Monday, April 24, 2023

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு." . (1இராய.5:7)

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு."
(1 இராய.5:7)

தாயின் மடியில் இருக்கும் குழந்தை சாப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாது.
அழுதவுடன் பால் கிடைக்கும்.

பெற்றோரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் தங்கள் எதிர் காலம் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள்.
பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

நல்ல ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் தங்கள் தேர்வைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள்.
அவர் சொன்னபடி படிப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

தங்கள் கவலைகளை எல்லாம் கடவுள் மேல் போட்டுவிட்டு, அவர் சொற்படி நடப்பார்கள்.

கவலைகள் இருவகை,

உலகைச் சார்ந்த கவலைகள்,

உயிர்வாழ எதை உண்பது, 
எதைக் குடிப்பது, 
உடலை மூட எதை உடுப்பது, 
எங்கே வாழ்வது,
வாழ்வதற்குத் தேவையான பொருளை எப்படி ஈட்டுவது, 
ஈட்டியதை எப்படிச் செல்வழிப்பது போன்றவற்றைச் சார்ந்த கவலைகள்.

ஆன்மீகத்தைச் சார்ந்த கவலைகள்,

கடவுளைத் திருப்திப் படுத்த எப்படி வாழ்வது,
பாவச் சோதனைகளை எப்படி வெல்வது,
பாவத்தில் விழுந்து விட்டால் எப்படி எழுவது,
விண்ணுலக வாழ்வை அடையத் தேவையான புண்ணியங்களை எப்படி ஈட்டுவது,
பாக்கியமான மரணத்திற்கு எப்படி எப்போதும் தயாராக இருப்பது போன்றவற்றைச் சார்ந்த கவலைகள்.

அநேகருக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாது.

உலகம்தான் அவர்களுக்கு எல்லாம்.

மறுவுலகம் ஒன்று இருக்கிறது என்று சொல்வதை குருட்டு நம்பிக்கை என்பார்கள்.

ஆண்டவருடைய புத்திமதியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

சிலர் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகள்.
உலகை முற்றும் துறந்தவர்கள்.
அவர்கள் இறைவாக்கால் மட்டுமே இயக்கப் படுவவர்கள்.
இறைவாக்கையே வாழ்பவர்கள்.
 
அநேகர் இரண்டு வித கவலைகளும் கலந்த சாதாரண மக்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுளை நேசித்து, அவருக்கு சேவை செய்து விண்ணகம் செல்லவே தாங்கள் படைக்கப் பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். அதற்காகவே வாழ்வார்கள்.

ஆனாலும் உலகில் இருக்கும் வரை அதையும் அனுபவிக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கும்.

அவர்கள் கவலைகள் சம்பந்தப் பட்ட இறை வாக்கை நன்கு வாசித்து தியானிக்க வேண்டும்.

ஆண்டவருடைய போதனையின் அடிப்படையில் நமது முதல் திருத் தந்தை இராயப்பர் சொல்கிறார்,

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: "

உலகைச் சார்ந்த கவலைகளாக இருந்தாலும், மறுவுலகைச் சார்ந்த கவலைகளாக இருந்தாலும்

அவை அனைத்தையும் கடவுள் மேல் சுமத்தி விட வேண்டும்.

அதாவது, எதைப் பற்றியும் நாம் கவலைப் படக் கூடாது.

நமது கவலைகளை அவர் பார்த்துக் கொள்வார்.

நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று

 வீட்டில் போய்த் தூங்க வேண்டுமா?

நமது சுமையை அவர் முன் இறக்கி வைத்து விட்டு,

அவர் சொன்னபடி செய்ய வேண்டும்.

கசப்பான பொருளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக இனிப்பைத் தந்தால் யாரும் வேண்டாம் என்று சொல்வார்களா?

நாம் அவர் முன் இறக்கி வைத்து விட்ட கவலைகளுக்குப் பதிலாக அவர் இரண்டு இனிய கட்டளைகள் கொடுக்கிறார்.

"மகனே/மகளே, உனது கவலைகளைப் பற்றி நீ கவலைப் படாதே.

நித்திய காலமாய் நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நேசி.

உன்னை நேசிப்பது போல உனது பிறனையும் நேசி.

நேசிப்பதற்கென்றே படைக்கப் பட்டது நமது இதயம்.

நேசிப்பதை விட வேறு இனிமையான செயல் இருக்க முடியுமா?

What can be sweeter than to love 💓?

புனித அகுஸ்தினார் சொல்கிறார்,

"Love and do as you like."

"அன்பு செய். அன்புக்குப் பாதகம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்."

"அன்பு பொறுமையுள்ளது,

 பரிவுள்ளது. 

அன்பு அழுக்காறு கொள்ளாது.

 பெருமை பேசாது, 

இறுமாப்பு அடையாது,


 இழிவானதைச் செய்யாது,

 தன்னலத்தைத் தேடாது,

 சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது.

அநீதியைக் கண்டு மகிழ்வுறாது:

 உண்மையைக் கண்டு உளம் மகிழும்.

அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்: 

பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை: 

நம்பிக்கையில் தளர்வதில்லை:

 அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.

அன்புக்கு என்றும் முடிவு இராது: 
(1கொரி.13:4-8), 

அன்பால் ஆகாதது எதுவுமில்லை.

இறைவனை முழுமையாக அன்பு செய்தால் அவருக்காகவே வாழ்வோம்.

என்ன செய்தாலும் அவருக்காகவே செய்வோம்.

அவருக்காக பாவம் செய்ய முடியாது.

அவருக்குரிய ஆராதனையைக் குறைவில்லாமல்.

திவ்ய நற்கருணை நாதரை நேசித்தால் அவரை முழந்தாள் படியிட்டு ஆராதிப்போம்.

இடது கையால் வாங்கி அவரை அவமானப் படுத்த மாட்டோம்.

கடவுளை அன்பு செய்தால் அதன் காரணமாகவே நமது அயலானை அவருக்காக அன்பு செய்வோம்.

அன்பு செயல்வடிவம் பெறும்போது நாட்டில் நற் செயல்களுக்குப் பஞ்சமே இருக்காது.

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வோம்.

சமூகத்தில் ஒற்றுமையும், சமாதானமும் நிலவும்.

நாம் எதை உண்ண வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்.

நமது தேவைகளை அவரே   
நிவர்த்தி செய்வார்.

இறைப்பற்று உள்ளவன் உலகைச் சார்ந்த செயல்களையும் கடவுளுக்காகவே செய்வான்.

கடவுளுக்காகச் செய்யப்படும் எல்லாம் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

அந்த வகையில் நாம் மூச்சு விடுவது முதல்,

உண்பது, உடுப்பது, உறங்குவது கூட ஆன்மீகச் செயல்களாக மாறிவிடும்.

இறைவனுக்காக வாழ்பவனிடம் பேராசை இருக்காது.

உழைப்பான். கிடைப்பதை வைத்து சிக்கனமாக வாழ்வான். அயலானோடு பகிர்ந்து வாழ்வான்.

துறவிகள் கடவுளுக்காக மட்டும் வாழ்கிறார்கள்.

கடவுளுக்காக மட்டும் வாழ்பவர்கள் அனைவரும் துறவிகள் தான்.

வேண்டாததைத் துறந்து வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் தான்.

துறவற மடங்களில் மட்டுமல்ல, 
வீட்டில் வாழ்பவர்களும் தேவை இல்லாதவற்றைத் துறந்து வாழ்ந்தால்  துறவிகள் தான்.

இறைவனுக்காக மட்டும் வாழ்ந்தால் நாம் அனைவரும் கவலை இல்லாத மனிதர்கள்தான்.

நாம் நமது கவலைகள் முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் அவர் தன்னை முழுவதும நம்மிடம் ஒப்படைத்து விடுவார்.

அப்புறம் வாழ்வது நாம் அல்ல, 
 கடவுளே நம்மில் வாழ்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment