Saturday, April 9, 2022

கடவுளின் அன்பு நிபந்தனை அற்றது.

கடவுளின் அன்பு நிபந்தனை அற்றது.

கடவுள் அன்பு மயமானவர்.

தனது சாயலில் அவர் மனிதனை படைத்தபோது மற்ற பண்புகளை போலவே அன்பையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

களங்கமே  இல்லாத இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தனது பாவத்தினால் அதை களங்கப்படுத்திவிட்டான்.

அதோடு அவர் அவனோடு பகிர்ந்து கொண்ட அன்பையும் 
களங்கப்படுத்திவிட்டான்.

கடவுளின் அன்பு நிபந்தனை அற்றது.

மனதனோ நிபந்தனை இன்றி அன்பு செய்வதில்லை.

மனிதனால்  தான் பார்க்காத, அறியாத மற்றொரு மனிதனை  நேசிக்க முடியாது. 

பார்த்து, அறிந்த பின்னும், அவனது மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நேசிப்பான். 

தான் நேசிப்பவன் தனக்குப் பிடிக்காத எதையாவது செய்தால் அன்பு குறைந்து விடும், நின்று கூட விடும். 

அன்பின் இடத்தை வெறுப்பு பிடித்துக் கொள்ளும். 

அநேக காதல் ஜோடிகளின் நிலையை நாமே பார்த்திருப்போம். 

சேர்ந்து, பிரிந்து சண்டை போடும் நண்பர்களையும் பார்த்திருப்போம்.

 நாம் எதற்காக அன்பு செய்தோமோ அது கிடைக்காவிட்டால் அன்பின் கதி அதோகதிதான்.

ஆனால் கடவுள் இயல்பிலேயே அன்பு மயமானவர். அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

பரிசுத்த தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களுக்குமிடையே நித்திய காலமும் நிலவும் அளவு கடந்த ஒரே அன்பினால் மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

கடவுள் நித்திய காலமாய் தன்னைத் தானே அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போலவே நேசிப்பதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

மனிதனைப் படைக்கு முன் அவன் வாழ்வதற்காக நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

கடவுள் நித்தியர்.

ஆனால் மனிதன் இவ்வுலக வாழ்வில் துவக்கமும், முடிவும் உள்ளவன்.

ஆனால் அவனது ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. அது இவ்வுலக வாழ்வு முடிந்த பின்பும் முடிவில்லாமல் வாழும்.

துவக்கமும், முடிவும் உள்ள மனிதனை அவருடைய அளவற்ற அன்பின் காரணமாகவே படைத்தார்.

மனிதன் பிறந்த பின்புதான் அவனுக்கு தான் யாரென்று தெரியும்.

ஆனால் அவனைப் படைத்த கடவுளுக்கு அவரது அளவில்லா ஞானம் காரணமாக நித்திய காலமாகவே அவனைத் தெரியும்.

நேசிப்பதற்காகவே அவனைப்  படைத்தார். ஆகவே அவன் படைக்கப்படும் முன்பே நித்திய காலமாக அவர் அவனை நேசிக்கிறார்.

மனுக் குலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதனையும் நேசிக்கிறார்.

நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் முன்பே கடவுள் நம்மை நேசிக்கிறார்.

நாம் நம்மை நேசிக்கும் முன்பே
 கடவுள் நம்மை நேசிக்கிறார்.

நம்மை முழுச் சுதந்திரத்தோடு படைத்தார்.

அவரது அளவற்ற ஞானம் காரணமாக நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

அவருக்கு விரோதமாகப் பாவம் செய்வோம் என்று அவருக்குத் தெரியும்.

நம்மில் சிலர் கடவுளே இல்லை என்று சொல்வார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

நம்மில் சிலர் தேவ தூசணமாகப் பேசுவார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

இது எல்லாம் நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் அவர் எல்லா மனிதர்களையும்,

நல்லவர்களையும், கெட்டவர் களையும் அவர் நித்திய காலமாகவே அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

அவர் எந்த நிபந்தனை முன்னிட்டும் நேசிக்கவில்லை,

நிபந்தனையின்றி நம்மை நேசிக்கிறார்.

மனிதன் சக மனிதனை நேசிக்கும்போது, "நீ என் விருப்பப்படி நடந்தால் மட்டுமே உன்னை நேசிப்பேன்." என்று சொல்வது போல 

கடவுள் நிபந்தனை எதுவும் போடவில்லை.

அன்பு மயமான அவரால் படைக்கப்பட்டவர்களை நேசிக்க மட்டுமே முடியும்.

எந்த சூழ்நிலையிலும் அவர்களை வெறுக்க முடியாது.

அவரை பெற்று வளர்த்த மாதாவை  நேசிப்பது போலவே அவருக்கு மரணத்தீர்ப்பிட்ட பிலாத்துவையும் நேசிக்கிறார்.

இராயப்பரை நேசிப்பது போலவே யூதாசையும் நேசிக்கிறார்.

அவரது மரணத்திற்குக் காரணமான அனைவரையும் நேசிக்கிறார்.

அதனால் தான் அவர்களை மன்னிக்கும்படி  தந்தையிடம் வேண்டினார்.

நேசிப்பதற்காகவே படைத்தார், நேசித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதன் அவனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி, முற்றிலும் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும்

அவருடைய அன்பில் மாற்றம் இருக்காது.

இறந்த பின்னும் கடவுளோடு  இணைந்து வாழ்வது மோட்சம்.

அவரை வேண்டாம் என்று தீர்மானித்து அவரைப் பிரிந்து வாழ்வது நரகம்.

நமக்கு மோட்சம் வேண்டுமா, நரகம் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது நாம்தான்.

நாம் எப்படித் தீர்மானித்தாலும் நம்மீது கடவுள் கொண்டுள்ள  அன்பில் மாற்றம் இருக்காது.

ஏனெனில் நம்மைப் பற்றி முற்றிலும் அறிந்துதான் நம்மை  நித்திய காலமாக நேசிக்கிறார்.

நிபந்தனை இன்றி நம்மை நேசிக்கும் கடவுளிடம் நாம் நிபந்தனை போடலாமா?

 கடவுள் அவரையும், நமது பிறனையும்    நிபந்தனை இன்றி நேசிப்பதற்காகவே நம்மைப் படைத்தார். 

நேசிக்கிறோமா?

அவரிடம் கேட்பதையெல்லாம் தந்தாலும்,  தராவிட்டாலும்  அவரை நேசிப்பது குறையக் கூடாது.

அவர் சிலுவையில் தொங்கும் போதும் நம்மை நேசித்தார்.

நமக்கு  சிலுவைகள் வரும் போதும் அவரை நேசிக்க வேண்டும்.

அவர் நமது மேல் கொண்ட அன்பின் காரணமாகவே சிலுவையில் அறையப்பட்டார்.

ஆகவே நமக்கு சிலுவைகள் அதிகமாக வரும்போது  நாம் அவரை அதிகமாக நேசிக்க வேண்டும். 

நமது அயலான் நம்மை வெறுக்கும் போதுதான், நமக்கு துன்பங்கள் தரும்போது தான் நாம்  அவனை அதிகமாக நேசிக்க வேண்டும்.

 அதனால்தான் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று நம் ஆண்டவர் போதித்திருக்கிறார்.

அயலானிடமிருந்து ஏதாவது நன்மையை எதிர்பார்த்து அல்ல, அவன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதற்காக அவனை அன்பு செய்வோம்.

கடவுளை நேசித்தால்தான் நமக்கு நிலைவாழ்வு தருவார் என்பதற்காக அல்ல,

நேசிக்கா விட்டால் நரகம் கிடைக்கும் என்பதற்காக அல்ல,

அவர் நம்மை படைத்தவர் என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.

நிபந்தனையின்றி நம்மை அன்பு செய்யும் அவரை நாமும் நிபந்தனையின்றி அன்பு செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment