Friday, April 28, 2023

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார்.

கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அவை ஒவ்வொன்றுக்குமான கோள்களும் இயங்கிக் கொண்டிருக்கும் விண்வெளியைத் தான் பிரபஞ்சம் என்கிறோம்.

விண்வெளியின் பரப்பின் அளவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

ஒளியின் வேகம் வினாடிக்கு
1, 86, 000 மைல்கள்.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் படைக்கப் பட்ட சில நட்சத்திரங்களிலிருந்து இதே வேகத்தில் பயணிக்கும் ஒளிக் கதிர்கள் இன்னும் பூமிக்கு வந்து சேரவேயில்லை.

அந்த நட்சத்திரங்களுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

அந்த நட்சத்திரங்கள் பூமியிலிருந்து கோடிக் கணக்கான ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளன.

ஒரு ஒளி வருடம் 1,86,000 x 60 x 60 x 24 x 365 மைல்களுக்குச் சமம்.

கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

எங்கும் இருக்கிறார்.

நாம் கேட்டிருக்கும் கேள்வி மனித மொழிக்கு உரியது. பதிலும் மனித மொழியில்தான் இருக்கும்.

மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது சடப் பொருட்களால் ஆன பிரபஞ்சத்தில். (material universe) 

மனிதன் சடப்பொருளாலும், (உடல்) 
ஆவிப் பொருளாலும் (ஆன்மா) ஆனவன்.

ஆனால் அவன் சடப்பொருளால் ஆன உலகத்தில் (Material world) வாழ்ந்து கொண்டிருப்பதால் அவன் பயன்படுத்தும் மொழி சடப்பொருள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்.

அவன் ஆன்மீகம் (Spirituality)
பற்றி பேசும்போதும் சடப் பொருள் மொழியையே (Material language) பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இதனால் ஆன்மீகத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

'எங்கே' என்ற வினாச் சொல் சடப்பொருள் சம்பந்தப் பட்டது.

"நீ எங்கே வசிக்கிறாய்?"

"பாவூர்ச் சத்திரத்தில்."

பாவூர்ச் சத்திரம் சடப் பொருளால் ஆன ஒரு இடம்.

"எனது புத்தகம் எங்கே இருக்கிறது?"

"எனது பைக்குள் இருக்கிறது.''

இங்கே கேள்வியும், பதிலும் சடப்பொருள் சம்பந்தப்பட்டவை.

ஆகவே புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை.

'எங்கே' என்ற வினாச் சொல்லைப் போலவே,

 'எங்கும்' என்ற பதிலும் சடப்பொருள் சம்பந்தப் பட்டது.

"நேற்று எங்கும் நல்ல மழை பெய்தது."

ஆனால்,

ஆன்மீகம் சார்ந்த பதிலை எதிர் பார்க்கும்போதும் இதே வினாச் சொல்லைப் பயன்படுத்தும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

"கடவுள் எங்கே இருக்கிறார்?"
என்று யாராவது கேட்டால்

"கடவுள் எங்கும் இருக்கிறார்" என்று பதில் சொல்வோம்.

கடவுள் ஒரு ஆவி. (Spirit) 

ஆன்மீகம் சார்ந்த கேள்விக்கு சடப்பொருள் சார்ந்த வினாச் சொல்லையும், பதில் சொல்லையும்யும் பயன் படுத்தியிருக்கிறோம்.

கடவுளைச் சார்ந்த மொழி (Divine language) நமக்குத் தெரியாது.

ஆகவே வேறு வழியில்லாமல் நமக்குத் தெரிந்த மனித மொழியைப் பயன் படுத்தியிருக்கின்றோம்.

மனித மொழியில் எங்கும் என்றால் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் என்று அர்த்தம்.

நான் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னால்,

நாற்காலி ஒரு சடப் பொருள்,
எனது உடல் ஒரு சடப் பொருள்,

ஒரு சடப் பொருள், இன்னொரு சடப் பொருள் மேல் இருக்கலாம்.

ஆனால் கடவுள் ஆவி.

ஆவி எப்படி பிரபஞ்சம் என்ற சடப்பொருளில் இருக்க முடியும்?

Spirit cannot occupy space.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள ஆன்மீகப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் என்றவுடன் கோடிக் கணக்கான நட்சத்திரங்களும், அவற்றுக்குரிய கோள்களும் உள்ள பிரபஞ்சம்தான் ஞாபகத்துக்கு வரும். 

பிரபஞ்சம் ஒரு சடப் பொருள்தான்.

ஆனால் அதைப் படைத்தவர் ஆவிப் பொருளாகிய கடவுள்.

தனது அளவற்ற வல்லமையால் அதைப் படைத்தார்.

வல்லமை கடவுளுடைய பண்பு.
(Attribute)

தான் படைத்த ஒவ்வொரு பொருளின் ஒவ்வொரு அணுவையும் அவர் நன்கு அறிவார். அது அவருடைய ஞானம்.

ஞானம் கடவுளுடைய பண்பு.

தான் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர் நேசிக்கிறார்.

நேசம் (Love) கடவுளுடைய பண்பு.

தனது வல்லமையாலும், ஞானத்தாலும், நேசத்தாலும் தனது படைப்புகளைப் பராமரித்து வருகிறார்.

தனது பராமரிப்பை அவர் நிறுத்தினால் அவருடைய படைப்பு ஒன்றுமில்லாமையாகி விடும்.

அவர் தன்னுடைய வல்லமையாலும், ஞானத்தாலும், அன்பாலும்

தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவையும் பராமரித்து வருவதால் அவருடைய பண்புகளால் எங்கும் இருக்கிறார்.


கடவுள் அவருடைய படைப்புகளுக்கு  அப்பாற்பட்டவர்.

ஆனால் அவரால்தான் அவை அனைத்தும் இயங்குகின்றன.

அவர் தனது வல்லமையாலும்,  ஞானத்தாலும், அன்பாலும் இன்னும் மற்ற பண்புகளாலும் எங்கும் இருக்கிறார்.
(தொடரும்)

லூர்து செல்வம்.








No comments:

Post a Comment