Tuesday, April 12, 2022

" என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."(அரு. 6:56)இயேசுவின் வாக்குறுதி.(தொடர்ச்சி)

." என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
(அரு. 6:56)

இயேசுவின் வாக்குறுதி.
(தொடர்ச்சி)


அநேக பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகள் புதிய ஏற்பாட்டின் நிகழ்வுகளுக்கு முன் அடையாளம் என்பார்கள்.

இஸ்ரயேலர்கள் எகிப்தில் நிகழ்த்திய பாஸ்கா நிகழ்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டதற்கு முந்திய இரவு

ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்து, அதன் இரத்தத்தை வீட்டில் நிலைக்காலில் தெளித்து விட்டு

அறுக்கப்பட்ட ஆட்டுக் குட்டியை உண்ணவேண்டும் என்பது கடவுளின் கட்டளை.

"நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தைக் காணவே, உங்களை நாம் கடந்து போவோம். இவ்வாறு, நாம் எகிப்து நாட்டைத் தண்டிக்கும்போது, கொள்ளைநோய் உங்கள்மேல் வந்து அழிக்காதிருக்கும்."
(யாத்.12:13)

நிலைக்காலில் தெளிக்கப்பட்ட
இரத்தத்தைப் பார்த்து அவ்வீட்டின் தலைச்சன் பிள்ளையைக் கொல்லாமல் ஆண்டவர் கடந்து போனார்.

இதைத்தான் இஸ்ரயேலர்கள் கடத்தல் (Passover) விழாவாக தங்கள் சொந்த நாட்டுக்கு வந்தபின் ஆண்டுதோறும் கொண்டாடினார்கள்.

அந்த பாஸ்கா திருநாளை ஒட்டிதான் இயேசுவின் பாடுகளும், மரணமும், உயிர்ப்பும் நடைபெற்றன.

அன்று எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப் படுவதற்காக அறுத்து, பலியிடப்பட்டு, உண்ணப்பட்ட ஆட்டுக்குட்டி,

புதிய ஏற்பாட்டில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்பதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் பலியிடப்பட்ட இயேசுவுக்கு அடையாளம்.

அன்று பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி உண்ணப்பட்டது போல 

புதிய ஏற்பாட்டில் நாம் பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக பலியிடப்பட்ட இயேசு உண்ணப்பட வேண்டும்.

பலியிடப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாக இருந்தாலும்,

பலிப் பொருள் உண்ணப்படும் நாளை வியாழக்கிழமையாக வைத்துக் கொண்டார் இயேசு.

"சீடரும் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து பாஸ்கா உணவுக்கு ஏற்பாடு செய்தனர்."

பாஸ்கா உணவின்போது,

"அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்."

"இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."

இந்த வார்த்தைகள் மூலம் இயேசு மறுநாள் பலியிட படவிருக்கும் தன்னை 

முந்திய நாளே தனது அப்போஸ்தலரகளுக்கு உணவாகக் கொடுத்தார்.

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

என்று அவர் 

ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததற்கு மறுநாள்

 ஏற்கனவே மக்களுக்குக் கூறியிருந்த இவ்வார்த்தைகள்

உலகம் முடியும் வரை வாழும் அனைவருக்கும் பொருந்தும்.

திவ்ய நற்கருணை மூலம் 
அவரை உணவாக உட்கொள்கின்ற அனைவருள்ளும் அவர் நிலையாக இருக்கின்றார்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று அவர் அப்போஸ்தலர் களுக்கு கூறிய வார்த்தைகளின் முழுமையான பொருளை அறிய வேண்டுமென்றால் 

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

என்ற இயேசுவின் வார்த்தைகளின் பொருளை அறிய வேண்டும்.

யாரெல்லாம் இயேசுவை உணவாக உட்கொள்கிறார்களோ அவர்களோடு இயேசு நிலையாக இருந்து அவர்களை வழிநடத்துவார்.  

உலகம் முடியு மட்டும் உள்ள மக்கள் அவரை உணவாக உட்கொள்ளும் போது 

அவர் அவர்களுடைய உள்ளத்தில் தனது உடலோடும், ஆன்மாவோடும் தங்குவார்.

உலகம் முடியுமட்டும் நம்மோடு இருப்பார்.

அதற்காகத்தான் அவர் புனித வியாழனன்று திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திவ்ய நற்கருணையை நாம் இரண்டு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்.

1. இயேசு நமக்காக பலியிடப் பட்ட பலிப் பொருள். பலிப் பொருளை பலி கொடுத்தவர்கள் உண்ண வேண்டும். அப்போதுதான் பலி முழுமையாகும்.

2. இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு தங்குவதற்காக, நமது உணவாக நம்மிடம் வருவதற்காக அவரே நிருவிய அருட்சாதனம்.

அன்று கல்வாரி மலையில் இயேசு தனது இரத்தத்தைச் சிந்தி ஒப்புக் கொடுத்த அதே பலியைத்தான்,

இன்று இரத்தம் சிந்தாத விதமாய் குருவானவர் ஒப்புக்கொடுக்கிறார்.

அன்று இயேசுவின் இரத்தம் பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கலவாரி மலை வரை சிந்திக் கிடந்தது.

மிச்சமிருந்த கொஞ்ச ரத்தத்தையும் வீரன் ஒருவன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி வெளியேற்றி விட்டான்.

இன்று அதே ரத்தம்,(The very same Blood) பலி பீடத்தில் பாத்திரத்தில் இருக்கிறது.

நாம் இயேசு பலியிட்ட அதே உடலையும், அதே ரத்தத்தையும்தான் உணவாக உட்கொள்கிறோம்.

புனித வாரத்தில் இயேசுவைப் போலவே நற்கருணை விழாவை வியாழக் கிழமையும், 

சிலுவைப் பலி விழாவை வெள்ளிக் கிழமையும் கொண்டாடுகிறோம்.

நாம் திருப்பலியில் கலந்து கொள்ளும்போது குருவோடு சேர்ந்து பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.

நாம் ஒப்புக்கொடுத்த பலிப் பொருளாகிய இயேசுவை நாம் உணவாக உட்கொண்டால் தான் நமது பலி முழுமை பெறும்.

முழுப் பலியிலும் கலந்து கொள்பவர்கள் தான் திருவிருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

திருவிருந்து நேரத்தில் மட்டும் வந்து கையை நீட்டிக் கொண்டு இருக்கக்கூடாது.

ஆண்டவர் பரிசுத்தமானவர்.
அவரை வரவேற்கும் நமது உள்ளமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

தேவைப் பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்தபின் நற்கருணை வாங்க வேண்டும்.

சாவான பாவத்தோடு நற்கருணை வாங்குவதே சாவான பாவம்.

நற்கருணையை வாங்கியபின் என்ன செய்ய வேண்டும்?

நம்முள் வந்திருப்பது அகில உலகத்தையும் படைத்த கடவுள்.

நம்மைப் படைத்தவரே நம்மிடம் வந்திருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்குள் மகிழ்ச்சி பொங்கும்.

 அந்த மகிழ்ச்சியோடே அவரிடம் பேசுவோம்.

நம்மை படைத்து பராமரித்து வருவதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

அவர் மீது நமக்குள்ள அன்பை தெரிவிப்போம்.

அன்பை அதிகரிக்கும்படி அவருடைய அருள் வரங்களைக் கேட்போம்.

அவருடன் நித்திய காலம் பேரின்பத்தில் வாழ நம்மை வழி நடத்தும்படி மன்றாடுவோம்.

நமது பாவங்களை மன்னிக்கும்படி கேட்போம்.

நமக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதையும் அவரிடம் சொல்வோம்.

அவரும் நம்மிடம் உட்தூண்டுதல்கள் (Inspirations) மூலம் பேசுவார்.

அவற்றின் மூலமே நம்மை வழிநடத்துவார்.

நாம் அவரிடம் பேசுவது போல அவர் பேசுவதையும் கேட்க வேண்டும்.

அவரது உட்தூண்டுதல்களை அன்றைக்கே செயல்படுத்துவோம்.

தன்னையே நமது உணவாகத் தந்து நம்மை ஆன்மீகத்தில் வளர செய்வதற்காகவும், 

உலகம் முடியுமட்டும் தனது திருச்சபையோடு இருந்து அதை விண்ணகப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்காகவும்

இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவை உண்போம், 
என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment