(அரு.3:17)
மனித மொழியில் குற்றம் சாட்டப்பட்டவனை விசாரித்து
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும், நிரூபிக்கப்படாவிட்டால் விடுதலையும் வழங்குவதையே தீர்ப்பு என்கிறோம்.
ஆதிமனிதன் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தான்.
கடவுளைப் பொருத்தமட்டில் அவன் செய்தது பாவமா இல்லையா எங்கே விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை.
அவன் செய்தது பாவம் என்று அவருக்கு தெரியும்.
அவர் தீர்ப்பு வழங்குவதாக இருந்திருந்தால் அன்றே அவனுக்குத் தண்டனை வழங்கியிருப்பார்.
தண்டனை வழங்கவில்லை.
இரக்கமுள்ள கடவுள் பாவியைத் தண்டிக்க விரும்பவில்லை.
மாறாக, மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க மீட்பரை அனுப்புவதாக வாக்களித்தார்.
அவரது மகனையே மனிதரை பாவத்திலிருந்து மீட்க உலகிற்கு அனுப்பினார்.
இயேசு உலகிற்கு வந்தது நம்மை பாவத்திலிருந்து மீட்கவே,
நமக்குத் தீர்ப்பு அளிக்க அல்ல.
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
என்று இயேசுவே கூறிவிட்டார்.
ஆகவே இதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை.
ஆனால் இயேசுவை, அதாவது, மீட்பரை ஏற்றுக் கொள்ளாதவன் பாவத்தின் விளைவை ஏற்றுக்கொள்ள நேரிடும்.
பாவத்தின் விளைவு: கடவுளின் உறவை முறித்துக் கொள்ளுதல்.
மீட்பரை ஏற்றுக் கொள்பவன் பாவத்தின் விளைவிலிருந்து விடுதலை பெறுகிறான் நித்திய பேரின்பத்தை அடைகிறான்.
இறுதிவரை மீட்பரை ஏற்றுக் கொள்ளாதவன் நித்திய பேரின்பத்தை இழக்கிறான்.
நித்திய பேரின்பத்தை அடைவது மீட்பின் காரணமாக.
நித்திய பேரின்பத்தை இழப்பது தீர்ப்பின் காரணமாக அல்ல.
தீர்ப்பே அளிக்கப்படுவதில்லை.
அவனேதானே இறையுறவை
முறித்துக் கொள்கிறான்!
"ஒளி உலகத்திற்கு வந்துள்ளது: மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்: ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன."
மீட்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றி இயேசு கூறுகிறார்:
ஒளி உலகத்திற்கு வந்துள்ளது.
அதாவது,
மீட்பர் உலகத்திற்கு வந்துள்ளார்.
மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்:
அதாவது,
அவர்கள் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.
அதாவது,
அவர்கள் பாவ வாழ்க்கையை விடவில்லை.
நீச்சல் தெரியாத ஒருவன் கணற்றுக்குள் குதித்துவிட்டான்.
அவன் மூழ்கும் நிலையில் இருக்கும்போது அவனைக் காப்பாற்ற ஒருவன் உள்ளே குதிக்கிறான்.
காப்பாற்ற வந்தவனை ஏற்றுக் கொள்ளாமல் உதைத்துத் தள்ளிவிட்டான்.
மூழ்கி உயிர் இழக்கிறான்.
அவன் உயிர் இழப்பதற்கு காரணம் யார்?
அவனேதான்.
நாம் பாவம் என்னும் கிணற்றுக்குள் விழுந்து விட்டோம்.
நம்மை பாவத்திலிருந்து மீட்க இயேசு வந்தார்.
அவரை ஏற்றுக் கொள்பவர்கள் மீட்பு அடைவார்கள்.
ஏற்றுக் கொள்ளாதவர்கள் பாவத்தின் விளைவைச் சந்திப்பார்கள்.
மீட்புக்குக் காரணம் இயேசு.
மீட்புப் பெறாமைக்குக் காரணம் இயேசு அல்ல. அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் காரணம்.
அவர் மீட்கவே வந்தார்.
தீர்ப்பிட அல்ல.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என்று டாக்டர் சொன்னார்.
ஒருவன் அவருடைய வார்த்தையை மீறி அதிகமாகச் சாப்பிட்டு விட்டான்.
வயிற்று வலி வந்துவிட்டது.
வலி குணமாக சாப்பிட ஒரு மாத்திரை கொடுத்தார்.
அவன் மாத்திரையைச் சாப்பிடவில்லை.
வயிற்று வலி நீடித்தது.
வயிற்று வலி நீடித்ததற்கான காரணம் நோயாளியா?
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என்று சொன்ன டாக்டரா?
நோயாளிதான்.
இயேசு உலகுக்கு வந்தது பாவிகளை மீட்கவே.
அவர் தரும் மீட்பை ஏற்க வேண்டியவர்கள் நாம்.
நாம் இறந்தவுடன் தனித்தீர்வையும்,
உலக இறுதி நாளில் பொதுத் தீர்வையும் உண்டு என்று விசுவசிக்கிறோம்.
இயேசு தீர்ப்பிட வரவில்லை, அப்படியானால் நாம் விசுவசிப்பது தவறா?
நமது விசுவாசம் சரியே, அதைப் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் சம்பந்தப்பட்ட உண்மைகள் மனித மொழிக்கு அப்பாற்பட்டவை.
அவற்றை நமக்குத் திருச்சபை நமது மொழியில்தான் விளக்குகிறது.
அவற்றை விளக்கப் பொருத்தமான வார்த்தை மனித மொழியில் இல்லாவிட்டால்,
பயன்படுத்தப்படும் வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப்
புரிந்து கொள்ள வேண்டும்.
இறைமகனைப் பற்றி பேசும்போது
"இவர் தந்தையிடமிருந்து ஜெனித்தார்,
தந்தையிடமிருந்து பிறந்தார் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
மனித மொழிப்படி தந்தையிடமிருந்து பிறந்தவர் தந்தைக்கு இளையவராய் இருப்பார்.
ஆனால் இறைமகன் தந்தைக்கு இளையவர் அல்ல.
தந்தையும் நித்தியர்,
மகனும் நித்தியர்.
இறைமகன் தந்தையிடமிருந்து நித்திய காலமாகப் பிறக்கிறார்,
எப்படி தந்தை துவக்கம் இல்லாதவரோ,
அப்படியே மகனும் துவக்கம் இல்லாதவர்.
இதுதான் விசுவாச சத்தியம்.
தனித் தீர்வை, பொதுத் தீர்வை என்ற வார்த்தைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மரணிக்கும் மனிதன் மோட்சத்துக்குப் போக வேண்டுமா,
நரகத்துக்குப் போக வேண்டுமா என்று தீர்மானிப்பது அவனது ஆன்மாவின் நிலைதான்.
ஆன்மா பரிசுத்த நிலையில் இருந்தால் இறந்த வினாடியே இறைவனிடம் சென்று விடும்.
பாவ நிலையில் இருந்தால் நரகத்துக்குச் சென்று விடும்.
பரிசுத்தவான்கள் எங்கே செல்ல வேண்டும்,
பாவமுடையோர் எங்கே செல்ல வேண்டும்
என்பது இறைவன் வகுத்த நியதி.
ஆனால் யார் யார் எங்கே செல்ல வேண்டும் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
யார் யார் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் யார் யார் பாவ நிலையில் இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானிப்பதில்லை.
இதை அவரவர் அவரவருடைய பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மனிதனின் சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடுவதில்லை.
மரணத்தின் போது நடப்பது இறைவன் வகுத்த நியதிப்படி நடப்பதால் நாம் அதைத் 'தீர்வை' என்கிறோம்.
தனித்தீர்வை தனி மனிதனுக்கு நடப்பது போல, பொதுத் தீர்வை மனுக்குலத்திற்கு நடக்கிறது.
பொதுத் தீர்வையில் ஆன்மாவும், சரீரமும் சேர்ந்து அடையவேண்டிய நிலையை அடையும்.
மக்கள் அனைவரும் அடைவதால் இதைப் பொதுத் தீர்வை என்கிறோம்.
அதாவது எல்லோருக்கும் பொதுவான தீர்வை.
தேர்வை எப்படி எழுத வேண்டும் என்று ஆசிரியர் கூறியது போல எழுதினால் வெற்றி உறுதி.
மீட்பர் கூறியபடி நாம் நடந்தால் நமக்கு மீட்பு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment