Monday, April 25, 2022

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."(மாற்கு.16:16)

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்கு.16:16)

"தாத்தா, இயேசு 'உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,'

என்று கூறியிருக்கிறார்.

அப்படியானால் நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியை விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்றால் நாம் மீட்பு பெறுவோம் என்றுதானே அர்த்தம்."

",ஆமா, அதிலென்ன சந்தேகம்?"

"எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சிலர் சந்தேகம் படுவதுபோல் தெரிகிறது. 

அவர்கள் விசுவசித்தால் மட்டும் போதாது, நற்செயல்கள் புரிய வேண்டும் என்கிறார்களே, ஏன்?"

",ஒரு தந்தையிடம் "உங்கள் பையனை இந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். 

அவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவது உறுதி."

என்று சொன்னேன்.

அவரும் நான் சொன்னபடி
 சேர்த்துவிட்டார்.

மறுநாள் அவர் என்னிடம் வந்து,

"நீங்கள் சொன்னபடி சேர்த்துவிட்டேன், ஆனால் ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் மட்டும் போதாது நன்கு படிக்க வேண்டும் என்று சொல்கிறாராம். 

அப்போ யார் சொல்வது உண்மை?"
என்று கேட்டார்."

"அவருக்கு மூளை இல்லை என்று அர்த்தம். பள்ளிக்கூடத்தில் சேர்வதே படிப்பதற்காக தானே. படிக்காமல் எப்படி தேர்வில் வெற்றி பெற முடியும்?"

",அப்போ உனக்கும் மூளை இல்லை என்றுதான் அர்த்தம்."

"ஏன், தாத்தா?"

",நற்செய்தி இறைவனின் வாக்கு. 

நற்செய்தியை விசுவசிக்கும் போது இறைவனை விசுவசிக்கிறோம்.

இறைவனை ஏற்றுக் கொண்டு அவருக்காக நமது வாழ்வை முற்றிலும் அர்ப்பணிப்பது தான் உண்மையான விசுவாசம்..

விசுவசிப்பதே வாழ்வதற்காகத்தான்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும்தான் நம்மை வாழ வைக்கின்றன.

சிந்தனையிலும், சொல்லிலும்,
 செயலிலும் நமது வாழ்வை முற்றிலுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் உண்மையான விசுவாசம்.

'இந்த மருந்தை சாப்பிடுங்கள் நோய் குணமாகிவிடும்' என்று மருத்துவர் கூறும்போது,

அவரிடம் 'நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறினால் மட்டும் போதாது.

அவர் சொன்ன மருந்தைச் சாப்பிட வேண்டும்.

அப்போதுதான் நோய் குணமாகும்.

அதேபோல இறைவனது நற்செய்தியை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும்.

நற்செய்தியைச் செயல்படுத்த வேண்டும்.

நற்செய்தியின் செயல் வடிவம்தான் நற்செயல்.

'உனக்கு தீமை செய்பவர்களுக்கு நீ நன்மை செய்.'

இது நற்செய்தி.

அதை நாம் செயல்படுத்துவது நற்செயல்.

நாம் நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் 

அதை   ஏற்றுக்கொண்டதனால் நமக்கு என்ன பயன்?

நாம் விசுவசிப்பதற்கு உயிர் கொடுப்பது நமது செயல்.

 செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்.

உயிரில்லாத மனிதனை என்ன சொல்வோம்?

செத்த மனிதன் என்று தானே!

ஞானஸ்நானம் பெறுவது கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கே.

கிறிஸ்தவர்களாக வாழாமல் அஞ்ஞானிகளாக வாழ்ந்தால். நாம் ஞானஸ்நானம் பெற்றும் பயனில்லை.

' நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானை நேசி'

என்பது நற்செய்தி.

நாம் நம்மை நேசிப்பதால் தான் வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்.

வேளாவேளைக்கு சாப்பிட எதுவும் கிடைக்காத நமது அயலானுக்கு சாப்பாடு கொடுத்து உதவாவிட்டால் நாம்

 நம்மை நேசிப்பது போல அயலானை நேசிக்கவில்லை.

உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு கொடுப்பது ஒரு நற்செயல்.

இதை நாம் செய்யாவிட்டால் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவரை மன்னித்து விட்டு தான்,

இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது நற்செய்தி.

நாம் பிறரை மன்னிக்காமல் நமக்கு மட்டும் இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் எப்படி மன்னிப்பு கிடைக்கும்?"

''நாம் விசுவசிக்கும் நற்செய்தியை பயன்படுத்தாவிட்டால் 

நாம் விசுவசித்தும் பயனில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?"

", அப்படியேதான்.

நாம் கடவுளை விசுவசித்தால்,
(If we have faith in God) அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

அவரது சொல்லை செயல்படுத்தும்போது நமக்கு எந்த தீங்கும் வராது என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

"நான் நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."

இவை நல்லவர்களை நோக்கி இயேசு இறுதி நாளில் கூறப்போகும் வார்த்தைகள்.

ஒருவன் கொரோனா நோய் வாய்ப்பட்டிருந்தால் நமது விசுவாசத்தின்படி அவனில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நாம் இயேசுவைப் பார்க்கப் போகாவிட்டால்?"

''நமது விசுவாசத்தில் உயிர் இல்லை."

",நமது விசுவாசத்தில் உயிர் இருக்கிறதா என்பதை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து விட்டால்

 நமது உயிரையும் பணயம் வைத்து தான் அவனை காப்பாற்ற உள்ளே குதிக்கிறோம்.

நமது சொந்த மகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காணும்போது நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.
 
இதற்குப் பெயர்தான் தன்னல மற்ற அன்பு.

நமது அன்பின் தன்னலமற்ற தன்மை நமது அன்பின் ஆழத்தைப் பொறுத்தது.

தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று அன்னைத் தெரெசாவுக்குத் தெரியும்.

ஆனால் அவள் தெருவில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தொழுநோயாளிகளை தன் கைகளால் தூக்கி,

 இல்லத்திற்கு எடுத்துச் சென்று,

அவர்களது புண்களைத் தன் கைகளாயே கழுவி மருந்து போட்டாள்.

புனித தமியான் (Saint Damien of Molokai), தொழுநோயாளிகள் மத்தியில், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து, தொழுநோயிலேயே இறந்தார்.

அது தான் தன்னலமற்ற அன்பு,

இயேசுவுக்குப் பிடித்தமான அன்பு.

தன்னலமற்ற அன்பு உடையோர்

பாம்புகளைக் கூட கையால் பிடிப்பர்,
மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக.

அவர்கள் பிணியாளிகள் மேல் கைகளை வைத்தால் நோய் குணமாகும்."

"புனிதர்கள் செய்கின்ற புதுமைகள் எல்லாம் அவர்கள் உலகில் வாழும்போது கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகத்தான் என்கிறீர்கள்."

", சந்தேகம் இல்லாமல்.

மோட்சத்தில் நமக்கு விசுவாசம் இருக்காது.

  உலகில் வாழும் போது விசுவசித்ததையெல்லாம்  
நேரடியாக பார்த்து அனுபவிிப்போம்.

உலகில் இருக்கும்போது நாம் கொண்டிருந்த மூன்று 
தேவசம்பந்தமான புண்ணியங்களில்

மோட்சத்தில் இருப்பது அன்பு மட்டுமே.

அன்புக்கு முடிவே கிடையாது.

இவ்வுலகில் விசுவசிப்போம், நம்புவோம், நேசிப்போம்.

மறுவுலகில் நேசிப்போம், நேசித்துக் கொண்டேயிருப்போம்."

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment