Sunday, April 9, 2023

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." (மத். 28:20)

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." (மத். 28:20)

முப்பது ஆண்டுகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து விட்டு,

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த பொது வாழ்வு வாழ்ந்து விட்டு,

33 ஆண்டுகளின் இறுதியில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு, சிலுவையில் மரணம் அடைந்து விட்டு,

மூன்று நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்து, ஆன்ம சரீரத்துடன் விண்ணகம் சென்று விட்ட இயேசு

இன்றும் அதே ஆன்ம சரீரத்துடன் நம்மோடு இருக்கிறார்,

உலகம் முடியுமட்டும் நம்மோடு இருப்பார்,

உலகம் முடிந்த பின்னும் என்றென்றும் நம்மோடு தான் இருப்பார்.

அன்னை மரியின் திரு வயிற்றில் ஆன்ம சரீரத்தோடு மனுவுரு எடுத்த இறை மகன்,

அதே ஆன்ம சரீரத்தோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்று இரத்தம் சிந்திய விதமாய் கல்வாரி மலையில் ஒப்புக் கொடுத்த அதே திருப் பலியை

இன்றும் இரத்தம் சிந்தாத விதமாய், தினமும் நம்மிடையே ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை உண்மையிலேயே விசுவசிக்கிறோமா.

அல்லது விசுவசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறோமா?

"ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே." (யாகப்.2:26)

செயல்கள் உள்ள விசுவாசம்தான் உண்மையான விசுவாசம்.

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்.

ஒரு காலத்தில் திவ்ய நற்கருணைப் பேழை பீடத்தின் மையத்தில் இருந்தது.

ஆனால் இப்போது ஒரு Sideக்குப் போய்விட்டது.

ஒரு காலத்தில் திவ்ய நற்கருணையைப் பார்த்தவுடன்
முழந்தால் படியிட்டு எழுவோம். இப்போது தலை மட்டும் குனிகிறோம்.

ஒரு காலத்தில் முழந்தாட்படியிட்டு திருவுணவை நாவில் வாங்கினோம்.

இப்போது பண்டத்தை வாங்குவது போல (அதுவும் இடது கையால்) வாங்கி, வாய்க்குள் போட்டுவிட்டு, கையை உதறிக் கொண்டு போகிறோம். கையிலிருந்து நற்கருணைத் துகள்கள் கீழே விழுவது பற்றியோ, வருவோர் போவோர் காலால் மிதிபடுவது பற்றியோ கவலைப் படுவதில்லை.

ஒரு காலத்தில் நடுச் சாமம் துவக்கி நன்மை வாங்கு மட்டும் எதுவும் சாப்பிடாமலிருந்தோம்.

இப்போது சாப்பிட்டுக் கொண்டுதான் பூசைக்கு வருகிறோம்.

திவ்ய நற்கருணை சம்பந்தப் பட்ட நமது செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றன.

அதாவது நமது விசுவாசமும் செத்துக் கொண்டிருக்கின்றது.

இதை யாரும் உணர்வதாகவும் தெரியவில்லை.

"மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" (லூக்.18:8)

என்ற ஆண்டவரின் கேள்வி இந்த விசயத்தில் உண்மையாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஆண்டவரிடம் நமது தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்போம்.

திருந்தி, நமது உண்மையான விசுவாசத்தைச் செயலில் காண்பிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment