(அரு. 8:12)
சடப்பொருளாகிய உலகம் அதில் வாழும் உயிரினங்களோடு இயங்கிக் கொண்டிருப்பது சூரிய ஒளியினால். (Sun light)
ஆன்மீக உலகம் இயங்கிக் கொண்டிருப்பது இறை ஒளியினால்.
"நானே உலகின் ஒளி" என்ற இயேசுவின் கூற்றில்,
"மனித உருவில் உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் நானே உங்களைப் படைத்த இறைவன்.
மனு மகனாகிய நானே, இறை மகன். உங்களை ஆன்மீக வாழ்வில் இயக்கிக் கொண்டிருக்கும் ஒளியும் (Son Light) நானே."
என்ற உண்மை அடங்கியிருக்கிறது.
சூரிய ஒளியின்றி உலகில் உயிரினங்கள் எதுவும் வாழ முடியாது.
இறை மகனாகிய ஒளியின்றி உலகில் ஆன்மாக்கள் வாழ முடியாது.
தேவ இஸ்டப்பிரசாதம் (Sanctifying Grace) உள்ள ஆன்மாக்களே ஆன்மீக வாழ்வு உள்ள ஆன்மாக்கள்.
பாவம் இல்லாத ஆன்மாக்கள்தான் தேவ இஸ்டப்பிரசாத உயிருள்ளவை.
பாவங்களை மன்னித்து ஆன்மீக உயிராகிய தேவ இஸ்டப்பிரசாதத்தை அளிப்பவர் இறை மகனாகிய இயேசுவே.
ஆகவே நமது ஆன்மாக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பவர் ஆன்மீக உலகின் ஒளியாகிய இயேசுவே.
சூரிய ஒளி இல்லாவிட்டால் உலகை இருள் சூழ்ந்து விடும். நமது கண்களால் எந்தப் பொருளையும் பார்க்க முடியாது. எந்தப் பொருளையும் பற்றி அறிய முடியாது. உலகில் வாழ முடியாது.
இறை மகனாகிய ஒளி இல்லாவிட்டால் ஆன்மீக உலகை பாவமாகிய இருள் சூழ்ந்து விடும்.
ஆன்மீக வாழ்விற்கான அருள் வரங்கள் எதையும் பெற முடியாது.
ஆன்மீக விஷயங்களை அறியவோ, புரியவோ முடியாது.
ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.
விளைவு, விண்ணகத்திற்குச் செல்ல முடியாது.
நமது பாவங்களை நீக்கி நம்மை பரிசுத்தர்களாக மாற்றவும்,
ஆன்மீக வாழ்வுக்கான அருள் வரங்களை அள்ளித் தரவும்,
ஆன்மீக வாழ்வில் நம்மை வழி நடத்துவதற்காக நற்செய்தியை நமக்கு அறிவிக்கவும்,
நமது ஆன்மாக்கள் இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்து மறுவுலகில்
நித்திய பேரின்ப வாழ்வு வாழவுமே இறைமகன் மனுமகனானார்.
இறையொளி நமது ஆன்மாக்கள் மீது வீசுவதற்காகவே இயேசு தேவ திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினார்.
உரிய முறையில் தேவ திரவிய அனுமானங்களைப் பெறுபவர்கள் இறை ஒளியில் வாழ்ந்து, என்றென்றும் இறைவனோடு ஒன்றிப்பர்.
இறைவனோடு என்றென்றும் ஒன்றித்து வாழ்வதே விண்ணக வாழ்வு.
இயேசுவைப் பின்செல்பவன்,
அதாவது அவர் அறிவித்த நற்செய்தி வழியில் நடப்பவன், இறை ஒளியில் நடப்பான். ஆன்மீக உயிரோடு வாழ்வான்.
இதைத்தான் இயேசு,
"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."
என்கிறார்.
இயேசுவின் சொற்படி நடந்தால் நான் என்ன ஆவோம்?
நாமும் உலகின் ஒளியாக மாறுவோம்.
இதை நான் சொல்லவில்லை, இயேசுவே சொல்லுகிறார்,
"உலகிற்கு ஒளி நீங்கள்."
கிறிஸ்தவன் = கிறிஸ்து அவன்
என்றாலே
"ஒளி அவன்" என்றுதானே பொருள்.
நாமும் இயேசுவைப் போல உலகின் ஒளியாகச் செயல்பட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
உலகின் ஒளியாகிய இயேசு செய்த நற்செய்திப் பணியை நாம் தொடர வேண்டும் என்பதற்காகத்தான், நம்மைப் பார்த்து,
"உலகிற்கு ஒளி நீங்கள்." என்று கூறினார்.
வாயினால் மட்டும் நற்செய்தியை அறிவிப்பது முழுமையான நற்செய்திப் பணி அல்ல.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்
நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கும் பணியே முழுமையான பணி.
இயேசு தனது போதனையை எல்லாம் வாழ்ந்தார்.
ஏழ்மையைப் போதித்த அவர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.
சென்ற இடமெல்லாம் மக்களுக்கு நன்மையையே செய்தார்.
நோயாளிகளைக் குணமாக்கினார்.
பாவிகளை மன்னித்தார்.
உலகின் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கினார்.
நாம் உலகின் ஒளியாக வேண்டுமென்றால் நாமும் இயேசுவைப் போல நற்செய்தியை வாழ வேண்டும்.
நமது வாழ்க்கையே ஒரு நற்செய்திப் போதனையாக இருக்க வேண்டும்.
போகும் இடமெல்லாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
நோயாளிகளை குணமாக்க நம்மால் முடியாவிட்டாலும் அவர்களுக்கு ஆறுதலதாவது கூறவேண்டும்.
நமக்கு விரோதமாக குற்றம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும்.
நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும்.
பிறர் வாழ நம்மையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
இயேசுவைப்போல் நாமும் வாழ்ந்தால் நமது ஒளி மக்களுக்கு இயேசுவைக் காண்பிக்கும்.
மக்கள் இயேசுவை நோக்கி மனம் திரும்புவர்.
அனைவரும் விண்ணக சாம்ராஜ்யத்திற்குள் நுழைவர்.
நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுள் மகிமை பெறுவார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment