Wednesday, April 20, 2022

"இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்."(லூக்.24:36)

"இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்."
(லூக்.24:36)

 "தாத்தா, இயேசு பிறந்த அன்று வானதூதர்கள் "பூமியில் நன் மனதோற்கு சமாதானம்" என்று வாழ்த்தினார்கள்.

இயேசு தன் சீடர்களை நோக்கி,

"உங்களுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துகிறார். 

இதிலிருந்து என்ன தெரிகிறது?"

", தன்னுடைய சீடர்கள் நல்ல மனது உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்று தெரிகிறது.

நல்ல மனதையும் சமாதானத்தையும் பிரிக்க முடியாது.

நல்ல மனது உள்ளவர்கள் தங்களை படைத்த இறைவனோடும், 

தங்களோடு வாழ்கின்ற மற்ற மனிதர்களோடும் சமாதான உறவில்தான் இருப்பார்கள்.

தன்னுடைய சீடர்கள் நல்ல மனதுடனும், சமாதான உறவுடனும் வாழ வேண்டும் என்று இயேசு வாழ்த்துகிறார்."

"ஒருவன் நல்ல மனதுடன் இருக்கின்றான். ஆனால் அவன் உறவு கொண்டாட அவனோடு யாரும் இல்லை. அவன் மனதில் சமாதானம் இருக்குமா?"

", நீ ஆணா? பெண்ணா?"

"ஆண்."

", நான் பெண்ணாக இருந்தால் என்ற நிபந்தனையுடன் கேள்வி கேட்கக் கூடாது. அதற்கான பதில் waste. ஏனெனில் அது உனக்கு பொருந்தப் போவதில்லை.

'உறவு கொண்டாட அவனோடு யாரும் இல்லை என்றால்' என்ற 
நிபந்தனை அடிப்படையில் கேள்வி கேட்கக் கூடாது.

ஏனெனில் யாராலும் தனியாக இருக்க முடியாது. கடவுள் அவனோடு இல்லாவிட்டால் அவனால் வாழவே முடியாது.

 நாம் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 கடவுள் எங்கும் இல்லாவிட்டால் நாம் என்று சொல்ல நாமே இருக்க மாட்டோம்.

அதுமட்டுமல்ல மனிதன் ஒரு சமூக பிராணி. குறைந்த பட்சம் அப்பா, அம்மா இருந்துதான் ஆகவேண்டும்.

அவர்கள் இறந்துவிட்டாலும் "நான் அப்பா, அம்மா இல்லாமல் பிறந்தேன்" என்று ஒருவன் கூற முடியாது.

ஆகவே உனது கேள்வியே தவறு.

கேள்வியை மாற்றி கேள்."

"சரி. நல்ல மனது உள்ளவனிடம் சமாதானம் இருந்துதான் ஆக வேண்டுமா?"

",இருந்துதான் ஆக வேண்டும். அவன் அவனில் வாழும் கடவுளோடும், அவனோடு வாழும் அயலானோடும் நல்ல உறவில் தான் இருப்பான்.

நல்ல மனது இல்லாதவனிடம் சமாதானம் இருக்க முடியாது.

இன்று மக்களிடையே நல்ல உறவை கெடுக்கும் பிரச்சனைகள் எழுவதற்குக் காரணமே அவர்களிடம் நல்ல மனது இல்லை என்பதுதான்."

" நல்ல மனது என்றால்?"

",பிறருக்கு நல்லதையே நினைக்கும் மனது, அதாவது, பிறர்மேல் உண்மையான அன்பு உள்ள மனது.

யார் யாரோடு சமாதான உறவில் இருக்கிறோமோ அவர்களுக்கு நல்லதுதான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

யாருக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்தாலும் அதுவும் நல்ல மனதுதான்."

"எதுவுமே நினைக்காவிட்டால்?"

", நினைக்கிற மனதைப் பற்றிதான் பேசுகிறேன். 

நல்லதையே நினைத்தால் நல்ல மனது, தீங்கு நினைத்தால் கெட்ட மனது.

நினைக்காத மனதை பற்றி பேசுவது இல்லாத ஆளைப் பற்றி பேசுவதற்குச் சமம்." 

"சமாதான உறவு கெட்டுவிட்டால் அதை நல்ல உறவாக மாற்றுவது எப்படி?"

", நாம் பாவம் இல்லாமல் இருக்கும்போது இறைவனோடு சமாதான உறவில் இருக்கின்றோம்.

பாவம் செய்யும்போது இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்துக் கொள்கிறோம்.

கடவுள் மாறாதவர்.

நாம் பாவம் செய்யும் போதும் கடவுள் நமக்கு நல்லதையே நினைக்கின்றார்.

நம்மீது அவருக்குள்ள உறவை ஒரு போதும் முறிக்க மாட்டார்.

நாமாகவே முறித்துக்கொண்ட உறவை நாம் திரும்பவும் பெற்றுக்கொள்ள நாம் செய்த பாவத்திற்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதற்காகத்தான் பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.

நாம் மன்னிப்பு கேட்க வருவதற்காக,

ஊதாரி மகன் உவமையில் தந்தை காத்துக் கொண்டு இருந்தது போல,

இறைவனும் நமது வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

மன்னிப்பு கேட்டு இறைவனிடம் வந்த வினாடியே இறைவனோடு நமக்கு இருந்த நல்ல உறவு புதுப்பிக்கப்படும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்,

கடவுள் நம்மீது கொண்டுள்ள உறவை எந்த சூழ்நிலையிலும் முறித்துக் கொள்ள மாட்டார்.

யாராவது ஒருவன் தனக்கு இறைவனோடு உள்ள உறவை முறித்துக்கொண்டு நரக நிலைக்கு சென்று விட்டாலும்,

இறைவனது உறவு, அன்பு, தொடரும்.

ஆனால் நரக நிலையில் உள்ளவர்கள் மன்னிப்பு கேட்க முடியாது.

ஆகவே உறவை முறித்துக்கொண்டு சென்றவர்கள் உலகில் வாழும்போதே திரும்பி வந்து விட வேண்டும்."

"இரண்டு நண்பர்களுக்கு இடையே உள்ள சமாதான உறவு முறிந்து விட்டால் எப்படி சேர்ப்பது?"

",இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டியதுதான்.

உறவு முறிய காரணமாக இருந்தவர் முதலில் மன்னிப்பு கேட்பதுதான் முறை.

மனிதன் குறைபாடுகள் உள்ளவன். ஆகவே உறவு முறிய இருவருமே காரணமாக இருக்கலாம்.

ஆகவே ஒருவரை ஒருவர் மன்னிப்பது தான் சிறந்த நடைமுறை."

"திருப்பலியின் போது ஒருவருக்கொருவர் சமாதான வாழ்த்து கூறுகிறோம்..."

",ஒருவருக்கொருவர் கூறுகிறோமா?

ஒருவரைப் பார்த்து ஒருவர் 
கூறுகிறோமா?

என்பதுதான் தெரியவில்லை.

சிலர் இரண்டு பக்கமும் பார்த்து கூறுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுவர் அருகே இருப்பவர்கள் சுவரைப் பார்த்தும் கூறுவார்கள்!

ஒருவரிடம் சமாதானம் கூறும்போது அவர் நல்ல மனது உள்ளவராகவும், எல்லோரோடும் சமாதான உறவில் இருக்கும்படியாகவும் வாழ்த்துகிறோம்.

Facebookல் like போடுவதுபோல் சிந்திக்காமல் சமாதானம் சொல்லக் கூடாது.

Facebookல் ஒருவரது மரணச் செய்தி வெளியாகியிருக்கும் அதற்கு ஆயிரம் பேர் like போட்டிருப்பார்கள்.

ஒருவரிடம் போய்,
"என்னுடைய அப்பா காலமாகிவிட்டார்" என்று சொன்னால்

அதற்கு அவர்

 "சந்தோஷம்" என்று பதில் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்!

 Facebookல் செய்தி 
போட்டவருக்கும் அப்படி இருக்க வேண்டும்."

"நாம் ஜெபமாலை சொல்லும் போது மங்கள வார்த்தை செபத்தில் பாதியை விழுங்கி விடுகிறோமே!"

",கர்த்தர் கற்பித்த செபத்தில், 

'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.'

என்ற மன்றாட்டை உணர்வுபூர்வமாக நாம் சொன்னால்  

நம்மிடையே பரிபூரண சமாதான வாழ்வு நிலவும்.

நாம் செபிக்கிறபடியே,

மன்னிப்போம்,
மன்னிக்கப்படுவோம்.

எல்லோருக்கும் சமாதானம்.

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment