விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தியது,
அவளைக் கல்லால் எறிய இயேசுவின் அனுமதியைப் பெறுவதற்காக அல்ல.
இயேசுவின் போதனைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள் மறைநூல் வல்லுநரும், பரிசேயரும்.
அவர்களைப் பொறுத்தமட்டில் மோயீசனின் சட்டங்களை நிறைவேற்ற இயேசுவின் அனுமதி தேவை இல்லை.
அவர்கள் இயேசுவின் பின்னால் சென்றது
அவரது போதனைகளை கேட்டு அதன்படி நடப்பதற்காக அல்ல,
அவரது போதனைகளில் ஏதாவது குற்றம் குறைகளை கண்டு பிடிப்பதற்காகவே.
அவரிடம் குற்றங்களைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்வதே அவர்களது நோக்கம்.
"போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம்.
'
நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.
அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி, அவரைச் சோதிக்க இப்படிக் கேட்டனர்.''
"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்." என்பதுதான் அவரது போதனை என்பது அவர்களுக்குத் தெரியும்.
"அவளை மன்னிப்போம், கல்லால் எறிந்து கொல்லக்கூடாது."
என்று அவர் சொன்னால், அவர் மோயீசனின் சட்டத்தை மீறுகிறார் என்று குற்றம் சாட்டலாம்.
"கல்லால் எறிந்த கொல்லலாம்."
என்று அவர் சொன்னால்,
"அன்பு செய், எதிரிகளை நேசி, தீமை செய்தவருக்கு நன்மை செய், தீர்ப்பிடாதே, மன்னியுங்கள்"
போன்ற அவருடைய அன்பைச் சார்ந்த போதனைகள் எல்லாம் மற்றவர்களுக்குத்தான்,
தான் அனுசரிப்பதற்கு அல்ல."
என்று குற்றம் சொல்லலாம்.
என்ன பதில் சொன்னாலும் இயேசு தங்களிடம் மாட்டும் வகையில் கேள்வியைக் கேட்டார்கள்.
இயேசு கடவுள். இந்த மாதிரி கேள்விகள் வரும் என்று அவருக்கு நித்திய காலமாகவே தெரியும். அதற்கான பதிலும் நித்திய காலமாகவே அவரிடம் இருக்கிறது.
இயேசு இரண்டு பதில்களையும் கூறாமல் , அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு பதிலைச் சொன்னார்.
"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்"
அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள்.
மோயீசன் சட்டத்தை மீறாமலேயே,
பாவியாகிய அந்தப் பெண்ணைத் தண்டனையிலிருந்து காப்பாற்றினார் இயேசு.
அது மட்டுமல்ல,
"உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று பெண்ணிடம் கேட்டார்.
அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என்று கூற,
இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்.
அதாவது அதுவரை அவள் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார்.
அவளும் அதன்பின் அவனது பாவ வாழ்க்கையை முற்றிலும் விட்டு விட்டாள்.
"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."
என்ற அவரது சொல்லை அவர் என்றும் காப்பாற்றுகிறார்.
இயேசுவுக்கு பாவத்தைப் பிடிக்காது. ஆனால் பாவிகளை மிகவும் பிடிக்கும்.
ஒரு பையனுக்கு கொரோனா காய்ச்சல் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.
அவனது பெற்றோர் என்ன செய்வார்கள்?
அவர்களுக்கு உறுதியாக கொரோனாவைப் பிடிக்காது.
ஆனால் கொரோனாவால் கஷ்டப்படும் மகனை மிகவும் பிடிக்கும்.
அவனைக் குணமாக்க, அதாவது,
கொரோனாவிலிருந்து விடுவிக்க மிகவும் முயற்சி எடுத்துக்கொள்வார்கள்.
சுகமாக இருக்கும் மகனுக்கு காண்பிக்கும் அக்கறையை விட சுகம் இல்லாதவனுக்கு அதிக அக்கறையை காண்பிப்பார்கள்.
"உங்களுள் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றில் ஒன்றை இழந்தால் அவன்
தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பாழ்வெளியில் விட்டுவிட்டு,
இழந்த ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டானா?"
(லூக்.15:4)
இந்த ஆயனைப் போலவே இயேசுவும் பாவிகளைத் தேடுகிறார்.
தேடிக் கண்டுபிடித்து அவர்களை பாவம் என்னும் நோயிலிருந்து குணமாக்குகிறார்.
ஆசிரியர்கள் தேர்வுக்காக மாணவர்களைத் தயாரிக்கும்போது
கெட்டிக்கார மாணவர்களை விட மக்குகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
80 மதிப்பெண்கள் பெறுபவர்களை
100 மதிப்பெண்கள் பெற வைப்பதைவிட
0 மதிப்பெண் பெறுபவர்களை
35மதிப்பெண்களாவது பெற வைப்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.
எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் ஆசிரியர்களின் ஆசையாக இருக்கும்.
அதே போல்தான் எல்லோரும் விண்ணகம் வரவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.
பாவிகளை பாவத்திலிருந்து குணமாக்கவே
துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்
பிறப்பும், இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.
துன்பப்படவே முடியாத கடவுள் துன்பப்படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.
கடவுள் மனிதனாகப் பிறந்தது பாவிகளாகிய நமக்காகத்தான்.
மரிய மதலேனாள் என்னும் பாவி, தனது பாவங்களுக்காக மனம் வருந்திய போது அவளது பாவங்களை எல்லாம் மன்னித்து, புனிதையாக மாற்றினார்.
இயேசு மரித்த மூன்றாவது நாள் உயிர்த்த போது முதல் முதலில் தனது அன்னைக்குத்தான் காட்சி கொடுத்தார்.
இது பைபிளில் குறிப்பிடப் படவில்ல.
பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி தனது அப்போஸ்தலர்களுக்குக் காட்சி கொடுக்கு முன்பே மனம் திரும்பிய பாவிக்கு காட்சி கொடுத்தார்.
"வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்."
"இதோ! இயேசு, அவர்களுக்கு எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.
10 இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்."
அப்போஸ்தலர்களுக்கு இயேசு உயிர்த்தது பற்றி அறிவித்ததே மனம் திருப்பிய பாவி.
அப்போஸ்தலர்களுக்கே ஒரு அப்போஸ்தலியாக (An Apostle to
the Apostles) மாறிவிட்டாள்!
"ஓஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!"
இறைவன் நமது மீட்பராகப் பிறக்கக் காரணமான பாவத்தை
"பாக்கியமான பாவமே"
என்று
பாஸ்கா புகழுரையில் நமது தாய்த் திருச்சபையே அழைக்கிறது!
இயேசுவை மீட்பராகப் பெற்றதால் பாவிகளாகிய நாம் பாக்கியவான்கள்.
பாவத்திற்காக மனம் வருந்துவோம்.
பாவமன்னிப்புப் பெறுவோம்.
மீட்பின் பயனை அடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment