"கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?"
என்று மக்கள் கேட்டபோது இயேசு,
"அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.
அவர்கள், "உம்மை நாங்கள் விசுவிசிக்க ஓர் அருங்குறி பார்க்கவேண்டும்: என்ன அருங்குறி செய்வீர் ? என்ன செயல் ஆற்றுவீர் ?
" அவர்கள் உண்பதற்கு வானத்திலிருந்து உணவு அருளினார் " என்று எழுதியுள்ளதற்கேற்ப எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்று கேட்டனர்.
அதாவது,
"நாங்கள் உம்மை விசுவசிக்க வேண்டுமானால் எங்கள் முன்னோருக்கு பாலைவனத்தில் மன்னாவை அருளியது போல
நீரும் ஒரு அருங்குறி செய்ய வேண்டும்."
என்று கேட்டனர்.
முந்திய நாள் தான் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்தார்.
அதுவே ஒரு பெரிய புதுமை.
அது போன்ற இன்னொரு
புதுமையையும் செய்ய வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டார்கள்.
"வானினின்று இறங்கி வந்து உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு"
என்று இயேசு சொல்ல,
.
அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.
அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு."
இங்கே ஒரு உண்மையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மக்கள் தாங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால்
அவர் அவர்களுக்கு உயிர் அளிக்கும் உணவை எப்போதும் தர வேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் அளித்த பதில்,
"நானே உயிர் தரும் உணவு."
அவர் அளித்த இந்த பதில் தான் இந்த காலக்கட்டத்தில் உலகில் நாற்பதாயிரத்தையும் தாண்டி பிரிந்து கிடக்கும் பிரிவினை சபையினருக்கு
எது இயேசு நிறுவிய உண்மையான திருச்சபை என்று
விளக்க நமக்கு உதவியாக இருக்கிறது.
எல்லோருமே "இயேசுவே எங்கள் மீட்பர்" என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் கூறும் இயேசு
உண்மையாகவே விண்ணிலிருந்து நம்மை மீட்க இறங்கி வந்த இயேசுவா,
அல்லது அந்தப் பெயரை தாங்கள் பிழைப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா
என்பதை புரிய வைக்க இயேசு மக்களுக்கு கூறிய இந்த பதில் உதவி செய்கிறது.
கொஞ்சம் யோசித்தால் புரியும் முழு உண்மையும்.
யோசிக்காவிட்டால் உண்மையை புரிந்து கொள்ள ஆசை இல்லை என்று அர்த்தம்.
1.திவ்ய நற்கருணை.
2. திருப்பலி
3. குருத்துவம்.
4. பாவ சங்கீர்த்தனம்.
ஆகிய நான்கையும் எந்த சபை ஏற்றுக் கொள்கிறதோ அதுதான் இயேசுவால் நிறுவப் பட்ட உண்மையான திருச்சபை.
எல்லா சபைகளும் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதாக சொல்கின்றன.
உண்மையான திருச்சபை தனது தசையையும் இரத்தத்தையும் நமக்கு உணவாக தரக்கூடிய இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையாகவே தன்னுடைய தசையையும் இரத்தத்தையும்,
வெறும் அடையாளமாக அல்ல.
எந்த உடல் நமக்காக சிலுவையில் அறையப்பட்டதோ அதே உடல், ரத்தத்துடன்,
The very same body with blood.
திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.
இயேசு நிறுவிய திருச்சபை திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்ளும்.
2, 3. திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொண்டால் திருப்பலியையும், குருத்துவத்தையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
புனித வியாழனன்று இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது மட்டுமல்ல
தொடர்ந்து உலகம் முடியும் மட்டும் மக்கள் அவரை உணவாக பெறுவதற்காக
குருத்துவம் என்ற தேவ திரவிய அனுமானத்தையும் நிறுவினார்.
அப்போஸ்தலர்கள்தான் அவர் கையால் பட்டம் பெற்ற குருக்கள்.
அவர்களுடைய வாரிசுகளுக்கு,
அதாவது ஆயர்களுக்கு,
அவர்கள் குருப் பட்டம்
கொடுத்தார்கள்.
இயேசு நிறுவிய திருச்சபையில் அவருடைய காலத்திலிருந்து இன்றுவரை குருப் பட்டம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த குருக்கள் நிறைவேற்றும் திருப்பலியின் போதுதான்,
இயேசுவால் செய்யப்பட்டது போல,
அப்பம், இயேசுவின் திரு உடலாகவும்,
திராட்சை இரசம் இயேசுவின் திரு இரத்தமாகவும் மாற்றப் படுகின்றன.
அன்று அப்போஸ்தலர்கள் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உட்கொண்டது போல,
இன்று திருப்பலியின் போது கொடுக்கப்படும் திரு விருந்தில் கலந்து கொள்வோர் இயேசுவை உணவாக உட்கொள்ளுகிறார்கள்.
இன்று உலகம் முழுவதும் வாழும் இலட்சக்கணக்கான குருக்களால்
ஒவ்வொரு வினைாடியும் இயேசு தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆண்டின் ஒவ்வொரு வினாடியும் ஒரு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
4. பாவசங்கீர்த்தனம்:
இறைமகன் மனு மகனாகப் பிறந்ததின் நோக்கமே மக்களுக்குப் பாவ மன்னிப்பு அளிப்பதுதான்.
இந்த நோக்கத்தோடு தான் இயேசு பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை நிறுவினார்.
"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்"
அப்போஸ்தலர்களை நோக்கி இயேசு கூறிய இவ் வார்த்தைகள்
அவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
குருவானவர் திருப்பலி நிறைவேற்ற வேண்டுமென்றாலும்,
நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும் என்றாலும்
ஆத்துமம் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.
கனமான பாவத்தோடு
திருப்பலி நிறைவேற்றினாலும்,
திவ்ய நற்கருணை உட்கொண்டாலும் பாவம்.
யூதாஸ் பாவத்தோடு இயேசுவை உணவாக உட்கொண்டான்.
விளைவு?
அவனுள் சாத்தான் புகுந்தது.
ஆக, திவ்ய நற்கருணையும், திருப்பலியும், குருத்துவமும், பாவ சங்கீர்த்தனமும் நெருங்கிய. தொடர்புடையவை.
இந்த நான்கையும் எந்த சபை ஏற்கிறதோ அதுவே மீட்பர் இயேசு நிறுவிய சபை.
ஏக, பரிசுத்த, கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபை மட்டுமே இந்த நான்கையும் ஏற்கிறது.
அது மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட சபை.
மற்ற சபைகள் கூறும் இயேசு, இறைமகன் இயேசு அல்ல.
அந்த சபையினர் வைத்திருப்பது உண்மையான பைபிளும் அல்ல.
அவர்கள் போதிப்பது இயேசுவின் போதனையும் அல்ல.
ஸ்டாலின் என்ற பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர் ஆகிவிட முடியுமா?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment