Sunday, April 10, 2022

"தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்: இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான்"(அரு.12:25)

"தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்: இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான்"

(அரு.12:25)


"தாத்தா, நாம் உலகில் உயிரோடு வாழ்வதற்காகத்தானே நம்மைப் படைத்தார்.

அவரே நம் உயிரை நாம் நேசிக்கக் கூடாது என்கிறார்?

'தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்:'

என்கிறார்?"

", விவசாயி கஷ்டப்பட்டு உழைத்து நெற்பயிர் பயிரிட்டு,

அறுவடை காலம் வந்தவுடன் அறுவடை செய்து 

நெல்லை என்ன செய்கிறான்?"

"வீட்டிற்குக் கொண்டு வருகிறான்."

",கொண்டு வந்து?"

"ஆண்டு முழுவதும் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவார்கள்."

", சாப்பிட்ட பின் நெல் இருக்குமா?"

", சாப்பிட்டபின் நெல் இருக்குமா?"

"சாப்பிட்ட பின் எப்படித் தாத்தா இருக்கும்?"

", கஷ்டப்பட்டு உழைத்து நெல்லை உற்பத்தி செய்து அதை வீட்டுக்குக் கொண்டு வந்து அதை இல்லாமல் ஆக்குவதை விட,

ஏற்கனவே இல்லாதிருந்த நெல்லை கஷ்டப் பட்டு உற்பத்தி உற்பத்தி செய்திருக்க வேண்டாமே!"

"என்ன தாத்தா, தெரியாதது மாதிரி பேசுறீங்க?

நெல்லை உற்பத்தி பண்ணுறதே சாப்பிடுவதற்காகத்தானே!

சாப்பிடும் முன் இருக்கிற பொருள் சாப்பிட்டபின் இல்லாமல் தானே போகும்!"

", இன்னும் கேள் ஏன் கடவுள் மனிதனாகப் பிறந்தார்?"

"நமக்காகப் பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்து, 

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, 

விண்ணகம் செல்வதற்காக."

",விண்ணகத்தில் வாழும் கடவுள், மனிதனாகப் பிறந்து, மரித்து, உயிர்தது விண்ணகம் செல்வதை விட

பிறக்காமலே இருந்திருக்கலாமே!"

"அவர் மனிதனாகப் பிறந்து மரித்திருக்காவிட்டால் நமக்கு எப்படி, தாத்தா, மீட்பு கிடைக்கும்?" 

", அப்போ இயேசு எதற்காகப் பிறந்தார்?"

"நமக்காக உயிரைக் கொடுக்க."

",நாம் யார்?"

"அவருடைய சீடர்கள்?"

", சீடர்கள் என்றால்?"

"குருவைப் பின்பற்றி நடப்பவர்கள்."

", நமக்குக் குரு இயேசு தான்.

அவர் நமக்காக தனது உயிரைக் கொடுக்கவே மனிதனாகப் பிறந்தார்.

அப்போ, நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம்?"

"அவருக்காக நமது உயிரைக் கொடுக்க."

",அவருக்காக மட்டுமல்ல.

அவருக்காகவும், நமது அயலானுக்காகவும்.

ஏனெனில் அவரையும், நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை.

கடவுளுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்ய விரும்பாதவன்

கடவுளைவிட தன் உயிரை அதிகம் நேசிக்கிறான்.

அப்படி தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்து விடுகிறான்."

"அதாவது இறை பணியிலும், பிறர் பணியிலும் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

கடவுளைவிட தன்னை அதிகம் நேசிக்கிறவனால் இறைப்பணி  செய்ய முடியாது.

இறைப்பணி  செய்யாவிட்டால் நிலை வாழ்வு வாழ முடியாது. சரியா?"

",எந்த பொருளும் பயன்படுத்தப்படும்போது தன்னை இழந்து விடும் . 

வேறு ஒரு பொருளாக மாறிவிடும்.

காய்கறிகளை நாம் பயன்படுத்தும்போது 

அவை,  நமது உணவாக மாறிவிடும்.

ஒரு Chalk Piece ஐ நாம் பயன்படுத்தும்போது அது எழுத்தாக மாறிவிடும்.

கடவுள் நம்மைப் பயன்படுத்தும்போது 

இவ்வுலகில் வாழும் நாம்

நாம் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறிவிடுவோம்.

கடவுள் நம்மைப் பயன்படுத்த நாம் அனுமதியாவிட்டால் விண்ணக வாழ்வை இழந்து விடுவோம்."

"புரிகிறது.

தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான் 

என்றால்?"

", தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல்  இறைப் பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணிப்பவன் நித்திய காலமும் இறைவனோடு வாழ்வான்.

ஒரு மாங்கொட்டை  மாங்கொட்டையாகவே இருக்க விரும்பினால் மாமரம் வளராது.

மாங்கொட்டையை மண்ணில் போட்டு அது அழிந்தால் தான் மாமரம் வளரும்."

"அது போல?"

",நம்மிடம் உள்ள உலக நாட்டம் முழுவதும் அழிந்தால்தான் 

நம்மில்  விண்ணுலகை நோக்கிய நாட்டம் வளரும்.

ஒரே நேரத்தில் நம்மால்  உலகையும்,  இறைவனையும் சார்ந்து வாழ முடியாது.

உலகைச் சார்ந்து வாழ்பவனால்  இறைவனுக்குப் பணி புரிய முடியாது.

இறைப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவன் உலகைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

மண்ணில் விழுந்த கோதுமை விதை அழிந்தால்தான் அது முளைத்து, பயிராகி பலன் தரும்.

ஒரு கோதுமை மடிந்தால்தான் ஆயிரக் கணக்கான கோதுமைகள் கிடைக்கும்.

நாம் பலன் தர வேண்டும் என்றால் நாம், 

அதாவது, நம்மிடமுள்ள சுயநல எண்ணங்கள், மடிய வேண்டும்.

நம்மில் இறைவன் வளர வேண்டுமென்றால்,

நாம் தேய வேண்டும்.

உலகில் வாழும் நாம் உலகப் பற்றை முற்றிலும் அழிப்போம்.

இறைப் பற்றை வளர்ப்போம்.

நாம் வாழ்வது உலகாக இருந்தாலும்,

விண்ணகத்துக்காகத்தான் வாழ்கிறோம்.

லூர்து செல்வம்








"

1 comment:

  1. அருமையான தேவவசனங்களைக்கொண்டு வாழ்க்கை தத்துவத்தையும் வாழ்வியல் முறைகளையும் பிறர்சிநேக ஆழத்தையும் விளக்த்தையும் கொடுத்துள்ளீர்கள் மாமா.வாழ்க.

    ReplyDelete