"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்.23:34)
"தாத்தா.."
"'என்னடா, ஏதாவது சந்தேகமா?"
"தாத்தா, மாணவனுக்கு சந்தேகம் வராவிட்டால் ஆசிரியருக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
எனக்குச் சந்தேகம் வராவிட்டால் உங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்."
"'அதுவும் சரிதான். கேள்."
"இயேசு இறைமகன், கடவுள்.
தன்னைச் சிலுவையில் அறைய காரணமானவர்களைப் பார்த்து
"நீங்கள் செய்வது இன்னதென்று உங்களுக்குத் தெரியவில்லை.
நான் உங்களை மன்னிக்கிறேன்"
என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே.
எதற்காக அவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டுகிறார்?"
"'தம்பி, இயேசு தனது மீட்புப் பணியின் போது வேறொரு முக்கியமான பணியையும் செய்திருக்கிறார்.
தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடவுள் தன்னைப் பற்றி நமக்கு வெளிப்படுத்தியிருக்கா விட்டால் அவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
நற்செய்தி நூல்களை துவக்கத்தில் இருந்து முடிவுவரை கூர்ந்து வாசித்து வந்தால் கடவுளைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மை தெரியவரும்.
கடவுள் ஒருவர்.
அவர் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாய் இருக்கிறார்.
மூவரும் தனித்தனி ஆட்கள்.
(the truth that in the unity of the Godhead there are Three Persons,
the Father, the Son, and the Holy Spirit,
these Three Persons being truly distinct one from another.)
அதாவது தந்தை மகனல்ல,
மகன் தூய ஆவி அல்ல.
ஆனால் மூவரும் ஒருவருள் ஒருவர், ஒரே கடவுளாக, இருக்கின்றனர்.
"நான் சொல்வதை நம்புங்கள்: நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்பாவிடில், செயல்களின் பொருட்டேனும் நம்புங்கள்."
(அரு.14:11)
"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு.20:22,23)
கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார்.
"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு. 3:16)
கடவுள் நமது வாழ்வில் நமக்குத் துணையாய் இருப்பார்.
"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்: நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்."
(அரு. 14:26)
மூன்று ஆட்களுள் மனிதனாய்ப் பிறந்தது மகன் மட்டுமே.
"அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார்." (லூக். 1:31)
ஏன் தந்தையிடம் வேண்டினார் என்பதை புரிய வைக்க
இவ்வளவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?"
''இன்னும் கொஞ்சம் கேட்டால் நற்செய்தி நூல்கள் முழுவதையும் வாசித்து விடுவீர்கள்.
எனக்குப் புரிய இவ்வளவு போதும்.
ஆனாலும், தாத்தா, கடவுள் நம்மை மன்னிக்க எப்போதும் தயார்,
நாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமே."
"'உண்மைதான். நாம் நமது பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
மனம் வருந்தி, மன்னிப்புக் கேட்டால் தான் மன்னிப்புக் கிடைக்கும்.
இயேசு அவனை மன்னித்து விட்டார். அப்படியென்றால் என்ன அர்த்தம்?"
"அவன் மனதில் வருந்தி, மன்னிப்புக் கேட்டு விட்டான் என்று அர்த்தம்.
ஆனால் அது நற்செய்தி நூலில் குறிப்பிடப் படவில்லை."
"'கரெக்ட். இயேசு ஒவ்வொரு முறை நோயாளியைக் குணமாக்கும் போதும்,
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று'' என்பார்.
விசுவாசம் இறைவனுடைய நன்கொடை.
Faith is God's gift.
இதிலிருந்து என்ன தெரிகிறது?"
"ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கு முன் இயேசு அவனுக்கு விசுவாசத்தை நன்கொளியாக கொடுத்துவிட்டார் என்று தெரிகிறது."
"'இப்போ கவனி. கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும்
பரிபூரண மனச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.
நமது சுதந்திரத்தை நாம் ஆண்டவரோடு வாழவும் பயன்படுத்தலாம்,
அவருக்கு எதிராக வாழவும் பயன்படுத்தலாம்.
ஆண்டவரோடு வாழப் பயன்படுத்தும்போது அவர் நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாய் இருக்கிறார்.
நாம் ஆண்டவருக்காக வாழச் சம்மதம் தெரிவித்து விட்டால் போதும். மீதியை அவர் பார்த்துக் கொள்வார்.
உண்மையில் நமது சம்மதத்தோடு நமது வாழ்வை முழுவதும் வாழ்வது அவர்தான்.
வாழ்வது நாம் அல்ல, நம்மில் அவர் வாழ்கிறார்.
இதை நான் சொல்லவில்லை, புனித சின்னப்பரே கூறுகிறார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்க இயேசு தயார் என்றால்,
அதற்கான அருள் வரங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு இயேசு அளிப்பார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விவரத்தை நற்செய்தி நூலில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
உலகில் நமது தந்தை நம்மை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டிருக்கிறார் என்றால்,
அதற்கான Fees ஐ அவர் கட்டி விட்டார் என்று அர்த்தம்.
நாம் பள்ளிக்கூட மாணவர்களோடு சுற்றுலா செல்ல நமக்கு தந்தை அனுமதித்து விட்டார் என்றால்
அதற்கான செலவையும் ஏற்றுக் கொள்வார் என்று தான் அர்த்தம்.
நாம் விண்ணகம் செல்லும்போது நாம் மீட்புப் பெற காரணமானவர்கள் அனைவரையும் பார்ப்போம்.
யூத மத தலைவர்கள் இயேசுவை கொன்றது மிகப் பெரிய தீமை.
ஆனால் அந்த மிகப் பெரிய தீமையிலிருந்துதான் மீட்பு என்னும்
மிகப் பெரிய நன்மையை இயேசு
வரவழைத்திருக்கிறார்."
"இப்போ நன்றாகப் புரிகிறது தாத்தா.
நிச்சயமாக இயேசு தனக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்திருப்பார்.
இந்த நல்ல குணத்தை அவரைப் பின்பற்றும் நாமும் நமது வாழ்வில் பின்பற்றுவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment