காணிக்கை என்று சொன்னவுடனே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கோயில் உண்டியல்.
கோயில் இறைவன் வாழும் இல்லம். ஆகவே கோயில் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கக்காக உண்டியலில் போட்டாலும், சுவாமியாரிடம் கொடுத்தாலும் அது காணிக்கைதான்.
ஆனால் அது மட்டும் காணிக்கை அல்ல.
கோயிலில் நாம் இறைவழிபாடு செய்வதாலும், திவ்ய நற்கருணை வடிவில் இயேசு கோயிலில் வாழ்வதாலும் கோயில் இறைவன் வாழும் இல்லம்தான்.
கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பின் கடமை.
ஆனாலும் கோயில் மட்டும் இறைவன் இல்லம் அல்ல.
இறைவன் எங்கும் இருக்கிறார்.
நாம் வாழும் பிரபஞ்சமே இறைவன் வாழும் இல்லம்தான்.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்கள் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார்.
நல்லவர், கெட்டவர் என்ற வேறுபாடு இன்றி அனைவர் உள்ளத்திலும் தங்கி அனைவரையும் பராமரித்து வருகிறார்.
ஆகவே எல்லா மனிதர்களும் இறைவன் வாழும் இல்லங்கள் தான்.
அதனால் தான் கடவுள் நாம் அவரை நேசிப்பது போலவே அவர் வாழும் அனைத்து மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
நாம் அவருக்கு சேவை செய்வதுபோல அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்றும் கட்டளை கொடுத்திருக்கிறார்.
நமது அயலானுக்கு நாம் செய்யும் சேவையும் இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கைதான்.
நமது அயலானுக்கு நாம் செய்யும் சேவையை அவனுள் வாழும் இறைவனுடைய மகிமைக்காகச் செய்ய வேண்டும்.
நமது திருப்திக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் செய்வது சேவையே அல்ல.
தேவைப் படுகின்றவர்களுக்கு கொடுத்து உதவுவதே உண்மையான உதவி.
உண்ண உணவின்றி இருப்பவர்கள்,
உடுக்க உடையின்றி இருப்பவர்கள்,
இருக்க இடமின்றி இருப்பவர்கள்,
உபசரித்துப் பேச நட்பு இன்றி
இருப்பவர்கள்,
நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாது இருப்பவர்கள்,
கஷ்ட நேரத்தில் ஆறுதல் கூற ஆளில்லாது இருப்பவர்கள்
போன்றோருக்கு அவர்கள் இறைவனது பிள்ளைகள், நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு
நமது விண்ணகத்
தந்தையின் மகிமைக்காக உதவி செய்வதுவும் இறைவனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை.
தேவைப்படுவோருடைய உள்ளத்தில் இறைவன் வசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கும் போது இறைவனிடமே நேரடியாக காணிக்கையை செலுத்துகிறோம்.
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள்."
என்று நம் ஆண்டவரே கூறியிருக்கிறார்.
என்ன உதவி செய்தாலும் அது காணிக்கைதான்.
சுகமில்லாத சிலர் தங்களோடு பேச ஆளின்றி தனியாக உற்சாகமில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பார்கள்.
அவர்களோடு கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவது இறைவனோடு பேசிவிட்டு வருவதற்குச் சமம்.
பாடம் புரியாத மாணவர்களுக்கு fees வாங்காமல் பாடம் சொல்லிக் கொடுப்பதே இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கைதான்.
இவ்வித உதவிகள் செய்யும்போது பதிலுக்கு எதுவும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும்.
"நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.
14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை.
நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்." (லூக். 14:13,14)
நாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைப்பு கொடுக்கும்போது நன்கு செய்பவர்களாக பார்த்துதான் கொடுப்பது வழக்கம்.
அவர்கள் கொடுக்கும் மொய் பணக் கணக்கை குறித்து வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் விழாக்கள் நடக்கும்போது அதை திருப்பிக் கொடுப்போம்.
இந்த கொடுக்கல் வாங்கலால்
விழா நடத்துபவர்களுக்கு பயன் இருக்கலாம்.
ஆனால் கொடுப்பவர்களுக்கு விண்ணகப் பயன் எதுவும் இல்லை.
ஏனெனில் இறையன்பு கருதியோ, பிறரன்பு கருதியோ கொடுக்கவில்லை.
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழக் கூடாது என்று சொல்லவில்லை.
ஒருவருக்கொருவர் உதவி செய்வதும் அன்பின் வெளிப்பாடுதான்.
ஒருவருக்கொருவர் உதவி செய்யும்போது இருவருமே பதில் உதவியை எதிர்பாராமல் செய்ய வேண்டும்.
இருவருமே அன்பின் நிமித்தமே உதவி செய்ய வேண்டும்.
நம்மை நம்மை பிள்ளை காப்பாற்றுவான் எறை எதிர்பார்ப்போடு பிள்ளைகளை வளர்ப்பதால் தான் அநேக பெற்றோர் வயசு காலத்தில் ஏமாந்து போகிறார்கள்.
பெற்றோரின் கடமை பிள்ளைகளை வளர்ப்பது.
பிள்ளைகளின் கடமை பெற்றோரைப் பேணுவது.
பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் நிபந்தனையின்றி அன்பு செய்யும்போது கடமை இயல்பாகவே தன் வேலையைச் செய்யும், எதிர்பார்ப்புடன் அல்ல.
இறை மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் நிபந்தனை இன்றி அன்பு செய்ய வேண்டும்.
நிபந்தனை இன்றி ஒருவருக் கொருவர் உதவ வேண்டும்.
நிபந்தனை இன்றி என்றால்?
வங்கியில் நகையை வைத்துக் கடன் வாங்கப் போனால்
வாங்கிய பணத்தை இவ்வளவு வட்டியுடன், இவ்வளவு காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்
இல்லாவிட்டால் நகை ஏலம் விடப்படும்
என்ற நிபந்தனையுடன் தான் வங்கி கடன் கொடுக்கிறது.
இறைமக்கள் ஒருவருக்கொருவர் உதவும் போது இந்த விதமாக நிபந்தனை எதுவும் இருக்கக்கூடாது.
"நான் உனக்கு இப்போது இந்த உதவியைச் செய்யவேண்டுமானால் நீ பதிலுக்கு எனக்கு தேவைப்படும்போது இந்த உதவியை செய்ய வேண்டும்."
என்பது போன்ற நிபந்தனையுடன் உதவி செய்யக் கூடாது.
என்னால் இயன்ற உதவியை என் அயலானுக்கு இறைவனுக்காகச் செய்கிறேன் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்க வேண்டும்.
நாம் செய்யும் உதவிக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது அன்பு மட்டுமே, நிபந்தனை அல்ல.
கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்.
இறையன்பின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் செய்யும் உதவி இறைவனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை.
அவருக்குப் பிரியமான காணிக்கை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment