Wednesday, April 19, 2023

இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்."(அரு.6:9)

"இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்."(அரு.6:9)

ஆன்மீக உணவாகிய நற்செய்தியைக் கேட்க வந்த ஐயாயிரத்துக்கும் மேலான மக்களுக்கு,

சரீரத்துக்கு உரிய உணவாகிய அப்பத்தையும், மீனையும் கொடுத்து

அவர்களது பசியை ஆற்றுகிறார் நம் ஆண்டவர்.

ஒரே வார்த்தையால் ஒன்றுமில்லாமையிலிருந்து அகில உலகையே படைத்த அவரால் ஐயாயிரம் பேருக்கான உணவை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்திருக்க அவரால் முடியும்.

ஆனாலும் அதற்கு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்திக் கொண்டார்.

ஏன்?

இந்நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கும் அருளப்பர் 6ஆம் அதிகாரத்தை முழுவதையும் வாசித்தாலே ஏன் என்பதற்கான விடை கிடைக்கும்.

இயேசு செய்த அத்தனை செயல்களும் நித்திய காலமாக திட்டமிடப் பட்டவை.

ஒன்றோடொன்று காரண காரியத் தொடர்பு உடையவை.

இயேசுவிடமிருந்து உண்ண உணவைப் பெற்ற அத்தனை மக்களும் மறுநாள் காலையில் 

படகுகளில் ஏறிக் கப்பர்நகூமுக்கு அவரைத் தேடிவந்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

 நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று,

 அப்பங்களை வயிறார உண்டதால்தான்.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். 

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்: " என்றார்.

அழிந்து போகும் உணவுக்காக அல்ல, அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும் என்று அவர் கூறியது,

அழியாத உணவு எது என்பதை அவர் சொல்வதற்கான முன்னுரைதான்.


"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: 

என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது." (35)

வானினின்று இறங்கிவந்த உணவு நானே" (45)

நானே உயிர் தரும் உணவு. (48)

நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." (51)

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.

 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.


என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
 (53-56)

திவ்ய நற்கருணை மூலம் தன்னையே உணவாகத் தர விருக்கும் செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முன் தயாரிப்பே ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது.

ஆனால் இயேசு தனது உடலையே உணவாகத் தரவிருப்பதை பல மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே பலர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

மக்களுக்கு உணவளிக்க ஏன் அப்பத்தைப் பயன்படுத்தினார் என்று புரிந்திருக்கும்.

பெரிய வியாக்கிழமை திவ்ய நற்கருணைக்கு அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் இயேசு பயன்படுத்தினார்.

33 ஆண்டு காலம் உலகில் வாழ்ந்த இயேசு, 

தன்னுடைய உடலோடும், ஆன்மாவோடும் 

உலகம் முடியுமட்டும் நம்மோடு வாழ்வதற்காகத்தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திருவிருந்தின்போது நம்மிடம் வருவது 

அன்னை மரியாள் பெற்றடுத்த,

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்த,

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்து, நோயாளிகளைக் குணமாக்கிய,

இறுதியில் பாடுகள் பட்டு, சிலுவையிலே தன்னையே பலி கொடுத்த,

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த 

அதே இயேசு தான் (The very same Jesus) என்று நமக்குத் தெரியும்.

திவ்ய நற்கருணை மூலம் நம்மைத் தேடி வருபவர் நம்மைப் படைத்த கடவுள் என்று தெரிந்திருந்தும்,

கடவுளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா,

அல்லது,

ஏனோதானோவென்று நடந்து கொள்கிறோமா

என்று மனசாட்சியைத் தொட்டு சிந்திப்போம்.

ஏதோ தின்பண்டத்தை வாங்குவது போல வரிசையில் நின்று,

 திவ்ய நற்கருணையை 

இடது கையால் வாங்கி வலது கையால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு போகிறோமே, 

இதில் இயேசுவுக்கு எவ்வளவு அவமரியாதை செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறோமோ,

அல்லது

தெரிந்தும் தெரியாதது போல் செய்கிறோமா?

ஓஸ்தியின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

கையில் வாங்கும்போது கீழே விழ நேரிடும் துகள்கள் எத்தனை பேருடைய கால்களால் மிதிபட நேரிடும் என்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?


கையில் வாங்குவதை நிறுத்தி,
நாவினால் நற்கருணையை வாங்குவோம்.

நம்மைப் படைத்து, மீட்ட சர்வ வல்லப தேவன் இயேசு என்பதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு இது ஒரு சிறிய அடையாளமாய் இது இருக்கட்டும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment