"தாத்தா, ஏன் மகிழ்ச்சிக்குரிய நாளில் துக்கமாக இருக்கிறோம்?"
"' என்றைக்கு?"
"புனித வெள்ளியன்று."
"'புனித வெள்ளி இயேசு மரித்த நாள். வீட்டில் யாராவது மரித்தால் மற்றவர்கள் துக்கமாக இருப்பார்களா? மகிழ்ச்சியாக இருப்பார்களா?"
"தாத்தா, நாம் ஆன்மீகம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆன்மீகப் பார்வையில் பதில் சொல்லுங்கள்.
நமது மரண நாள் நெருங்கி விட்டால் நாம் மகிழ வேண்டுமா? வருந்த வேண்டுமா?"
"'உலக ரீதியில் வருந்துகிறோம். ஆனால் ஆன்மீக ரீதியில் மகிழ வேண்டும்.
ஏனெனில் மரணம்தான் விண்ணகத்தின் வாசல்.
மரணம் நெருங்கி விட்டது என்றால் நாம் விண்ணகத்துக்குப் போகும் நேரம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்."
"இயேசு ஏன் மனிதனாகப் பிறந்தார்?"
"'நமது மீட்புக்காக பாடுகள் பட்டு சிலுவையில் மரணம் அடைய."
"நமது மீட்புக்காக சிலுவையில் மரணம் அடைவது தான் அவர் உலகிற்கு வந்ததன் நோக்கம்.
இயேசு மரணம் அடைந்ததால் தான் நம்மால் மீட்பு பெற முடிகிறது.
மனுக் குலத்துக்குப் மீட்பை பெற்று தந்த இயேசுவின் சிலுவை மரணம் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியா, இல்லையா?"
"'மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிதான்."
"பிறகு ஏன் இயேசு மரித்த புனித வெள்ளியை துக்கப் பண்டிகை என்கிறீர்கள்?"
"'தம்பி, நாம் மீட்பு பெற்றதற்காக தூக்கம் கொண்டாடவில்லை.
நமது பாவத்தினால் நம்மை படைத்தவருக்கு பாடுகளையும், மரணத்தையும் கொடுத்து விட்டோமே என்பதற்காக துக்கம் அனுசரிக்கிறோம்.
நாம் துக்கப்படுவது நமது பாவங்களுக்காக.
நம்மைப் படைத்த அளவில்லா அன்பு நிறைந்த இறைவனை
மனிதனாக பிறக்கச் செய்து
வேதனை மிகுந்த பாடுகளையும்,
சிலுவை மரணத்தையும் அவருக்கு அளித்த நமது பாவங்களை நினைத்து துக்கப்படுகிறோம்.
இவ்வாறு நாம் துக்கப்படும் போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு
நாம் இறைவனோடு நித்திய பேரின்ப வீட்டில் வாழ தகுதி அடைவோம்.
இந்த தகுதியைத்தான் மீட்பு என்கிறோம்.
இந்த மீட்பை நமக்குப் பெற்று தர சிலுவையில் மரித்த நமது ஆண்டவரின் அளவற்ற அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
அதே நேரத்தில் அவரது பாடுகளுக்கும், மரணத்துக்கும் காரணமான நமது பாவங்களுக்காக துக்கப் படுகிறோம்."
"ஆக, பாவங்களுக்காக துக்கப் பட்டு,
நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவங்கள் மன்னிக்கப்படடு
புனிதமான ஆன்மாவோடு புனித வெள்ளி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களுக்கு,
புனித வெள்ளி மகிழ்ச்சிகரமான திருநாள்தான்.
"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து (விண்ணகத்தில்) மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." (லூக்.15:7)
"'இயேசு சிலுவையில் மரித்த வினாடி உலக வரலாற்றிலேயே மகிழ்ச்சிகரமான வினாடி என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது."
"அது எனக்குத் தெரியும், தாத்தா."
"'தெரிந்ததைச் சொல்லு."
"மனித குலம் ஆரம்பித்த நாளிலிருந்து
இயேசுவின் மரணம் வரை
மரணம் அடைந்த பரிசுத்த மனிதர்களின் ஆத்மாக்கள்
பாதாளத்தில் மீட்பின் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரும் அவர்களோடு தான் இருந்தார்.
இயேசு மரணம் அடைந்த வினாடி
பாதாளத்தில் மீட்பின் நாளுக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரும் இயேசுவோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் மரணம் தான் நித்திய பேரின்ப வாழ்வைத் தந்தது.
அவர்களோடு நல்ல கள்ளனும் சேர்ந்து கொண்டான்.
அனைவருக்கும் நித்திய பேரின்ப வாழ்வைத் தருவதற்காகத்தான் இயேசு சிலுவையில் உயிர் நீத்தார்.
மனிதர்கள் வாழ கடவுள் உயிர் நீத்தார்."
"'நாம் புனிதர்களாய் வாழ்வதன் மூலம் இறைவனுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment