(அரு.6:27)
"தாத்தா!"
", பேரப்புள்ள, ரொம்ப நாளா ஆளக் காணல."
"நான் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறேன்.
நான் வரும்போதெல்லாம் ஏதாவது வாசித்துக் கொண்டு, அல்லது எழுதிக் கொண்டு இருப்பீர்கள்.
தொந்தரவு படுத்தக் கூடாது என்று போய்விடுவேன்."
",அப்போ இன்றைக்கு என்னை தொந்தரவு படுத்துவது என்று தீர்மானித்து விட்டாய்."
"ஆமாமா. ஆனால் தொந்தரவாக நினைக்காதீர்கள். வயசு காலத்தில் பேசுவதற்கு ஆள் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்படுங்கள்."
",ரொம்ப சந்தோஷம். பேசு."
"தாத்தா, உணவு இல்லாமல் வாழ முடியுமா?"
", முடியாது."
"சாப்பிட்ட உணவு அழிந்து தானே போகும்?"
",ஆமா, அழிந்தால் தானே சீரணிக்கும்?"
"உழைத்தால் தானே உணவு கிடைக்கும்?"
", ஆமா."
"ஆனால் ஆண்டவர் உழைக்க வேண்டாம் என்கிறாரே?
",ஆண்டவர் உழைக்க வேண்டாம் என்றுசொல்லவே மாட்டார்.
அவரே பெரிய உழைப்பாளி.
ஒரு உழைப்பாளியையே தனது வளர்ப்புத் தந்தையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அவரே 30 வயது வரை தச்சுத்தொழில் தானே செய்தார்."
"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம் என்று அவர் சொன்னதை அருளப்பர் எழுதி வைத்திருக்கிறாரே!
இந்தா வாசித்துப் பாருங்கள்."
",நான் ஏற்கனவே வாசித்து விட்டேன்.
இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
உழைப்பதற்காக சாப்பிடுகிறாயா?
சாப்பிடுவதற்காக உழைக்கிறாயா?"
"இது சிக்கலான கேள்வி. உழைக்காமல் சாப்பிட முடியாது.
சாப்பிடாமல் உழைக்க முடியாது."
", சுவாசிப்பதற்காக வாழ்கிறாயா?
வாழ்வதற்காக சுவாசிக்கிறாயா?"
"இரண்டில் வாழ்வது தான் முக்கியம். ஆகவே வாழ்வதற்காகவே சுவாசிக்கிறேன்."
இப்போ ஒரு கேள்வி.
உடல் சம்பந்தப்பட்ட உணவு முக்கியமா?
ஆன்மீக உணவு முக்கியமா?"
"இரண்டில் ஆன்மீக உணவுதான் முக்கியம்.''
", ஏன்?"
"உடல் அழியக்கூடியது. என்ன உணவு சாப்பிட்டாலும் அது ஒரு நாள் அழிந்து போகும்.
ஆன்மா அழியாதது. ஆன்மீக உணவினால் அழியாத ஆன்மா பயன் பெறுகிறது.
ஆகவே ஆன்மீக உணவுதான் அதிக முக்கியமானது."
",இப்போது நீ சந்தேகம் எழுப்பிய முழு வசனத்தையும் வாசி."
"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:
முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்.
அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:
ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்"
",இப்போ புரிகிறதா?"
"புரிகிறது."
", என்ன புரிகிறது?"
"அழிந்துபோகும் உணவை விட
முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுதான் முக்கியம்.
ஆகவே அழிந்துபோகும் உணவுக்காக உழைப்பதை விட
முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழைப்பதுதான் முக்கியம்."
", முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவு எங்கே இருக்கிறது?"
"இறைமகன் இயேசுவிடம் இருக்கிறது."
",அவரிடமிருந்து நமக்கு எப்படி கிடைக்கும்?"
"அவருடைய நற்செய்தியின்படி வாழ்வதாலும், அவரை நோக்கி வேண்டுவதாலும் கிடைக்கும்."
", அவர் அளிக்கும் வாழ்வளிக்கும் நிலையான உணவு எது?"
"நமது ஆன்மீக வளர்ச்சிக்காக இயேசு நமக்கு அளிக்கும் அருள் வரங்கள்தான்
அவர் ஒவ்வொரு வினாடியும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் ஆன்மீக உணவு.
அவரைப்பற்றி தியானிக்கும் நமது சிந்தனையும்,
அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கும் நமது சொல்லும்,
அன்பின் நிமித்தம் அவருக்காக நாம் செய்யும் நற்செயல்களும்,
அவரை நோக்கி நாம் செய்யும் செபமும்
அவரிடமிருந்து நமக்கு அருள் வரங்களைப் பெற்றுத் தருகின்றன.
அவர் ஏற்படுத்திய தேவ திரவிய அனுமானங்கள் மூலமும் நமக்கு அருள் வரங்கள் வருகின்றன.
அவர் தரும் அருள் வரங்களால்தான் நாம் அவருடைய உறவில் வளர்கிறோம்."
",அவர் நமக்கு தரும் மிக முக்கியமான உணவை மறந்து விட்டாயே!"
"மறந்துவிட்டேன் என்று யார்
சொன்னது?
"வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சென்னதை எப்படி, தாத்தா, மறக்க முடியும்.
அவர் உயிருள்ள உணவு.
அவரைத்தானே திவ்ய நற்கருணை மூலமாக உணவாக அருந்துகிறோம்.
திரு விருந்தின்போது அருள் வரங்களை தருபவரையே உணவாக உண்கிறோம்.
அவரை உணவாக உண்ணும் நாம் என்றென்றும் வாழ்வோம்.
திவ்ய நற்கருணை ஏழு தேவ திரவிய அனுமானங்களில் ஒன்று.
நம்மைப் பெற்ற தாய் நமக்கு அவளது பாலை மட்டும் ஊட்டினாள்.
ஆனால் நம்மைப் படைத்த இறைவன் தன்னையே முழுமையாக நமது உணவாகத் தருகிறார்."
",இப்போ சொல்லு நாம் எதற்காக உழைக்க வேண்டும்?"
"எந்நாளும் வாழ உதவும் உணவுக்காகவே உழைக்க வேண்டும்.
ஆனாலும் ஒரு சந்தேகம். அழியக்கூடிய உணவு கூட உழைத்தால் தானே கிடைக்கும்.
அதற்காக உழைக்கக் கூடாதா?"
",நீ எங்கே வாழ்கிறாய்?"
"பாவூர்சத்திரத்தில்."
", உன்னுடைய அக்காள்?"
"சென்னையில்."
", உனது அக்காள் மகளுக்கு திருமணம் என்று வைத்துக்கொள்வோம். உனக்கு அழைப்பு கொடுப்பார்களா?"
"அதிலென்ன சந்தேகம்?"
",.சந்தேகம் ஒன்றும் இல்லை. நீ கேட்டதற்கான பதிலை உன் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கேள்வி."
"அழைப்பு கொடுப்பார்கள்.
நானும் அழைப்பை ஏற்று போவேன்."
',எப்படி போவாய்?"
"Bus க்கு டிக்கெட் எடுத்து, Busல் போவேன்."
",நீ டிக்கெட் எடுப்பது பஸ்ஸில் போவதற்கா, சென்னைக்குப் போவதற்கா?"
"பஸ்ஸில் சென்னைக்குப் போவதற்காக."
",சென்னைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் டிக்கட் எடுத்திருப்பாயா?"
"எடுக்கதிருக்க மாட்டேன்."
", இப்போ ஆன்மீகத்திற்கு வருவோம்.
கடவுள் உன்னைப் படைத்தது உலகில் வாழ்வதற்காகவா? விண்ணகத்தில் வாழ்வதற்காகவா?"
"உலகத்தில் வாழ்ந்து அதன்மூலம் விண்ணகம் செல்வதற்காக."
",அதாவது பஸ்ஸில் பயணித்து சென்னைக்கு போவதற்காக மாதிரி."
"இப்போது புரிய ஆரம்பித்து விட்டது.
டிக்கெட் பஸ்ஸில் போவதற்காக. பஸ்ஸில் பயணிப்பது சென்னைக்கு போவதற்காக.
சென்னைக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் பஸ்சுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும்.
உழைத்தால்தான் அழிவுள்ள உணவு கிடைக்கும்.
அழிவுள்ள உணவை சாப்பிட்டால் தான் அழியாத உணவைப் பெற வாழ முடியும், விண்ணகமும் செல்ல முடியும்.
அழிவுள்ள உணவை உண்ணும்போது நாம் விண்ணகம் போவதற்காகத்தான் இந்த உணவை உண்கிறோம் என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும்.
விண்ணக உணவைப் பற்றி கவலைப்படாமல், மண்ணக உணவுக்காக மட்டும் உழைக்கக்கூடாது.
விண்ணகம் செல்லும் நோக்கத்துடன்தான் மண்ணகத்தில் வாழவேண்டும்.
"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்" என்றுஆண்டவர் சொல்லும்போது,
அழியாத உணவை நோக்கமாக கொள்ளாமல் அழிந்துபோகும் உணவுக்காக மட்டும் உழைக்கக்கூடாது என்ற பொருளில் சொல்கிறார்.
நாம் உழைப்பதின் நோக்கம்
முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவைப் பெறுவதற்காக மட்டுமே.
மண்ணுலக வாழ்வின் நோக்கம் விண்ணுலக வாழ்வுதான்.
எதைச்செய்தாலும் இறைவனுக்காக என்று நினைத்துக்கொண்டு செய்தால்
லௌகீக செயல்களும் ஆன்மீக செயல்களாக மாறிவிடும்."
", உனது கேள்விக்கான பதிலை நீயே சொல்லிவிட்டாய்.
இனி எதற்காக உழைப்பாய்?"
"முடிவில்லா வாழ்வை அடையும் நோக்கத்தோடு இவ்வுலகில் வாழ்வதற்காக.
பாவம் தவிர மற்ற எல்லா செயல்களையும் விண்ணக வாழ்விற்காக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.
ஆன்மீக உணவாகிய அருள் வரங்களை ஆண்டவர் அள்ளித் தருவார். அவரையே நமக்கு உணவு தருவார்.
உழைப்போம், அருள் வரங்களைப் பெறுவதற்காக."
லூர்து செல்வம்.