Monday, April 11, 2022

இயேசுவின் வாக்குறுதி.

இயேசுவின் வாக்குறுதி.


"தாத்தா, இயேசு கடவுள் என்று
அவரை விசுவசிக்கிற அனைவருக்கும் தெரியும்.

அவருடைய அப்போஸ்தலர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடவுள் என்றாலே துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

உலக முடிவுவரை மட்டுமல்ல,
உலகம் முடிந்த பின்பும் எந்நாளும் இருக்கக் கூடியவர்.

அவர் ஏன் அப்போஸ்தலர்களைப் பார்த்து

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று சொன்னார்?

அதிலும் அப்போஸ்தலர்கள் உலகம் முடியும் வரை வாழப்போவது இல்லை.

ஏன் இயேசு "உங்களோடு இருக்கிறேன்." என்று சொன்னார்?"

",இயேசு விண்ணகம் எய்துமுன் அப்போஸ்தலர்ளுக்கு கொடுத்த செய்தி இது.

அவர்கள் போய் எல்லா இனத்தாருக்கும் நற்செய்தியை அறிவித்து விட்டு அவர்களை தனது சீடர்கள் ஆக்கும்படி அறிவுறுத்துகிறார்.

அவர்கள் உலகம் முடியும் வரை உயிரோடு இருக்கமாட்டார்கள் என்று அவருக்கு தெரியும்.

அவர் கொடுத்த வாக்குறுதி அப்போஸ்தலர்ளுக்கு மட்டுமல்ல,

அவர்களின் இடத்திலிருந்து அவர்களின் வாரிசுகளாக பணி புரியவிருக்கும்

 கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் 
ஆகியோருக்கும் சேர்த்துதான்."

"அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்.

 ஏனெனில் இயேசு அவர்களிடம்,

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் .
சீடராக்குங்கள், என்று சொன்னார்.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுவின் சீடர்கள்தான். 

ஆகவே நம்மோடும் இருப்பதாகத்தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்."

",முற்றிலும் உண்மை. கடவுள் எங்கும் எல்லோரோடும் இருக்கிறார் என்ற வகையில் மட்டுமல்ல,

33 ஆண்டுகள் உலகில் எப்படி வாழ்ந்தாரோ,

(அதாவது, ஆன்மாவுடனும், சரீரத்தோடும்)

அதேபோல் ஆன்ம, சரீரத்தோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  

திவ்விய நற்கருணையை புனித வியாழனன்று அவர் ஏற்படுத்தியதன் காரணங்களுள் இதுவும் ஒன்று.

 குருக்கள் திருப்பலி நிறைவேற்றும்போது அவர்கள் கையில் இயேசு வருகிறார்.

தாய் மரியாளின் வயிற்றில் பிறந்த அதே இயேசு, அதே உடலோடும், அதே ஆன்மாவோடும் குருக்கள் கையில் வருகிறார்.

கன்னி மரியாளும், சூசையப்பரும் தொட்ட இயேசுவின் உடலைத் தொட பாக்கியம் பெற்றவர்கள் குருக்கள்.

கோயிலில் உள்ள நற்கருணை பேழையில் இயேசு நிரந்தரமாக வாழ்கிறார்.

குருக்களின் இல்லமும், கோயிலும் அருகருகே தான் உள்ளன.

ஆகவே இயேசு குருக்களோடு நிரந்தரமாக வாழ்கிறார்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்ற அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்.

நாமும் நம்மால் இயன்ற அளவு அடிக்கடி, முடிந்தால் தினமும்,
திருப்பலியில் கலந்துகொண்டு திவ்ய நற்கருணையை அருந்த வேண்டும்."

"எதற்காக இயேசு விண்ணகம் சென்ற பின்பும் தொடர்ந்து தன் சீடர்களுடன் இருக்கிறார்?"

", கத்தோலிக்க திருச்சபையைத் தவிர மற்ற அனைத்து ஸ்தாபனங்களையும் கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு பெரிய உண்மை தெரியும்.


அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, மத அமைப்புகளாக இருந்தாலும் சரி,

அவற்றை ஆரம்பித்தவர்கள் இறந்த பின்பு,

அவற்றின் நோக்கமும், கொள்கைகளும் மாறிக் கொண்டே இருக்கும்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபை 

அதை நிறுவிய நமது ஆண்டவர் இயேசுவின் நோக்கத்தில் இருந்தும், போதனைகளில் இருந்தும் ஒரு சிறிதுகூட மாற்றம் இல்லாமல்

வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால்,

இறந்தாலும் உயிர்த்த இயேசு இன்னும் உயிரோடு அதோடு இருந்து, அதை வழி நடத்திக் கொண்டிருப்பதால் மட்டுமே.

இயேசுவின் திருச்சபையை உலகெங்கும் பரப்பப் பொறுப்பேற்றிருக்கும் 

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் திருச்சபையின் ஆரம்ப நாளிலிருந்து தினமும் திருப்பலி நிறைவேற்றி, 

அவரோடு கைகோர்த்துதான் திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் தனது சீடர்களை கையாட்களாக வைத்துக் கொண்டு திருச்சபையை வழி நடத்திக் கொண்டிருப்பவர் 

ஒவ்வொரு விநாடியும் நம்மோடு உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நற்கருணை நாதர்தான்.

இயேசுவின் போதனைகளிலும், தேவத்திரவிய அனுமானங்களிலும், அவற்றின் மூலமாக அவர் தரும் அருள் வரங்களிலும் ஆரம்பகாலம் முதல் இந்நாள்வரை எந்தவித மாற்றமும் இல்லை, இனியும் இருக்காது.

தான் நேரடியாக திருச்சபையை வழி நடத்துவதற்காகத்தான் 

தான் தனது உடலோடும், ஆன்மாவோடும் உண்மையாக வாழும் திவ்ய நற்கருணையை தனது சிலுவை மரணத்திற்கு முந்திய நாள் ஏற்படுத்தினார்.

எப்படி இயேசுவின் சிலுவை மரணமின்றி மீட்பு இல்லையோ,

அப்படியே, திவ்வ நற்கருணை இன்றி திருச்சபை இல்லை.

திருச்சபையே இயேசுவின் ஞான உடல்தான்."

"திவ்வ நற்கருணை இன்றி நமக்கு ஆன்மீக வாழ்வே இல்லையே, தாத்தா."

"நமது ஆன்மாவின் மீட்புக்காகத்தான் இயேசு பலியானார்.

பலியிடப் பட்ட பொருளைச் சாப்பிட்டால்தான் பலி முழுமையாகும்.

நமது ஆன்மாவுக்கு உணவும் நற்கருணை நாதர்தான்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment