Tuesday, April 25, 2023

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு.6:68)

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு.6:68)

திவ்ய நற்கருணை மீது நம்பிக்கை இல்லாத மக்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து சென்ற போது,

அவர் பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.

அதற்கு இராயப்பர்,

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்று பதில் அளித்தார்.

 நாம் இராயப்பர் பக்கம்.

'இயேசு வாழ்வு தரும் உணவு'  

என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வுலக உணவு நமது உடலுக்கு வளர்ச்சியையும், பலத்தையும் கொடுக்கிறது.


இயேசு ஆன்மீக உணவு.

நமது ஆன்மா விண்ணகப் பாதையில் தைரியமாக நடப்பதற்குத் தேவையான சகல விதமான ஆன்மீக சக்திகளையும் நமக்கு உணவாக வரும் இயேசு தருகிறார்.

பாவச் சோதனையை எதிர்த்து நின்று வென்று, பாவத்தில் விழாதிருக்க வேண்டிய அருள் வரங்களைத் தருகிறார்.

துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்று, தைரியமாகச் சுமப்பதற்குத் தேவையான அருள் வரங்களைத் தருகிறார்.

நமது மனதை நோகச் செய்தவர்களை மன்னிக்க வேண்டிய நல்ல மனதைத் தருகிறார்.

நாமும் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து, பாவ மன்னிப்புப் பெற்று, ஒரு தேவத் திரவிய அனுமானத்துக்கு உரிய அருள் வரங்களை அள்ளி வருவதற்கான மனதையும் தருகிறார்.

இயேசு சமாதானத்தின் தேவன். அவரை அடிக்கடி உணவாக உட்கொள்வோர் இறைவனோடும், அயலானோடும் சமாதானமாக வாழ்வார்கள். 

அவர் சர்வத்தையும் படைத்த கடவுள். அவர் நமது உணவாக நம்மிடம் வரும்போது உச்சக் கட்ட மரியாதையுடன் அவரை வரவேற்போம்.

அவரைக் கையால் தொடுவதற்கு குருக்களின் கரங்கள் அபிசேகம் செய்யப் பட்டுள்ளன.

மிட்டாயைக் கையால் வாங்கி வாயில் போட்டுக் கொள்வது போல அவரைக் கையில், 
அதுவும் இடது கையில் வாங்கி,
வாயில் போட்டுக் கொள்வது 

உலகைப் படைத்த கடவுளுக்குச் செய்யும் அவமரியாதை.

தாய் தன் குழந்தைக்கு வாயில் உணவு ஊட்டுவது போல,

நமது தாய்த் திருச்சபை தனது குருக்கள் மூலம் இயேசுவை உணவாக ஊட்ட,

அவரை வாயைத்திறந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நற்கருணை நாதர் நம்முள் வந்தவுடன் தகுதியற்ற நம்மிடம் வந்ததற்கு நன்றி கூறுவதோடு,

நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.

நற்கருணை வாங்கியவுடன் Cell phone ஐ எடுத்துக் கொண்டு வெளியே ஓடுவது ஆண்டவருக்குச் செய்யும் மிகப் பெரிய அவமரியாதை.

நமது நண்பன் நம்மை வரவேற்று வீட்டில் உட்காரவைத்து விட்டு வெளியே சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கும்?

நன்மை வாங்கியவுடன் வீட்டுக்கோ, கடைக்கோ போவது அதை விடப் பெரிய அவமரியாதை.

திருப்பலி முடியுமுன் கோவிலை விட்டு வெளியேறக் கூடாது.

கால் பைசாவுக்குப் பெறாத நண்பர்களுடன் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருக்கும் நமக்கு

நம்மைப் படைத்தவருடன் பேச சங்கடமாக இருக்கிறது.

நம் ஆண்டவர் திருவிருந்தின் போது நம்மிடம் வருவது மட்டுமின்றி,

நமது வருகைக்காக நாள் முழுவதும் நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று நற்கருணை நாதருடன் உரையாட வேண்டும்.

நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பதில் கூட பேரானந்தம் இருக்கிறது.

நாம் அவரைப் பார்க்க, அவர் நம்மைப் பார்க்க,

பார்வையில் நடைபெறும் மொழியில்லாத உரையாடலில் கிடைக்கும் பேரானந்தம் வேறு எதிலும் கிடையாது.

விண்ணக வாசிகள் தங்கள் பார்வையால் தானே இறைவனை நித்திய காலமாக இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளோடு பேச வார்த்தைகள் தேவையில்லை.

நாம் நினைப்பதை அவர் அறிவார். அவர் நினைப்பதை நாம் அறிவோம். 

மனங்களின் உரையாடலுக்கு நிகர் எதுவும் இல்லை.

செபக் கூட்டங்களை வழி நடத்துபவர்கள் பேசுவதைப் போல நமக்குப் பேசத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்.

உள்ளத்தில் உறைபவர் கடவுள். உள்ளங்கள் கலக்க மொழி எதற்கு?

இறைவனோடு ஒன்றிப்பதே செபம்.

"தந்தை, மகன், தூய ஆவி" என்று நினைத்துக் கொண்டிருந்தால்,

கொஞ்ச நேரத்தில் அவர் நம்மை அவருக்குள் இழுத்துக் கொள்வார்.

நற்கருணை நாதரை நினைத்துக் கொண்டிருந்தால் போதும், நாம் அவரோடு ஒன்றித்து விடுவோம்.


"யாரிடம் செல்வோம், இறைவா? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன!"

நற்கருணை நாதரிடம் செல்வோம். முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் அவரிடம்தான் உள்ளன!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment