Thursday, April 7, 2022

தீமை என்று எதைச் சொல்கிறோம்?

தீமை என்று எதைச் சொல்கிறோம்?

"தாத்தா, உங்கள் வயது என்ன?"

",84."

"அதாவது?"

".அதாவது, நான் இந்த உலகத்துக்கு வந்து 84 ஆண்டுகள் ஆகின்றன."

"அதற்கு முன் எங்கு இருந்தீர்கள்?"

", எனது தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்தேன்."

"அதற்கு முன்?"

", நீயே சொல்லு, பார்ப்போம்."

"சொன்னால் கேட்கத்தான் முடியும், பார்க்க முடியாது."

", இடக்கு வேண்டாம். பதிலைச் சொல்லு."

"தாத்தா, கடவுள் நித்திய காலமாக இருக்கிறார் என்று நேற்று சொன்னீர்கள்.

நித்திய காலமாக நம்மைப் பற்றி திட்டம் போட்டுக் கொண்டிருந்தார் என்றும் சொன்னீர்கள்.

அப்படியானால் நாம் நித்திய காலமாக கடவுளுடைய மனதில்தானே இருந்திருக்கிறோம்."

", உண்மைதான். புதிதாக வீடு கட்ட நினைப்பவன் என்ன செய்வான்?"

"முதலில் அதற்கான திட்டம் (plan) போடுவான். 

திட்டம் போட்டு முடித்தபின் அதை உண்மையாக்குவான்."

", Correct. நாமும் கடவுளுடைய மனதில் நித்திய காலமாக திட்ட வடிவில் இருந்திருக்கிறோம்.

நாம் எப்போது , எந்த நாட்டில், 
எந்த ஊரில், யார் யாருக்கு பிறக்க வேண்டும், 

எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும், 

என்ன வேலை செய்ய வேண்டும்,

 எவ்வளவு சம்பளம் பெற வேண்டும், 

எந்த வருடம், எந்த மாதம், எந்த நாளில், எத்தனை மணிக்கு இந்த உலகை விட்டுப் போக வேண்டும் 

என்ற எல்லா விபரமும் அவரது நித்திய திட்டத்தில் இருக்கும்."

"அதாவது நித்திய காலம்  வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் மனதில் 

நாம் எண்ணமாக (Idea) வாழ்ந்து கொண்டிருந்தோம்.

கடவுள் திட்டமிட்ட காலம் வந்தபோது உண்மையான (Real) மனிதனாக பிறந்தோம்.

சரியா?"

", சரி."

"நாம் என்னென்ன பாவம் செய்ய வேண்டும் என்று....."

",நாம் என்னென்ன பாவம் செய்ய வேண்டும் என்று கடவுள் திட்டம் போட மாட்டார்.

பாவம் நாம் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்திச் செய்வது.

ஆனால் நமது பாவத்தையும் தனது திட்டத்திற்குப் பயன் படுத்திக் கொள்வார்.

ஆதாம் ஏவாள் செய்த பாவத்தைப் பயன் படுத்தி
 தான் மனிதனாகப் பிறக்க திட்டமிட்டார்.

யூதர்கள் இயேசுவைக் கொன்றது பாவம். ஆனால் அதைத்தான் மனித குலத்தை மீட்க பயன் படுத்திக் கொண்டார்.

அவரால் தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க முடியும்."

"இயேசு உலகை மீட்க மனிதனாகப் பிறந்தபோது,

 நம்மை மீட்க விடாமல் தடுக்கவே சாத்தான் அவரைக் கொல்ல திட்டம் போட்டு

பரிசேயர்கள், யூத மத குருக்கள், யூதாஸ் ஆகியோர் மனதில் புகுந்து வேலை செய்தான்.

இயேசு அந்த தீமையிலிருந்தும் நன்மையை வரவழைத்துக் கொண்டார்.

ஐயோ பாவம், சாத்தான். தன்னை அறியாமலே நமது மீட்புக்காக உழைத்திருக்கிறான்!"

", இன்று உலகில் மிகுந்திருக்கும் தீமைகளைக் கூட கடவுள் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்வார்.

என்ன நன்மை என்று உலகம் முடியும்போது தான் நமக்குத் தெரியும்.

ஆனால் தீமைக்குக் காரணம் கடவுள் அல்ல. அதை அனுமதித்திருக்கிறார், அவ்வளவுதான்."

"தீமை என்று எதைச் சொல்கிறீர்கள்?"

", கற்பித்த செபத்தில்,

"தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும்."
என்று சொல்லும் போது,

தீமை பாவத்தைக் குறிக்கிறது.
ஆன்மா பாவமாகிய தீமையோடு விண்ணகம் செல்ல முடியாது.

ஆகவேதான் பாவத்திலிருந்து நம்மை காப்பாற்றும்படி தந்தையை வேண்டுகிறோம்."

"உலகத்தினர் உடலைப் பாதிக்கும் நோய் நொடிகள், துன்பங்கள், வறுமை போன்றவற்றையும், 

அழிவைத் தரக்கூடிய சுனாமி, புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்ற நிகழ்வுகளையும் கூட தீமை என்று தான் சொல்கிறார்கள்."

", ஆன்மீக வாழ்வுக்கும், இறை உறவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பாவமின்றி வாழ ஆசைப்படுவர்.

உடல் சுகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நோய் நொடிகள் இன்றி, துன்பங்கள் இன்றி வாழ ஆசைப்படுவர்.

உலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வுக்காகத்தான்.

ஆன்மா பாவம் என்னும் தீமையிலிருந்து விடுதலை பெற்று வாழ வேண்டும்.

கர்த்தர் கற்பித்த செபத்தில் நான்கு விண்ணப்பங்களை தந்தையிடம் சமர்ப்பிக்கிறோம்.

அவற்றில் மூன்று பாவம் சம்பந்தப்பட்டவை.

இரண்டாவது விண்ணப்பத்தில் பாவ மன்னிப்பு கேட்கிறோம்.

மூன்றாவது விண்ணப்பத்தில் சோதனையில் விழ விடாது காப்பாற்ற வேண்டுகிறோம்.

நான்காவது விண்ணப்பத்தில் பாவத்திலிருந்து இரட்சிக்க வேண்டுகிறோம்.

இயேசு மனிதனாக பிறந்ததே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்கதான்.

மனிதன் தீமைகளாகக் கருதும் நோய்நொடிகள், துன்பங்கள், உடல் வலி, வறுமை, பஞ்சம் போன்றவற்றால்

 நமது ஆன்மாவிற்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

 இவற்றை ஏற்றுக்கொண்டு நமது பாவங்களுக்கு பரிகாரமாக இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்தால்

 பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நமது ஆன்மா ஆண்டவரின் அருள் வரத்தில் வளரும்.

இயேசு உடலுக்கு வேதனை தரும் பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

பரிகாரம் செய்வது நமது பாவ
 நோய் நீங்க ஆன்மீக மருத்துவம் பார்ப்பதற்குச் சமம்.


நமது பாவநோய் நீங்கி நாம் ஆன்மீக சுகத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்

இயேசு நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின் பற்றச் சொன்னார்.

அவரே நமது பாவநோய் நீங்குவதற்காகத்தான் சிலுவையைச் சுமந்து அதிலேயே மரித்தார்.

ஆன்மாவிற்கு வலி தரும் பாவம் மட்டுமே உண்மையான தீமை.

உடலுக்கு வலி துன்பங்கள் உண்மையில் ஆன்மாவிற்கு வலிமையைத் தருகின்றன.

ஆகவே அவை தீமைக்கு மருந்து.

இலவசமாகக் கிடைக்கும் ஆன்மீக மருந்தை ஏன் வேண்டாம் என்று சொல்கிறோமோ தெரிய வில்லை.

சுனாமி, புயல், நில நடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகள்
இறைவனால் அருளப்பட்ட இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டவை.

இயற்கையைப் படைத்தவர் இறைவன். ஆனால் அதை ஆண்டு வருபவன் அவராலேயே படைக்கப்பட்ட மனிதன்.

மனிதன் பயன்படுத்தி வாழ்வதற்காகத்தான் இறைவன் இயற்கையை படைத்தார்.

ஆனால் மனிதன் அதைப் பயன்படுத்தி வாழ்வதற்குப் பதிலாக பாழ்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மரங்களை வெட்டுதல், மலைகளை அழித்தல், சுரங்கங்களைத் தோண்டுதல், சூழ்நிலையை மாசுபடுத்துதல் போன்ற தனது செயல்களால் இயற்கையைப் பாழ்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இன்றைய அநேக இயற்கைச் சீற்ற நிகழ்வுகளுக்குக் காரணம் மனிதனே.

மனிதன் இயற்கையைத் தானே சீரழித்துவிட்டு கடவுள் மேல் பழியைப் போடக்கூடாது.

 கடவுள் மனிதன் செய்வதைப் பொறுமையுடன் அனுமதித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.

மனிதன் பாவம் செய்வதை நிறுத்தி விட்டால் மற்ற எல்லாம் சரியாகிவிடும்.

பாவம் இல்லாத உலகில் இயற்கையும் பத்திரமாக இருக்கும்.

உடல் சார்ந்த துன்பங்களும் இறைவனின் அருள் வரங்களைச் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

பாவத்தை விலக்குவோம். பரிசுத்தமாய் வாழ்வோம்.

விண்ணகத்தை மண்ணகத்திலேயே சுவைத்துப் பார்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment