Thursday, April 14, 2022

"என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?(மத்.26:40)

"என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
(மத்.26:40)

இயேசு எந்த பணிக்காக உலகிற்கு வந்தாரோ அதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

வியாழக்கிழமை இரவு உணவு முடிந்தவுடன் தனது சீடர்களுடன் கெத்சமனி தோட்டத்திற்கு வருகிறார்.

முன்பெல்லாம் அவருடைய விரோதிகள் அவரைப் பிடிக்க வலை வீசிக் கொண்டிருந்தபோது அவர்கள் கையில் அவர் அகப்படவேயில்லை.

ஏனெனில் அதற்காக அவர் நித்திய காலமாய் குறித்து வைத்திருந்த நேரம் வரவில்லை.

இப்போது அவர் குறித்து வைத்திருந்த நேரம் வந்து விட்டது.

யூதாஸ் அவர்களுடைய விரோதிகளுடன் கெத்சேமனி தோட்டத்திற்கு வருவான் என்று தெரிந்திருந்தும்,

தானே தன்னை ஒப்படைப்பதற்காக மற்ற சீடர்களுடன் அங்கே வருகின்றார்.

மறுநாள் அனுபவிக்கப் போகும் பாடுகளை நினைத்து அவருடைய மனது பயத்தினால் நடுங்க,

ஆறுதல் பெறுவதற்காக தந்தையிடம் பேசுவதற்காக, 

எட்டு சீடர்களை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு,

இராயப்பர், அருளப்பர், யாகப்பருடன் கொஞ்சம் தள்ளிப் போகிறார்.


 அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. 

இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்று கூறிவிட்டு,

கொஞ்சம் தள்ளிப் போய், இரத்த வியர்வையுடன் தந்தையுடன் செபிக்கிறார்.

, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்துவிட்டு,

திரும்பி வந்து பார்க்கும்போது மூவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தாபோர் மலையில் இயேசு மறுரூபம் ஆகியபோது தூங்கியது போலவே இங்கேயும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிசயப் பிறவிகள்!

இயேசு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
என்று கேட்கிறார்.

இயேசுவின் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கும் போது அவர்களுக்கு எப்படித்தான் தூக்கம் வந்ததோ!

இன்று நம்மிடமும் இயேசு அதே கேள்வியைக் கேட்கிறார்.

"ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா?"

அவர் தன்னை முழுவதும் நமக்குத் தந்திருக்கிறார்.

24 மணி நேரமும் நம் நினைவோடு இருக்கும் அவருக்காக நாம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கக் கூடாதா?

எததுக்கெல்லாமோ நேரத்தை 
ஒதுக்குகிறோம்.

Walking போக நேரம் ஒதுக்குகிறோம்,

Gym க்குப் போக நேரம் ஒதுக்குகிறோம்,

குறித்த நேரத்தில் tea சாப்பிடுவோம்,

தூங்குவதற்கு நேரம் ஒதுக்குகிறோம்,

இப்படி நேரம் ஒதுக்குகிற காரியங்களுக்கு list போட்டால் பக்கம் பக்கமாய் வரும்.

ஆனால் இன்று குடும்ப செபம் சொன்னீர்களா என்று கேட்டால்

"இன்று வேலை ரொம்ப tight, செபத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை," என்போம்.

மனம் வைத்தால் இடம் உண்டு.

நம்மைப் பார்த்து ஆண்டவர் கேட்கிறார்,

"எனக்காக ஒரு மணி நேரம் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?" என்று.

அவருக்கு என்ன பதில் சொல்வோம்?

நமக்கு நித்திய காலம் மோட்சத்தில் இடம் கிடைக்க வேண்டுமென்றால்,

இறைவனுக்கு நாம் தினமும் கொஞ்ச நேரமாவது நமது நினைவில் இடம் கொடுக்க வேண்டும்.

முறைப்படிக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அவருக்கு ஒதுக்க வேண்டும்.

உண்மையில் அது மிக எளிது.
ஒரு குழந்தை தன் தாயின் அருகில் இருந்து மணிக்கணக்காய் விளையாடுவதுபோல,

நாமும் நமது விண்ணகத் தந்தையின் முன்னால் இருந்து கொண்டு வாழ்ந்தால்,

அதாவது அவருடைய சந்நிதானத்தில் வாழ்ந்தால்,

அவரோடு பேச நேரம் ஒதுக்கி விட்டுதான் மற்ற வேலை என்று தீர்மானிப்போம்.

அதைவிட எளிய வழி ஒன்றும் இருக்கிறது.

நித்தியரான கடவுள் நமக்காக பாடுகள் பட நேரம் ஒதுக்கியிருப்பதை நினைப்போம்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது அவரது பாடுகளைத் தியானிப்போம்.

செபமாலையின் துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்போம்.

விழித்திருந்து செபிக்க தினமும் 24 மணியையும் ஒதுக்கிவிட தயாராகி விடுவோம்.

இயேசுவோடு நாமும் விழித்திருந்து செபிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment