போது நாம் சும்மா இருக்கலாமா? 

சதா அவரை நினைக்க வேண்டும்,

 அவரோடு உரையாட வேண்டும்.

உரையாடும்போது நாம் இயேசுவுடன் பேசவேண்டும்.  

அவரை நம்மோடு பேச விடவேண்டும்.

 அவரது குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.

அவரோடு நாம் பேசுவதை விட அவர் பேசுவதை நாம் கேட்பது முக்கியம்.

மனிதனுக்கு இயல்பாகவே ஒரு சுபாவம் உண்டு. 

சிறு வயதிலிருந்து நாம் அதை வெளிப் படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

தந்தையோடு வெளியே சென்றுவிட்டால், அதுவும் கடைத் தெருவிற்கு சென்றுவிட்டால்

எதையாவது வாங்கித் தரச்சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்போம். 

அந்த பொருள் நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ கண்ணால் பார்த்ததை அப்பா வாங்கித் தர  வேண்டும். 

சிறு பிள்ளைகள் கூட தங்கள் வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வந்துவிட்டால்

 அவர்களிடமிருந்து எதையாவது எதிர்பார்ப்பது அவர்களது சுபாவம் ஆகிவிட்டது.

அது நமது இயல்பாக இருப்பதால் இறைவனோடு நாம் பேசும்போதும் அதையே செய்கிறோம்.

"ஆண்டவரே, நன்கு படிப்பதற்கு அறிவை கொடுங்கள்.

 படிக்க உதவி செய்யுங்கள்.

 நன்கு தேர்வு எழுத உதவுங்கள்.

 நல்ல மார்க் வாங்கி தாருங்கள்.

 உயர் படிப்பிற்கு இடம் வாங்கி தாருங்கள்.

 படித்து முடித்துவிட்டேன். 

நல்ல சம்பளத்தோடு வேலை வாங்கி தாருங்கள்......" 

விண்ணப்பங்கள் விடாது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

விண்ணப்பங்களை கொடுப்பது மட்டுமல்ல,

  அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மல்லுக்கு நிற்போம்.

ஆனால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை விட 

இறைவன் பேசுவதை கேட்பதுதான் மிக முக்கியம்.


ஒரு அம்மா தன் குழந்தையை L.K.G.யில admission போட்ட பின், 

"Teacher.சொல்றத  கவனமா கேள். முதலில் கேட்பதுதான் முக்கியம். அப்புறம்தான் மனதில் வைப்பது."

குழந்தை மாலையில் வீட்டுக்கு வந்ததும் தாயிடம் டீச்சரைப் பற்றி குறை சொல்ல ஆரம்பித்தாள்.

" அம்மா நீங்க சொன்னபடி செய்தேன் பதிலுக்கு திட்டுதான் கிடைத்தது."

"என்னடி செய்த ?"

"Teacher சொல்றத  கவனமா கேள்னு  நீங்கதான சொன்னிங்க?"

"ஆமா. அதுக்கு என்ன?"

"நானும் கேட்டேன், திட்டுதான் கிடைத்தது."

"டீச்சர் என்ன சொன்னாங்க? நீ என்ன கேட்ட?"

"டீச்சர் A for Apple ன்னு சொன்னாங்க.

நான் 'எனக்கு ஒரு  Apple  தாங்கன்னு' கேட்டேன்.

டீச்சர் கோபமாக Sit downன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு அழுகை அழுகையா வந்தது."

அம்மாவுக்கு சிரிப்பு வந்தது.

 இக்கதையில் எல். கே .ஜி குழந்தை  தான் கற்கவேண்டிய கல்வியை மறந்துவிட்டு 

அதில் வரக்கூடிய பழத்தைக் கேட்கிறது.

நாமும் அதேபோல்தான் எதற்காக உலகில் பிறந்தோம் என்பதை மறந்துவிட்டு

 உலகில் உள்ள லௌகீக பொருள்கள் மீது ஆசைப்பட்டு அவற்றை மட்டுமே கேட்கிறோம்.

ஆம் உலகில் பிறந்தது ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவே.

லௌகீக வாழ்வு வாழ்வதற்காக அல்ல.

இவ்வுலக பொருள்கள் நமது நமது ஆன்மீக வாழ்விற்காகப் பயன்படுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன,

அவற்றை மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல.

இதை உணர்ந்தால் நாம் இறைவனோடு பேசும்போது நமது ஆன்மீக நலன் பற்றியே  பேசுவோம்.

இவ்வுலகத்தை ஆன்மீகத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்போம்.

திருமண விழாவிற்கான திட்டம் வகுக்கும்போது விழா சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்குவது,  உபயோகிப்பது பற்றி பேசுவோம்.

அதாவது பொருட்களை விழாவிற்காக வாங்குவது பற்றி, 

விழாவைப் பொருட்களுக்காக கொண்டாடுவது பற்றி அல்ல.

அதேபோல்தான் கடவுளோடு பேசும்போது இவ்வுலக வாழ்க்கையை அவருக்காக எப்படி வாழ்வது  பற்றிய ஆலோசனையை கேட்போம்.

அதாவது நமது உரையாடல் இறைவனை மையமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர நம்மையே மையமாக கொண்டிருக்க கூடாது.

உலகப் பொருட்களைக் கேட்பதற்குப் பதிலாக

 அப்பொருட்களை எவ்வாறு இறைவனுக்கு உகந்த விதமாய் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இறைவனிடம் கேட்போம்.

இறைவனும் நமக்குப் பதில் கூறுவார்.

இறைவன் கூறுவதை உற்றுக் கேட்போம்.

நாம் அவரிடம் கூறியதை விட அவ நம்மிடம் கூறுவதுதான் மிக முக்கியம்.

ஆகவே நமது உரையாடல் இறைவனிடம் வாயால் கேட்பதை விட காதால் கேட்பதையே மையமாக கொண்டிருக்க வேண்டும்.

our conversation with God must be God centred, not self centered.

நாம் இறைவன் சொல்வதைக்  காதால் கேட்டு கருத்தில் பதிக்க வேண்டும். 

கருத்தில் பதித்ததை  வாழ்விற்குள் கொண்டு வர வேண்டும்.

இயேசுவோடு உறவாடும் போது 

வெறுமனே விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துக் கொண்டு  இருக்காமல் 

நமது அன்பை அவருக்கு அடிக்கடி தெரிவிக்க வேண்டும். (I love you, Jesus.)

 நாம் பெற்றுவரும் உதவிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

 இறைவனுக்குரிய ஆராதனையும் செலுத்த வேண்டும்.

நமது  ஆன்மீக வாழ்வில் இவ்வுலக பொருள்களால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான தீர்வை ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.

அவர் தரும் தீர்வைக் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு இறைவனோடு தொடர்பில் இருந்தால்

 சாத்தானின் சோதனைகளுக்கு எதிரான இறைவனின் பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.   

சாத்தானால் இறைவனுக்கும் நமக்கும் குறுக்கே பாய முடியாது.

நம்முள் பாய நாம் இறைவனை மறக்கும் நேரத்திற்காக காத்துக்கொண்டே இருப்பான்.

அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. 

நாம் இறைவனோடு இருக்கும்போது 

சாத்தானின் சோதனைகளுக்கோ,

  உலகம் தரும் சோதனைகளுக்கோ,

 நமது உடல் தரும் சோதனைகளுக்கோ நாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தால்
யாருக்கும் அஞ்சாமல் ஆன்மீகப் பயணத்தைத்  தொடரலாம். 

லூர்து செல்வம்.

Saturday, January 25, 2020

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."(எபேசி: 4:1)

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."
(எபேசி: 4:1)
*****      *****     *****      *****
சிறுவர்களாய் இருந்தபோது தெருவில் மணலால் வீடு கட்டி விளையாடியிருக்கிறோம்.

 விளையாடி முடிந்தவுடன் கையால் கட்டிய  வீட்டைக் காலால்  அழித்துவிட்டு நம் வீட்டிற்கு சென்றிருக்கிறோம்.

பொம்மைகள் வாங்கி விளையாடியிருக்கிறோம்.

ஆனால் கடவுள் நம்மை விளையாட்டுப் பொருள்களாக படைக்கவில்லை.

 நேரம் போவற்காக விளையாடிவிட்டு அழித்து விடுவதற்காக நம்மைப்
 படைக்கவில்லை.

அம்மா நம்மை விளையாடுவதற்காகவா பெற்றார்கள்?

அவர்கள்  நம்மோடு விளையாடியிருக்கலாம். ஆனால்  நம்மை விளையாடுவதற்காகப் பெறவில்லை.

யாராவது நம்மிடம் ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு உரிய பதில் சொல்ல விரும்பாவிட்டால் 

அதற்குரிய பொதுவான
 பதில் ஒன்றை தயாராக வைத்திருக்கிறோம். . 

"தூரமா போகிறீர்கள்?"

"சும்மா. பக்கத்திலே தான்."

"என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"

"சும்மா இருக்கிறேன்,"

"என்ன இந்த பக்கம்?''

''சும்மாதான் வந்தேன்." 

இதே மாதிரி கடவுளிடம்,

 "ஏன் ஆண்டவரே, என்னைப் படைத்தீர்கள்?"

 என்று கேட்டால், அவர் 

"சும்மாதான் படைத்தேன்." 

என்று சொல்ல மாட்டார்.


எல்லாவற்றிற்கும் ஆதி காரணரான  அவர் எதைச் செய்தாலும் 

அதற்கு ஒரு காரணமும் இருக்கும், நோக்கமும் இருக்கும்.

ஒரு சிறு கொசுவைக் கூட அவர் காரணமும், நோக்கமும் இன்றி படைத்திருக்க மாட்டார்.

அவர் நம்மை படைத்ததற்குக் காரணம் அவர் நம்மீது கொண்டுள்ள மட்டில்லா அன்பு.

நோக்கம் அவரோடு நித்திய காலமும் பேரின்பத்தில் இணைந்து வாழ்வதற்காக.

படைப்பிற்கும், முடிவில்லா பேரின்ப வாழ்விற்கும் இடையில் 

துவக்கமும் முடிவும் உள்ள இவ்வுலக வாழ்க்கை ஒன்றை நமக்குத்  தந்திருக்கிறார்.

இவ்வுலக வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் உண்டு.

அவர் நமக்கு தந்திருக்கும் கடமைகளைத் திறம்பட செய்து 

நம்மை முடிவற்ற நிலை வாழ்விற்குத் தயாரிப்பதே அந்த நோக்கம். 

கோடானுகோடிப் பேர் படைக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஒன்று.

எல்லோருக்கும் பொதுவான கடமை அன்பு செய்வது.

அதுபோக தனிப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கடமை உண்டு.

இக்கடமையை அழைத்தல் என்போம்.

அரசன் முதல் ஆண்டி வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைத்தல் உண்டு.

இந்த அழைத்தல் தேவனிடமிருந்து வருவதால்

 இதைத் 'தேவ அழைத்தல்' என்போம்.

நாம் குருத்துவத்திற்கும், கன்னிமை வாழ்விற்கும் அழைக்கப்படும் அழைப்பைத்தான் 'தேவ அழைத்தல்' என்று சொல்லி கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் எல்லோருக்கும் தேவ அழைத்தல் உண்டு.

அதனால்தான் புனித சின்னப்பர் நம்மைப் போன்ற சாதாரண விசுவாசிகளை நோக்கி கூறுகிறார்,

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்."

அதாவது அவரவர் அவரவருக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்த வேண்டும்.

கல்வி கற்பதற்காக அழைக்கப்பட்டோர் ஒழுங்காக கல்வி கற்க வேண்டும்.

திருமண வாழ்வுக்காக அழைக்கப்பட்டோர் தங்களது திருமண வாழ்க்கையை இறைவன் சித்தப்படி ஒழுங்காக வாழ வேண்டும். 

குழந்தைகளைப் பெற்று,

 அவர்களை இறை அன்பிலும், பிறர் அன்பிலும் வளர்த்து

 நல்ல கிறிஸ்தவப் பணி வாழ்விற்கு அவர்களை தயாரிக்க வேண்டியது

அவர்களின் கடமை.    

குருத்துவ வாழ்விற்காக அழைக்கப்பட்டோர் குருத்துவத்திற்கான பணிகளை அர்ப்பண  உணர்வோடு நிறைவேற்றவேண்டும்.

எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவான பணி இறைவனையும் பிறரையும் அன்பு செய்து வாழ்வதும்,

இறைவனது நற்செய்தியை அறிவித்தலும் ஆகும்.

நற்செய்தியை அறிவிக்கும் பணி அப்போஸ்தலர்களுக்கு  மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல.

எவ்வாறு நம் ஆண்டவராகிய இயேசு தனது அன்னையை அருளப்பர் வழியாக நம் அனைவருக்கும் அன்னையாக தந்தாரோ 

அதேபோல நற்செய்தியை அறிவிக்கும் பணியை அப்போஸ்தலர்கள்  வழியாக அவருடைய சீடர்களாகிய நம் அனைவருக்கும் தந்திருக்கிறார். 

நமக்கு இயல்பான குணம் ஒன்று உண்டு.

நமக்குத் தெரிந்த செய்தியை அருகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்வது நமக்கு இயல்பாய் உள்ள குணம். 

பெண்களுக்கு இந்த குணம் நிறையவே உண்டு.

ஆகையினால்தான் சிலர் வேடிக்கையாக பெண்களை 'நடமாடும் ரேடியோ ஸ்டேஷன்' என்று சொல்வார்கள்.

உண்மையில் நம் அனைவருக்கும்  அந்த பட்டப்பெயர் பொருந்தும். 

ஆனால் நமக்கு இன்னொரு சுபாவமும் உண்டு.

நாம் அனைவருமே நல்ல செய்திகளை விட விரும்பத்தகாத செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள். 

இந்த கில்லாடித்தனத்தை நற்செய்தியைப் பரப்புவதில் காண்பிப்போம்.

நமக்குக் கிடைக்கும் நல்ல செய்திகளை மட்டும் பரப்பினால் மக்களிடையே ஒற்றுமை வளரும்.

இயேசுவின் நற்செய்தியை பரப்பினால்  விண்ணகம் நிறைவடையும்.

திருமணம் ஆனவர்களுக்கு ஒரு மிக முக்கியமான கடமை உண்டு.

ஒரு கனியில் இருந்து மரத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.  

'நூலைப் போல் சேலை
தாயைப்போல் பிள்ளை' என்பது தமிழ்ப் பழமொழி.

பிள்ளைகளின் குணத்திலிருந்து பெற்றோரின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

பெற்றோரின் வளர்ப்பிற்கு ஏற்ப பிள்ளைகளின் குணமும் இருக்கும்.

ஆகவே பிள்ளைகளைக் குறை சொல்வதற்குப் பதிலாக பெற்றோர் தங்களைத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டை  ஆள்கின்றவர்களும் சரி,

நாட்டை ஆள்கின்றவர்களும் சரி,

திருச்சபையை ஆள்கின்றவர்களும் சரி 

எல்லோரும் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்களே.

அப்படிப் பார்த்தால் குருத்துவ அழைப்பை விட திருமண அழைப்பே மிக பொறுப்பு வாய்ந்தது.

ஒரு கர்தினால் (பெயர் ஞாபகமில்லை) பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்ட பின் பாப்பரசரின் பட்டமளிப்பு விழாவிற்கு தன் பெற்றோரையும் அழைத்திருந்தார். 

பட்டமளிப்பு முடிந்தபின் நடந்த விழாவின்போது பாப்பரசர் தன் மோதிரக் கையை உயர்த்தி தன் பெற்றோரிடம் காண்பித்தாராம்.

உடனே அவர்கள் இருவரும் தங்கள் கைகளை உயர்த்தி திருமண மோதிரங்களைக் காண்பித்தார்களாம்.

"இம்மோதிரங்கள் இல்லாவிட்டால் அம்மோதிரம் இல்லை" 

என்பது அதன் பொருள்!

நாற்றங்காலில் நாற்று நன்றாக இருந்தால்தான் நடப்படும் நாற்று 

நன்கு தனிர்த்து,

நன்கு வளர்ந்து, 

நன்கு பலன் தரும்.

நாற்றங்கால் மோசமாக இருந்தால் அறுவடையும் மோசம்தான்.

குடும்பம் ஒரு நாற்றங்கால் நாற்றுப்பாவி வளர்ப்பவர்கள் பெற்றோர். 
'
அங்கிருந்து பரிக்கப்பட்ட நாற்றுகளில் சில ஆசிரியர் பணிக்குச் செல்லும்,

 சில அரசாங்க வேலைக்கு செல்லும்.

 சில சமூகப்பணிக்குச் செல்லும்.

சில அரசியல்வாதிகளாக மாறும்,

சில சட்டசபைக்கு செல்லும்,

 சில மந்திரி சபைக்குச் செல்லும்,

சில குருத்துவ பணிக்குச்  செல்லும்.

ஆக அடி மட்டத்திலிருந்து உச்சிவரை 

உலக வாழ்க்கைக்கும் சரி,

 ஆன்மிக வாழ்க்கைக்கும் சரி

 மக்களைத் தயாரிப்பது குடும்பம் என்ற அமைப்புதான். 

குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தத்தான்  

நமது ஆண்டவராகிய இயேசு தமது 33 வருட உலக  வாழ்க்கையில்

 முப்பது ஆண்டுகளை திருக் குடும்பத்தில் செலவழித்தார். 

அவர் கடவுள்,

 பயிற்சி ஒன்றும் தேவை இல்லை, 

ஆனாலும் நமக்கு உண்மையை உணர்த்துவதற்காக 

தன்னைத் தானே தாழ்த்தி

 தனது தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் 

30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.


குடும்பம் அவ்வளவு முக்கியம்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால்: 

வேலைக்கு போகின்றவர்கள் குறைந்தது 12 ஆண்டு படிப்பு + அந்தந்த வேலைக்குரிய பயிற்சியும் பெற வேண்டி இருக்கிறது.

குருக்களாக விரும்புவோர் குறைந்தது பதினாறு ஆண்டுகள் பள்ளியிலும் கல்லூரியிலும்  படித்துவிட்டு,

குரு மடத்தில் குறைந்தது 14 ஆண்டுகள் படிக்க வேண்டியுள்ளது. 

ஆனால் இவர்களுக்கு அடிப்படை போடும் பெற்றோர்களுக்கு எந்தவிதமான நேரடிப்  பயிற்சியும் கிடையாது.

புதுமணத் தம்பதிகள் ஒரு சில நாட்கள் வகுப்பிற்கு சென்று விட்டு ஒரு சர்டிபிகேட் வாங்கிவிட்டு வந்தால் திருமணத்திற்கு ரெடி!

பெற்றோர் தங்களை தாங்களே ஆன்மீக வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டிற்கு ஒருமுறையாவது refresher Course ஆவது கொடுத்தால் நல்லது. 

அதுவும் அவர்கள் வளர்த்து  விட்ட  குரு பிள்ளைகள் நான் கொடுக்க வேண்டியிருக்கும்!

எது எப்படி இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் சுய பொறுப்பு ஒன்று உண்டு.

நான் எப்படி வளர்ந்தாலும் வளராவிட்டாலும் கணக்கு கொடுக்க வேண்டியது கடவுள் ஒருவருக்குத்தான்.

ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது.

அந்த அழைப்பின்படி ஒவ்வொருவருக்கும்  கொடுக்கப் பட்டிருக்கும் அந்தஸ்தின் கடமைகளை  

இறைவனின் மகிமைக்காக சரிவர  நிறைவேற்ற வேண்டும்.

அனைவரும் அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் உலகத்தில் பிரச்சினை எதுவும் வராது. 

நமது முகம் நமக்கு நமக்குத் தெரிவதில்லை.

நமது குறைகளும் நமக்கு தெரிவதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு தெரியும்.

பொறுப்பில் உள்ளவர்கள் நமது குறைகளைச் சுட்டிக் காண்பிக்கும்போது நல்ல மனதுடன் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். 

ஞானஸ்நானம் பெற்ற சிறு குழந்தையிலிருந்து

 பரிசுத்தபாப்பரசர் வரை  

அனைவரும் அவரவர் அழைப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதே நம் ஆண்டவருடைய ஆசை.

லூர்து செல்வம்.  

Thursday, January 23, 2020

"பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக".(1கொரிந்.1:31)

"பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக".(1கொரிந்.1:31)
*****      *****     *****      *****
ஆண்டவரைச் சுமந்துகொண்டு வந்த கழுதைக்குத்  தலைகால் புரியவில்லை.

 மக்கள் கொடுத்த வரவேற்பு தனக்குத்தான் என்று எண்ணி பெருமைப் பட்டுக் கொண்டது. 

 மறுநாள்தான் அதற்குப்  புரிந்தது, வரவேற்பு  தனக்கல்ல,

 தான் சுமந்து வந்த இறைமகனுக்கு என்று. 




நாம் ஒன்றும் இல்லாமல் இருந்தோம்.

We were nothing.

ஆறறிவையும் தந்து 

பரிபூரண சுதந்திரத்தையும் தந்து 

ஒன்றுமில்லாமையிலிருந்து  நம்மைப் படைத்தவர் இறைவன்.

 நாமே நமக்குச் சொந்தம் இல்லை.

 நம்மிடம் உள்ள திறமைகள் எல்லாம் இறைவன் இலவசமாகத் தந்தவை.

 அவற்றைப் பயன்படுத்த நமக்கு முழு உரிமையும் தந்திருக்கிறார் இறைவன்.

நமக்குத் தரப்பட்டிருக்கும் திறமைகளைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பெருமைகளில் ஒரு துளிகூட நமக்கு உரிமை இல்லை. 

எல்லா பெருமையும் இறைவனையே சேரும்.

நம்மை நாமே பீற்றிக் கொண்டால் அதற்கு பெயர் தற்பெருமை. (Pride)

தற்பெருமையால் வீழ்ந்தவன் தான் லூசிபர். 

நமது சுய சக்தியால் ஒரு சிறு துரும்பைக்கூட நம்மால் அசைக்க முடியாது.

நமக்குச் சிந்திக்கும் சக்தியைத் தந்தவர் கடவுள்.

 சிந்தனையை வெளிப்படுத்தும் திறமையைத் தந்தவர் கடவுள்.

 சிந்தனையையும் சொல்லையும் செயலாக்கும் சக்தியைத் தந்தவர் கடவுள். 

கிரேக்க நாட்டிலிருந்து ஆசியா வரை சகல நாடுகளையும் வென்று 

மகா அலெக்சாண்டர் என்று பெயரெடுத்த மாமன்னனை

 ஒரு கொசுப்படை கொன்று  விட்டது!

வீரர்கள் படையை வென்றவனால் கொசுப்படையை வெல்ல முடியவில்லை!

பாபிலோன் மீது படை எடுத்த போது மலேரியா (Malaria)
காய்ச்சலால் மாண்டான்!

மனிதனின் சக்தி  அவ்வளவுதான்!



பள்ளிப்படிப்பின் போது பெற்ற வெற்றிகளும் சரி,

 பணிக்காலத்தில் பெற்ற வெற்றிகளும் சரி,

 பொதுவாழ்வில் பெறும் வெற்றிகளும் சரி

 இறைவன்  தந்த திறமைகளால்தான்.

இதை உணர்ந்தால் தற்பெருமை கொள்ள மாட்டோம்.

நாம் பெற்ற வெற்றிகளை இறைவனின் அதிமிக மகிமைக்கு ஒப்புக்  கொடுப்போம்.

அப்படி கொடுப்பதனால்  அவரது   மகிமை அதிகரிக்க போவதில்லை. 

ஏனெனில் அவர் இயல்பிலேயே அளவில்லாத மகிமை உள்ளவர்.

காலையில் நண்பர்களைச் சந்திக்கும்போது, "Good Morning" என்று வாழ்த்துகிறோம்.

நமக்குத் தெரியும் நமது வாழ்த்துதலால் அவருக்கு ஒன்றும் ஆகப் போதில்லை என்று.


ஆனாலும் ஏன் வாழ்த்துகிறோம்?


வாழ்த்தும்போது நமது நல்ல மனதைத் தெரியப்படுத்துகிறோம்.

நமது நட்பு வளர்கிறது.

அவ்வாறுதான் 

இறைவனது மகிமைக்காக நாம் செயல் புரியும்போது

 இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கிறது. 

நாம் இறைவனோடு அதிகமாக ஒன்றிக்கிறோம்.

 நமது ஒவ்வொரு செயலையும்  இறைவனுக்காகச் செய்யும்போது  

இறைவன்மீது நமக்குள்ள அன்பையும்  பற்றையும் வெளிப்படுத்துகிறோம்.

இதனால் நமக்குதான் நன்மை ஏற்படுகிறது. 

இறைவன் எப்போதும்போல்தான் இருக்கிறார். 

ஏனெனில் அவர் நிறைவானவர்.

கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகளைக் கொடுப்பதில்லை. 

சிலருக்குப் பாடும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை இறைவன் புகழ் பாட பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எழுதும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை 
இறைவன் புகழ் பரப்ப பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு பேசும் திறமை இருக்கும். 

அவர்கள் தங்கள் திறமையை 
இறைவனது நற்செய்தியை அறிவிக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு இத்தகைய திறமைகள் இல்லாவிட்டாலும் அவற்றை ரசிக்கும் தன்மை இருக்கும்.

 அவர்கள் தங்கள் ரசிக்கும் திறனை இறைவனைப் பற்றி அறிய பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

இன்று உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு காரணமே

 திறமையுள்ளவர்கள் அதை இறைவனுக்காக பயன்படுத்தாமல் 

தங்கள் பெருமைக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான்.

அவரவர் அவரவர் திறமையை ரசிக்க கூட்டம் சேர்த்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று பேச்சாளர்கள் இருந்தால் மூன்று ரசிகர் கூட்டங்களும் இருக்கும்.

விளைவு மூன்று கூட்டங்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்கும்.

நற்செய்தி அறிவிப்பாளர்களுக்குக் கூட ரசிகர் கூட்டங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. 

சிலர் நற்செய்தி அறிவிக்கும்போது அதைக் கேட்க லட்சக்கணக்காக ஆட்கள் கூடுகிறார்கள்.

சிலர் அறிவிக்கும்போது ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

சிலர் அறிவிக்கும்போது பக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் கூடுகிறார்கள்.

நற்செய்திக்  கூட்டங்களுக்கு இன்னார் இன்னார்  பேசுவார்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியிருக்கிறது.

இதற்குக் காரணம் கூட்டங்களுக்கு போகின்றவர்கள் 

நற்செய்தியை விட அதை அறிவிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

"பிரசங்கம் எப்படி இருந்தது?"

"சாமியார் சூப்பர்! பிரசங்கத்தை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் இருந்தது."

"அப்படி என்ன சொன்னார்?"

"அதெல்லாம் ஞாபகத்தில் இல்லை, நன்றாகப் பேசினார்." 

பங்கு சாமியார் சொன்னார்:

"திருவிழா சமயத்தில் மூன்று நாள் தியானம் இருக்கும்."

மக்கள்  கேட்டார்கள்:

"சுவாமி, தியானம் கொடுக்க எந்த சாமியார் வருகிறார்?"

மக்கள் தியானத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தியானம் கொடுப்பவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அது சாப்பாட்டிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட

 சாப்பாடு தயாரிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இருக்கிறது!

"சாப்பாடு எப்படி இருந்தது?"

"சமையல்காரர் சூப்பர்.

 நம்ம வீட்டு கல்யாணத்திற்கும் அவரைத்தான் கூப்பிட வேண்டும்!" 

சாப்பாட்டு விஷயத்தில் நடந்து கொள்வதைப் போல நற்செய்தி விஷயத்தில் நடந்து கொள்ள கூடாது.

நற்செய்தி அளிப்பவரை விட,  அளிக்கப்படும் நற்செய்தியே
 முக்கியம்.

கடையில் பொருள் வாங்கப் போகிறோம். 

பொருள் முக்கியமா?

 வியாபாரி முக்கியமா?

 வியாபாரியின் முகத்தைப் பார்த்து அல்ல 

பொருளின் தரத்தைப் பார்த்து வாங்க வேண்டும்.

நற்செய்தி யார் மூலமாக வந்தாலும் 
அது இறைவனிடமிருந்து வருகிறது.

நற்செய்தியாளர் சொல்வன்மை மிக்கவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

சரியான விளக்கம் கொடுக்க முடிந்தவராய் இருந்தால் போதுமானது. 

கொடுப்பவரும் இறைவனின் மகிமைக்காகக் கொடுக்க வேண்டும்.

பெறுபவரும் இறைவனின் மகிமைக்காகப் பெற வேண்டும். 

நற்செய்தியை பெற்றால் மட்டும் போதாது.

 அதை வாழ்வாக்க வேண்டும்.

"நாளை பக்கத்து ஊரில் நற்செய்தி கூட்டம். சுகமளிக்கும் செபமெல்லாம்
சொல்வார்கள். வர்ரிங்களா?"

"பாவசங்கீர்த்தனம் கொடுப்பார்களா?"

"அதுவும் கொடுப்பார்கள்."

ஆண்டவரும் நற்செய்தியை அறிவிக்கும்போது வந்தவர்களின் உடல் நோயைக் குணமாக்கினார்.

 மறுக்க முடியாத உண்மை.

 ஆனால் அது தேனோடு மருந்தைக் கலந்து கொடுப்பது போல.

ஆண்டவர் மனிதனாகப் பிறந்தது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக.

உடல் நோயிலிருந்து மீட்பதற்காக அல்ல.

நாம் தேனைவிட மருந்துதான்  முக்கியம் என்பதை மறந்து விட கூடாது.

இயேசு எந்த நோக்கத்திற்காக உலகிற்கு வந்தாரோ, அதை நிறைவேற்றும்போது நாம் இறைவனின் மகிமைக்காகச்
 செயல்புரிகிறோம்.

ஆண்டவரின் அதிமிக மகிமைக்காக நாம் நற்செய்தியை  அறிவிக்க வேண்டும்.

 உலக மக்களின் மீட்பிற்காக நாம் அயராது உழைக்க வேண்டும்.

நமது உழைப்பில் இறைவன் மகிமை பெற வேண்டும். 

இயேசு எதைச்செய்தாலும் தந்தையின் மகிமைக்காகவே செய்தார்.

நாமும் இயேசுவையே பின்பற்ற வேண்டும்.
 
"நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்: இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்."
(அரு. 14:13)

தந்தை மகனில் மகிமை பெறுவதுபோல, அவரது மக்களாகிய நம்மிலும் மகிமை பெற வேண்டும்.

நமது நல்ல செயல்களைப்  பார்த்தவர்கள் நம் விண்ணக தந்தையை மகிமைப் படுத்த வேண்டும்.

வாழ்வோம், இறைவனது மகிமைக்காக.

லூர்து செல்வம்.

Wednesday, January 22, 2020

''இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே." (1இரா .1:7)

''இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே." (1இரா .1:7)
********************************
"Helo! கையில் என்ன கத்தரிக்கோல்?"

"உன்னை வெட்ட வேண்டாமா?"

"என்னது? என்னை வெட்டவா? நான் என்ன பாவம் செய்தேன்?"

"பாவம் எதுவும். செய்யவில்லை. ஆனால் துணியான உன்னை சட்டையாக ஆக்கணுமே.  

 அளவுப்படி வெட்டா விட்டால் எப்படி சட்டை தைக்க முடியும்?"
             *           *
"கையில் என்ன மண் வெட்டி?"

"தோண்டுவதற்கு."

"என்னையா தோண்டப்போற?"

"ஆமா."

"வலிக்குமே!"

"எனக்கும்தான் கை வலிக்கும்.
ஆனா தோண்டாம எப்படி மரக்கன்று நட முடியும்?"
               *           *
   "கையில் என்ன?"

"தீப்பெட்டி."

"எதுக்கு?"

"தீ பற்றவைக்க."

"எதுக்கு?"

"உன்னை உள்ளே போட."

"உனக்கு என்னாச்சி? என்ன தீக்குள்ள போட்டா பயங்கரமா வலிக்கும். நான் உருகிப்போய்விடுவேன்"

"உன்னை உருக்குவதற்காகத்தான் நெருப்பில் போடப்போறேன்."

"நான் மணப்பெண்ணுக்குக் தாலியாகப் போகிறேன்.

 என்னை உருக்க வேண்டும் என்கிறாய்!."

"உன்னை உருக்கினால்தான் நீ அழுக்கு நீங்கி சுத்தமான தங்கமாய் மாறுவாய். 

புடம் போடப்பட்ட தங்கத்தைக் கொண்டுதான் தாலி செய்ய வேண்டும்.''
                *         *

"ஆண்டவரே, என்னைப் படைத்தவரே,  என்னைப் பாரும்.

 உம்மால் படைக்கப்பட்ட  நான் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

 தயவுசெய்து பாரும்."

"பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு துன்பங்களை அனுமதித்தவன்  நான்தானே."

"ஆண்டவரே ஏன் எனக்குத் துன்பங்களை அனுமதிக்கிறீர்?

துன்பப் படுவதற்காகவா என்னைப் படைத்தீர்?"

"இல்லை பேரின்ப வாழ்விற்காக.

நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் 

 ஏன் மனிதனாக பிறந்து துன்பப் பட்டேன்?

 எதற்காக சிலுவையில் மரணம் அடைந்தேன்?"

"நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக."

"எதற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்?"

"நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தால் தான் மீட்பு பெற முடியும்."

"மீட்புப் பெற முதல் தேவை என்ன?"

"விசுவாசம்."

"நீ என்னை விசுவசிக்கிறாயா?''

"விசுவசிக்கிறேன், ஆண்டவரே.

நோயாளிகளை குணமாக்கிவிட்டு 

'ஒரு விசுவாசம் உன்னைக்  குணமாக்கிற்று' 

என்றீர்.

என்னிடம்தான் விசுவாசம்தான் இருக்கிறதே, பிறகு எதற்கு நோய்?"

"உன்னுடைய விசுவாசம் ஆழமானதா?"

."அப்படி என்றால்?"

"ஒரு ஒப்புமை கூறுகிறேன்.உனக்காக உன் தோட்டத்தில் ஒரு விதையை ஊன்றி வைக்கிறேன். 

நீ என்ன செய்வாய்?"

"அதற்கு நீரூற்றி, முளைக்க வைத்து, கன்றாக்கி, அதற்கும் நீரூற்றி உரமிட்டு மரமாக வளர்ப்பேன்."

"கரெக்ட். விதையை மரமாக்க நீ முயற்சி செய்வாய்.

அதேபோல நான் உனது உள்ளத்தில் ஊன்றிய விசுவாச விதையை மரமாக வளர  வைக்க நீ முயற்சி செய்ய வேண்டாமா?"

"விசுவாசமே நீங்கள் தந்த இலவச பரிசு. (free gift) அதை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்.  என்னால் என்ன செய்ய முடியும்?" 

"கரெக்ட். உனது விசுவாசத்தை பலப்படுத்தவும் வளர்க்கவும்தான்  நான் உனக்கு சோதனைகளையும், துன்பங்களையும்  அனுமதிக்கிறேன்."

"புரியவில்லை. சோதனைகளால் எப்படி விசுவாசத்தை வளர்க்க முடியும்?"

"ஒரு குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது என்ன செய்யும்?"

."அம்மாவைக் கூப்பிடும். அம்மாவினால் மட்டும்தான் குழந்தையின் பிரச்சினையை தீர்க்க முடியும்."

"உனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நீ யாரைக் கூப்பிட வேண்டும்?" 


, "எனக்கு அம்மாவும் நீங்கள்தான்  அப்பாவும் நீங்கள்தான். 

உங்களைத்தான் கூப்பிட வேண்டும்."

"நீ என்னைக் கூப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் சோதனைகளை அனுமதிக்கிறேன்."

."அதாவது, உங்களை நினைக்காமல் இவ்வுலக காரியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன். 

என் கவனத்தை உங்கள் பால் திருப்பி உங்களோடு பேசுவதற்காக எனக்கு சோதனைகளை அனுமதிக்கிறீர்கள் அப்படித்தானே?" 

"நித்திய காலத்திலிருந்தே

 நீ உன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் முன்பிருந்தே

 நான் உன்னை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆனால் உன்னால் எனக்காக 
சிறிது நேரம் கூட ஒதுக்க முடியவில்லை.

சோதனை வரும்பொழுது என்னிடம் வரவேண்டும் 

.'ஆண்டவரே என் விசுவாசத்தை பலப்படுத்தும்,

 சோதனைகளில் வெற்றியைத் தாரும், 

துன்பங்களை பொறுமையாக ஏற்றிட வேண்டிய சக்தியை தாரும். 

ஆண்டவரே நான் உங்களது பிள்ளை.

உங்களுக்காக, உங்கள் நினைப்பில் வாழ அருள் வரங்களை அள்ளிதாரும் '

என்று நீ என்னிடம் கேட்க வேண்டும். 

கேளுங்கள், கொடுக்கப்படும் என்று நான்  சொன்னது ஞாபகத்தில் இருக்கிறதா?"

"ஞாபகத்தில் இருக்கிறது.

 ஆனால்,  'நமக்கு  என்ன வேண்டும் என்று ஆண்டவருக்குதான்  தெரியுமே.'

என்று  எண்ணி விட்டேன்."

"எனக்கு எல்லாம் தெரியும்.

ஆனால் உனக்கு வேண்டியதை நீதான் கேட்டு பெற வேண்டும்.

அப்போதுதான் நீ  எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பாய்.

எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பதைத்தான்
உங்கள் மொழியில் செபம்  என்கிறீர்கள்.

சிலர் சோதனைகள் , கஷ்டங்கள் வரும்போது மட்டும் ஜெபிப்பார்கள். 

அப்படி பட்டவர்களுக்கு செபத்தை ஞாபகப் படுத்துவதற்காக சோதனைகள், கஷ்டங்கள் வரும். 

சிலர் தங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் அதாவது வாழ்க்கையையே செபமாக மாற்றி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் துன்பங்களும் செபமாக மாறிவிடும்.

அப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகளும், துன்பங்களும் 

அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கான சாதனங்களாக மாறிவிடும்.

The more they suffer, the Stronger will become their faith. 

ஒரு போர் வீரனது வீரம்
 யுத்த களத்தில்  அதிகரிப்பது போல,

செப வீரனது   விசுவாசம் சோதனை காலங்களிலும் துன்ப காலங்களிலும் அதிக பலமடையும்.

விவசாயி பயன்படுத்தும் மண்வெட்டி, அறுவாள், கத்தி போன்ற உபகரணங்களைப் 
பயன் படுத்தா விட்டால் அவை துருப்பிடித்து விடும்.

பயன்படுத்தும்போது அடிக்கடி தீட்ட வேண்டியிருக்கும்.

தீட்ட தீட்ட அவை கூர்மையாகும். 

சோதனை காலங்களில் விசுவாசம் கூர்மையாகும்.

 
சோதனைகள் நிகழும்போது தான்  உங்கள் விசுவாசம் உண்மையானதென்று தெரியும்.


நெருப்பு தங்கத்தைப் புடம் போடுவது போல,

 சோதனைகள் விசுவாசத்தைப் புடம் போடுகின்றன.

ஆகவே சோதனைகளையும் துன்பங்களையும் கண்டு பயப்படாதே.

வீர விசுவாசத்தோடு அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறு.

வெற்றி வீரனாய் விண்ணகத்திற்குள் நீ நுழையும்போது  

விண்ணவர் அனைவரின் வீர வரவேற்பு உனக்காக காத்திருக்கும்."

"நன்றி, ஆண்டவரே, நன்றி.
சோதனைகளையும் துன்பங்களையும் தாராளமாக வரவிடும்.

அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான அருள் வரங்களையும் கூடவே அனுப்பும். 

வரவு இருப்பவன் செலவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

அருள் வரம் வரவு இருக்கும்போது சோதனையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்?''

லூர்து செல்வம்.



Tuesday, January 21, 2020

"மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்: ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்"(1 சாமு .16:7)


"மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்: ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்"
(1 சாமு .16:7)
********************************

ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.

உடலும் ஆன்மாவும் உள்ளவன் மனிதன். 

உடலை நம்மால் பார்க்க முடியும், ஏனெனில் அது சடப்பொருள்.

 ஆனால் ஆன்மாவைப் 
பார்க்க முடியாது, 

ஏனெனில் அது ஆவி.


ஆன்மா அகம், உடல் புறம். 

பார்க்கச் கூடியது புறம்.

 பார்க்க முடியாதது அகம். 

ஒவ்வொரு பொருளுக்கும் புறமும் உண்டு அகமும் உண்டு.

பழத்தைக் கண்ணால் பார்க்கலாம், ஆனால் அதன் ருசியைப் பார்க்க முடியாது.

செய்யும் செயலுக்குக் கூட அகமும் புறமும் உண்டு.

 செயலில் கண்ணால்
 பார்க்கக் கூடியது புறம்,

 அதன் நோக்கம் அகம்.

மனிதர்களாகிய நாம் 

ஒரு ஆளுடைய,

 அல்லது 

பொருளுடைய 

அல்லது 

செயலுடைய 

புறத்தை வைத்துதான், அதன் அடிப்படையில்தான் 

ஆள், பொருள், செயலுடைய தன்மையை மதிப்பீடு செய்கிறோம்.

பொண்ணு பார்க்கப் போன  மாப்பிள்ளையிடம்,

 "பொண்ணு எப்படி?"

"அழகா இருக்கா."

 "பிடிச்சிருக்கா?"

" பிடிச்சிருக்கு.'' 

"முடிச்சிறுவோமா?"

" முடிச்சிறுவோம்." 

பொண்ணு பார்க்க அழகாயிருந்தா நல்ல பொண்ணு!

   பையன் அமைதியாக இருந்தால் நல்லவன்,

 கோபமாக இருந்தால் கெட்டவன்.

ஏன் இந்த அமைதி, ஏன் இந்தக் கோபம்  என்று ஆராயமலேயே முடிவுக்கு வந்து விடுகிறோம்.

விளம்பரங்களில் அழகாகக் காட்டப்படும் பொருட்கள் எல்லாம்  பயனுள்ளவை என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.

கலர் கலராய் உள்ள தின்பண்டங்கள் எல்லாம் உடலுக்கு நன்மை பயப்பவை என்று எண்ணி ஏமாந்து விடுகிறோம்.

செய்யப்படும் உதவிகள் எல்லாம் உதவிகள் என்று எண்ணி ஏமாந்து விடுகிறோம்.

உதாரணத்திற்கு தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்.

 வியாபாரத்தை உதவி என்று எண்ணி தவறு செய்துவிடுகிறோம்.

இதற்கெல்லாம் காரணம்  புறத்தை பார்க்க முடிந்த  நம்மால் உள்ளத்தைப் பார்க்க 
 முடியாததுதான். 

புறத்தில் அடிப்படையில் நாம் இடும் தீர்ப்பு சரியாக இருக்க முடியாது.

Any judgement made based on the externals Cannot be correct.

ஒருவன் மது கடைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு அவனை குடிகாரன் என்று தீர்ப்பிட்டு விட கூடாது.

அவனுடைய நோக்கம் நமக்கு தெரியாது.


யார் மேலும் தீர்ப்புச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை. 


நம்மைப் படைத்த கடவுளுக்கு நமது அகமும் புறமும் நன்கு தெரியும்.

நாம் ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே பார்க்கிறோம்.

 ஆனால் கடவுள் நமது உள்ளத்தையும் பார்க்கிறார். 

 நமது அடிமன ஆழத்தில்  உள்ள எண்ணங்களையும் அவர் பார்க்கிறார்.

வெளிப்புறத் தூய்மையை விட உள்புற தூய்மைதான் முக்கியம்.

உடலைச் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்தான். 

ஆனால் மனதில் அசுத்தம் இருந்தால் வெளிப்புற சுத்தத்தால் எந்த பயனும் இல்லை.

நமது ஆன்மீக வாழ்வில் நமது உள்ளத்தை பாவ மாசு மரு இன்றி காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம்.

சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை ஆண்டவரின் அருள் வரங்களால் அலங்கரிக்க வேண்டும். 

தாழ்ச்சி முதலிட்ட எழுவகை புண்ணியங்களாலும்,   பரிசுத்த ஆவியின் வரங்களாலும் நமது உள்ளத்தை அழகுபடுத்த வேண்டும்.  

ஏனெனில் நமது உள்ளம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.

நம் வாழ்வின்  நோக்கம் 

 நம்முள் வாழும் பரிசுத்த ஆவியைத் திருப்தி படுத்த வேண்டியது மட்டும்தான். 


 உலகத்தினரைத் திருப்தி படுத்துவது  அல்ல.

 நமது ஆன்மீக வாழ்வு நம்முள் வாழும் ஆண்டவருக்காக.

ஆண்டவர், உலகம் இருவருடைய
வாழ்வின் அளவுகோல்கள் வித்தியாசமானவை. 

 கடவுளின் அளவுகோல் வேறு,

 உலகத்தவரின் அளவுகோல் வேறு.

ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை.  

ஆண்டவரின்  அளவுகோல் படி 
 'எளிய மனதோர் பேறுபெற்றோர்.'

விண்ணரசை அடைவதுதான் ஆன்மீக வாழ்வின்  நோக்கம்.

உலக செல்வங்களின் மீது பற்று இல்லாதவன்தான் விண்ணரசை அடைய முடியும்.

உலகியல் கருத்துப்படி நிறைய செல்வங்கள் சேர்ப்பவனுக்கு  தான் உலகில் மதிப்பும், மரியாதையும் உண்டு.

 ஏழைகளுக்கு இடம் இல்லை.

இறைவன் பார்வையில் 

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு செல்வத்தின் மீது உள்ள பற்றை விட்டு  விடுகிறோமோ,

 அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனை நெருங்குகிறோம்.

 உலகத்தின் கருத்துப்படி எவ்வளவுக்கு எவ்வளவு செல்வம் அதிகமாக சேர்க்கிறோமோ,   

அவ்வளவுக்கு அவ்வளவு உலகில் செல்வாக்குடன் வாழ்வோம்.

ஆனால் இந்த செல்வாக்கு உலகிற்கு மட்டும்தான், விண்ணிற்குச்  செல்லாது.

இங்கு ஒரு உண்மையைக்  கவனிக்க வேண்டும்.

செல்வம், செல்வம் இன்மை ஆகிய புறத் தோற்றங்கள் நமது ஆன்மாவின் நிலையை தீர்மானிப்பது இல்லை.

மாறாக பற்று, பற்றின்மை என்ற அக நிலைமையே நமது ஆன்மாவின் நிலையை தீர்மானிக்கின்றது.

ஏழைக்கு   செல்வத்தின் மீது பற்று  இருந்தால் அவன் மண்ணிற்கு உரியவனே. 

 செல்வம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாதவன் விண்ணிற்கு உரியவன்

ஆண்டவரின் அளவுகோல் பற்றின்மை.

 உலகின்  அளவுகோல் பற்று.


எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்தாலும்,

அவற்றை ஏற்றுக்கொண்டு 

  ஆண்டவருக்கு அர்ப்பணிப்போர்  பேறு பெற்றவர்கள்,

 ஏனெனில் அவர்கள் துயரம் விண்ணுலகில் பேரின்பம் ஆக மாறும்.

மாறாக துன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்ளாமல் முணுமுணுப்போருக்கு,

முணுமுணுப்பினால் இவ்வுலகிலும் பயனில்லை, மறு உலகிலும் பயனில்லை. 

ஆண்டவரின் அளவுகோல் அவருக்காக துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல்.

உலகின் அளவுகோல் ஏற்றுக் கொள்ளாமை.

எவ்வளவுக்கு எவ்வளவு துன்பங்களை ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்கிறோமோ,

அவ்வளவுக்கு அவ்வளவு விண்ணுலகில் பேரின்பம் அதிகரிக்கும்.

ஆண்டவரின் அளவுகோல் படி 

தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

எவ்வளவுக்கு எவ்வளவு நமது ஆன்மா பாவ மாசு அன்றி தூய்மையாக இருக்கிறதோ 

அவ்வளவுக்கு அவ்வளவு
விண்ணுலகில் பேரின்பத்தின்  அளவு அதிகரிக்கும்.

ஆனால் உலகம் உள்ளத் தூய்மையை பற்றி கவலைப் படுவதே இல்லை, 

அதற்கு வேண்டியது எல்லாம் புற அழகும் கவர்ச்சியும்தான்.

ஆண்டவரின் அளவுகோல்படி  நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்.

நீதியின் வழி நிற்போர் அதற்காகத் துன்பப்பட நேர்ந்தால் அவர்கள் பாக்கியவான்கள்,

ஏனெனில் இவ்வுலகத் துன்பம் மறுவுலகில் இன்பமாக மாறும்.

ஆனால் உலகம் நீதியைப் பற்றிக் கவலைப் படுவதேயில்லை. துன்பம் இல்லாமல் வாழ்ந்தாலே போதும்.

ஆனால் இவ்வுலக இன்பத்தினால் மறுவுலகில்  எந்தப் பயனும் இல்லை.

ஆண்டவனின் அளவுகோல் நீதியால் வரும் துன்பம்.

உலகின் அளவுகோல் நீதியை பற்றி கவலைப்படாத இன்பம்.

ஆக உலகம் புறத்தை வைத்து ஒருவரின் தன்மையை தீர்மானிக்கிறது.

ஆனால் ஆண்டவரோ அகத்தை வைத்துத்  தீர்மானிக்கிறார்.

ஏனெனில் உலகத்தால் அகத்தைப் பார்க்க முடியாது.

இறைவனால் அகத்தையும், புறத்தையும் பார்க்க முடியும். 

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய முக்கியமான உண்மை:

நாம் இறை வழி நடக்கும் போது உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப் படவே கூடாது.

நமக்கு இருக்க வேண்டிய ஒரே நோக்கம் கடவுளுக்காக வாழ வேண்டும்.

கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

Monday, January 20, 2020

" பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது."(1 சாமு . 15:22)


" பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது."
(1 சாமு . 15:22)
********************************
நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டது

 கீழ்ப்படியவா? 

அன்பு செய்யவா? 

அன்பு செய்ய வேண்டும் என்பதே இறைவன் நமக்கு கொடுத்த கட்டளை தான்.

இக்கட்டளைக்கு கீழ்ப்படிவோர் அன்பு செய்கிறார்கள்.

 கீழ்ப்படியாதோர் அன்பு செய்வதில்லை.

அன்பும் கீழ்ப்படிதலும் பின்னி பிணைந்தவை.

அன்பு செய்பவன் அன்பின் காரணமாக அன்பரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான்.

கடவுள் யாருக்கும் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் கடவுள், கட்டளைகளைக் கொடுப்பவர் அவரே.

ஆனாலும் அவரே மனிதனாக பிறந்தபோது  மரியாளுக்கும் சூசையப்பருக்கும் முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தார்.

ஒருவரிடம் ஒரு பொருளை

 "தாருங்கள்" 

என்று கேட்கும்போது

 'தாருங்கள்' 

என்பது ஒரு மிருதுவான கட்டளை தானே!

நண்பரிடம்,

" தயவுசெய்து என்னோடு வாருங்கள்" 

என்று கெஞ்சிக் கேட்பதும்

 ஒருவகையில் மிக மிக மிருதுவான கட்டளை தானே!

 அதாவது அன்பு பொங்கும் கட்டளை!

"கேளுங்கள், கொடுக்கப்படும்."

 என்று நமது ஆண்டவர் கூறினார்.

நாம் அருள் வரங்களைத்  தரும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டால் அவர் மறுக்காமல் தருகிறாரே!

 சர்வ வல்லவர் நமது அன்புக்குக் கட்டுப்படுகிறாரே!

என்னே கீழ்ப்படிதலின் மகிமை! 

"தம்மைத் தாழ்த்திச் 

சாவை ஏற்கும் அளவுக்கு,

 அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்

 கீழ்ப்படிபவரானார்."
(பிலி. 2:8)

என்று  புனித சின்னப்பர் இயேசுவைப் பற்றி கூறுகிறார்.


பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது.

ஏனெனில் பலியிடும்போது மற்ற பொருட்களைப் பலியிடுகிறோம,

ஆனால் கீழ்ப்படியும்போது நம்மையே பலியிடுகிறோம்.


"கீழ்படியாமை சிலை வழிபாட்டுக்குச் சமம்."
(1 சாமு . 15:23)

என்று பைபிள் கூறுகிறது.

இறைவனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் 

இறைவன் இல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு

 கட்டுப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம். 

இறைவன் நம்மை படைத்ததே

 அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கவும், 

அவரது சித்தத்தை நிறைவேற்றவும்தானே! 

அவரையும், நமது  அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்பது அவரது கட்டளை.

இறைப் பணியும், பிறரன்புப்பணியும் செய்து  வாழ்ந்து 

அவரோடு நித்திய வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது சித்தம். 

துறவிகள் கொடுக்கவேண்டிய மூன்று வார்த்தைப்பாடுகள்களில் கீழ்ப்படிதலும் ஒன்று. 

ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்காமல்

 தங்களது சபைத் தலைவருக்கு கீழ்ப்படிய வேண்டியது துறவிகளின் கடமை. 

ஒரு முறை ஒரு துறவி விறகுக் கட்டை ஒன்றை எடுத்து தோட்டத்திற்குச் சென்று,

 அதை நட்டு, பண்ணை பிடித்து, தினமும் தண்ணீர் ஊற்றி வந்திருக்கிறார்.

 அதை மற்றொரு துறவி நெடுநாள் பார்த்துவிட்டு 

ஒரு நாள்,  "சகோதரரே, விறகுக்குத் தண்ணீர் ஊற்றி வருகிறேரே,  

அது தளிர்க்காது என்று உங்களுக்கு தெரியாதா?"  

''தெரியும்.''

"தெரிந்த பின்னும் ஏன் வீணாகத் தண்ணீர் ஊற்றுகிறீர்?"

"வீணாக ஊற்றவில்லை. Superior ருடைய கட்டளைக்குப் பணிந்து ஊற்றுகிறேன்.

இதற்குரிய பரிசு விண்ணகத்தில் கிடைக்கும்."

"பரிசுக்காகவா தண்ணீர் ஊற்றுகிறீர்"

"இறைவன் தருவதைப் பெற மறுத்தால் அதுவே கீழ்ப்படியாமை ஆகிவிடும்."

"இங்கு என்ன பரிசு கிடைக்கும்?''

''இறைவனுக்குக் கீழ்ப்படிய கிடைத்த சந்தர்ப்பமே  மிகப் பெரிய பரிசு." 

"விண்ணகத்தில்?" 

"நித்திய பேரின்பம்."



கீழ்ப்படிதல் நமது ஆன்மீக வாழ்வில்  பெரிய பாதுகாப்பு.

இறைவனால் நமக்கு தரப்பட்ட ஆன்மீக வழிகாட்டிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது  

 இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோம். 

ஆன்மீக வாழ்வில்  என்ன பிரச்சனைகள் வந்தாலும் 

நமது ஆன்மீக குருவைக் கலந்து 

அவர் சொன்னபடி நடக்கும்போது 

நாம் இறைவனுக்கே கீழ்படிந்து நடக்கிறோம்.

ஆன்மீக குரு காட்டும் வழி சந்தேகத்துக்கு இடமில்லாமல்  பாதுகாப்பான  வழி.

If we blindly obey our spiritual Father, we are completely free from all risks of misconduct.

கண்ணை மூடிக்கொண்டு ஆன்மீக குரு சொல்லும் வழி நடந்தால் 

எல்லாவிதமான ஆன்மீக தவறுகளிலிருந்தும் நாம் பாதுகாப்பாக இருப்போம். 

புகைவண்டியில் எஞ்சின் அருகே ஓட்டுநர் நிற்பார்.

கடைசிப் பெட்டியில் guard நிற்பார்.

Guard பச்சைக் கொடி காட்டினால் ஓட்டுநர் எஞ்சினை ஓட்டுவார்.

Guard சிவப்புக் கொடி காட்டினால் ஓட்டுநர் எஞ்சினை நிறுத்துவார்.

ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்.

நமது ஆன்மீக பயணத்தில் நமது ஆன்ம குரு ஒரு guard மாதிரி.

Guard சொன்ன சொல்லைத்  தட்டாமல் நமது ஆன்மீக எஞ்சினை ஓட்டினால் போதும்,

 நாம் பத்திரமாக விண் வீட்டிற்கு சென்று சேர்வோம்.

பெற்றோர் இறைவன் காட்டிய வழியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

பிள்ளைகள் இறைவன் கட்டளையை மீறாமல் தங்களது பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

 ஆனால் பெற்றோரது கட்டளைகள் இறைவனது கட்டளைகளுக்கு மாறாக இருக்குமானால் 

நாம் கீழ்ப்படிய வேண்டியது இறைவனது கட்டளைகளுக்கு மட்டும்தான்.

நமது கீழ்ப்படிதலுக்கு முன்மாதிரியாக விளங்குவது நமது அன்னை மரியாள்தான்.

" இதோ ஆண்டவருடைய அடிமை,

 உமது  வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது, " 

என்று தன்னை இறைவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்த கீழ்ப்படிதல்தான் நாம் பின்பற்ற வேண்டிய கீழ்ப்படிதல்.    

நம்மைப் படைத்து, பாதுகாத்து, பராமரித்து வரு நமது அன்பு தந்தை இறைவனுக்கு 

நம்மை முற்றிலுமாக நிபந்தனையின்றி அர்ப்பணித்து விட்டு 

அவரது கட்டளைகளுக்கும்

அவர் தரும் உள் உணர்வுகளுக்கும் 

 கீழ்ப்படிந்து நடப்போம்.

மண்ணில் கீழ்ப்பணிந்தால் விண்ணில் உயர்த்தப்படுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, January 18, 2020

அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது" (அரு. 21:25)

''அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது" (அரு. 21:25)
********************************

ஒரு அப்பா தன் பையனை   ஒரு பள்ளியில்  ஆறாவது வகுப்பில் admission போட்டு விட்டு வீடு திரும்பினார்.  

சாயங்காலம் வீட்டிற்குத்  திரும்பிய பையன் அமைதியாக உட்கார்ந்து  வீட்டுக் கணக்கு செய்து கொண்டிருந்தான்.

அப்பா,

"என்னடா செய்ற?"

"வீட்டுக் கணக்கு, அப்பா."

"இன்னும் புத்தகம் எதுவும் வாங்கவில்லையே,

 வாத்தியார்  கணக்கு எப்படி போட்டார்?"

."கணக்கு வாத்தியாருக்கு கணக்கு போடத் தெரியாதா, அப்பா?"

"அவர் போட்ட கணக்கு

 கணக்குப் புத்தகத்தில் இருக்கிறதா?"

"நான் இன்னும் புத்தகமே வாங்கவில்லை, அப்பா."

"அப்போ ஒண்ணு செய். 

புத்தகம் வாங்கிய பிற்பாடு இந்த கணக்கு புத்தகத்ல இருக்கான்னு பாரு.  

இருந்தா கணக்கு செய், இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்."

"வாத்தியார் போட்ட கணக்கு, அப்பா."

"யார் போட்ட கணக்கா இருந்தாலும் சரி, 

புத்தகத்துல இருந்தா மட்டும் செய்.

 அல்லது  செய்ய வேண்டாம். நோட்டை  மூடு."

ஐயோ பாவம், பையன்! 


நம்மிடம் கோபித்துக்கொண்டு தனிக் குடித்தனம் போயிருக்கும் நம்முடைய உடன்பிறப்புகள் 

நம்மீது உள்ள கோபத்தினால் நாம் ஏற்றுக் கொள்பவற்றை   ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

கணக்கு வாத்தியார் மேல் கோபம் இருந்தால் கணக்கு பொய்யாகிவிடுமா? 

நாம் பைபிளையும் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்கிறோம்.

அவர்கள் பைபிளை  மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். 

முதலில் பின்வரும் வசனங்களைப் பார்ப்போம்:

"அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்."
(மத். 4:23)

''அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்."
(மாற்கு, 1:39)

"ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்! "(மாற்கு 6:2)


"சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்." (மாற்கு 6:6)


"அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.

35 இதற்குள் நேரமாகிவிடவே" (மாற்கு 6:34,35) 


"யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்."
(லூக்.4:15) 

"அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்."
(லூக் 4:31)

"அதன்படியே, கலிலேயாவின் செபக்கூடங்களில் தூது உரைத்துவந்தார்." (லூக். 4:44)

"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8: 1)


"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)

இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.

 அவர் அறிவித்த நற்செய்திகள் அனைத்தும் எழுதப்படவில்லை 

என்பதற்கு மேற்கூறிய வசனங்களே சான்று.

எழுதப்பட்ட நற்செய்திகள் அனைத்தும் பைபிளில் உள்ளன.

எழுதப்படாதவை அவற்றைக் கேட்டவர்களின் மனதில் இருந்திருக்கும்.

எழுதப்பட்டவையும், எழுதப்படாதவையும் அவருடன் மூன்று ஆண்டுகள் போதனையின்போது அவருடன் இருந்த 

அவருடைய அப்போஸ்தலர்களுக்கும்,  சீடர்களுக்கும் தெரியும்.

அப்போஸ்தலர்களுக்கு  
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் பணியை ஆண்டவர் அளித்தார்.

அவர்களுள் மத்தேயுவும்,   அருளப்பரும் நற்செய்தி நூல்களை எழுதினார்கள்.

நற்செய்தி நூல்களை எழுதிய 
மற்ற இருவரும் சீடர்கள்.

திரு மடல்களை எழுதியவர்கள் அப்போஸ்தலர்கள். 

அருளப்பரின் கூற்றுப்படி இயேசு செய்தவை யாவும் எழுதப்படவில்லை. 

ஆனால் ஆண்டவர் போதித்தவை எல்லாம் அப்போஸ்தலர்களாலும், சீடர்களாலும் போதிக்கப்பட்டன.

அவர்களது வழி வந்தவர்களால் (successors ) தலைமுறை தலைமுறையாக வாய்மொழி போதனை மூலமாக பரிமாறப்பட்டன. (transferred) 


இயேசுவிடமிருந்து அப்போஸ்தலர்களுக்கும், 

அவர்களிடமிருந்து ஆதி திருச்சபையினருக்கும், 

அவர்களிடமிருந்து பிற்காலத்
திருச்சபையினருக்கும்,

தொடர்ந்து நமக்கும்  வந்த நற்செய்திகளில் 

எழுதப்பட்டவையும் இருக்கின்றன,

எழுதப்படாதவையும் இருக்கின்றன.

ஆதித் திருச்சபையின் விசுவாச வாழ்க்கை இரண்டு வகை நற்செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டது.

எழுதப்பட்ட வார்த்தைகளுக்கான விளக்கம்

 எழுதப்படாத வார்த்தைகளில் அடங்கியிருக்கலாம்.

 இது ஆதித்  திருச்சபையினருக்குத்  தெரியும்.


இன்றைய நமது திருச்சபை வெறும் திருச்சபை அல்ல,

 அப்போஸ்தலிக்க திருச்சபை. 

அதாவது அப்போஸ்தலர் காலத்திலிருந்து தொடர்பு அறுபடாமல் 

போதிப்பவர்களும் போதனைகளும் வந்திருக்கும் திருச்சபை. 

போதிப்பவர்களில் திருச்சபையின் தலைவரும், ஆயர்களும், குருக்களும் அடங்குவர்.

அவர்களது போதனை அப்போஸ்தலர்கள் வழிவந்த இயேசுவின் போதனை.

இதில் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டவையும் அடங்கும்,
எழுதப்படாதவையும் அடங்கும்.

இரண்டுமே திருச்சபையின் பாரம்பரியத்தின் வழியாக நமக்கு வந்தவைதான்.

உண்மையான கிறிஸ்தவன் இயேசுவின்  போதனைகள் அனைத்தையும், 

அதாவது 

எழுதப்பட்டவற்றையும் எழுதப்படாதவற்றையும் நம்புகிறான்.

 
ஏனெனில்  அவை ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து அவரால் அங்கீகரிக்கப்பட்ட போதனையாளர்கள் வழியாக நமக்கு வந்தவை.

குருவானவர் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் போதிக்கும்போது,

விசுவாசி,

''சாமியார் சொல்லுவது பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்க மாட்டான்.

"அப்போஸ்தலர்கள் வழிவந்த போதனைத் தொகுப்பில் உள்ளதா?" என்று மட்டும் கேட்பான்.

ஏனெனில் அவனுக்குத் தெரியும்,

 திருச்சபையின் போதனை பைபிளிலும், பாரம்பரியத்திலும் (Tradition) இருக்கிறது என்று.

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது." 
(அரு.15:4)

என்ற  பைபிள் வசனத்தை பிரிந்து சென்றவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

லூர்து செல்வம்.

Friday, January 17, 2020

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மாற்கு, 2:5)

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மாற்கு, 2:5)
********************************

வழக்கமாக இயேசு குணமாக்கப்பட்ட நோயாளியை நோக்கி,

" உன் விசுவாசம் உன்னை குணமாக்கிற்று." என்பார்.

ஆனால் இங்கு,

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு"

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது நோயாளியைக் கொண்டுவந்த அவனுடைய நண்பர்களின் விசுவாசத்தை  முன்னிட்டு இயேசு அவனைக் குணமாக்குகிறார்.

நோயாளியை மட்டும் குறிப்பிடாமல் வந்த அனைவரின் விசுவாசத்தையும் குறிப்பிடுகிறார்.

நற்செய்தியாளரின் இந்தக் குறிப்பிலிருந்து நாம் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

இறைவன்முன் நாம் தனி நபர்கள் அல்ல. 

ஒரே குடும்பமாகிய  திருச்சபையின் அங்கத்தினர்கள். 

ஆகவே நாம் நமக்காக செய்யும் செபம் மட்டுமல்ல, 

 மற்றவர்களுக்காக செய்யும் செபமும் இறைவனால் கேட்கப்படுகிறது. 

அதுபோல் மற்றவர்கள் நமக்காக செய்யும் செபமும் கேட்கப்படுகிறது.

நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், 

 நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் நமது செபத்தினால் உதவலாம்.

நமக்காக  செபிப்பது போல மற்றவர்களுக்காகவும் செபிக்கலாம்.

மற்றவர்களுக்காக செய்யும் செபத்தில் தன்னலம் இல்லாததால் அதனுடைய மதிப்பும் சக்தியும் அதிகம். 

அதனால்தான் கர்த்தர்கற்பித்த செபத்தில் நாம் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்கிறோம். 

'எங்கள் தந்தையே'

'எங்கள் அனுதின உணவை'

'எங்கள் பாவங்களை'

என்று சொல்லும்போது 
இறைக் குடும்பத்திலுள்ள அனைத்து மக்களையும் சேர்த்து 

அனைவருக்காகவும் செபிக்கிறோம். 

அப்படி செபிக்க வேண்டும் என்று நமது ஆண்டவரே கற்று தந்திருக்கிறார்.

புனிதர்களை நோக்கி செபிப்பதை விரும்பாத நம்முடைய சகோதரர்களுக்கு 
ஒரு கேள்வி:

பாவிகளாகிய நமது செபத்தை ஏற்று ஆண்டவர் மற்றவர்களுக்கு உதவுகின்றார் என்றால்,

 பாவமே இல்லாத நம்முடைய உறவினர்களாகிய  மோட்ச வாசிகள் 

 நமக்காகச்  செய்யும்  செபத்தைக்  கேட்டு இறைவன் நமக்கு உதவ மாட்டாரா?

உன் அயலானை நேசி என்று சொன்ன ஆண்டவர் 

அடுத்தவர்களுக்காக  செபிக்கும்போது,

 அது நாமாக இருந்தாலும் சரி, புனிதர்களாக இருந்தாலும் சரி 

கேட்க மாட்டாரா?

நண்பர் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டார்.

இறைவன்தானே நம்மைப் படைத்து பராமரித்து 
 வருகிறார்.

இன்னொருவருடைய சிபாரிசின் பேரிலா நம்மைப் படைத்தார்?

நம்மை படைத்தவருக்கு நம்மைப் பராமரிக்கத் தெரியாதா? 

 மற்றவர்களுடைய சிபாரிசு வேண்டுமா? 

நம்மைப் படைத்தவரிடம் நமக்கு வேண்டியதை  நாமே கேட்க   வேண்டியதுதானே.

மற்றவர்களின் சிபாரிசு எதற்கு?

நம்மை இரட்சிக்க தானாக மனிதனாய் பிறந்தாரா?

 அல்லது யாராவது சிபாரிசு செய்து மனிதனாகப் பிறந்தாரா?

இவர் எதற்கெடுத்தாலும்,

" பைபிளில் ஆதாரம் இருக்கிறதா?"

 என்று கேட்கக்கூடிய குழுவை சேர்ந்தவர்.

இப்படி கேள்வி கேட்பவர்கள் ஒரு அடிப்படை   உண்மையைத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் மனிதனைத் தனி  மனிதனாக அல்லாமல் குடும்பமாகப் படைத்தார்.

குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு செய்து, 

 ஒருவருக்கொருவர் உதவி செய்து,

 ஒற்றுமையாக வாழ வேண்டும்

என்பதற்காகத்தான் 

"உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி" என்ற கட்டளையையும் கொடுத்தார்.

கிறிஸ்துவின் ஞான உடலாகிய நமது குடும்பம்

 விண்ணில் வாழும் புனிதர்களையும் மண்ணில்  வாழும் மக்களையும் உள்ளடக்கிய   ஒரே குடும்பம்.

இக் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து,

 ஒருவருக்கொருவர் உதவி செய்து,

 இறைவனில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இறைவனது திருவுளம்.

உறவை வளர்ப்பது உரையாடலும் உதவி செய்வதும்தான்.

ஆகவே நாம் இறைவனோடு மட்டுமல்ல 

அவரோடு  விண்ணில் வாழும் புனிதர்களோடும்  உரையாடலாம்,

 அவர்கள் நமக்கு உதவி
 செய்யலாம்.

புனிதர்களோடு உறவாடும் போது  நாமும் அவர்களுடைய நற்குணங்களைப்   பின்பற்றி புனிதர்களாக வாழ நமக்கு உந்துதல் கிடைக்கிறது.

 அந்தோனியார் பக்தி உள்ளவன்  

அவரைப் போல,
புனிதமான குணங்களோடு வாழ்ந்து அவரைப்போல விண்ணகம் அடைய ஆசைப்படுவான்.

எல்லா புனிதர்களுமே மண்ணில் வாழும் மக்களுக்கு புனிதத்துவம் அடைய அவர்களுடைய செபம் மூலம் உதவி செய்யலாம்.

இத்தகைய ஒரே குடும்ப உணர்வை 
வளர்ப்பதற்காகத்தான் 

இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே சபையாகிய 

பரிசுத்த, அப்போஸ்தலிக்க, பொது, திருச்சபை இயேசுவின் தூண்டுதலால் 

புனிதர்கள் வணக்கத்தை உற்சாகப்படுத்துகிறது.


"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு"
.
அவர்களோடு பக்தி உணர்வு கொண்ட நமக்கும் உதவி செய்வார்.

இறைவனோடு நேரடி தொடர்பு கொள்வதோடு 

அவரோடு விண்ணக வாழ்வு வாழும் அவரது புனிதர்கள் வழியாகவும்

 இறைவனோடு தொடர்புகொண்டு

 இறைவனில் ஒன்றிப்போம்,
விண்ணுலகில் சந்திப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, January 16, 2020

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறான்"(1 சாமு .3: 9)

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறான்"
(1 சாமு .3: 9) 
********************************

"அடியே, கொஞ்சம் நிறுத்து,"

"ஏங்க?"

"என்ன சொல்லி என்னைப் Park க்குக் கூட்டிக்கிட்டு வந்த?"

"வீட்டில போரடிக்கிறது. வாங்க, Park க்குப் போய்க் கொஞ்சம் ஜாலியா பேசிக்கிட்டு இருந்துட்டு வருவோம்னு சொன்னேன். அதுக்கு என்ன  இப்போ?"

"என்ன  இப்போவா? நாம் இங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?."


"ஒரு மணி நேரம் இருக்குமா? "

"இரண்டு மணி நேரம் ஆச்சி."

"அப்படியா? நேரம் போனதே தெரியல. "

"அது எப்படி தெரியும்? இரண்டு மணி நேரமும் ஒரு வினாடி விழாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறாய்.

 எப்படி நேரம் போனது தெரியும்?"

"அதுக்குத் தானங்க வந்தோம்!"

"எதுக்குத் தானங்க?  

வீட்டில போரடிக்கிறது, வாங்க Park ல போய் போரடிப்போம்னு கூட்டிக்கிட்டு வந்து இருக்க."

"நான் ஜாலியாதான  பேசிகிட்டு இருக்கேன்.

 அது உங்களுக்கு போரடிக்குதா?"

"ஏண்டி, ஜாலியா பேசிகிட்டு இருந்த நீ. 

என்ன ஒரு வார்த்தை பேச விட்டியாடி? 

எனக்கு போர் அடிக்காது?"

"சாரிங்க. இப்போ ஒண்ணு  செய்வோம்."

"ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வா. வீட்டுக்கு போவோம்."

"நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கலையா?"

"பிரமாதமா பிடிச்சிருக்கு."

"பிறகு ஏன் வீட்டுக்கு கூப்பிடுறீங்க?"

"சரி, வீட்டுக்கு கூப்பிடல.

 நீ உட்கார்ந்து மணிக்கணக்கா பேசிக் கொண்டே இரு,

 நான் வீட்டுக்கு போறேன்."

"மணிக்கணக்கா தனியே பேசிக் கொண்டே இருந்தா பைத்தியம்னு சொல்லுவாங்க.

நானும் உங்க கூட வீட்டுக்கு வருகிறேன்.".

"சரி, வா."

(வீட்டிற்கு வந்து.)

''ஏங்க, ஒண்ணு  சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"இரண்டு  சொன்னாலும் கோச்சுக்க மாட்டேன். சொல்லு."

"நான் பேசுறது உங்களுக்கு போரடிக்கிறதா சொன்னிங்களே 

நீங்க பேசுறது கடவுளுக்குப்  போரடிக்காதா?"

"கடவுளுக்கு யார் பேசினாலும் போரடிக்காது, பேசாவிட்டாலும் போரடிக்காது. 

மனிதனைப் படைக்குமுன்  நித்திய காலத்திலிருந்தே கடவுள் தனியாகத்தானே இருந்தார்.

கடவுள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை."

"நீங்க ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள்.

 கடவுள் தனியாக இருந்தது உண்மைதான்.

 ஆனால் அவர் தந்தை, மகன் , தூய ஆவி என்று மூன்று  ஆட்களாக இருக்கிறார்.

 அவர்கள் ஒருவரை ஒருவர் அளவில்லாமல்    நேசிக்கிறார்கள். 

அன்பு செய்யும் போது எப்படிங்க போரடிக்கும்?"

..."இப்போ என்ன சொல்ல வர?

 சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லு. சுத்தி வளைத்து பேசிக்கிட்டு இருக்காதே. இதுவே போர் அடிக்குது."

"சரி நேரடியாகவே விசயத்துக்கு வாரேன். 

 நான் இரண்டு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தது உங்களுக்குப் போர் அடித்ததாகச் சொன்னீங்களே.

 நீங்கள் கடவுளிடம் மணிக்கணக்கா, அவரைப் பேசவிடாமல், பேசிக்கிட்டு இருக்கீங்களே , அவருக்குப் போரடிக்காதா என்று கேட்டேன்."

"இத கேட்கத்தான் என்ன போரடிக்க வச்சியா?"

"ஆமா, அனுபவம் மூலம் கல்வி."


...."கடவுளுக்கு யார் பேசினாலும் போரடிக்காது, பேசாவிட்டாலும் போரடிக்காது
என்று அப்போவே சொல்லி விட்டேனே,

 திரும்பவும் ஏன் அதே கேள்வி கேட்கிறாய்?"

"சரி நேரடியாகவே விசயத்துக்கு வருவோம்.
செபம் என்ன?"

"கடவுளோடு நாம் செய்யும் உரையாடல்."

"ஒருவர்  மட்டும் பேசிக்கொண்டு இருப்பது உரையாடல் அல்ல.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதுதான் உரையாடல்.

செபம் ஒரு உரையாடல் 
என்றால் நீங்கள் கடவுளிடம் பேசுவது போல

 அவரையும் உங்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்.

 அவரைப் பேச விடாமல் மணிக்கணக்காக நீங்கள் மட்டும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

 அது  உரையாடல் அல்ல. சொற்பொழிவு."

....."நீ சொல்வதும் சரிதான். அமைதியில்தான் ஆண்டவர் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அமைதியாக இருந்தால்தான் தூக்கம் வந்துவிடுகிறதே."

"அது நமது விழுந்த சுபாவத்தின் (fallen nature) இயல்பு.

 ஆனால் நாம் விழுந்தவர்களாகவே இருக்க கூடாது. எழவேண்டும்.

 வெறுமனே அமைதியாய் இருந்தால் தூக்கம் வரத்தான் செய்யும்.

 மனதை இறைவனோடு   ஈடு  படுத்தி இருந்தால் தூக்கம் வராது."

"சரி, இறைவன் எப்படி நம்மோடு பேசுவார் என்று கொஞ்சம் சொல்லேன்."

"அமைதியாக ஆண்டவரை நோக்கி

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறேன்" 


என்று கூறிவிட்டு இறைவனையே தியானித்துக் கொண்டு அமைதியாக இருந்தால் 

ஆண்டவர் உள்ளத்தில் தூண்டுதல்கள் (Inspirations) வழியாகப் பேசுவார்.

இறைத் தூண்டுதல்களைப் பெற நமது உள்ளம் இறைவனில் ஒன்றித்து இருக்க வேண்டும்.

 இறைவனைத் தவிர வேறு எண்ணங்கள் நமது மனதில் இருக்க கூடாது.

இறைவன் தரும் தூண்டுதல்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் நமது மனது இருக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் இருக்கும்போது 

இறைவன் நம் உள்ளத்தில் உணர்வுகள் மூலமாக பேசுவதை நான் உணரலாம்.

நாம் இறைவனோடு பேச முயன்று கொண்டிருக்கும்போது

 சாத்தான் ஒருபுறம் இருந்து நமது முயற்சியை வீணடிக்க சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பான்.

எது இறைவனின் குரல் எது சாத்தானின் குரல் என்று நமது உள் உணர்வுக்குத் தெரியும்.

இறைவனின் குரலாக இருந்தால் அதை செய் என்ற உத்தரவு மன சாட்சியிடம் இருந்து  வரும்.

சாத்தானுடையதாய் இருந்தால் செய்யாதே என்று உத்தரவு வரும்.

இறைவன் நம் ஒவ்வொருவரின் மன சாட்சியின் வழியே பேசுகிறார்.

செபிக்கும்போது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து,

 அதைப்பற்றி தியானித்து, 

அதை செயலாக்க வேண்டும்."

"நீ சொல்வது உண்மைதான்.

 அநேக சமயங்களில் நாம்  நமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்ற 

 விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதை  மட்டுமே செபம் என கருதுகிறோம். 

ஒரே விண்ணப்பத்தை

 கடவுளிடம் நேரடியாகவும் புனிதர்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொண்டிருக்கிறோம்.

 நமது விண்ணப்பம் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி  நாம் கவலைப்படுவது இல்லை.

உண்மையான செபம் வேண்டியதைக் கேட்பதில் மட்டும் அல்ல,

 கடவுளைப் புகழ்வதிலும்,
'
 அவருக்கு நன்றி கூறுவதிலும், 

அவரது குரலுக்கு செவி சாய்ப்பதிலும்,  

அவரது தூண்டுதலின்படி நடப்பதிலும் அடங்கி இருக்கிறது.

அவரது சித்தப்படி வாழ்வதே மிகப் பெரிய செபம். 

அதேக சமயங்களில் நாம் நம்மை மையப்படுத்தியே இறைவனிடம்  செபிக்கிறோம்.

 உண்மையான செபம் இறைவனை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

 அதாவது நமக்கு வேண்டியதைக் கேட்பதைவிட

 அவரது விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்க  

நமக்கு உதவும்படி  கேட்பதுதான் உண்மையான, இறைவனுக்கு பிடித்தமான செபம்."

"very Good. ஆண்டவரோடு உரையாடுங்கள். 

 அதன் மூலம் உறவாடுங்கள்.

லூர்து செல்வம்.

 












.

Wednesday, January 15, 2020

"அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று." (மாற்கு, 1:28)


"அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று." (மாற்கு, 1:28)
********************************

"அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். ''
(மாற்கு, 1:45).

"அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். "
(மாற்கு,5:20).

"  இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.    எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்."
(மாற்கு, 7:36). 


"இச்செய்தி அந்நாடெங்கும் பரவிற்று." (மத்.9:26)

"அவர்களோ வெளியே போய் அவரைப்பற்றி நாடெங்கும் பேசலாயினர்." (மத்.9:31)

"அவரைப்பற்றிய பேச்சு இன்னும் மிகுதியாய்ப் பரவிற்று." (லூக்.5:15)

"அவரைப்பற்றிய பேச்சு யூதேயா முழுவதிலும் சுற்றுப்புறமெங்கும் பரவியது."
(லூக்.7:17)

"அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு  
அறிவித்தான்." (அரு.5:15)

இயேசு மனிதனாகப் பிறந்தது நமது  ஆன்மீக நோயாகிய பாவத்திலிருந்து மீட்கவே,

உடல் நோயைக் குணமாக்குவதற்காக அல்ல.

ஆயினும், ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியை அறிவிக்கும்போதே  உடல் நோயையும் குணமாக்கினார்.

இது தேனோடு மருந்தை கலந்து நோயாளிக்குக்  கொடுப்பது போல. 

பாவத்தினால் வீழ்ச்சி அடைந்திருந்த மனிதனின் இயல்பு (fallen nature) இயேசுவுக்கு தெரியும். 

ஆன்மீக மருத்துவராகிய இயேசு ஆன்மீக    நோயாளியாகிய  மனிதனை   ஆன்மீகத்தை நோக்கி கவர்வதற்காகவே 

அவனுடைய உடல் நோயை முதலில் குணமாக்கினார்.

இயேசு மனிதரை நோயிலிருந்து மீட்பதை  அறிந்த யூத மக்கள் 

குணம் பெறுவதற்காக இயேசுவைத் தேடி வந்தார்கள்.

 அப்படி தேடிவந்த மக்களுக்கு ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியையும் கொடுத்தார். 

உடல் நலம் தேன். ஆன்மீக மருந்து நற்செய்தி.


ஆகவேதான் இயேசு சென்ற இடமெல்லாம் மக்களுடைய நோய்களை குணமாக்கினார்.

 அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

குணம் பெற்ற ஒவ்வொருவரிடமும்,

" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்றார்.

குணம் பெற்ற ஒவ்வொருவரும் 

தாங்கள் சென்றவிடமெல்லாம் தங்களுக்கு குணம் அளித்த இயேசுவை பற்றி மக்களிடம் பேசியதால்,

அவரைப் பற்றிய செய்தி நாடெங்கும் பரவியது.

 இயேசுவின் கையால் குணம் பெற்றவர்கள் இயேசுவைப்  பற்றிய நற்செய்தியை எங்கும் பரப்பினார்கள்.

நாம் எப்படி?

இவ்வுலகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்  வரும்போது  உதவி பெற  இயேசுவை நாடிச் செல்கின்றோம்.

 இயேசுவின் அருளால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

நாம் அதோடு நின்று விடக்கூடாது.

 இயேசுவை அடைந்துவிட்ட நாம்

 அவர் எந்த நோக்கத்திற்காக உலகிற்கு வந்தாரோ

 அதை நிறைவேற்றவேண்டும். 

முதலில் நமது  ஆன்மீக மருந்தாகிய நற்செய்தியை இயேசுவிடமிருந்து பெறவேண்டும்.

 அடுத்து இயேசுவையும் அவரது செய்தியையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

 நாம் பெற்ற சுகத்தை மற்றவர்களும் பெற உதவ வேண்டும்.

இதைத்தான் இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் கையால் குணம் பெற்றவர்களும் செய்தார்கள்.

 தாங்கள் பெற்ற இயேசுவைத் தாங்கள் சந்தித்த அனைவருக்கும் கொடுத்தார்கள்.

 இதனால் நாடு எங்கிலும் இருந்து மக்கள் கூட்டம் இயேசுவை நோக்கி வந்தது. 

இயேசு தன்னிடம் வந்த மக்களுக்கும்,

 தான் தேடி சென்று பார்த்த மக்களுக்கும் 

உடல் குணத்தையும் ஆன்மீக குணத்தையும் அளித்தார்.   

  கேட்டும், கேளாமலும் இயேசுவிடம் இருந்து நிறைய உதவிகளை பெற்ற நாம் 

நமது ஆன்மீகக் கடமையை நிறைவேற்றுகிறோமா? 

இயேசுவையும் அவரது நற்செய்தியையும் மற்றவர்களுக்கு அறிவிக்கின்றோமா? 

ஒறு முறை புனித பிரான்சிஸ் அசிசியார் அவரது சபை சகோதரர்களில் சிலரை அழைத்து,

 "வாருங்கள் நற்செய்தியை அறிவித்துவிட்டு வருவோம்" என்றார்.

அவர்களுடன் நகரின் சில தெருக்கள் வழியாக செபம்  சொல்லி கொண்டு நடந்து சென்றார்.

 யாருடனும் ஒரு வார்த்தை கூட  பேசவே இல்லை.

 சில தெருக்களைச் செபத்தோடு சுற்றிய பின்  இல்லத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.

ஒரு சகோதரர் அவரிடம்,

"Brother, நற்செய்தியை அறிவிப்போம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றீர்களே,

ஆனால் நாம் யாரிடமும் பேசவே இல்லையே? "

அசிசியார் சொன்னார்,

" நாம் செபம் சொல்லிக்கொண்டே அமைதியாக நடந்து சென்றது ஒரு நற்செய்தி அறிவிப்பு தான். 

 நமது நடை, உடை, பாவனையே  நம்மைப் பார்த்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கும். "

 சொல் மூலம் செய்யும்  நற்செய்தி அறிவிப்பை  விட

 செயல் மூலம் செய்யும் நற்செய்தி அறிவிப்பு அதிக சக்தி வாய்ந்தது.

நமது வாழ்க்கையே சக்திவாய்ந்த நற்செய்தி.

நமது விசுவாச அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் 

அவர்களும் இயேசுவையும் அவரது வல்லமையையும் பற்றி அறிந்து கொள்வார்கள்.

நமது வாழ்க்கையின் மூலம் நற்செய்தியை அறிவிப்பது கடினமான காரியமல்ல,

 நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்தாலே போதும்.


நமது வீட்டில் நம்முடைய அம்மாவுக்கு சமைக்கத் தெரியும்,

 ஆனாலும் சமைக்கும்போது தன்னுடைய மகளை தனக்கு உதவி செய்ய அழைக்கிறார்.

ஏன்?

உண்மையில் தனக்கு உதவி செய்ய அல்ல,

 ஆனால் மகளும் சமையல் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவளை அழைக்கிறாள்.

நமது உதவி இல்லாமலேயே இவ்வுலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த கடவுளால் 

 நமது உதவி இல்லாமலேயே உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க முடியும்.

உலகம் ஒரு குடும்பம்.

 குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாவிட்டால்

குடும்பத்தில் கலகலப்பும், மகிழ்ச்சியும் எப்படி நிலவும்?

குடும்பத்தின்  மகிழ்ச்சியே அதன் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர்  மகிழ்ச்சிகரமான செய்திகளை பரிமாறி கொள்வதிலும்,

 ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும்தானே அடங்கி இருக்கிறது.

இயேசுவின் நற்செய்தியை விட  மகிழ்ச்சிகரமான செய்தி வேறு உண்டா?

ஒவ்வொருவரும் தான் பெற்ற இறை அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து  கொண்டால்

 குடும்பம் முழுவதும் சேர்ந்து இறை அனுபவத்திலும், அன்பிலும் வளரும். 

அறியாதவர்களுக்கு அறிவை ஊட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி

 தாய் தன் பிள்ளைக்கு உணவு ஊட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையானது.

இயேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிக்கும்போது ஏற்படும் 
 மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

இயேசுவை மற்றவர்களுக்கு 
அறிவிக்கும்போது ஏற்படும் 
ஆன்மீக உறவுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை. 

இயேசு நம் ஒவ்வொருவரையும் இணைப்பதோடு

 எல்லோரையும் தன்னோடு இணைத்துக் கொள்கிறார்.

இந்த இணைப்புப் பணியில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று  எண்ணும் போது நாம் பெறும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 இந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான்

 இயேசு நம்மையும் நற்செய்தி பரப்புப் பணியில் ஈடு படுத்திக் கொள்கிறார்.

 நாம் மகிழும் போது நமது மகிழ்ச்சியின் பொருட்டு நம்மைவிட அதிகம் மகிழ்பவர் இயேசு மட்டுமே. 

இயேசு நமது மகிழ்ச்சிக்காக மனிதன் ஆனார்,

நாம் இயேசுவின் மகிழ்ச்சிக்காக இயேசுவாக மாறுவோம்.

லூர்து செல்வம்.