"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய்(Perfect) இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
********************--******
இயேசுவின் இந்த அழைப்பை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பொருள்புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆன்மீக வாழ்வில் நிறைவு என்றால் என்ன?
What do we mean by perfection in our spiritual life?
குடும்ப வாழ்விலும் சரி,
சமூக வாழ்விலும் சரி,
அரசியல் வாழ்விலும் சரி,
ஆன்மீக வாழ்விலும் சரி,
இரண்டு வகையினர் உண்டு.
ஒருவகை வெளித்தோற்றத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
வெளிப்புறச் செயலுக்கும், அது குறித்துக் காட்டக்கூடிய உட்புற உண்மைக்கும் சம்பந்தமே இருக்காது.
இன்னொரு வகையினர் உட்புறத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
உட்புறம் வெளிப்புறத்தில் தெரிகிறதா என்பதுபற்றி கவலைப்படமாட்டார்கள்.
ஏனெனில் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை.
உதாரணத்திற்கு,
உடலை ஒறுத்தல்,
அடிக்கடி உண்ணா நோன்பு இருத்தல்,
உடலுக்குக் கசையடிகள் போன்ற தண்டனை கொடுத்தல்,
மணிக்கணக்காய் செபம் சொல்லுதல்,
செபக்கூட்டங்களில் கலந்துகொள்தல்,
ஒழுங்காகப் பூசைக்குச்சென்று நன்மை வாங்குதல்,
துறவிகள் கட்டளை செபம் சொல்லுதல்
சபை ஒழுங்குகளை அனுசரிதத்தல்
ஆகியவை
பக்தி முயற்சிகளில் சில.
ஒருவன் மனதார பாவங்ளுக்காய் வருந்தி அதற்குப் பரிகாரமாக
உடலை ஒறுத்தல்,
அடிக்கடி உண்ணா நோன்பு இருத்தல்,
உடலுக்குக் கசையடிகள் போன்ற தண்டனை கொடுத்தல்
போன்ற தவ முயற்சிகள் செய்தால்
அவன் நிறைவை நோக்கிப் பயணிக்கிறான்.
எந்தவித மனவருத்தமின்றி பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக மட்டும்,
அல்லது வெறும் பழக்கம் (Habit) காரணமாக செய்தால்,
அவன் ஆன்மீக வாழ்வே வாழவில்லை.
அவன் செயல்கள் வெறும் செயல்கள் மட்டுமே.
உள்ளும் புறமும் இணைந்து செய்தால்
மேற்குறிப்பிடப்பட்ட
தவம்,
ஒறுத்தல்கள்,
செபம்,
துறவறவாழ்வு
ஆகியவை நமது ஆன்மீக வாழ்வில் நிறைவை நோக்கிப் பயணிக்க பெரிதும் உதவுகின்றன.
அவற்றால் நமது ஆன்மீக வாழ்வில் பாவத்தை எதிர்த்து நிற்கவும், புண்ணியங்களைச்
செய்யவும் பலம்(Strength) நிறைய கிடைக்கிறது.
ஒறுத்தல் முயற்சிகள் செய்யும்போது
நமது உடல் இறைவனுக்கு ஏதிராகச்
செயல்பட்டுவிடக்கூடாது என்று
அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறோம்.
தனிமைவாழ்வில் அமைதித்தியானத்தில் வாழ்வோர்
பாவச் சோதனைக்குள் விழாதவாறு இறைவனையே நினைத்து வாழ்கிறார்கள்.
இறைப்பணிக்குத் தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்கள்,
தங்களுக்காக அல்ல இறைவனுக்காகவே வாழ்கிறார்கள்.
இயேசுவின் பாடுகள், மரணம் பற்றி ஆழ்ந்து தியானிப்பவர்கள்
தங்களின் உண்மையான பாவநிலையையும், இறைவனின் அளவற்ற அன்பையும் உணர்வதோடு
இறைவனை மென்மேலும் நேசிக்கவேண்டிய மனப்பக்குவத்தையும் பெறுகிறார்கள்.
இயேசுவின் பாடுகளை உள்ளார்ந்த பக்தியோடு தியானிப்பவர்கள் தங்கள் சிலுவைகளை இயேசுவுக்காக,
இயேசுவின் மனப்பக்குவத்தோடு சுமக்கும் ஆற்றலையும் பெறுகிறார்கள்.
ஆக,
தங்களைப் பக்தியுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கோ
அல்லது வெறும் பழக்கம் காரணமாகவோ (Habit)
பார்வைக்கு மட்டும் பக்திமான்கள் போல் நடப்பவர்கட்கும் நிறைவுக்கும் சம்பந்தமே இல்லை.
உள்ளும் புறமும் இணைந்து செயல்படும் பக்தியாளர்கள் நிறைவை நோக்கி பயணிக்கிறார்கள்.
நிறைவாவது என்ன?
What is perfection?
இறைவன் ஒருவரே நிறைவானவர்.
தன்னுடைய அன்பு, நீதி, ஞானம், வல்லமை மற்றும் அனைத்து பண்புகளிலும் அளவற்றவர்.
அளவுள்ள நாம் எவ்வளவு முயன்றாலும் அளவில்லாதவர்களாக ஆகமுடியாது.
ஆயினும் எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்கு முழு வளர்ச்சி பெறலாம்.
தம்ளரால் கடல் அளவு நீரைக்கொள்ள முடியாது,
ஆனால் அதனால் எவ்வளவு நீரைக்கொள்ள முடியுமோ
அந்த அளவு நீரால் அதை நிறப்பிவிட்டால்
அதன் அளவுக்கு அது நிறைவானதுதானே!
நாம் நம் விண்ணகத் தந்தையைப்போல நிறைவாக ஆகவேண்டுமானால்
விண்ணகத் தந்தையின்
அன்பு, கருணை, ஞானம் போன்ற பண்புகளால் நம்மை
எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு
நிறைவாக்க வேண்டும்.
அப்பண்புகளுக்கு எதிரான, அவற்றோடு ஒத்துப் போகாத எந்த பண்பின் ஒரு சிறு துளி கூட நமக்குள் இருக்கக்கூடாது.
உதாரணத்திற்கு தந்தை மனுக்குலம் முழுமையும் அன்பு செய்தார்.
இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரைக்கூட அளவற்ற விதமாய் அன்பு செய்தார்.
அவரை நம்பாதது மட்டுமன்றி அவரைக் கெடுத்துப் பேசித்திரியும்
மத விரோதிகளையும்கூட அன்பு செய்து அவர்களைக் காப்பாற்றி வருகிறார்.
அவரது அன்பு மழை நல்லவர், கெட்டவர் வேறுபாடின்றி எல்லோர் மேலும் பொழிகிறது.
நமது அன்பும் அதேபோன்று இருக்கவேண்டும்.
யாராவது நம்மை கொல்ல நினைத்தால் அவரையும் நேசித்து, அவரை மன்னிக்க வேண்டும்.
நம்மை அவமானப் படுத்துபவர்கள்மீதும் நமக்குக் கோபம் வரக்கூடாது.
சுருக்கமாகச் சொன்னால் இயேசுவின் குணங்களை எல்லாம் நாமும் கொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய நிறைவை அடைய நாம் என்ன செய்யவேண்டும்.
1.கடவுள் அளவற்ற நல்லவர், வல்லபர் என்பதையும்
நாம் அவரோடில்லாவிட்டால் ஒன்றுமில்லாலாவர்கள் என்பதையும்,
அவர் அருள் இல்லாவிட்டால் நம் மனது பாவத்தையே நாடும் என்பதை உணரவேண்டும்.
2.இறைவனை நமது முழு சக்தியோடு நேசிக்க வேண்டும்.
அவருக்காக மனுக்குலம் முழுமையும் நேசிக்க வேண்டும்.
3இறைவன் சித்தம்தான் நமது சித்தமாக இருக்க வேண்டும்.
இறைவனின் சித்தம்மட்டும் புவியில் நிறைவேற நாம் பாடுபட வேண்டும்.
We should submit ourselves fully to the will of God.
4.நம்மை முற்றிலும் ஒறுத்து இறைவனின் மகிமைக்காவே வாழவேண்டும்.
We must live not for ourselves, but for the glory of God.
சுருக்கமாகச் சொன்னால் நம்மை தந்தையோடு ஐக்கியமாக்கிவிட வேண்டும்.
ஐக்கியமாக்கிவிட்டால் தந்தை நினைத்ததை நாமும் நினைப்போம்.
தந்தை விரும்புவதை மட்டுமே நாமும் விரும்புவோம், செய்வோம்.
"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக." என்று செபிக்கும்போது,
"அப்பா, மோட்சத்திலுள்ள உமது பிள்ளைகள்(புனிதர்கள்) உமது சித்தத்தை நிறைவேற்றுவதுபோல
இங்கு உமது பிள்ளைகளாகிய நாங்கள் உமது சித்தத்தை நிறைவேற்ற வரம் தாரும்."
என்று செபிக்கிறோம்.
நமது சிந்தனையாலும்,
சொல்லாலும்,
செயலாலும் தந்தையோடு ஐக்கியமாகிவிட்டால், இயேசுவின் ஆசையை நாம் நிறைவேற்றிவிடலாம்.
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய்(Perfect) இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
ஒரு நாள் வரும்.
அப்போது நமது நிறைவான விண்ணகத் தந்தையுடன்
நித்தியமாக ஐக்கியமாகிவிடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment