Wednesday, April 6, 2022

"கடவுள் மாறாதவர்."

"கடவுள் மாறாதவர்."

"கடவுள் மாறாதவர் என்று சொல்கிறார்களே,
அது உண்மையா, தாத்தா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"கடவுள் மாறாதவர்  என்பது உண்மையானால் நாம் சொல்லும் ஜெபம் எல்லாம் waste ஆகிவிடுமே!

நடப்பதெல்லாம் கடவுளது திட்டப்படிதான் நடக்கிறது என்கிறோம்.

நமக்கு கொரோனா காய்ச்சல் வந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அது கடவுளின் திட்டப்படிதான்.

 கடவுளின் திட்டப்படி வந்திருக்கும் காய்ச்சலை குணமாக்கும்படி கடவுளிடம் வேண்டினால்

 அவரது திட்டத்தை  மாற்றும்படி அவரிடமே வேண்டுவதாகத்தானே அர்த்தம். 

மாறாத கடவுள் தன் திட்டத்தை எப்படி மாற்றுவார்?

அப்படியானால் நமது வேண்டுதல் waste தானே."

", கடவுளைப் பற்றி புரிந்து கொள்ளாததால் நீ இப்படிக் கேட்கிறாய்.

கடவுள் அவருடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அளவில்லாத அன்பு.
அளவில்லாத இரக்கம்.
அளவில்லாத நீதி.
அளவில்லாத வல்லமை.
அளவில்லாத ஞானம்.

அளவில்லாத எந்த பண்பாலும் மாற முடியாது.

நமது அறிவு அளவுள்ளது. ஆகவே நமது அறிவை வளர்க்க முடியும்.

ஆனால்  கடவுளுடைய அறிவு அளவில்லாதது. அது இன்னும் வளர இடமேயில்லை.

அவருடைய ஞானம் அளவில்லாதது. 

அவர் நித்தியர். 

 நடப்பதெல்லாம் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமக்கு இன்று நடப்பது தெரியும், ஆனால் நாளைக்கு நடக்கப்போவது  தெரியாது.

 ஆகவே நாம் எதிர்பாராத ஒன்று நடந்தால் நாம் மாறிவிடுவோம்.

உதாரணத்திற்கு, நாம் படித்ததை வைத்துக் கணக்குப் பார்த்து தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதற்கு ஏற்ற மேற்படிப்புக்குதான் திட்டமிடுவோம்.

ஆனால் எதிர்பாராத விதமாக தேர்வில் மிக இலேசான கேள்விகள் வர, நாம் நன்கு தேர்வு எழுதி, 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று விட்டால் 

நமதுமேற்படிப்பு திட்டத்தையும் மாற்றி விடுவோம்.

ஆனால் கடவுளுக்கு நித்திய காலமும் தெரியும். ஆகவே அவரது திட்டத்தை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. மாற்றவும் மாட்டார்."

"கடவுள் மனிதனாக பிறந்தது மாற்றம் இல்லையா?"

".அவர் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரிக்க வேண்டும் என்பதே அவரது நித்திய கால திட்டம்தான். தனது நித்திய கால திட்டப்படிதான் அவர் மனிதனாகப் பிறந்தார்."

"பாவம் இல்லாமல் படைக்கப்பட்ட மனிதன் பாவம் செய்ததால்தானே அவனை மீட்க அவர் மனிதனாகப் பிறக்க திட்டமிட்டார்.

மனிதன் பாவம் செய்தது காலத்தில் தானே, அப்படியானால் பாவத்திற்கு பரிகாரம் செய்ய திட்டமிட்டதும் காலத்தில் தானே இருக்க வேண்டும்.  அது எப்படி நித்திய கால திட்டமாகும்?"

"நித்தியம்  துவக்கமும் முடிவும் இல்லாதது.

நித்தியராகிய கடவுளும் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.  

நாம் திடீரென்று ஒரு நாள் சினிமாவுக்கு போக ஆசைப்படுவது போல,

கடவுள் திடீரென்று ஒருநாள் மனிதனைப் படைக்க ஆசைப்படவில்லை.

மனிதனைப் படைக்க வேண்டும் என்ற அவருடைய திட்டம் நித்தியமானது.

நித்தியமாக அவர் திட்டம் போடும்போதே மனிதன் பாவம் செய்வான் என்பது அவருக்குத் தெரியும்.

ஆகவே மனிதனுடைய பாவத்துக்கு பரிகாரம் செய்ய மனிதனாக பிறக்க திட்டமிட்டதும் நித்தியமாகத்தான்.

மனிதன் பாவம் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம் அல்ல.

ஆனால் மனிதனை முழுமையான சுதந்திரத்தோடு படைத்து விட்டதால்  

மனிதன் தனது சுதந்திரத்தைப் (Free will) பயன்படுத்தி பாவம் செய்ததால் அவர் அதைத் தடுக்கவில்லை.

மனிதனுடைய சுதந்திரத்தில் அவர் தலையிடுவதில்லை,

ஆனால்  மனிதனைப் பாவத்தில்  விட்டுவிட விரும்பவில்லை.

 மனிதன் பாவம் செய்வான் என்று நித்திய காலத்திலிருந்தே அறிந்த கடவுள்,

அவனை மீட்க மனிதனாகப் பிறக்க வேண்டும் என்று நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டார்."

"மனிதன் பாவம் செய்வான் என்று தெரிந்தும் அவனை ஏன் கடவுள் படைத்தார்?"

",கடவுளுடைய ஞானம் அளவில்லாதது. அளவுள்ள புத்தியுள்ள மனிதனால் கடவுளில் செயல்களை முழுவதும் அறிய முடியாது.

சர்வ வல்லப கடவுளுக்கு ஆலோசனை கூற நமக்கு எந்த அருகதையும் இல்லை.

கடவுளாகவே தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளதைத்  தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது."

"கடவுளுடைய அனுமதி இன்றி எதுவும் நடைபெறாது, சரியா?"

", சரி."

"கடவுள் மாறாதவர். மனிதன் மாறக் கூடியவன். சரியா?"

", சரி."

"மாறக் கூடிய மனிதனைப் படைத்தவரும், பராமரிக்கிறவரும் மாறாத கடவுள். சரியா?"

", சரி."

"நாம் ஞானஸ்நானத்தின்போது பாவமன்னிப்புப் பெற்று பரிசுத்தம் அடைந்தோம். 

பிறகு பாவம் செய்தோம். மாறினோம்.

பிறகு பாவசங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்புப் பெற்றோம். பரிசுத்தம் அடைந்தோம். மாறினோம்.

பிறகு பாவம் செய்தோம். மாறினோம்.

பிறகு பாவசங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்புப் பெற்றோம். பரிசுத்தம் அடைந்தோம். மாறினோம்.

பாவம் செய்யும்போது நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு முறிகிறது. பாவமன்னிப்பு பெறும்போது முறிந்த உறவு சேர்கிறது.

நாம் மாறக்கூடியவர்கள். உறவை பெறுகிறோம், இழக்கிறோம், பெறுகிறோம்.

ஆனால் கடவுள் மாறாதவர். நம்மோடு அவர் கொண்டுள்ள உறவு மாறக் கூடாதல்லவா?"

", அவர் நம்மோடு கொண்டுள்ள உறவில் எந்த மாற்றமும், எப்போதும் ஏற்படாது."

"அப்படியானால், நாம் பரிசுத்த நிலையில் இறந்தால் மோட்ச வாசலைத் திறந்துவிடும் கடவுள்,

நாம் மாறிவிட்டாலும், மோட்ச வாசலைத் திறந்து விடுவார்தானே?

அவர் மாறாதவர் அல்லவா?"

", கடவுள் மோட்ச நிலையை
 தான் படைத்த அனைவருக்காகவும்தான் படைத்தார்.

அதில் மாற்றமில்லை.

ஆனால்  அந்நிலையை நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டியது நாம்.

பரிசுத்தமாக இருக்கும் போது நாம் மோட்ச நிலைக்குத் தயாராக இருக்கிறோம்.

பாவத்தோடு இருக்கும் போது
நாம் மோட்ச நிலைக்குத் தயாராக இல்லை.

தயாராக இருப்பதும்,
தயாராக இல்லாதிருப்பதும் நமது சுதந்தரத்தைப் (Free will) பொறுத்தது.

திருமண சாப்பாடு தயாராக இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை.
 
ஆனால் அதைச் சாப்பிடப் போவதும், போகாதிருப்பதும் நமது மன நிலையைப் பொறுத்தது.

மண வீட்டார் நிலையில் மாற்றம் இல்லை.

மோட்ச நிலையில் வாழ்வதற்காகத்தான் கடவுள்  மிக்கேல் அதிதூதரையும், லூசிபெரையும்(Lucifer) படைத்தார்.

மிக்கேல் அதிதூதர் மோட்ச நிலையைத் தேர்ந்தெடுத்தார்.

லூசிபெர் தேர்ந்தெடுக்கவில்லை.

கடவுள் மாறவில்லை. 
லூசிபெர்தான் மாறினார்.

கடவுள் லூசிபெர் சாத்தானாக மாறிய பின்னும்
அவனை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

நாம் பாவம் செய்யும்போது நாம் தான் கடவுளின் அன்பை, உறவை, வேண்டாம் என்கிறோம்.

கடவுள் நாம் பரிசுத்தமாக இருக்கும்போது நம்மை நேசிப்பது போலவே பாவத்தோடு இருக்கும்போதும் நேசிக்கிறார்.

மோட்ச நிலையைத் தேர்ந்தெடுப்பவர்களை நேசிப்பது போலவே

நரக நிலையைத் தேர்ந்தெடுப்பவர்களையும் நேசிக்கிறார்.


பரிசுத்தர்கள் கடவுளின் அன்பை அனுபவிப்பார்கள்.

பாவிகளால் கடவுளின் அன்பை    அனுபவிக்க முடியாது. 

நாம் பரிசுத்த நிலையில் இருக்கும்போது கடவுளோடு உறவில் இருக்கிறோம்.

பாவம் செய்யும்போதும் கடவுளின் நிலையில் மாற்றம் இல்லை. நாம் தான் உறவை வேண்டாம்  என்கிறோம்."

"இன்னும் என் சந்தேகத்துக்கு விளக்கம் தரவில்லை."

",கடவுள் மாறாதவர்  என்பது உண்மையானால் நாம் சொல்லும் ஜெபம் எல்லாம் waste ஆகிவிடுமே!

என்பதுதானே உன் சந்தேகம்?"

"ஆமா."

", கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர்.

அவரது நித்திய கால திட்டம் அவரது ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.

மனிதன் தனது மனச் சுதந்திரத்தைப் பயன் படுத்தி என்னவெல்லாம் செய்வான் 
 என்று கடவுளுக்கு நித்திய காலமாக தெரியும்.

நம்மை பொறுத்த மட்டில் நமக்கு ஒரு நோய் வருவது நாம் எதிர்பாராதது.

நமக்கு ஐந்து வயது நடக்கும்போது பத்து வயதில் கொரோனா காய்ச்சல் வரும் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்கு அது நித்திய காலமாக தெரியும்.

நோய் வரும்போது அது நீங்க கடவுளிடம் வேண்டுவோமா, வேண்ட மாட்டோமா என்பதும் அவருக்குத் தெரியும்.

நமது  இன்றைய வேண்டுதலுக்குப் பயன் கடவுளிடம் நித்திய காலமாக தயாராக இருக்கும்.

அதாவது நமது வேண்டுதலை முன்னிட்டு நமக்கு சுகம் அளிப்பது என்று கடவுள் நித்திய காலமாகவே இறைவன் திட்டமிட்டிருப்பார்.

நமது செபத்தினால் கடவுள் மாறவில்லை.

நமது செபத்தினால்தான் சுகம் கிடைத்தது, ஆனால் கடவுளின் நித்திய கால திட்டத்தின் விளைவாகத்தான், கடவுள் மாறுவதினால் அல்ல."

"அதாவது நமது இன்றைய செபத்தின் அடிப்படையிலும், 

நமது சுதந்திரத்தை நாம் பயன்படுத்தும் முறையின் அடிப்படையிலும்  

 நம்மை பற்றிய திட்டத்தை இறைவன் நித்திய காலமாக தீட்டுவார். சரியா?"

", சரி. Suppose நாம் நோய் சுகமாக வேண்டாமல் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் அதுவும் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும். நமது  நோயை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நித்திய காலமாக ஏற்றுக் கொள்வார்."

"ஒருவன் தன் வாழ்நாளை எல்லாம் பாவத்தில் செலவழித்துவிட்டு, சாகப் போகும் நேரத்தில் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்டால்?"

", அதற்கான மன்னிப்பும் நித்திய காலமாக தயாராக இருக்கும்."

"ஆக, நமது செபம் எந்த சூழ் நிலையிலும் waste ஆகாது."

", ஆகவே, செபிப்போம்,
இடைவிடாது செபிப்போம்.
செபம் பலன் தரும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment