கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்? (தொடர்ச்சி)
உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மனிதன் மொழியைக் கண்டு பிடித்தான்.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன.
ஒருவரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவருக்குத் தெரிந்த மொழியில் பேச வேண்டும்.
கடவுளோடு பேச மொழி தேவையில்லை.
நாம் பகிர்ந்து கொள்ளாமலேயே நமது எண்ணங்கள் அனைத்தும்,
இனிமேல்தான் நினைக்கப் போகும் எண்ணங்கள் உட்பட,
அவருக்குத் தெரியும்.
அவர் அளவு கடந்த ஞானம் உள்ளவர்.
உள்தூண்டுதல்கள் (Inspirations) மூலம் அவர் நினைப்பதை நம்மோடு பகிர்ந்து சொள்வார்.
உதாரணத்துக்கு நாம் உவரி அந்தோனியார் திருத் தலத்திற்குச் சென்று வர வேண்டும் என்பது அவர் விருப்பமானால்,
அதற்கான ஆசையை நம் மனதில் தூண்டி விடுவார்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆசைகளைத் தூண்டிவிடுவது இறைவனா அல்லது எதிராளியா என்பதை எப்படிக் கண்டுணர்வது?
யாரை விழுங்கலாம் என்று எதிராளியும் தூங்காமல் அலைந்து கொண்டிருக்கிறான்.
தூண்டுதல்கள் இறைவனது கட்டளைகளுக்கு எதிராக இல்லாமலும், இறை வாக்கின்படியும் இருந்தால் இறைவனுடையவை.
அதைக் கண்டு பிடிக்க நாம் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களாகவும்,
ஒழுங்காக இறைவாக்கை வாசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
இப்போது மொழிப் பிரச்சனைக்கு வருவோம்.
இயேசுவின் விருப்பப்படி நற் செய்தி அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.
மோட்சத்தில் நிரந்தரமாக வாழ்வதற்கே படைக்கப் பட்டிருக்கிறோம் என்று சொல்கிறோம்.
நண்பர் கேட்கிறார்.
"மோட்சம் எங்கே இருக்கிறது?"
நாம் ஏற்கனவே சென்று வந்த இடத்தைப் பற்றி ஒருவர் கேட்டால் நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்.
மோட்சத்திற்கு நாமே இனிமேல்தான் செல்ல வேண்டும்.
ஆனாலும் தாய்த் திருச்சபை நமக்குப் போதித்திருப்பதை அவருக்குப் புரியும்படி சொல்ல வேண்டும்.
மோட்சம் நமது உலகைப் போல ஒரு இடம் அல்ல.
உலகம் சடப் பொருட்கள் இருக்கும் இடம்.
சடப் பொருளாகிய நமது உடலை நமது ஆன்மா இயக்கிக் கொண்டிருக்கிறது.
நமது மரணத்தின் போது நமது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து மோட்சமாகிய பேரின்ப நிலையை அடைகிறது.
மோட்சம் ஒரு பேரின்ப நிலை.
இறைவன் மோட்சத்தில் நித்திய காலமாக பேரின்ப நிலையில் வாழ்கிறார்.
நமது ஆன்மா மோட்சம் சென்றவுடன் கடவுளுடன் இணைந்து (Getting United with God) பேரின்ப நிலையை அடைகிறது.
மனித மொழியில் நாம் இறந்தவுடன் மோட்சத்திற்குச் செல்கிறோம் என்று சொல்கிறோம்.
உலகில் நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறோம்.
ஆனால் நாம் பரிசுத்தமாக இருந்தால் நமது மரணத்தின் போது அது வரை உடலோடு இருந்த ஆன்மா
மரணித்த விநாடியே மோட்சத்தத்தில் இருக்கும்.
ஒரு மிலி மீட்டர் கூட அது பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு விநாடி கூட அது பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் மோட்சத்தில் இடமும் கிடையாது, நேரமும் கிடையாது.
ஆண்டவர் மனிதனாகப் பிறக்கும் போது விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தார் என்று சொல்கிறோம்.
உடனே ஒரு ஏணியைக் கற்பனை செய்து விடக் கூடாது.
அன்னை மரியின் வயிற்றில் கருவுற்றவுடனே,
விண்ணில் வாழும் இறைமகன் மண்ணில் மனித உரு எடுத்தார் எடுத்தார் என்றுதான் அர்த்தம்.
விண்ணில் இடமும், நேரமும் இல்லாததால், நமது புனிதர்கள் (மனித மொழியில்) எந்த வினாடியும் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இருப்பார்கள்.
உதாரணத்திற்கு,
இப்போது நாம் புனித அந்தோனியாரை நோக்கி செபித்தால் அவர் நம்முடன் இருப்பார்.
இந்த வினாடியோ, அடுத்த வினாடியோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் செபித்தால் அவர் அங்கு இருப்பார்.
Flight ஏறி பயணிக்கத் தேவையில்லை.
மரியாள் பரிசுத்த ஆவியால்
கருத்தரித்தாள் என்ற உண்மைையை உலகப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த இறைவாக்கை வாசித்தாலும் அதில் அடங்கியுள்ள இறைச் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வார்த்தைகளின் அகராதிப் பொருளை வைத்து விளக்கம் கொடுக்கக்கூடாது.
" மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்." (யாத்.20:4)
இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அகராதிப் படியே பொருள் கொடுக்கும் நமது பிரிவினை சகோதரர்கள் உருவங்கள் செய்வதே பாவம் என்கிறார்கள்.
இதற்கு முந்திய வசனங்களையும், அடுத்த வசனத்தையும் வாசித்தாலே இதில் உள்ள இறைச் செய்தி புரியும்.
"நம்மைப் படைத்த கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனையைக் கொடுப்பதற்காக உருவங்கள் எதையும் செய்யக் கூடாது."
இதுதான் இறைச் செய்தி.
வேதாகமம் இறைவனின் தூண்டுதலால் மனிதனால் மனித மொழியில் எழுதப்பட்ட இறைச் செய்தி.
இதில் முக்கியத்துவம் பெற வேண்டியது இறைச் செய்தி மட்டுமே, மனித மொழி அல்ல.
இதை நினைவில் வைத்துக் கொண்டு வேதாகமத்தை வாசிப்போம்.
லூர்து செல்வம்..