"அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்."
(லூக்.24:31)
இயேசு உயிர்த்ததை நம்பாத இரண்டு சீடர்கள் எம்மாவுஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு வழிப்போக்கன் போல வந்த இயேசுவும் அவர்களோடு பேசிக்கொண்டே நடந்தார்.
ஆனால் அவர்களால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப எம்மாவூசில் அவர்களோடு தங்கச் சென்றார்.
அங்கு உணவு அருந்தப் போகும் நேரத்தில் அவர்களுடன் பந்தியமர்ந்த இயேசு
அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்தார்.
அதாவது புனித வியாழனன்று சீடர்கள் முன் திருப்பலி நிறைவேற்றியதுபோல் அவர்கள் முன்பு நிறைவேற்றினார்.
அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர்.
அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
அதுவரைத் திறக்காத கண்கள் அவர் திருப்பலி நிறைவேற்றிய போது திறந்தன.
ஆதித் திருச்சபையில் திருப்பலியை அப்பம் பிட்குதல் என்று தான் அழைப்பார்கள்.
இப்போதும் குருவானவர் அப்பத்தைப் பிட்டு,
"இது என் சரீரம்."
என்பதும்,
இரசத்தை எடுத்து
"இது என் இரத்தம்."
என்பதும் தான் திருப்பலி.
அதற்கு முன் செய்யப்படுவது எல்லாம் அதற்கான தயாரிப்பு.
அதற்குப் பின் வருவது திரு விருந்து.
நாம் நமது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தான் திருப்பலிக்குச் செல்கிறோம்.
திருப்பலி ஒரு ஆன்மீக நிகழ்ச்சி.
திருப்பலியின்போது நமது கண்கள் திறக்கின்றனவா,
அதாவது எம்மாவுஸ் சென்ற சீடர்களின் கண்கள் திறந்தது போல.
உடலைச் சார்ந்த கண்கள் திறப்பதற்கும், ஆன்மீகக் கண்கள்
திறப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
இயேசு அப்பம் பிட்கும் வரை எம்மாவுஸ் சீடர்களின் உடலைச் சார்ந்த கண்கள் மட்டும் திறந்திருந்தன.
ஆகவேதான் அவரை வழிப்போக்கனாக மட்டும் பார்த்தனர்.
ஆனால் அப்பம் பிட்கும் போது அவர்களது ஆன்மீகக் கண்கள் திறந்தன.
இப்போது இயேசுவைக் கண்டு கொண்டனர்.
நமது உடலை சார்ந்த கண்களை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு திருப்பலிக்குச் சென்றால்,
பீடத்தில் திருஉடை அணிந்த ஒரு மனிதரையும், அவர் கையில் கோதுமை அப்பத்தையும் மட்டுமே பார்ப்போம்.
ஆன்மீகக் கண்களை திறந்து வைத்துக்கொண்டு திருப்பலிக்குச் சென்றால்,
பீடத்தில் இயேசுவின் பிரதிநிதியைப் பார்ப்போம்.
எழுந்தேற்றத்திற்குப் பின் அவர் கையில் இயேசுவைப் பார்ப்போம்.
நாம் 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்து, உயிர்த்த அதே இயேசுவைப் பார்க்கின்றோமா,
அல்லது வெறும் கோதுமை அப்பத்தைப் பார்க்கின்றோமா என்பது நமது நடவடிக்கைகளிலிருந்து தெரியும்.
இயேசுவைப் பார்த்தால் அவரை உணவாகப் பெறும்போது
கடையில் பொருட்கள் வாங்கும் போது நிற்பது போல
நின்று, இடது கையால் வாங்க மாட்டோம்.
நம்மைப் படைத்த கடவுளாகிய அவரை முழந்தாள் படியிட்டு நாவில் வாங்குவோம்.
கொரோனாவைக் காரணம் காண்பித்து கையால் வாங்க ஆரம்பித்த நாம்,
கொரோனா போன பிறகும் அப்படியே வாங்கினால் என்ன அர்த்தம்?
நாம் இயேசுவைப் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.
ஆன்மீகக் கண் தெரியாத குருடர்கள் என்றுதான் அர்த்தம்.
நாவினால் வாங்கினால் நோய் பரவி விடுமாம்.
எல்லோரும் சுவாசிக்கிற அதே காற்றை சுவாசிக்கும் போது பரவாத நோய்,
இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.
எல்லோரும் நடக்கும் அதே தெருவில் நடக்கும்போது பரவாத நோய்
இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.
எல்லோரும் பயணிக்கும் பேருந்தில் பயணிக்கும் போது பரவாத நோய்
இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.
எல்லோரும் சாப்பிடும் ஹோட்டலில் சாப்பிடும் போது பரவாத நோய்
இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.
இப்படி சொல்வதைத்தான் தமிழில் 'நொண்டிச் சாக்கு' என்று சொல்வார்கள்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால்,
ஒவ்வொரு வினாடியும் இயேசுவும் நம்மோடு வாழ்வது நமக்குத் தெரியும்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால்,
நமக்கு வரும் துன்பம் இயேசுவே சுமந்த சிலுவை என்பது நமக்குத் தெரியும்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நமது அயலானில் இயேசுவைக் காண்போம்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், மோட்சத்திற்கான பாதையை விட்டு மாற மாட்டோம்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நம்மை பகைப்பவர்கள் கூட நமக்கு நண்பர்களாகவே தோன்றுவார்கள்.
ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், மோட்ச வாசல் நெருங்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.
உடலைச் சார்ந்த கண்கள் நமது மரணத்தோடு மூடிவிடும்.
ஆன்மீக கண்கள் நித்தியத்துக்கும் இறைவனைப் பார்த்து அனுபவிக்கும் பேரின்பத்தைத் தரும்.
ஆன்மீக கண்களால் எப்போதும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment