Sunday, April 23, 2023

இயேசு நிறுவிய திருச்சபை எது?(தொடர்ச்சி)

இயேசு நிறுவிய  திருச்சபை எது?
(தொடர்ச்சி)

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்" (அரு.1:29) 

என்று ஸ்நாபக அருளப்பர் இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இயேசுவை ஏன்  உலகின் பாவங்களைப் போக்க வந்த இறைவனின் ஆட்டுக் குட்டி என்கிறோம்?


பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாளில்

அவர்கள் ஒரு ஆட்டுக் குட்டியை வெட்டி,

 அதன் இரத்தத்தை வீட்டின் நிலைக் காலில் பூசி விட்டு,

கறியை உண்டார்கள். 

விடுதலை அன்று அவ்வாறு உண்டது  ஆண்டவருடைய பாஸ்கா எனப்பட்டது.

விடுதலை பெற்ற இஸ்ரயேலர்கள் கானான் நாட்டுக்கு வந்த பின்

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதன் ஞாபகமாக

 ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா திருநாளை  கொண்டாடினார்கள். 

அன்று ஒரு ஆட்டுக் குட்டியை இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு,

அதன் கறியை புளியாத அப்பத்தோடு உண்டார்கள்.

இயேசு திருக்குடும்பத்தோடு வாழ்ந்த போதும், அதன் பின்னும் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்கிறார்.

33வது ஆண்டில், அதாவது, அவரது வாழ்வின் இறுதியில் இந்த விழாவைக் கொண்டாடியதில் ஒரு விசேசம் இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டபோது

பலியிடப்பட்ட ஆட்டுக் குட்டியைப்
 பாஸ்கா விருந்தாக உண்டார்கள்.

புதிய ஏற்பாட்டில் உலக மக்கள் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து தன்னால் மீட்கப் படப் போவதை

பாஸ்கா விழாவாகக் கொண்டாட இயேசு தீர்மானித்தார்.

இதில் விசேசம் என்னவென்றால் பலியிடப்பட்டு, சாப்பிடப் படப் போகும் ஆட்டுக் குட்டி  இயேசுதான்!

அவர் தான் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பலியிடப் படப்போகும் ஆட்டுக் குட்டி!

பலியிடப் படப்போவது வெள்ளிக் கிழமை.

வெள்ளிக் கிழமை பலியிடப் படப் போகும் ஆட்டுக் குட்டியாகிய தன்னைத்தான் வியாழக் கிழமையே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

வெள்ளிக்கிழமைப் பலியிடப் படப் போகும் ஆட்டுக் குட்டியை எப்படி வியாழக் கிழமையே உணவாகக் கொடுக்க முடியும்?

அதற்காகத் தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

"அவர்கள் உண்ணும்பொழுது,

 இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, 

"இதை வாங்கி உண்ணுங்கள், இது என் உடல்" என்றார்.


 பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து,

 "இதிலே அனைவரும் பருகுங்கள்.

 ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது:

 பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்."

மறுநாள் பலியிடப்படப் போகும் உடலையும், சிந்தப்படப் போகும் இரத்தத்தையும்

முந்திய நாளே சீடர்களுக்கு உணவாகக் கொடுப்பதற்காகத் தான்

அப்பத்தைத் தனது உடலாகவும், ரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றுகிறார்.

இது எல்லாம் வல்ல கடவுளாகிய அவரால் மட்டுமே முடியும்.

சீடர்கள் உண்டது இயேசுவின் உண்மையான உடலையும், இரத்தத்தையும் தான்,

அதாவது இயேசுவைத்தான்.

கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருப்பலியை நிறைவேற்றிய முதல் குரு இயேசு தான்.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்ற வார்த்தைகள் மூலம் தனது சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.

அப்பத்தைத் தன் உடலாகவும், இரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றும் தனது வல்லமையைத் தன் சீடர்களோடு பகிர்ந்து கொண்டார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது இயேசு கூறிய அதே வசீகர வார்த்தைகளைக் கூறி,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றி,

திரு விருந்தின்போது நமக்கு அளிக்கிறார்கள்.

திருப்பலி தான் திருச்சபையின் அதிகாரப் பூர்வமான செப வழிபாடு.

எங்கே திருப்பலி இல்லையோ அங்கு இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

எங்கே அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய குருக்கள் இல்லையோ, அங்கே   இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

எங்கே பாவசங்கீர்த்தனம் இல்லையோ,  அங்கே   இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

73 புத்தகங்களோடு கத்தோலிக்க 
 திருச்சபை பைபிளை ஏற்றுக் கொண்டது.

அதிலிருந்து தங்களுக்குப் பிடிக்காத ஏழு புத்தகங்களை வெளியே எறிந்து விட்டு,

மீதி 66 புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு,

"பைபிளில் எல்லாம் இருக்கிறது" சொல்லித் திரிகிறார்கள் பிரிவினை சபையினர்.

இது ஒரு நாற்காலியின் ஒரு காலை ஒடித்து எறிந்து விட்டு, 

மூன்று காலோடு இருப்பதைக் காண்பித்து,

"இதுதான்  நாற்காலி" என்று சொல்வது போலிருக்கிறது.

பிரிவினை சபையார்  கையில் இருப்பது முழுமையான பைபிள் அல்ல.

முழுமையான பைபிளை உருவாக்கிய கத்தோலிக்கத் திருச்சபைக்குத்தான் அதற்குப் பொருள் கூறும் உரிமை உண்டு.

இஷ்டப்பட்ட புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு,

அவற்றுக்கு தங்கள் இஷ்டம் போல பொருள் கூறுவோர் உண்மையான திருச் சபையினர் அல்லர்.

இயேசு ஏற்படுத்திய ஏழு தேவத் திரவிய அனுமானங்களையும்,

முழுமையான பைபிளையும்,

திருச்சபையின் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொண்டு,

அன்னை மரியிடமிருந்து பெற்ற அதே உடலோடு திவ்ய நற்கருணையில் வாழும் இயேசுவுடன் நடைபோடும் 
திருச்சபைதான்  இயேசு நிருவிய திருச்சபை.

அது கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே.

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment