Monday, April 17, 2023

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு. 3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு. 3:17)

முதலில் ஒரு ஒப்புமை. (Analogy)

ஆசிரியர் எதற்காகப் பள்ளிக் கூடத்துக்கு வருகிறார்?

மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு அறிவு புகட்டி,

இறுதித் தேர்வில் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவா?

அல்லது,

இறுதித் தேர்வில் அவர்களுக்கு தோல்வி மதிப்பெண் கொடுத்துப் பாழாக்கவா?

ஆண்டு முழுவதும் பாடம் போதிக்கிறார்.

35 மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றால் வெற்றி என்ற நிபந்தனையுடன் அவர்களைப் பொதுத் தேர்வு எழுத அனுப்புகிறார்.

பேப்பர் திருத்தும் ஆசிரியர் விடைத்தாளில் இருக்கும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண் போடுகிறார்.

தேர்வில் ஒரு மாணவன் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்குக் காரணம் அவன் எழுதிய பதில்களே தவிர மதிப்பீடு செய்த ஆசிரியர் அல்ல.

விடைத்தாளில் எழுதப்பட்டிருக்கும் பதில்களுக்கு மட்டுமே மதிப்பெண் போடுவார்.

இறைவன் நம்மைப் படைத்து, கீழ்ப்படிந்து நடக்க கட்டளைகளைக் கொடுத்தது,

நாம் அவற்றின்படி வாழ்ந்து, 
நித்திய பேரின்ப வாழ்வை அடைவதற்காகத்தான்.

 கட்டளைகளை மீறுபவர்கள் இறைவனோடு அவர்களுக்கு உள்ள உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

உறவை முறித்துக் கொள்பவர்கள் கட்டளைகளை மீறுபவர்கள்தான், கடவுள் அல்ல.

கடவுள் மாறாதவர். நம்மீது அவருக்கு உள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

கட்டளைகளை மீறி, முறிந்த உறவோடு மரிப்பவர்கள், நித்தியத்துக்கும் இறை உறவு இல்லாமல் வாழ்வார்கள்.

அதற்கு முழுப் பொறுப்பு அவர்கள்தான். கடவுள் அல்ல.

இறைவனது கட்டளைகளை மீறுவதைத்தான் பாவம்  என்கிறோம்.

மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்டு, 

அவர்கள் முறித்துக் கொண்ட இறை உறவை மீண்டும் அவர்களுக்கு அளித்து,

 அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்,

அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு அளிப்பதற்காக அல்ல.

மனிதனுக்கு பாவத்திலிருந்து மீட்பு அளிப்பதற்காகத்தான்,

வேதனை மிகுந்த பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு,

தன்னையே பலியாகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

பாவிகளுடைய பாவங்களை மன்னிப்பதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார்.

அதைப் பயன்படுத்தி பாவ மன்னிப்பு பெறுவோர் மீட்கப் படுவர். 

அதைப் பயன்படுத்த மறுப்பவர்களின் நிலைமைக்கு அவர்கள்தான் பொறுப்பு.

இறைமகன் மனு மகனாகப் பிறந்தது மக்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத் தான்,

மீட்கப்பட மறுப்பவர்களைத் தீர்ப்பிடுவதற்காக அல்ல.

 எப்படி சுதந்திர உணர்வோடு கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள்
மீட்கப் படுகிறார்களோ,

அவ்வாறே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அவர்களாகவே கடவுளை விட்டுப் போய் விடுகிறார்கள்.

வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பவன்,

"நான் என் ஆசிரியரின் சொற்படி நடந்தேன், இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்" என்பான்.

வாழ்க்கையில் மோசமான நிலையில் இருப்பவன்,

"நான் எந்த ஆசிரியரையும் மதிக்கவில்லை, ஆகவே என் நிலை இப்படி இருக்கிறது," என்பான்.

விண்ணகத்தில் இருப்பவனிடம்,

"நீ எப்படி இங்கே வந்தாய்?" என்றால்,

"இயேசுவைப் பின் பற்றி நடந்தேன், மீட்கப் பட்டேன்," என்பான்.

எதிர் அகத்தில் இருப்பவனிடம்,

"நீ எப்படி இங்கே வந்தாய்?" என்றால்,

"என் இஷ்டப்படி வாழ்ந்தேன், இங்கே வந்தேன்," என்பான்.

இயேசு நம்மை மீட்கவே உலகிற்கு வந்தார்.

அவரைப் பின்பற்றுவோம், மீட்கப் படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment