Sunday, April 9, 2023

நாற்பதாம் நாள் கொண்டாட்டம்.

நாற்பதாம் நாள் கொண்டாட்டம்.

"தாத்தா, இயேசு மெய்யாகவே கடவுள்,  மெய்யாகவே மனிதன்.
(Fully God and fully Man)

கடவுள் என்ற வகையில் அவர் நித்திய காலமாக விண்ணகத்தில் வாழ்கிறார்.

மனிதன் என்ற வகையில்?"

"'மனிதனாகிய இயேசு 33 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்.

33வது ஆண்டில் மரணமடைந்தார்."

"பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் நம்மைப் போன்ற மனிதர் இயேசு.

நாம் மரணமடைந்தவுடன் நமது உடல் உலகில் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது.

ஆனால் நமது ஆன்மா விண்ணகத்துக்கு சென்று விடுகிறது.

அதே போல இயேசு மரணமடைந்தவுடன் அவரது உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது ஆன்மா பாதாளத்தில் மீட்புக்காக காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களை அழைத்துக் கொண்டு விண்ணகம் சென்றது.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

உயிர்த்தெழுந்த இயேசு ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றார்.

இயேசு விண்ணகம் சென்ற திருநாளை அவர் உயிர்த்தபோது கொண்டாடாமல்

உயிர்த்த நாற்பதாம் நாள் கொண்டாடுகிறோம். ஏன்?"

"'நாம் எதற்காகத் திருவிழாக்களைக் கொண்டாடுகிறோம்?

பிரியாணி சாப்பிடுவதற்காகவா?"

"இல்லை. ஆன்மீக ரீதியாகப் பாடம் கற்று, அதில் வளர்வதற்காக."

"' அதாவது ஒவ்வொரு திருவிழா கொண்டாடும் போதும் ஒரு ஆன்மீக பாடம் கற்க வேண்டும்.
சரியா?"

"சரி."

"'புனித வெள்ளியில் என்ன பாடம் கற்கிறோம்?"

"இயேசுவின் பாடுகளும், மரணமும் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தன."

"'புனித வெள்ளிக்கு முந்திய நாள் இரவு இயேசு நிறைவேற்றிய திவ்ய நற்கருணை, குருத்துவம் ஆகிய தேவத் திரவிய அனுமானங்கள் மீட்புடன் பிரிக்க முடியாத தொடர்பு உடையவை.

வியாழன், வெள்ளி நிகழ்வுகள் மீட்பை ஒட்டிய பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.

திவ்ய நற்கருணையும், திருப் பலியும் இன்றி மீட்பு இல்லை.

சரி. உயிர்ப்புத் திருவிழா நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?"

"இயேசுவின் உயிர்ப்புதான் அவர் கடவுள்  என்பதை நிரூபிக்கிறது.

மனிதனாகப் பிறந்த இயேசு உயிர்த்தது போல மனிதர்களாகிய நாமும் ஒரு நாள் உயிர்ப்போம்.

இயேசு ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றது போல நாமும் ஒரு நாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம். 

இது தான் இயேசுவின் உயிர்ப்புத் திருநாள் நமக்கு கற்பிக்கும் முக்கியமான பாடம்."

"'உயிர்த்த நாற்பதாம் நாள் நாம் கொண்டாடும் திரு நாள் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?"

"அது தெரியாமல்தான் நான் உங்களிடம் கேள்வியே கேட்டேன்.

பதிலை நீங்களே சொல்லி விடுங்கள்."

"'உயிர்த்தவுடன் இயேசு ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்று விட்டார்."

"தாத்தா, உயிர்த்த இயேசு சீடர்களுக்குக் காட்சி கொடுக்கு முன் விண்ணகம் சென்று விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்?"

"இயேசு முதல் முதல் தோன்றிய மரிய மதலேனாளுக்குச் சொன்ன வார்த்தைகளே ஆதாரம்.


"என் சகோதரர்களிடம்போய், 

"என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகியவரிடம் நான் மேலே எழும்பிச் செல்கிறேன் " என்று அவர்களுக்குச் சொல்." என்றார்.

மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன், அவர் எனக்கு இப்படிச் சொன்னார்" என்று அறிவித்தாள்.
(அரு. 20:17, 18)

அன்று மாலைதான் சீடர்களுக்குத் தோன்றினார்.

ஒரு அடிப்படை உண்மையை சொல்லி விடுகிறேன்.

நாம் வாழும் இந்த உலகம் 
இடம், காலத்திற்கு கட்டுப்பட்ட சடப் பொருளால் ஆனது.

கடவுள் வாழும் விண்ணுலகில் இடமும் கிடையாது, காலமும் கிடையாது (No time and Space) 

பூவுலகில் வாழும் நாம் இதை விட்டால் விண்ணுலகில் வாழ்வோம்.

மனிதனாகப் பிறந்த இயேசுவும் நம்மைப் போல் தான்.

உயிரோடு இருக்கும் போது மண்ணுலகில் வாழ்ந்தார்.

இறந்த பின் விண்ணுலகில் வாழ்கிறார்.

விண்ணுலகில் வாழ்ந்தாலும் முதல் நாற்பது நாட்கள் தனது சீடர்களுக்கு அவ்வப்போது தோன்றி, அவர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்தினார்.

நாற்பதாவது நாள்தான் அவர் கடைசியாகத் தோன்றியது.

அதோடு தோன்றுவதை நிறுத்தி விட்டார்.

அந்த நாற்பது நாட்களில் சீடர்களுக்குத் தோன்றும் போது அவர் அவர்களுக்குச் சொன்னதை நம் மனதில் பதிய வைக்கவே

திருச்சபை 40ம் நாள் இயேசு விண்ணெய்திய திருவிழாவைக் கொண்டாடுகிறது."

"அந்த 40 நாட்களில் இயேசு கூறியவற்றைச் சொல்லுங்களேன்."

"'உங்களுக்குச் சமாதானம். 

"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.

 பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:

 எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்"
(அருளப்பர்)

"அதாவது சீடர்களுக்கு நற்செய்திப் பணியை அளித்ததும்,

பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியதும் இந்த 40 நாட்களில் தான்."

"'"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
என் ஆடுகளைக் கண்காணி"
என் ஆடுகளை மேய்." என்ற வார்த்தைகளின் மூலம் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை இராயப்பரிடம் ஒப்படைத்ததும் இந்த நாற்பது நாட்களில் தான்.(அருளப்பர்)

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, 

அவரது வல்லமையைப் பெற்று

 யெருசலேமிலும், 

யூதேயா முழுவதிலும்,

 சமாரியாவிலும், 

மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்"
(அப்.1:8)

நான்கு நற்செய்தி நூல்களிலும் உயிர்ப்பிற்கு பின்னால் இயேசு சீடர்களுக்கு கூறியவற்றை வாசித்து அவற்றை நமது மனதில் ஆழப் பதிக்க வேண்டும்.

அதற்காகத்தான் இயேசு விண்ணெய்திய விழாவை உயிர்த்த 40வது நாள் கொண்டாடுகிறோம்."

லூர்து செல்வம்.





'

No comments:

Post a Comment