யூதாஸ் மோட்சத்துக்குப் போயிருப்பானா? நரகத்துக்குப்
போயிருப்பானா?"
''யூதாஸ் பண ஆசை பிடித்தவன். அவன் இயேசுவுக்கு ஊழியம் செய்தானா? பணத்திற்கு ஊழியம் செய்தானா?"
",அவன் இயேசுவின் சீடன். அவர் அழைத்தபோது அவருக்கு ஊழியம் செய்யத்தான் போயிருப்பான்.
ஆனால் அவனுக்கு பண ஆசை இருந்தது. இயேசுவின் சீடனாக இருந்தாலும் அவன் பணத்துக்காக அவரைக் காட்டிக் கொடுத்தான். ஆகவே அவன்பணத்திற்குதான் ஊழியம் செய்தான்.
பணத்திற்கு மட்டும் ஊழியம் செய்தவன் மோட்சத்திற்குப் போயிருக்க வாய்ப்பு இல்லை,"
"இதைப் பற்றி தாய்த் திருச்சபையே அதிகாரப் பூர்வமான கருத்து எதுவும் கூறவில்லை.
கடவுளுக்கு மட்டும்தான் இது தெரியும்.
நமக்கு ஒன்று மட்டும் தெரியும்.
எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவன் மனம் திரும்ப அவனது வாழ்வின் கடைசி வினாடி வரை
கடவுள் அவனுக்கு நேரம் கொடுக்கிறார்.
A small fraction of one's last second is enough for one to get converted.
கடைசி வினாடியை அவன் பயன் படுத்தினானா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்."
"தாத்தா, எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இயேசு சிலுவையில் தொங்கும் போது,
"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்.23:34)
என்று செபித்தார் அல்லவா?"
", ஆமா."
"அதை உண்மையாகத்தானே செபித்திருப்பார்?"
", நிச்சயமாக. அவர் ஒப்புக்காக எதையும் செய்யமாட்டார்."
"அதுமட்டுமல்ல, தாத்தா. தந்தையும், அவரும் ஒன்று
என்று அவரே கூறியிருக்கிறார்.
அவரே கடவுள்.
அவரது விருப்பம் தனது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுதான்.
ஆகவே யூதாஸ் மனந்திரும்ப போதுமான அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருப்பார்.
அவற்றை அவன் படுத்தி கடைசி வினாடியில் மனம் திரும்பியிருப்பான் என்று நம்புவது தப்பா?"
", நல்ல பையன் இப்படித்தான் எதையும் positive வாக நினைக்க வேண்டும்."
"எனக்கு இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறது.
யூதாஸ் பணத்தை நேசித்தான்.
உண்மை. ஆனால் இயேசுவையும் நேசித்திருப்பான்."
", ஆனால் யாரை அதிகமாக நேசித்தான் என்பதுதான் கேள்வி. பணத்தையா? இயேசுவையா? பணத்துக்காக இயேசுவை காட்டிக் கொடுத்து விட்டானே!"
"ஆனால் எதற்காக காட்டிக் கொடுத்தான்?"
",அவரது விரோதிகள் அவரைத் கொல்லத் தேடினார்கள். அவர்களுக்கு அவரை காட்டிக் கொடுத்தான்."
"இப்போ கேள்வி அதுவல்ல. கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்தானா?
கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்திருந்தால் அவருக்கு மரணத் தீர்வை கிடைத்தவுடன் அவன் சந்தோசப்பட்டிருக்க வேண்டுமே.
அவன் சந்தோசப்பட்டானா?"
"அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு,
மனம் வருந்தி,
முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும்
மூப்பரிடமும் கொண்டுவந்து,
4 "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்.
அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்."
(மத்.27:3-5)
இப்போ சொல்லுங்கள்.
அவன் சந்தோசப்பட்டானா?"
", இல்லை. அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு,
மனம் வருந்தினான்."
''ஆக, அவரைக் கொல்வது அவனது நோக்கமல்ல."
", அப்போ, எது நோக்கமாக இருந்திருக்கும்?"
"பணம் மட்டும் தான்."
",கொல்வது அவனது நோக்கமல்ல என்றால் கொல்ல தேடியவர்களிடம் ஏன் காட்டிக் கொடுத்தான்?"
"கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ஆரம்பத்திலிருந்தே அவருடைய விரோதிகள் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள். கொல்ல முடிந்ததா?
ஒரு முறை அவரது ஊரைச் சேர்ந்தவர்களே
அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.
அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்."
நாம் காட்டிக் கொடுத்தால் நமக்கு பணத்துக்கு பணமும் கிடைக்கும்,
அவரை அவர்களால் கொல்லவும் முடியாது என்று எண்ணியே காட்டிக் கொடுத்திருப்பான்.
அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக அவருக்கு மரணத்தீர்ப்பு இட்டு விட்டார்கள்.
அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தினான்.
அதுமட்டுமல்ல, பணத்தை ஆலயத்தில் எறிந்துவிட்டான்.
அப்போ அவனுக்கு பணத்தின் மீது அதிக பற்று இருந்ததா? இயேசுவின் மீது அதிக பற்று இருந்ததா?"
", அதாவது, அவன் இரண்டு எசமானர்களுக்கு ஊழியம் செய்ய ஆசைப்பட்டான். முடியவில்லை.
அவன் இயேசுவிடம் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்கொலை செய்து கொண்டானே.
அது பெரிய பாவம் அல்லவா.
தற்கொலை செய்து கொண்டால் எப்படி மோட்சத்துக்குப். போக முடியும்?"
"உண்மைதான். போக முடியாது.
ஆனால் கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பாருங்கள்.
இயேசு இரக்கம் உள்ளவர். தன்னைக் காட்டிக் கொடுத்ததற்கு வருந்திதானே அவன் தற்கொலை செய்து கொண்டான்.
அவன் மீது இரங்கி கடைசி நேரத்திலாவது அவன் மனந்திரும்ப
அவனுக்கு அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கலாம் அல்லவா?
கடைசி வினாடியில் அவன் அவற்றை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?
நான் இயேசுவின் இரக்கப் பெருக்கத்தை நினைத்து இதைச் சொல்கிறேன்.
என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.
ஆனால் நல்லதையே நினைப்போமே."
", ஆனால் இன்னொரு பக்கம் இடிக்கிறதே!
மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு!
அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்."
என்று இயேசுவே சொல்லி விட்டாரே.
நீ யூதாசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறாய்."
"தாத்தா, நான் யூதாசுக்கு வக்காலத்து வாங்கவில்லை.
ஆண்டவரது இரக்கத்தை பற்றி பேசுகிறேன்.
வார்த்தைகளுக்கு பொருள் காணவேண்டுமென்றால் பேசுகின்றவர்களுடைய தன்மை தெரிய வேண்டும்.
அம்மா வாயிலிருந்து என்ன வார்த்தை வந்தாலும் அதற்கு. அன்பின் பின்னணியில்தான் பொருள் காண வேண்டும்.
மகனைப் பார்த்து தாய்
'' நீ உருப்பட மாட்டாய் என்று சொன்னால்,"
"உனது நடவடிக்கைகள் சரியில்லை,
தவறுகளைத் திருத்தி உருப்படப் பார்." என்று தான் அர்த்தம், "உன்னால் உருப்பட முடியாது" என்று அர்த்தமல்ல
"மனுமகனைக் காட்டிக் கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு!"
இதிலுள்ள "ஐயோ கேடு" என்ற வார்த்தைகளை வைத்து யூதாஸ் மோட்சத்துக்கு போயிருக்கமாட்டான் என்று தீர்மானிக்கக் கூடாது.
இயேசுவின் அன்பின் பின்னணியில் இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.
இயேசு பரிசேயர்களைப்பற்றியும், மறைநூல் அறிஞர்களைப் பற்றியும், யூதமத தலைவர்களைப் பற்றியும் பேசும்போது "ஐயோ கேடு" என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார்.
அதற்கு, "நீங்கள் தவறான பாதையில் போகின்றீர்கள். உங்களையே திருத்திக் கொள்ளுங்கள்." என்ற அன்பான கண்டிப்பு தான் இது.
அவர்களுக்கும் சேர்த்துதான் இயேசு ரத்தம் சிந்தி தன்னையே பலிக்கினார்.
காட்டிக் கொடுத்தல் பாவத்தின் கனா கனத்தை யூதாசுக்கும், அவனைப் பற்றி வாசிக்கும் நமக்கும் உணர்த்தவே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்.
ஆண்டவர் பாடுகள் படக்கூடாது
என்று இராயப்பர் கூறியபோது
"போ பின்னாலே, சாத்தானே,"
என்று இயேசு கூறினார்.
இராயப்பர் ஒரு சாத்தான் என்ற பொருளிலா கூறினார்?
அவருடைய கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல
என்பதை வலியுறுத்தவே அவ்வாறு கூறினார்.
அதைப் போன்றதே ஐயோ கேடும்."
",அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்று ஏன்
கூறினார்?"
"இயேசு கடவுள். அவர் மனிதர்களுடன் பேசும்போது மனித மொழியில் மனித பேச்சு வழக்கின் படியே பேசினார்.
மிகத் தவறான வாழ்க்கை நடத்தும் மகனைப் பார்த்து,
"ஏண்டா என் வயிற்றில் வந்து பிறந்தாய்." என்று தாய் சொன்னால்
அவள் மகன் பதில் சொல்ல கேள்வியா கேட்கிறாள்?
'அவன் போகிற பாதை மிகவும் தவறானது,
அவன் திருந்தி நல்ல வாழ்வு வாழ வேண்டும்' என்ற பொருளில் தான் அந்த வார்த்தைகளை பேசுகிறாள்.
அது கேள்வியாக இருந்தால் மகன் என்ன பதில் சொல்வான்?
"உங்கள் வயிற்றிலிருந்து நானாக பிறக்கவில்லை. நீங்கள்தான் பெற்றீர்கள்." என்றுதான் சொல்வான்.
யூதாசும் அவனாகப பிறக்கவில்லை. இயேசுதான் அவனைப் படைத்தார்.
அவனது நடவடிக்கையின் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கவே அவ்வாறு கூறினார்.
மொத்தத்தில் யூதாஸின் நடவடிக்கைகளை கண்டு அவர் எந்த அளவுக்கு வருந்தினார் என்பதைச் சுட்டிக்காட்டினார்."
",மொத்தத்தில் உனது முடிவுதான் என்ன?"
"யூதாஸின் பாவம் பெரியதுதான்.
ஆனால் இயேசுவின் இரக்கம் அதைவிட மிக மிகப் பெரியது.
அவர் யூதாசின் மீது அளவு கடந்த இரக்கமாய் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
கடவுளுக்கும், ஒரு ஆன்மாவுக்கும் இடையே உள்ள உறவின் இரகசியத்தை நம்மால் அறிய முடியாது.
ஒருவர் மீது தீர்ப்பு சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை.
நல்லதையே நினைத்தால் அதில் தவறில்லையே.
கடவுள் இரக்கம் மிகுந்தவர். நாம் சாகும்வரை எந்த வினாடியில் மன்னிப்பு கேட்டாலும், நமது பாவம் எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் கடவுள் அதை மன்னிப்பார்.
நாம் இறந்த பின்பு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
வாழும்போது கடவுளின் இரக்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment