கடவுள் நம்மிடம் வாழ வேண்டும்.
கடவுள் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
எங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அப்படியானால்
கடவுள் நம்மிடம் வாழ வேண்டும் என்பதன் பொருள் என்ன?
கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள அவரது பண்புகளை நமது வாழ்க்கையாக நாம் மாற்றும்போது
அவர் நம்மிடம், நம்மோடு வாழ்கிறார் என்பது அதன் பொருள்.
நம்மை பார்ப்பவர்கள் நம்மிடம் வாழும் கடவுளைப் பார்க்க வேண்டும்.
கடவுளின் அன்பும், இரக்கமும் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.
சூரியனைப் பார்க்கும் போது நமது கண்ணுக்கு தெரிவது சூரியனா அல்லது அதிலிருந்து வரும் ஒளியா?
நாம் முற்றிலும் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால் நம்மைப் பார்க்கும் மக்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள் நம்மில் வாழும் இயேசுவையே பார்ப்பார்கள்.
நமது ஆசை மக்கள் நம்மை பார்க்க வேண்டும் என்பதாக இருக்க கூடாது, நம்மில் வாழும் இயேசுவையே பார்க்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
நாம் இயேசுவின் அன்பும், இரக்கமும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.
இயேசுவின் அன்பும், இரக்கமும் நிறைந்தவர்களாக இருப்பது அவற்றை நாம் மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல.
அன்பும், இரக்கமும் நம்மிடம் இருக்கின்றன என்றாலே அவற்றை அனுபவிப்பதற்கு
நம்மோடு நம்மைப் போன்ற மக்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் பொருள்.
கடவுள் நம்மோடு பகிர்ந்துகொண்ட அன்பையும் இரக்கத்தையும் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களிடமும் கடவுள் பகிர்ந்துகொண்ட அன்பும் இரக்கமும் இருக்கும்.
நம்மிடம் உள்ள அன்பும் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் உள்ள அன்பும் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும்.
அப்படி எல்லோரது அன்பும் இணையும்போது மக்கள் சமூகமே அன்பு மயமாக மாறிவிடும்.
நம்மிடம் உள்ள இயேசுவின் அன்பைத்தான் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
வேறு வார்த்தைகளில் நாம் இயேசுவையே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இங்கே முக்கியத்துவம் பெறுவது நாமோ, மற்றவர்களோ அல்ல, இயேசுவே.
அதாவது நாம் வாழ்வது நமக்காக அல்ல, இயேசுவுக்காக.
நாம் தவசு காலத்தில் இருக்கிறோம்.
தவ முயற்சிகளை செய்கிறோம்.
யாருக்காக?
எதற்காக என்று கேட்டால் நமது பாவங்களுக்கு பரிகாரமாக என்று கூறலாம்.
ஆனால் யாருக்காக என்று கேட்கும்போது அதற்கு ஒரே பதில் இயேசுவுக்காக என்று மட்டும் இருக்க வேண்டும்.
நாம் செய்யும் பாவங்கள் இயேசுவுககு விரோதமானவை.
அவரது மனதை நோகச் செய்பவை.
ஆகவே நமது தவ முயற்சிகளில் முன்னிலை பெறவேண்டியது இயேசுவே.
"எல்லாம் உமக்காக, இயேசுவின் திவ்ய இருதயமே,
நாங்கள் வாழ்வதும் வாழ்வில் செய்வதும் உமக்காக மட்டுமே.
நாங்கள் நோன்பு இருப்பதும், சுத்த போசனத்தை உண்பதும்,
சிலுவைப் பாதையில் நடப்பதும், தருமம் செய்வதும்
உமக்காகவே, இயேசுவே உமக்காகவே.
எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல.
நீரே மகிமை பெற வேண்டும்."
என்பதுவே நமது செபமாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கூட ஒழுங்கை மீறாமல் இருப்பதற்காக நாம் சரியான நேரத்தில் பள்ளிக்கூடம் செல்கிறோம்.
ஆனால் திருச்சபையில் ஒழுங்கை மீறாமல் இருப்பதற்காக மட்டுமே தவ முயற்சிகள் செய்யக்கூடாது.
இயேசுவுக்காக மட்டுமே செய்ய வேண்டும்.
தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் தர்மம் செய்வதை விட, இயேசுவுக்காகச் செய்வதே சிறந்தது.
எதைச் செய்தாலும் சுய திருப்திக்காக அல்லாமல் இயேசுவுக்காக மட்டுமே செய்வோம்.
அப்படி செய்தால் இயேசுவுக்கு பிரியமானதை மட்டுமே செய்வோம்.
அப்படியே செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment