Thursday, April 20, 2023

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"(அரு.6:27)

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"(அரு.6:27)

"தாத்தா, நீங்கள் ஒரு மாதம் கஷ்டப்பட்டு உழைத்த பின் மாதக் கடைசியில் சம்பளம் எவ்வளவு வரும்?"

"'30,000 ரூபாய்."

"அதாவது கையில் 30,000 இருக்கும்."

"'ஆமா."
 
"அடுத்த மாதம் கஷ்டப்பட்டு உழைத்த பின் மாதக் கடைசியில் சம்பளம் எவ்வளவு வரும்?"

"'30,000 ரூபாய்."

"அப்போ அடுத்த மாதக் கடைசியில் உங்கள் கையில் எவ்வளவு இருக்கும்?"

"'30,000"

"கணக்குத் தெரியவில்லையா? அல்லது பொய் சொல்கிறீர்களா?"

"'எது பொய்?"

"தாத்தா, முந்திய மாதக் கடைசியில் 30,000 இருந்தது.

அடுத்த மாதக் கடைசியில் 30,000 வந்தது. அப்போ கையில் 60,000 இருக்க வேண்டுமே.

நீங்கள் 30,000 என்று சொன்னால் அது பொய்தானே!"

"அட மடையா, ஒரு வருடம் கழித்துக் கேட்டாலும் அதையேதான் சொல்லுவேன்.

ஒரு மாதம் வாங்குகிற பணம் அடுத்த மாதம் செலவழிந்து போகும்."

"செலவு...அழிந்து போகுமா? அழிந்து போகிற பணத்திற்காக ஏன் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டும்?"

"'இங்கே பார். நீ வாழ்நாள் முழுவதும் எவ்வளவு கஷ்டப் பட்டு உழைத்தாலும் நீ சாகும் போது கையில் ஒரு பைசா கூட இருக்காது."

"அழிந்துபோகும் பணத்திற்காக ஏன் உழைக்க வேண்டும்?"

"'இவ்வுலகைச் சார்ந்த எல்லா செல்வங்களும் அழிந்துதான் போகும்.

மறுவுலகைச் சார்ந்த செல்வங்கள் அழியாது.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"

என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்."

"உணவுக்காக என்று தானே சொல்லியிருக்கிறார்.

செல்வங்களுக்காக என்று சொல்லவில்லையே!"

"'அவர் மட்டும் தான் அழியாத உணவு. 

அவர் மட்டும் தான் அழியாத செல்வம்.

இவ்வுலக உணவுக்காகவும், இவ்வுலக செல்வங்களுக்காகவும் வாழ்வோர் இவ்வுலகோடு அழிந்து போவார்கள்.

திவ்ய நற்கருணையில் அவரையே உணவாக உட்கொண்டு,

அவருக்காக மட்டும் உழைத்தால் 

நாம் அழிவுறாது எந்நாளும் நிலையாக வாழ்வோம்."

"அவரையே உணவாக உட்கொண்டு என்பது புரிகிறது.

திவ்வ நற்கருணை உட்கொள்ளும்போது அவரையே
உணவாக உட்கொள்ளுகிறோம் என்பது புரிகிறது.

ஆனால் அவருக்காக மட்டும் (Underline மட்டும்) எப்படி உழைப்பது?

முதலாவது நாம் உண்ண, உடுக்க, வாழ உழைக்கிறோம்.

(உண்ணாமல் உழைக்க முடியாது.)

நமது உறவினர்களுக்காக உழைக்கிறோம்.

இயேசுவை ஆராதிக்க, அவருக்கு ஊழியம் செய்ய உழைக்கிறோம்.

ஆனால் அவருக்காக மட்டும்  உழைப்பது எப்படி?

அதுதான் புரியவில்லை."

"'ஒருவர் தன் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து விட்டு இறந்து விடுகிறார்.

அவர் இல்லாமல் வாழ அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது.

குழந்தைக்காக மட்டுமே வாழ வேண்டியிருக்கிறது."

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.

குழந்தைக்காக வாழ்ந்தாலும்,
வாழ்வதற்கு அவள் உண்ண வேண்டியதிருக்கிறது.

அவள் உண்பது, உடுப்பது, வாழ்வது எல்லாம் தனது குழந்தைக்காகத்தான்.

அதேபோல் இயேசுவுக்கு ஊழியம் செய்வதற்காக மட்டும் நாம் வாழ்ந்தால்,

நாம் இயேசுவுக்காக மட்டும் வாழ்கிறோம்.  சரியா?"

"'இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்றால்,

அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பது,

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது பிறனையும் நேசிப்பது,

இயேசுவின் மகிமைக்காக பிறருக்கு உதவிகள் செய்வது,

சுருக்கமாக இயேசுவின் மகிமைக்காக வாழ்வது.

இயேசுவின் மகிமைக்காக வாழ்வது மட்டுமே வாழ்க்கை.

இயேசுவின் மகிமைக்காக  மட்டும் வாழ்ந்தால் நமக்கு அழியாத நித்திய நிலை வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

இவ்வுலக செல்வங்களுக்காக மட்டும் வாழ்ந்தால், நிலை வாழ்வு கிடைக்காது.


ஆகவே இயேசுவின் மகிமைக்காக மட்டும் வாழ்வோம்.

நிலை வாழ்வு வாழ்வோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment