"மிஸ்டர், கொஞ்சம் நில்லுங்க.''
"'..........."
"இன்றைக்கு உங்கள் கோவிலில் என்ன விசேசம்?"
"'இன்று தவக்கால வெள்ளிக் கிழமை. மாலையில் கோவிலில் செபமாலையும், சிலுவைப் பாதையும் தொடர்நது திருப்பலியும் நடைபெறும்"
"சிலுவைப் பாதையும், திருப்பலியும் - சரி.
தவக்காலத்துக்கும் செபமாலைக்கும் என்ன சம்பந்தம்?"
"'செபமாலை என்றால் என்ன என்று தெரியுமா?"
"தெரிந்ததால்தான் கேட்கிறேன்."
"'என்ன தெரியும்?"
"செபமாலை மரியாளுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் செபம்.
ஆனால் தவக்காலம் இயேசுவின் பாடுகளைப் பற்றித்
தியானிப்பதற்காக கொடுக்கப்பட்ட காலம்.
அதற்கும் மரியாளுக்கும் என்ன சம்பந்தம்?"
"உங்களுக்கும் உங்களது, அம்மாவுக்கும் உள்ள சம்பந்தம்.
உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுக்கும், உங்களது, அம்மாவுக்கும் உள்ள சம்பந்தம்.
உங்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது உங்களது பெற்றோர்களது பெயர்களைக் கேட்டார்களே.
அப்போது எனது படிப்புக்கும் எனது பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்களா?"
"என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தது என்னுடைய பெற்றோர்கள் தான்."
"'பாடுகள் படப்போகும் இயேசுவை பெற்றவள் மரியாள்தான் என்பது உங்களுக்கு தெரியாதா?"
''மரியாளுக்கு இயேசு மட்டுமா பிள்ளை? வேறு பிள்ளைகளும் இருந்தார்களே. அதற்கு பைபிளில் ஆதாரம் இருக்கின்றது."
"'என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
மரியாளுக்கு இயேசு மட்டும்தான் பிள்ளை என்பதற்கு பைபிளில் வலுவான ஆதாரம் இருக்கிறது.
மரியாளுக்கு அதே பெயரில் ஒரு சகோதரி இருந்தது உங்களுக்கு தெரியுமா?"
"அப்படி எங்கே கூறப்பட்டிருக்கிறது?"
"'இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும்,
அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,
மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்,"
(அரு.19:25)
"அவர்களுள் மதலென் மரியாளும்,
யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,
செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."
(மத்.27:56)
அவர்களுள் மதலேன் மரியாளும்,
சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும்,
சலோமேயும் இருந்தனர்.
(மாற்.15:40)
.1.அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,
2., யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,
3. யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும்,
ஒரே ஆள் தான்,
அன்னை மரியாளின் சகோதரி,
இயேசுவின் சகோதரர்களாக குறிக்கப்படுபவர்கள் இவருடைய பிள்ளைகள்தான்,
இயேசுவுக்கு சித்தி மக்கள்.
புரிகிறதா?"
"மரியாளுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்பதற்கு வேறு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?"
"'அன்னை மரியாளின் வாக்குமூலம்தான் ஆதாரம்."
"என்னது?
மரியாளே எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா?"
"'பைபிள்தான் எல்லாம் என்கிறீர்கள், அதை ஒழுங்காக வாசிப்பதில்லையா?
கபிரியேல் தூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறியதை வாசித்திருக்கிறீர்களா?"
"வாசித்திருக்கிறேன்."
"'தூதர் மரியாளைப் பார்த்து என்ன சொன்னார்?"
"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே "
"மரியே, அஞ்சாதீர்: கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
என்று சொன்னார்.
"' அதற்கு மரியாள் என்ன சொன்னாள்?"
" "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்."
'''ஒரு பெண்ணுக்கு திருமணம் உறுதியாகி நிச்சய தாம்பூல விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஒருவர்
பெண்ணை வாழ்த்தும் போது
"உங்களுக்கு முதல் குழந்தையாக வீரம் உள்ள ஒரு ஆண் மகன் பிறப்பான்."
என்று சொன்னால் அந்தப் பெண் மகிழ்ச்சி அடைவாளா,
அல்லது,
"இது எங்ஙனம் ஆகும்? நான் கணவனை அறியேனே"
என்று கூறுவாளா?"
"நிச்சயமாக மகிழ்ச்சி அடைவாள். அவளுக்குதான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே."
"'கபிரியேல் தூதர் தூதுரைக்க வரும் முன்பே மரியாளுக்கு
தாவீது குலத்தவராகிய சூசை என்பரோடு திரு மண ஒப்பந்தம் ஆகிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும்."
"'அப்படியானால்
"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
என்ற இறைவாக்கை இறைவனின் தூதுவர் மூலம் கேட்டபோது அவர் மகிழ்ச்சிதானே அடைந்திருக்க வேண்டும்!
ஏன் இது எங்ஙனம் ஆகும்? என்று கேட்டார்."
"ஏன்?"
"'ஏனென்றால் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது அவளது திருமண ஒப்பந்தத்தின் நோக்கம் அல்ல.
அவள் எப்போதும் கன்னியாக இருக்க வேண்டும் என்று இறைவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள்.
அவளது கன்னிமைக்குப் பாதுகாவலாகத் தான் அவள் வயதான சூசையப்பரை மணம் செய்ய சம்மதித்தாள்."
"அதற்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லையே!"
"'பைபிளில் கூறப்பட்டது எல்லாம் உண்மை.
ஆனால் பைபிளில் கூறப்பட்டது மட்டும்தான் உண்மை என்று வாதாடக் கூடாது.
நற்செய்தி நூலில் இயேசுவைப் பற்றிய எல்லா உண்மைகளும் எழுதப்படவில்லை என்று அருளப்பரே கூறிருக்கிறார்.
"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)
"வேறு ஏதாவது ஆதாரம்?"
"'பைபிள்தான் எல்லாம் என்று சொல்பவர்கள் நீங்கள்.
"உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும், அதற்கு இயேசு என்று பெயரிடுங்கள்"
என்று கபிரியேல் தூதர் சொன்னபோது
இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"
என்று சொன்ன அன்னை மரியாள்,
"பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்."
என்று தூதர் சொன்னபோது
"இதோ! ஆண்டவருடைய அடிமை.
உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
என்று ஏன் சொன்னாள்?
தனது வயிற்றில் மனுவுரு எடுக்கப் போகின்றவர் இறைமகன்,
அது பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் நிகழும்,
அதனால் தனது கன்னிமைக்கு எந்த பழுதும் வராது.
என்று தெரிந்த பின்புதான் அவர் இயேசுவை பெற்றெடுக்க சம்மதம் தெரிவித்தாள்.
தனது கன்னிமை வார்த்தைப்பாடு இறைவனுக்குக் கொடுக்கப்பட்டது,
அது பழுதுபடாமல் இறைவன் பார்த்துக் கொள்வார்
என்ற உறுதியான விசுவாசம்தான் அவளை இயேசுவைப் பெற சம்மதிக்க வைத்தது.
தனது கன்னிமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த அன்னை மரியாள்
எப்படி வேறு குழந்தைகள் பெற்றுக் கொள்ள சம்மதிப்பாள்?
நான் என் தாயை நம்புகிறேன்.
தாயை நம்பாதவன் மனிதப் பிறவியே அல்ல."
''மரியாள் உங்கள் தாயா?"
"'சிலுவை அடியில் எங்களைப் பெற்ற தாய். நற்செய்தி நூலை ஒழுங்காக வாசிக்கவும்.
உங்களது அப்பா யார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"
''அம்மா சொல்லித்தான் தெரியும்."
"'அம்மாவை நம்புனீர்களா அல்லது வேறு ஆதாரம் கேட்டீர்களா?"
"தாயை நம்பினேன்."
"'இயேசு சிலுவை அடியில் நமக்குத் தந்த தாயையும் நம்புங்கள்."
லூர்து செல்வம்.