Thursday, April 28, 2022

"என் நுகம் இனிது, என் சுமை எளிது." (மத்.11:30)

"என் நுகம் இனிது, என் சுமை எளிது." (மத்.11:30)

 ஆண்டவரது வாயிலிருந்து வந்த நுகம் என்ற வார்த்தை என்னை எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய பையன் பருவ அனுபவங்களுக்கு அழைத்துச்
 சென்றுவிட்டது.

நுகம் என்பது மாட்டு வண்டியின் முன்பகுதியில் மாடுகளைப் பூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் 
நுகக்காலைக் குறிக்கும்.

நாங்கள் அதை ஸ்டைலாக 'நோக்கால்' என்போம்.

மாட்டு வண்டியில் பாரத்தை ஏற்றிவிட்டு,

(பாரம் ஆட்களாகவும் இருக்கலாம், பொருட்களாகவும் இருக்கலாம்)

நுகக்காலின் இரு புறமும், நோக்கால் குச்சியின் உதவியோடு மாடுகளைப் பூட்டி,

இருப்புச் சட்டத்தில் இருந்து கொண்டு,

ஓட்டுநர் வண்டியை ஓட்டுவான்.

மாடுகள் பாரவண்டியை இழுத்துக் கொண்டு போகும். 

வண்டியில் எவ்வளவு பாரம் ஏற்றினாலும் மாடுகள் இழுத்துச் செல்லும்.

ஆனாலும் இழுக்க எளிதாக இருக்க வேண்டுமென்றால்

பாரம் வண்டியின் அச்சுக்குப் முன்னும், பின்னும் சமமாக அமைந்திருக்க வேண்டும்.

அச்சுக்கு முன்னால் அதிகமாக இருந்தால் பாரம் மாட்டின் கழுத்தை கீழ் நோக்கி அமுக்கும், அதாவது பாரம் அதிகமாக இருக்கும்.

அச்சுக்குப் பின்னால் அதிகமாக இருந்தால் நோக்கால் குச்சியிலுள்ள கயிறு மாட்டின் கழுத்தை மேல் நோக்கி இழுக்கும்.

மாடுகளால் நடக்க முடியாது.

பாரம் சமமாக இருந்தால் நுகக்கால் இருப்பதே மாட்டுக்குத் தெரியாது.

பாரத்தின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் மாடுகள் எளிதாக இழுத்துச் செல்லும்.

இயேசு தன்னையே ஒரு மாட்டு வண்டிக்கு ஒப்பிடுகிறார்.

'உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.''

வண்டியில் சுமை இருக்கும்.

வண்டியின் (இயேசுவின்) நுகத்தை நமது கழுத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவாகிய வண்டியின் நுகத்தை நாம் ஏற்றுக் கொண்டால், 

சுமை இழுப்பதற்கு எளிதாக இருக்கும்.

" என் நுகம் இனிது, என் சுமை எளிது.

என்னுடைய நுகக்கால் உங்களுடைய கழுத்தில் பாரமாக இருக்காது, இனிமையாக இருக்கும்.

என்னுடைய நுகக்காலை உங்கள் கழுத்தில் ஏற்றுக் கொண்டால், எனது சுமை இழுக்க இலேசாக இருக்கும்."

நாம் உலகில் சுமக்கும் சுமைகள் இரண்டு வகை.

1. லௌகீக சுமைகள். உலக வாழ்க்கையைச் சார்ந்த கஷ்டங்கள், கவலைகள், நோய் நொடிகள், வலிகள், எதிர்ப்புகள், இயலாமைகள் போன்றவை.

இவற்றைச் சுமப்பது கடினம் தான். அளவு அதிகரித்தால் அதிக கடினமாகிவிடும்.

2. ஆன்மீகச் சுமை. இயேசுவுக்காகச் சுமக்கும் சிலுவைகள். இவற்றின் அளவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் 
இயேசுவுக்காகச் சுமக்கும்போது எளிதாகி விடுகின்றன.

சுமக்க கடினமான முதல் வகை சுமைகளை இரண்டாம் வகை சுமைகளாக மாற்றிவிட்டால் சுமப்பது எளிதாகிவிடும்.

நமக்காக சுமப்பவற்றை, இயேசுவுக்காக சுமந்தால்

 சுமை சிலுவையாக மாறிவிடும்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்"

என்று ஆண்டவர் சொல்லும்போது 

"சுமக்க கஷ்டமான லௌகீக சுமைகளை சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்." என்று கூறுகிறார்.

வந்து என்ன செய்ய வேண்டும்?

அவர் முன்னால் நமது சுமைகளை இறக்கி வைத்து விட வேண்டும்.

அவர் தன்னையே சுமை சுமந்து செல்லும் ஒரு பார வண்டிக்கு ஒப்பிட்டு விட்டார்.

நமது சுமைகளை அவர்மேல் ஏற்றுக்கொள்வார்.

அவரது நுகத்தடியை 
நமது கழுத்தில் ஏற்றுவார்.

அவரது நுகம் மிக இனிமையாக இருக்கும். 

அவர் சாந்தமும் மனத் தாழ்ச்சியும் உள்ளவர்.

அவை நமது சுமையை அவர் மேல் சமமாக (Balanced) வைத்திருக்கும்.

நாம் இறக்கிவைத்த சுமை அவர்மேல் ஏறும்போது சிலுவையாக மாறி விடும்.

இப்போது நுகத்தில் மாட்டப் பட்ட நாம் இழுக்க வேண்டியது

இயேசுவை, அதாவது, சிலுவையை.

ஆன்மீகத்தில் இயேசு என்றால் அன்பு.

சிலுவை என்றாலும் அன்பு தான்.

இப்போது நாம் இழுக்க வேண்டியது,

அதாவது சுமக்க வேண்டியது அன்பை.

அன்பைச் சுமப்பது கடினமானது அல்ல,

இனிமையானது.

"என் நுகம் இனிது."

உலக வாழ்வில் நம்மால் தூங்காமல் இருக்க முடியாது.

ஆனால் நாம் நேசிக்கும் மனைவிக்குச் சுகமில்லாதிருந்தால் நாட்கணக்காக அவளுக்காகத் தூங்காமல் இருக்கிறோமே!

கடமைக்காகத் தூங்காமல் இருப்பது கடினம்.

ஆனால் அன்புக்காகத் தூங்காமல் இருப்பது இனிது.


அதேபோல்,

வேறு வழியில்லாமல் நாம் படும் கஷ்டங்களைத் தாங்குவது கடினம்.

ஆனால் இயேசுவுக்காகத் தாங்குவது எளிது.

இயேசுவையே தாங்குவது மிக மிக எளிது.

என்னவிதமான கஷ்டங்களாக இருந்தாலும், 

காணிக்கை கொடுப்பது போல, 

இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து விட வேண்டும்.

"ஆண்டவரே, நான் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னுடைய நோயை,

 என்னுடையவும், உலகத்தினுடையவும் பாவங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்."
என்று செபிக்க வேண்டும்.

ஒப்புக்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது. இயேசு மீது நாம் கொண்டுள்ள உண்மையான அன்போடு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அவரும் ஏற்றுக் கொள்வார்.

அந்த நொடியிலிருந்து

 இயேசுவையும், நம்மையும் இணைக்கும் அன்பின் காரணமாக

 நமது நோய் இயேசு சுமந்த 
சிலுவையாக மாறிவிடும்.

அதன்பின் நாம் சுமக்கப் போவது இயேசுவையே.

நமது அன்பு உண்மையாக இருந்தால், நாம் சுமக்கும் சிலுவை மிக எளிதாகவும், இனிதாகவும் இருக்கும்.

இந்தக் காரணத்திற்காகத்தான் புனிதர்கள் துன்பங்களை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள்.

நமது நல்ல நடத்தையினால் நாம் இயேசுவைப்போல் மாறிவிட்டால்,

நமது துன்பங்களும் அப்படியே மாறிவிடும்.

துன்பங்களை சிலுவையாக மாற்றுவோம்.

சிலுவை நம்மைப் புனிதர்களாக மாற்றும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment