"நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."
(அரு.5:36)
முதன் முதலில் இயேசுவின் இறைத் தன்மைக்கு சான்று பகர்ந்தவர் புனித ஸ்நாபக அருளப்பர்.
அடுத்து இயேசுவே தன் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவைக் குறிப்பிடும் போதெல்லாம் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தினார்.
ஆனால் தங்களை மட்டுமே
பரிசுத்தர்கள் எங்கு நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் வார்த்தைகளை நம்பவில்லை.
ஆகவே
"அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு:
நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே,
நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."
(அரு. 5:36)
என்று இயேசு கூறினார்.
இயேசு வாய்ச் சொல் வீரர் அல்ல, செயல்வீரர்.
அவர் மனதில் உள்ளதைச் சொன்னார், சொன்னதைச் செய்தார்.
அவர் அன்பே உருவான கடவுள்.
நேசியுங்கள் என்று சொன்னார்.
அவரே நேசித்தார்.
தன் தந்தையை நேசித்தார். தன்னைத்தானே நேசித்தார்.
மக்கள் அனைவரையும் நேசித்தார்.
இயேசுவின் செயல்கள் எல்லாம் அவருடைய நேசத்தின் விளைவுகளே.
தந்தையை நேசித்ததன் விளைவு அவரது சித்தத்தை நிறைவேற்ற மனுவுரு எடுத்து நம்மை தேடி வந்தார்.
சென்ற இடமெல்லாம் தனது அன்பைத் தனது செயல்களில் வெளிப்படுத்தினார்.
நோயுற்றோரை குணப்படுத்த இவர் செய்த புதுமைகள் எல்லாம் அன்பின் விளைவுகளே.
அநேகர் அவரைத் தேடிவந்து "குணமாக்கும் ஆண்டவரே" என்று கேட்டுக் குணம் பெற்றார்கள்.
அநேகரை இயேசுவே தேடிச் சென்று குணமாக்கினார்.
பெத்சாயிதா மண்டபத்தில் 38 ஆண்டுகள் சுகமில்லாமல் படுத்திருந்தவனைக் குணமாக்கியது இதற்கு ஒரு உதாரணம்.
நயீன் என்ற ஊரில் ஒரு விதவைத் தாயின் இறந்த மகனை அவராகவே உயிர்ப்பித்து அவளிடம் ஒப்படைத்தார்.
இயேசு செய்த எல்லா புதுமைகளும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.
"விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து,
மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்."
என்று மத்தேயு குறிப்பிட்டபோது
"எல்லா நோயையும் பிணியையும் குணமாக்க"
இயேசு செய்த புதுமைகளை எல்லாம் குறிப்பிடவில்லை.
வெகு நேரம் சாப்பிடக்கூட போகாமல் அவரது செய்தியை கேட்டு கொண்டிருந்தவர்கள் மேல் அவர் இரங்கி
அவரே அவர்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்தார்.
5000 பேருக்கும் 4000 பேருக்கும் உணவளித்தது நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிடப்படாதவை எத்தனையோ!
இது மக்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும், இரக்கத்தையும், கரிசனையையும் காட்டுகிறது.
பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும்படி அவர் போதிக்க மட்டும் செய்யவில்லை. அவரே உணவு அளித்து முன்னுதாரணம் காட்டினார்.
தான் சாப்பிட அவர் எந்தப் புதுமையையும் செய்யவில்லை.
பொது வாழ்வுக்கு வரும்வரை தச்சு வேலை செய்து தான் அவர் பிழைத்திருக்கிறார்.
தனது தாய்க்கு கூட உழைத்து தான் சாப்பாடு கொடுத்திருக்கிறார்.
ஆனால் மற்றவர்களுக்கு புதுமைகள் செய்து உணவு அளித்திருக்கிறார்.
"உங்கள் எதிரிகளை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்று அவர் போதித்தது மட்டுமல்ல,
அவரே அவரை
வெறுத்தவர்களையும் நேசித்தார், அவருக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மையே செய்தார்.
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசைக்கூட "நண்பனே" என்றுதான் அன்போடு அழைத்தார்.
அவரது பாடுகளுக்கும் மரணத்திற்கும் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
அவர் மரணம் அடைந்த பிறகு
"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும்
நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி,
"உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
அவரை வெறுத்தவர்கள் கூட அவரது செயல்களைப் பார்த்து
அவரை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டார்கள்.
"நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று."
என்ற இயேசுவின் சொற்கள்
உண்மையிலேயே உண்மையானவை.
இயேசுவின் செயல்கள் அவர் இறைமகன் என்பதற்கு சான்று பகர்ந்தன.
நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள் என்று கூறிக் கொள்கிறோம்.
நமது செயல்கள் அதற்கு சான்று பகர்கின்றனவா?
சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மை வெறுக்கும் ஒருவர் நம்மிடம் வந்து நம்மை சண்டைக்கு இழுக்கிறார்.
வேண்டாத வார்த்தைகளைப் பேசி நமது உணர்ச்சிகளைத் தூண்டுகிறார்.
இயேசு பிலாத்துவின் முன் அவமானப் படுத்தப்பட்டபோதும் அமைதியாக இருந்தாரே அதை நினைத்து நாம் அமைதியாக இருக்கிறோமா?
அல்லது பதிலுக்குப் பதில் பேசி சண்டை போடுகிறோமா?
அமைதியாக இருந்தால் நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள்.
நமது அமைதிதான் நாம் இயேசுவின் சீடர்கள், கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று.
இது ஒரு உதாரணம்.
நம்மோடு வாழ்பவர்கள் நமது செயல்களைப் பார்த்து,
"உண்மையிலேயே இவர் இயேசுவின் சீடர் தான்" என்று கூறவேண்டும்.
இயேசுவின் போதனைகளையும்,
நமது ஒவ்வொரு செயலையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
உண்மையை உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.