Wednesday, April 27, 2022

"நான்தான், அஞ்சாதீர்கள்" (அரு.6:20)

, "நான்தான், அஞ்சாதீர்கள்" 
(அரு.6:20)

அப்போஸ்தலர்கள் புயல் காற்று வீசிக் கொண்டிருந்த கடலில் படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவர்களை நோக்கி கடல் மீது நடந்து வந்து கொண்டிருந்த இயேசுவைப் பார்தது பயப்படுகிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"நான்தான், அஞ்சாதீர்கள்"
என்கிறார்.

கடல் என்றாலே ஞாபகத்துக்கு வருவது அங்கு அடிக்கும் அலைகளும், வீசும் காற்றும் தான்.

கடற்காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே

கடல் அலைகளில் நனைவதற்கே அநேகர் கடற்கரைக்குப் போவார்கள்.

ஆனால் அலைகள் பேரலைகளாகவும்,

காற்று புயலாகவும் மாறும்போது யாரும் கடல் பக்கம் போவதில்லை.

சுனாமியின் போது மக்கள் கால்களை நனைக்கச் சென்ற அலைகள்தான் மக்களைத் தேடி கரையைத் தாண்டி வந்தன.

தேடி வந்து அநேகரை அழைத்துச் சென்றன.

இது விஷயத்தில் நாம் வாழும் நிலப்பரப்பான உலகம் கடலைவிட மோசமாக நிலையில் இருக்கிறது.

கடல் வழக்கமாக சிறிய அலைகளுடன் அமைதியாகவே இருக்கும்.

 எப்போதாவதுதான் பேரலைகளும், சுனாமியும், புயலும் ஏற்படும்.

 ஆனால் நாம் வாழும் உலகம் வருடம் முழுவதும் பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

எப்போதாவதுதான் அமைதி நிலவுவது போல தோன்றும்.

அனைவருக்கும் பொதுவான சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் போக,

தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும்,
வித்தியாசம், வித்தியாசமான பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இந்த பிரச்சனைகளை கண்ணோக்குவதில் உலகியல் வாதிகளுக்கும் (Worldly people) 

ஆன்மீக வாதிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும்.

உலகியல் வாதிகள் உலக சம்பந்தமான இலாப, நட்டக் கண்ணோக்கோடு தான் அவற்றை நோக்குவார்கள்.

குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டால் வரவுக்கு மிஞ்சிய செலவையும், கடன் வாங்குதல், கொடுத்தல் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

ஆனால் ஆன்மீக வாதிகள் இயேசுவின் கண்வழியே பிரச்சனைகளை நோக்குவார்கள்.

பிரச்சனைகள் வரும்போது,

அன்று ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குக் கூறிய வார்த்தைகளை நம்மிடமும் கூறுவார்,

"நான்தான், அஞ்சாதீர்கள். பிரச்சனைகளைப் பார்க்காதீர்கள்.

பார்த்தால் அச்சம்தான் ஏற்படும்.

அவற்றின் வழியாக உங்களை நோக்கி வரும் என்னைப் பாருங்கள்.

நான் உலகிற்கு வரும்போது யூதேயா நாட்டில் இல்லாத பிரச்சனைகளா?

யூதர்கள் அனைவரும் உரோமையருக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள்.

தங்கள் நாட்டில் உழைத்து ஈட்டிய பணத்திலிருந்து வரியை அயல் நாட்டுக்குக் கொடுத்தார்கள்.

யூதர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.

பரிசேயர்களும், யூத மத குருக்களும், மறை நூல் வல்லுநர்களும் சாதாரண மக்களை தங்கள் நலனுக்காகப் பயன் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் நான் நற்செய்தியை அறிவித்தேன்.

தீமையிலிருந்து வரவழைப்பவன் நான்.

இந்த பிரச்சனைகளை உலகினரை பாவத்திலிருந்து மீட்க பயன் படுத்திக் கொண்டேன்.

பரிசேயரும், யூத மத குருக்களும், மறை நூல் வல்லுநர்களும் என்னைக் கொலை செய்ததையே உலக மீட்புக்காக பயன் படுத்திக் கொண்டேன்.

பிரச்சனை வாதிகள்தான் உலகை மீட்க எனக்கு உதவினார்கள்.

பிரச்சனைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். 

அவற்றினிடையே உங்களை நோக்கி வரும் என்னைப் பாருங்கள்.

என்னை அழையுங்கள்.

பிரச்சனைகளை வாழ்வின் ஊற்றாக மாற்றிக் காட்டுகிறேன்.

குற்றவாளிகளைத் தண்டிக்க பயன்படும் சிலுவையை மீட்பின் ஊற்றாக நான் மாற்றியதை மறக்காதீர்கள்."

என்று நம்மை நோக்கி இயேசு கூறுகிறார்.

"ஆண்டவரே, ஏழ்மை பிரச்சனை எங்களை வாட்டுகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?"

 "நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், என்னுடைய அரசு உங்களதே.

எனக்காக வாழ்வவர்களுக்கு ஏழ்மை உதவியே செய்யும்.

அதனால்தான் எனக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் ஏழ்மையை எனக்காக ஏற்றுக்கொள்வதாக வாக்களிக்கிறார்கள்.

ஏழ்மையை உலக கண்ணோடு பார்க்காமல் எனது கண்ணோடு பாருங்கள்.

உலகையே படைத்தவன் நான்.

நான் மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவைத்தானே தெரிந்து கொண்டேன்.

ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த நான்,

என்னைப் பெற்ற அன்னையைக் காப்பாற்ற தச்சுத்தொழில் தானே செய்தேன்."

"ஆண்டவரே, உமது சீடர்கள் நாங்கள். உமது நற்செய்தியின்படி வாழவே முயற்சி செய்கிறோம். ஆனால்உமது சீடர்களாக இருக்கிற ஒரே காரணத்திற்காக உலகம் எங்களை அழிக்கத் தேடுகிறதே."
 
"எனது மக்களே, பயப்படாதீர்கள். உங்களை யாராலும் அழிக்க முடியாது.

உங்களது ஆன்மா அழியாதது.
என்றென்றும் என்னோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதற்கென்றே படைக்கப் பட்டது."

"ஆனால் எங்கள் உடல்?"

"எனது சீடர்களாகிய நீங்கள் வாழ்வது ஆன்மாவிற்காகவா உடலுக்காகவா?"

"ஆன்மாவுக்காகத்தான்."

"பின் ஏன் உடலைப்பற்றி கவலைப் படுகிறீர்கள்?

உங்களை அழிக்க நினைக்கும் எதிரிகளால் உங்களை விண்ணகத்துக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்."

"அப்படியானால் இந்த உலகில் நீண்ட நாள் வாழ வழி சொல்ல மாட்டீர்களா?"

"நீண்ட நாள் வாழ வேண்டுமா? என்றென்றும் வாழ வேண்டுமா?"

"என்றென்றும் வாழ வேண்டும்."

"உலகில் அது முடியாது. பிரச்சனைகள் நிறைந்த உலகில் என்றென்றும் வாழ்ந்து என்ன செய்ய போகிறீர்கள்?

விண்ணகத்துக்கு வழி காட்டுவதற்காகத்தானே பிரச்சனைகள் மத்தியிலும் உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." 

"மன்னியுங்கள் ஆண்டவரே,
உமது சீடர்களாக இருந்துகொண்டே இவ்வுலக வாழ்வுக்கு ஆசைப்படுவது தவறுதான்.

இனி விண்ணகத்தையே குறிக்கோளாக கொண்டு வாழ்வோம்."


"ஆண்டவரே, நீங்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவி அதன் தலைவராக இராயப்பரை நியமித்தீர்கள்.

சிலர் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்ளாமல்,

உங்களையும், பைபிளையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிக் கொண்டு,

உங்களையும், பைபிளையும் வியாபாரப் பொருட்களாக மாற்றி,

பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

அவர்கள் நீங்கள் நிறுவிய திருச்சபைக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள்.

நம்மில் அநேகர் அவர்களது வார்த்தைகளில் மயங்கி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்றே தெரிய வில்லை."

"அவர்களும் நமது சகோதரர்களே.

அவர்களையும் நேசியுங்கள்.

அவர்களோடு வாதாடி நேரத்தை வீணாக்காமல், முன் மாதிரிகையாக கத்தோலிக்க திருச்சபையை வாழ்ந்து காட்டுங்கள்.

முதலில் நீங்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
நான் வாழ்ந்தது போலவே ஏழைகளாக வாழ்ந்து காட்டுங்கள்.

பணம் என்னுடைய 12 சீடர்களில் ஒருவனையே கெடுத்து விட்டது உங்களுக்குத் தெரியும்.

அசிசி நகர் பிரான்சிசைப் போல, ஏழையாக என்னை வாழ்ந்து காட்டுங்கள்.

கோடிக் கணக்கில் நன்கொடை வசூலித்து பெரிய பெரிய கோயில்கள் கட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை.

தேவையில் இருக்கும் ஏழைகளுக்குக் கொடுங்கள் என்று தான் சொன்னேன்.

நான் ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்த விழாவை இலட்சக் கணக்கில் செலவழித்து  ஆடம்பரமாகக் கொண்டாடுங்கள் என்று நான் சொல்லவில்லை.

பணம் பொல்லாத சத்துரு. வேலைக்காரன் உருவத்தில் வீட்டிற்குள் நுழையும்.

வீட்டு உரிமையாளர்களையே வேலைக்காரர்களாக மாற்றி விடும்.

நீங்கள் முதலில் ஏழைகளாக என்னை வாழுங்கள்.

பணத்துக்காக என்னைப் பயன் படுத்துபவர்கள் மனம் திரும்பி உங்களோடு வந்து விடுவார்கள்.

நான் எல்லோரையும் நேசிப்பது போல நீங்களும் அவர்களை நேசியுங்கள்.

பிரிந்து சென்றோரை வார்த்தைகளால் அழைப்பதற்குப் பதிலாக,

வாழ்க்கையால் அழையுங்கள்."

"நன்றி, ஆண்டவரே."

அலைகடலில் இயேசு நடந்து வந்தது போல,

பிரச்சனைகள் வழியாக இயேசு நம்மை நோக்கி நடந்து வருகிறார்.

அவருடைய உதவியுடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment