"குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே."
(லூக். 18:16)
சிறு பிள்ளைகளைக் கவனித்திருக்கிறீர்களா?
விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
திடீரென்று 'அம்மா' என்பார்கள்.
'என்னடா?'
விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
தீடீரென்று வந்து அம்மாவைப் பார்ப்பார்கள்.
விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்கள் விளையாடும்போது அம்மா அங்கே இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
நாமும் கடவுள் முன்னிலையில் சிறு பிள்ளைகளைப் போல இருக்க வேண்டும்.
என்ன செய்தாலும் கடவுள் முன்னிலையில் இருக்கும் உணர்வோடு செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால்
1. கடவுளுக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.
2. கடவுள் நமக்கு உதவியாக இருப்பார் என்ற உணர்வு மனதில் இருக்கும்.
3.தேவைப் படும் போது உதவி கேட்போம்.
4. நமக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருக்கும்.
5. தாயோடு இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
6. இதைத்தான் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும் என்று தாய்த்திருச்சபை கூறுகின்றது.
எப்போதும் எங்கும் இருக்கும் இறைவன் எப்போதும் நம்மோடும் இருக்கிறார்.
நமக்கு உள்ளும் இருக்கிறார், புறமும் இருக்கிறார்.
அவருக்குள் நாம் இருக்கிறோம்.
அவரது வேலை நம்மை அன்புடன் பராமரிப்பது மட்டுமே.
அவர் துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
மாறாதவர்.
ஆரம்பம் இல்லாத காலத்திலிருந்தே (From all eternity) நாம் அவர் உள்ளத்தில் எண்ணமாக இருந்தோம்.
நாம் ஒரு வீடு கட்ட வேண்டுமானால் முதலில் திட்டம் போடுகின்றோம்.
பிறகு செயல் படுத்துகிறோம்.
சில சமயங்களில் செயல் படுத்தும் போது திட்டத்தில் மாற்றங்கள் செய்கிறோம்.
சில சமயங்களில் திட்டத்தையே மாற்றுகின்றோம்.
ஆனால் கடவுள் அளவில்லாத ஞானம் உள்ளவர். முக்காலமும் அறிந்தவர். அவர் போட்ட திட்டத்தை மாற்ற மாட்டார்.
அவருடைய திட்டம் நமது நலனையே மையமாகக் கொண்டிருக்கும்.
நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று அவருக்கு முன்கூட்டியே தெரியுமாகையால்
அதை அனுசரித்தே அவருடைய திட்டமும் இருக்கும்.
நாம் நமது சுதந்திரத்தை எப்போதும் அவரது விருப்பப் படியே பயன்படுத்தினால்
அவரது திட்டப்படியும், நமது விருப்பப்படியும் நமது வாழ்க்கை அமையும்.
நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால்,
நமது முதல் பெற்றோரைப் போல,
பிரச்சனை வரும்.
ஆனால் அதற்கும் நித்திய காலத்திலிருந்தே ஒரு தீர்வு கடவுளிடம் இருக்கும்.
மனுக்குலத்தைப் படைக்கத் திட்டமிடும்போதே இறைமகன் மனுமகனாகப் பிறக்கும் திட்டமும் போடப்பட்டு விட்டது.
இரண்டு திட்டங்களுமே நித்தியமானவை.
நமது நலனையே மையமாக வைத்து திட்டம் தீட்டி, செயல் படுத்தி வரும் கடவுள் கையில் நமது வாழ்க்கை இருக்கும்போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?
நமக்கு முக்காலமும் தெரியாதாகையால் பிரச்சனைகள் வருவது போல் தோன்றும்.
நாம் கடவுளிடம் வேண்டும் போது நமது பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
நாம் கடவுளிடம் வேண்டும் போது நமது பிரச்சனைகள் தீர்ந்து விட்டால், கடவுள் மாறுகிறார் என்றுதானே அர்த்தம்!
இல்லை.
நமக்கு முக்காலமும் தெரியாதாகையால் அப்படித் தோன்றும்.
ஆனால் நாம் இப்போது வேண்டுவது கடவுளுக்கு நித்திய காலமும் தெரியும்.
ஆதவே தீர்வும் நித்திய காலத்திலிருந்தே போடப்பட்டு விடும்.
நித்திய காலத் தீர்வு கடவுள் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் செயலுக்கு வரும்.
இயேசு பாடுகள் பட்டதும், மரித்ததும் கூட, அவர் நித்திய காலமாய் குறிப்பிட்டிருந்த நேரத்தில் தான்
கடவுள் மாற மாட்டார்.
நாம் பிறக்கு முன்பே யார் வயிற்றில், எப்போது பிறப்போம்,
எப்படி வளர்வோம், நாம் யாரைத் திருமணம் முடிப்போம்,
நமக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்,
நமது சந்ததியினர் எப்படி இருப்பார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்.
நாம் கடவுள் விருப்பப்படி,
அதாவது பாவம் செய்யாமல்
வாழ்ந்தால்,
நாம் கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.
நமக்கு என்ன நடந்தாலும் அது கடவுள் திட்டப்படிதான் நடக்கும்.
நாம் கீழே விழ நேர்ந்து, வெகு நாள் நடக்கக்கூட முடியாமலிருந்தாலும்,
அதுவும் கடவுள் திட்டப்படி, நமது நன்மைக்கே.
என்ன நன்மைக்கு என்று நன்மை வரும் போதுதான் தெரியும்.
நாம் கடவுளுடைய பிரசன்னத்தில், அவரது விருப்பப்படி நடந்தால்,
எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டாம்.
மகிழ்ச்சியோடு வாழலாம்.
மரணம் வந்தாலும் கவலைப் பட வேண்டாம்.
ஏனெனில் நித்திய பேரின்ப வாழ்வுக்கான வாசல்.
அதைக் கடந்ததும் நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பமாகும்.
இறைவன் கரத்தில் கவலை இன்றி வாழ்வோம்,
அம்மாவின் அருகில் விளையாடும் குழந்தைகளைப் போல.
"குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment