Tuesday, April 19, 2022

எம்மாவுஸ் அனுபவம்.

எம்மாவுஸ் அனுபவம்.

இயேசுவின் சீடர்களில் இருவர் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு எம்மாவுசுக்கு போய்க்கொண்டிருந்தபோது இயேசுவும் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே அவர்களுடனே பயணிக்கிறார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம் 

என்ன நடந்தது?" என்று கேட்கிறார்.

அவர்கள் இயேசுவின் பாடுகளைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் கூறி, 

"இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம்."

அவர்களுடைய பேச்சில்

தங்களுக்கு விடுதலை அளிப்பார் என்று நம்பியிருந்தவரை 

அவருடைய விரோதிகள் கொன்று விட்டார்கள் என்ற வருத்தம் தெரிந்தது.

அவர்களைச் சார்ந்த பெண்கள் கூறியபடி "அவரைக் காணவில்லை"

, இயேசு உயிரோடு இருக்கிறார் என்று வானதூதர்கள் கூறியதை நம்பியதாகத் தெரியவில்லை.

நம்பியிருந்தால் ஜெருசலேமை விட்டு வந்திருக்க மாட்டார்கள்.

இயேசு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமலேயே 

தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்களை விளக்கினார்.

மெசியா பாடுகளைப் பட்டுதான் மகிமையடையவேண்டும் என்ற உண்மையையும் எடுத்துக் கூறினார்.

அவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களோடு தங்குவதற்காக அவர்களோடு சென்றார்.

அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.

அதாவது அவர்களுக்குத் திவ்ய நற்கருணையை அளித்தார்.

அவரை அவர்கள் உணவாக உண்ட வினாடியே அவரை இயேசு என்று அடையாளம் கண்டுகொண்டார்கள்.

அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அவர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, அப்போஸ்தலர்களுடன் 
தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள்.

பைபிளுக்கும், மற்ற உலகைச் சார்ந்த நூல்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.

மற்ற நூல்கள் நமது அறிவுக்குத் தீனி போடுகின்றன

பைபிள் நமது ஆன்மாவுக்குத் தீனி போடுகிறது.

மற்ற நூல்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைத் தருகின்றன.

பைபிள் நாம் தியானித்து நமது ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படும் விசயங்களைத் தருகின்றது.

பைபிள் தரும் ஒவ்வொரு நிகழ்வும் நமது அன்றாட வாழ்வின் நிகழ்வில் பிரதி பலிக்க வேண்டும்.

எம்மாவுஸ் அனுபவத்தின் இறுதிக் கட்டத்தில், சீடர்கள் திவ்ய நற்கருணையைப் பார்த்ததுமே இயேசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

இந்த அனுபவம் நமது அனுபவமுமாக இருக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை வாங்கும்போது இயேசுவையே வாங்குகிறோம் என்ற முழுமையாக உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.


சீடர்களின் எம்மாவுஸ் அனுபவத்தை பல முறை வாசித்திருப்போம்.

இதே அனுபவத்தை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

இயேசு ஒவ்வொரு வினாடியும் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார்,

பைபிள், குருக்கள் மூலம் பேசும்போது நேரடியாகவே பேசுகிறார், ஏனெனில் பைபிள் இறைவாக்கு என்றும், குருக்கள் அவருடைய பிரதிநிதிகள் என்றும் நமக்கு தெரியும்.

ஆனால் பைபிள் எப்போதுமே கையில் இருப்பதில்லை குருக்களும் எப்போதுமே உடன் வருவதில்லை. 

ஆனால் நாம் செல்லும் இடமெல்லாம் உலகம் இருக்கிறது,

மனிதர்கள் இருக்கின்றார்கள்,

உயிர்ப் பிராணிகள் இருக்கின்றன.

இவற்றின் மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

பேசுவது தானென்று காட்டிக் கொள்ளாமலேயே நாம் நடக்கவேண்டிய சரியான பாதையை காட்டிக் கொண்டிருக்கிறார்.

நாம் அவர் காட்டுகின்ற பாதை வழியே நடக்கின்றோமா, அல்லது அதை உதாசீனப்படுத்திவிட்டு நமது இஸ்டம் போல் நடக்கின்றோமா?

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர், நம்பிக்கை இல்லாதது மட்டுமல்ல அதை மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்பவர் காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார்.

திடீரென்று மேகம் கருத்து மழை வரப்போவது போல் தெரிந்தது.

ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்னல்கள் வெட்டின.

திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு மின்னல் நண்பருக்கு அருகிலிருந்த பனை ஒன்றில் பலத்த இடியுடன் இறங்கியது.

இடிச்சத்தம் கேட்டவுடனே நண்பருடைய வாயிலிருந்து அவரே அறியாமல் வந்த வார்த்தைகள்,

"கடவுளே, காப்பாற்றும்."

அவர் தன் நிலைக்கு வர சிறிது நேரம் ஆகியது.

தன் நிலைக்கு வந்தவுடன் அவரது நினைவுக்கு வந்தன அவர் சொன்ன வார்த்தைகள்.

தன்னையே அவர் நம்ப முடிய வில்லை.

அடுத்து முழு நினைவுடன் அவர் சொன்ன வார்த்தைகள்,

"கடவுளே, நன்றி."

மின்னல் மூலம் இறைவன் பேசினார்.

காட்டை விட்டு வெளியே வரும்போது அவர் முழுமையான கடவுள் பக்தர்.


புனித லொயோலா இஞ்ஞாசியாருடன் கடவுள் பேசியது அவரது காலில் ஏற்பட்ட காயங்களின் மூலமாக.

ராணுவத்தில் போர்வீரராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர் யுத்தத்தின்போது அவரது காலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஓய்வு நேரத்தின்போது இயேசுவையும், புனிதர்களையும் பற்றிய நூல்களை வாசிக்க நேர்ந்தது.

அதன் விளைவாகக் கிடைத்த பக்திதான் அவரை சேசு சபையை ஏற்படுத்தத் தூண்டியது.

காலில் காயங்கள் ஏற்படாதிருந்தால் அவர் ஒரு படைத் தளபதியாக மாறியிருவார்.

புனித பிரான்சிஸ் அசிசியுடன் அவரது தந்தையின் கோபத்தின் மூலமாக இறைவன் பேசினார்.

அவருடைய ஜவுளி கடையை பிரான்சிஸ் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஏழைகளிடம் துணிகளை விற்பதற்கு பதிலாக இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த அவரது தந்தை,

"கடையை விட்டு வெளியே போ.
இனி இங்கே உனக்கு வேலை இல்லை. அப்பா என்று அழைத்துக்கொண்டு திரும்பி வராதே."

என்று கூறி விரட்டிவிட்டார்.

"இனி விண்ணகத்தில் இருக்கிற தந்தையே எனது தந்தை." என்று கூறி வெளியேறியவர் ஏழையாகவே வாழ்ந்து திருச்சபைக்குப் பணி புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.

அதன் விளைவாகத்தான் ஏழைகளின் சபையாகிய பிரான்சிஸ்கன் சபையை நிறுவினார்.

அநேகரிடம் இறைவன் நோய்கள் மூலமாகவே பேசுகிறார்.

நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அவற்றிலிருந்து விடுதலை பெற இறைவனை தேடிவருகிறார்கள்.

இறைவனிடம் வந்தபின் நோய்களை சிலுவையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

கொரோனா நோயினால் இறைவனை தேடிவந்து மனம் திரும்பியவர்கள் அநேகர் இருக்கின்றார்கள்.

இயற்கை பொருள்களைக் கூர்ந்து கவனித்தால் அவை நம்மிடம் அவற்றை படைத்த இறைவனின் சர்வ வல்லமையை பற்றிப் பேசும்.
 
 நம்மை நேசிக்கிற நண்பர்கள் மூலமாக மட்டுமல்லாமல் நம்மை வெறுக்கிற விரோதிகள் மூலமாகக் கூட நம்முடன் செயல் புரிவார்.

நமக்கு முன் உதாரணமாக நமது ஆண்டவராகிய இயேசுவே தனது வாழ்வில் இதை நடத்தி காண்பித்திருக்கிறார்.

இயேசு உலகிற்கு வந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரித்து, நம்மை மீட்பதற்காக.

இப்பணியைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அவருடைய விரோதிகள்.

அவர் நமக்காகப் பாடுகள் படவும், மரிக்கவும் உதவியவர்கள் அவர்கள்தான்.

கிறிஸ்தவ சமயம் பரவ உதவியவர்கள் யார்?

அதன் விரோதிகள்.

வேதசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பார்கள்.

வேதசாட்சிகளை உருவாக்கியவர்கள் யார்?

திருச்சபையை அழிக்க திட்டம் போட்ட மன்னர்கள்.

நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நம்மை வெறுக்கும் விரோதிகள் உண்மையில் நமது நண்பர்கள் தான்.

"உங்களை வெறுப்பவர்களை நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்னும் இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற நமக்கு உதவுபவர்கள் அவர்கள்தானே!

மக்கள் அனைவரிலும் இயேசுவைக் காண்போம்.

அனைவரையும் நேசிப்போம்.

இயேசு அனைவர் மூலமாகவும் செயல்புரிந்து நம்மை மீட்கிறார்.

உயிர்த்த இயேசு தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே நம்மோடு வாழ்கிறார்.

இந்த எம்மாவுஸ் அனுபவத்தை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment