Wednesday, April 12, 2023

வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " ( அப். 3:6)

"வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " ( அப். 3:6)

இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

பிறவியிலேயே முடவனாயிருந்த
 ஒருவன் அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான்.

இராயப்பர் அவனைப் பார்த்து,

"வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட!"  என்றார்.


அவன் துள்ளி எழுந்து நடக்கத்தொடங்கினான்: துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான்.

அதைப் பார்த்து ஆச்சரியத்துடன் இராயப்பரைப் பின் தொடர்ந்த மக்களிடம் அவர் இயேசுவைப் பற்றி போதிக்கத் தொடங்கினார்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழுவது போல,

ஒரே நற்செயலால்

ஒரு பிறர் சிநேக உதவி,

இயேசுவின் பெயரால் நடந்த புதுமையால் அவருக்குப் புகழ்,

நற்செய்தி அற்விப்பு,

மக்களிடம் வேரூன்றிய விசுவாசம்

ஆகியவை விளைந்தன.

இராயப்பரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

பிறருக்கு உதவி செய்வதற்கு கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

உள்ளத்தில் விசுவாசமும், ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளும் இருந்தாலே போதும்.

உள்ளத்தில் இருக்கும் வார்த்தைகள் உதடுகளின் வழியே வெளியே வரவேண்டும்.

வார்த்தைகளால் நாம் செய்யும் உதவியை இயேசுவின் பெயரால் செய்ய வேண்டும்.   

விசுவாசமும், வார்த்தைகளும் இயேசுவின் பெயரும் சேர்ந்து கொண்டால் விளைவது புதுமைதான்.

உடல் நோய்கள் மட்டுமல்ல, ஆன்மீக நோய்கள் வார்த்தைகளால் குணமாவதும் புதுமைதான்.

இயேசுவின் பெயரால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் கேட்போருடைய உள்ளத்தில் இயேசுவுக்கு விருப்பமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

அம்மாற்றங்கள் அவர்களுடைய ஆன்மாக்களை உலக நாட்டங்களிலிருந்து இயேசுவை நோக்கித் திருப்பும்.

இதற்குப் பெயர் தான் மனமாற்றம் அல்லது மனம் திரும்புதல்.

இயேசு அவருடைய போதனைகளால் இதைத்தான் செய்தார்.

இவ்வுலகப் பொருட்களால், அல்லது பணத்தால் செய்யப்படும் இவ்வுலகைச் சார்ந்த எந்த உதவியும்,

அதில் ஆன்மீகம் கலந்திருக்கா விட்டால்,

நீடித்த பலன் தராது.

இறைவனுக்காக, அவரது மகிமைக்காக செய்யப்படும் எந்த உதவியும்,

 அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும்,

நித்திய பலனைத் தர வல்லது. 

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)

இயேசு அளிக்கும் கைம்மாறு நித்திய பேரின்பமாகத்தான் இருக்கும்.

ஆகவே அயலானுக்குப் பெரிய அளவில் உதவிகள் செய்வதற்குரிய பண வசதி இல்லையே என்று வருத்தப் பட வேண்டியதில்லை.

அன்பான பார்வையாலும், அன்பான வார்த்தையாலும் 

உள்ளத்தைத் தொட்டு உதவி செய்யத் தேவைப் படுவது அன்பு மட்டும்தான். 

இத்தகைய உதவியை நாம் அனைவருக்கும் செய்யலாம்.

நம்மை பகைப்பவர்கள் மனதிலும் கூட இது நம் மீது அன்பை விதைக்கும்.

ஒரு முறை புனித பிரான்சிஸ் அசிசி தனது சகோதரர்கள்  மூவரிடம்,

"வாருங்கள், நற்செய்தி அறிவித்து விட்டு வருவோம்" என்றார்.

நால்வரும் அமைதியாக, பராக்குக்கு இடம் கொடாமல் செபித்துக் கொண்டே சில தெருக்கள் வழியே நடந்து சென்று, வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.

ஒரு சகோதரர் பிரான்சிசிடம் கேட்டார்,

"சகோதரரே, நாம் செபித்துக் கொண்டுதானே போனோம், நற்செய்தி அறிவிக்கவில்லையே" என்றார்.

"ஆண்டவரிடம் அமைதியாகப் பேசிக்கொண்டே தெருவழியே எப்படி நடப்பது என்ற செய்தியை செயல் மூலம் காட்டினோமே,..."

"அது நற்செய்தியா?"

"ஆன்மீகம் சார்ந்த செய்தி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை வாழ்ந்து காண்பிப்பது நற்செய்தி போதனைதான்.

நாம் துறவிகள். நமது ஒவ்வொரு அசைவும் மற்றவர்களுக்கு முன் மாதிரிகையாக இருக்க வேண்டும்."

நமது நடை, உடை, பாவனையில் மற்றவர்கள் கிறிஸ்துவைக் காண வேண்டும்.

அதற்காகத்தான் துறவிகளுக்கும் , குருக்களுக்கும் தனி உடை கொடுத்திருக்கிறார்கள்.

பொதுமக்கள் மத்தியில் தங்களது துறவற, குருத்துவ உடையுடன் நடமாடுவதே ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணி தான்.

நற்செய்தியைப் போதிக்க வேண்டியது குருக்களுடைய கடமை மட்டுமல்ல,

இயேசுவைப் பின்பற்றும் அனைவருடையவும் கடமை.

கிறிஸ்துவை அனைவருக்கும் அறிவிக்கும் நோக்கத்தோடு,

நாம் முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதோடு,

நம்மால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும்.

இயேசுவை நேசிப்போம்.

அவருக்காக நமது அயலானை நேசிப்போம்.

அவரோடு இணைந்து எல்லோரும் என்றென்றும் விண்ணகத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment