Wednesday, April 13, 2022

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." (மத்.26:39)

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." (மத்.26:39)

"தாத்தா, இயேசு நித்திய காலம் வாழ்பவர். அவருடைய நித்திய கால திட்டப்படியே செயல்புரிபவர். 

அவர் மனிதனாகப் பிறந்தது, வாழ்ந்தது, பாடுகள் பட்டது, மரித்தது, உயிர்த்தது எல்லாம் அவரது நித்திய கால திட்டப்படி தான்.

அப்படியிருக்க, அவரது பாடுகளுக்கு முந்திய நாள்,

 "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." 

என்று தந்தையிடம் வேண்ட காரணம் என்ன? 

மாறாத கடவுளாகிய அவர் தன் திட்டத்தை மாற்ற விரும்ப காரணம் என்ன?"

", அவர் செய்தது எல்லாம் நமக்காகத்தான்."

"நமக்காகவா? நமக்காகத்தான் பாடுகள் பட்டு மரிக்கத் திட்டமிட்டார். நமக்காகத்தான் அதை மாற்ற விரும்பினார் என்கிறீர்கள்!"

",நமக்காகத்தான் அதை மாற்ற விரும்பினார் என்று நான் சொல்லவேயில்லையே.

  அவர் செய்தது எல்லாம் நமக்காக என்றுதான் சொன்னேன்."

"எல்லாம் என்றால் அதுவும் உள்ளே அடங்கிவிடுமே."

", ஆம். எல்லாம் உள்ளே அடங்கிவிடும். நீ அதை மட்டும்தானே கேட்டாய்.


அவர் மனிதனாகப் பிறந்தது, 
வாழ்ந்தது, 
கெத்சமனி தோட்டத்தில் செபித்தது,
பாடுகள் பட்டது, 
சிலுவையில் தொங்கும் போது கூறிய வார்த்தைகள்,
 மரித்தது, 
உயிர்த்தது

எல்லாமே நித்திய கால திட்டம் தான்.

அவர் தன் திட்டம் எதையும் மாற்ற மாட்டார்."

"துன்பக்கலத்தை ஏற்கத் திட்டம் போடும்போது அது அவரைவிட்டு அகலும்படி செபிக்கவும் திட்டம் போட்டாரா?

நீங்கள் சொல்வது எதுவுமே புரியவில்லை."

"அவர் சர்வ வல்லமையுள்ள, பலகீனம் எதுவும் சிறிது கூட இல்லாத கடவுள்.

மனிதனோ பாவங்களும், பலகீனங்களும் நிறைந்தவன்.

கடவுளால் பாவம் செய்ய முடியாது. அவர் மனித சுபாவத்தை ஏற்கும்போது 

பாவம் தவிர 

மனிதனுடைய மற்ற பலகீனங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே திட்டமிட்டார்.

பயம் மனித பலகீனங்களில் ஒன்று. பயப்படுவது பாவம் அல்ல.

இயேசு முழுமையான கடவுள்.
முழுமையான மனிதன்.
 
கடவுள் சுபாவத்தில் பயம் சிறிதும் கிடையாது.

மனித சுபாவத்தில் பயம் இருந்தது.

மனிதருடைய பாவங்களுக்கு பரிகாரமாக மிக அதிகமான வேதனைகள் நிறைந்த பாடுகள் பட தீர்மானித்துவிட்டார்.

பாடுகள் நெருங்கும் போது அவற்றின் மிக அதிகமான வேதனைகளை நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.

இது அவரே முழுமனதோடு ஏற்றுக்கொண்ட பலகீனமான பயம்.

பயத்தின் காரணமாக தந்தையை நோக்கி,

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." என்று செபித்தார்.

ஆனால் அடுத்த வினாடியே,

 "எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 

என்று செபித்தார்.

அவர் அப்படி செபித்ததும் நித்திய கால திட்டப்படிதான். 

இந்த செபத்தினால்,

1. தான் முழுமையான மனிதன் என்பதை நமக்கு புரியவைக்கிறார்.

2.பயம் ஏற்படும்போது நாம் தந்தையை நோக்கி செபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்பிக்கிறார்.

3. "எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று. செபித்தபோது

 நாம் நமது சொந்த விருப்பத்தை அல்ல, இறைவனது விருப்பத்தையே நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார், 

4. இந்த செபத்திற்குப் பின் தைரியமாக எதிரிகளிடம் தன்னை ஒப்படைக்கப் போகிறார். அதன் மூலம் பலகீனத்தை செபத்தின் மூலம் மாற்ற வேண்டும் என்று போதிக்கிறார். 

அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும் நமக்கு ஆன்மீக பாடம் கற்பிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன."

"சிலுவையில் தொங்கும் போது கூறிய வார்த்தைகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்?

அவை எந்த பலகீனத்தை குறிக்கின்றன?"

",என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

அவர்தான் கடவுள். அவரே அவரைக் கைவிடுவாரா?

இங்கேயும் இது மனித பலகீனத்தின் வெளிப்பாடு.

கொஞ்சம் கடுமையாக சுகமில்லாதிருக்கும் ஒருவனுக்கு

 அவனால் இயன்ற மருத்துவ முயற்சி, செப முயற்சிக்குப் பின்னும் சுகம் கிடைக்காவிட்டால் 

இந்த மாதிரி எண்ணம் தோன்றும்.

பைபிளை ஒழுங்காக வாசித்து, தியானிப்பவனுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால்

 கூடவே இயேசு தரும் ஆறுதலும் வரும்.

"தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று அடுத்து கூறிய வார்த்தைகள் ஆறுதலைத் தரும்.

இந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இயேசு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார்.

"பயப்படாதே, மகனே. தந்தை உன்னைக் கைவிடவில்லை.
உன் வரவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இரு.
உனது ஆன்மாவை அவரிடமே ஒப்புக் கொடு."

என்று தன் மேல் அசையாத விசுவாசத்தில் இருப்பவர்களுக்கு இயேசு கூறுவார்."

"அதாவது எந்த சூழ்நிலையிலும் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை சிறிதுகூட விட்டுவிடக்கூடாது என்பதை நமக்கு போதிக்கவே இந்த பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்."

", பாரமான சிலுவையை சுமந்து வரும் போது மூன்று முறை கீழே விழுந்தது அவரது பலகீனம். 

நாம் நமது பலகீனம் காரணமாக ஆன்மீக ரீதியாக எத்தனை முறை கீழே விழுந்தாலும்,

துணிந்து எழுந்து நடக்க வேண்டும் என்பதை நமக்குப் போதிக்கவே உடல் ரீதியாகக் கீழே விழுந்தார்.

எதிரிகள் அவரை விசாரிக்கும் போது ஏற்பட்ட அவமானங்களை மௌனமாக ஏற்றுக் கொண்டது  அவருக்கு மறுமொழி கொடுக்கத் தெரியாமலா?

நமக்காகப் பாடுகள் பட்டபோது அவருக்கு ஏற்பட்ட அவமானங்களை அவர் மௌனமாக ஏற்றுக் கொண்டது போல,

அவருக்காக மற்றவர்கள் நம்மை அவமானப் படுத்தும்போது 

அதை நாம் அவருக்காக மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்குப் போதிப்பதற்காக அவ்வாறு செய்தார்.

இன்று கிறிஸ்தவ விரோத சக்திகள் நம்மை அவமானப் படுத்தும் போது,

இயேசுவின் பாடுகளைத் தியானித்து,

இயேசுவுக்காக எந்த அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலுவைப் பாதைதான் நமது ஆன்மீகப் பாதை.

அதில் இயேசு நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும்.

பாடுகளுக்குப் பின்தான் மரணம்.

மரணத்திற்குப் பின்தான் உயிர்ப்பு.

வெள்ளிக் கிழமை இல்லா விட்டால் ஞாயிற்றுக் கிழமையும் இல்லை என்பதை நமது தவக்காலத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையே நமக்கு தவக்காலம்தான்."

"இயேசுவின் மனித பலகீனம்தான் நமக்கு ஆன்மீக பலத்தைத் தர வல்லது என்பது நன்றாகவே புரிகிறது."

", நிறைவேற வேண்டியது நமது விருப்பமல்ல, விண்ணகத் தந்தையின் விருப்பமே."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment