Thursday, March 28, 2019

சாத்தானின் புலம்பல்.

சாத்தானின் புலம்பல்
*********************

"என்னை இப்படிப் புலம்ப வச்சிட்டாங்களே படுபாவிப்பயலுக!

எத்தன நாள் நெருப்புன்னு பார்க்காம உட்கார்ந்து

அகில பிரபஞ்சத்திலேயே தற்பெருமைக்குப் பேர்போன என் மூளையைக் கசக்கிப்பிழிஞ்சி திட்டம் வகுத்து,

கடவுளே நித்திய காலமும் திட்டம்போட்டுப் படைத்த ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி,

பாவம் செய்ய வச்சி,

துன்பத்தையும், சாவையும் இன்ப வனத்துக்குள் புகுத்தினேன்.

கடவுளால துன்பப்படவும் முடியாது, சாகவும் முடியாதுங்கிறது தெரிஞ்சிதானே

அவர் படைத்த மனினாவது துன்பப்பட்டுச் சாவட்டுமே,

செத்து நம்மிடமே வரட்டுமே,

வந்து நித்திய காலமும் நம்மோடே கிடந்து அவதிப்படட்டுமேன்னுதானே இப்படிச் செஞ்சேன்.

ஏதோ ஒரு பொம்பிள்ள என் தலையை  நசுக்குவாள்னு அண்ணைக்கு கடவுள் போட்ட சாபத்தக்கூட அண்ணைக்கு பெருசா நினைக்கல.

என் தலைய நசுக்கிய அந்த கன்னிப்பொண்ணு வயித்துல கடவுளே மனுசனா உற்பவித்து, பிறந்தவுடனேயே எனக்குப் பகீர்னு ஆயிடிச்சி.

துன்பமே பட முடியாத கடவுள் ஏன் துன்பப்படக்கூடிய மனுசனா பிறக்கணும்?

அதிலும் துன்பம் நான்
புகுத்தியது!

நான் புகுத்திய துன்பம் அவருக்கு எதற்கு?

Something wrong!

பிரச்சனை முத்துததுக்கு முன்னாலே கிள்ளி எறியணும்.

உடனே ஏரோதுக்குள் புகுந்து ஏவி விட்டேன். 

அவனும் குழந்தையை கொல்லும் முயற்சியில் இறங்கினான்.

ஆனால் கொல்லப்படவேண்டிய குழந்தை யாரென்று  ஏரோதுக்குத் தெரியாது,

ஆகவே சம வயதுள்ள எல்லா யூதக் குழந்தைகளையும் கொன்று குவித்தான்.

அக்குழந்தையும் செத்திருக்கும் என்று நிம்மதி அடைந்தேன்.

ஆனால் முப்பது ஆண்டுகள் கழித்து என் நிம்மதி ஆட்டம்கண்டது.

யோர்தான் நதியில் அருளப்பர் கையினால் ஞானஸ்நானம் பெற்ற ஒரு ஆள் மேல் எனக்குச் சந்தேகம் வந்தது. 

குழந்தை சாகாமல்  வளர்ந்திருக்குமோ?

அந்த ஆளைப் பின்தொடர்ந்தேன்.

அந்த ஆள் 40 நாட்கள் நோன்பிருந்து பசியாய் இருக்கும்போது அவரைச் சோதிக்க ஆரம்பித்தேன்.

மூன்றாவது சோதனையில்,

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே" 

என்று அவர் கூறியபோது  அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இனி அடுத்த வேலை அவர்செய்ய வந்த வேலையைச் செய்யவிடாமல் தடுக்கணும்.

அதற்கு ஒரே வழி அவரைக் கொல்வதுதான்.

முன்பு போல் அவசரப்படக்கூடாது.

கொஞ்சம் போதிக்க விடுவோம்.

அதற்குள் கொலை செய்ய ஆட்களைத் தயாரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் அவரது நற்செய்தியை அறிவிக்க விட்டேன். 

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய சீடனாகிய யூதாசின் மனதில் பண ஆசையை வளர்த்து,

பணத்திற்காக அவனுடைய கடவுளையே காட்டிக்கொடுக்கும் அளவுக்குத் தயாரித்துவிட்டேன்.

யூத குருக்கள், பரிசேயர், சதுசேயர் மனத்திலும் பொறாமையையும்,  கொலை வெறியையும் ஏற்றினேன்.

நான் திட்டமிட்டபடி

யூதாஸ் உதவியால் இயேசு பிடிபட்டார்.

அடுத்து அடிக்கப்பட்டு,

முண்முடி சூட்டப்பட்டு,

சிலுவை ஏற்றப்பட்டு

சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு

கொலையும் செய்யப்பட்டார்.

எதிரிதான் இறந்துவிட்டாரே பின் ஏன் புலம்புகிறாய் என்று கேட்கிறீர்களா?

அந்த தேவமனுசன் நான்  புலம்புவதற்கென்றே திட்டம் போட்டு இதைச் செய்திருக்கிறார்.

நான் புகுத்திய துன்பத்தையும்பட்டு,

மரணத்தையும் சந்தித்ததால்

அவர் ஆட்டம் க்ளோஸ்

என்று நான் நிம்மதி அடைந்த மூன்றாம் நாள்,

அவர் உயிருடன் எழுந்து

என்னைப் புலம்ப வைத்து விட்டார்.

நற்செய்தியை அறிவிக்க ஆரம்பிக்குமுன்பே கொல்லாமல் விட்டது என் தப்பு

என்று நான் எண்ண ஆரம்பிக்கும்போது

இடி மாதிரி ஒரு செய்தி வந்தது!

அவர் மனிதனாய்ப் பிறந்ததே துன்பப்பட்டு, மரிக்கத்தானாம்!

துன்பப்பட்டு, மரித்து மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யதான் மனிதனாகவே பிறந்தாரம்!

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி புலம்புவேன்?

நான் ஆதாமையும், ஏவாளையும் ஏமாற்றி புகுத்திய தீமைகளான

துன்பங்களையும், மரணத்தையும்

என்னை வெல்வதற்கான கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயேசு!

அதாவது நான் தீமைகளாளாகப் புகுத்திய துன்பங்களையும், மரணத்தையும்

நன்மைகளாக, ஆசீர்வாதங்களாக மாற்றியிருக்கிறார்!

இனி இயேசுவுக்காகத் துன்பப்படுபவன் எவனும் இயேசுவுக்குச் சமமாகிவிடுவான்.

மரணம் அடைபவன் மோட்சத்திற்குச் செல்வான்!

நான் தீமையாகப் புகுத்திய மரணத்தை இயேசு மோட்சத்தின் கதவாக மாற்றிவிட்டார்!

கதவைத் திறந்தால் மோட்சம்!

நானே இரட்சண்ய வேலையில் இயேசுவுக்கு
உதவியிருக்கிறேன்!

எது நடந்துவிடக்கூடாது என்று எண்ணினேனோ அது நடக்க நானே உதவியிருக்கிறேன்!

அவர் சர்வ வல்லபர் எனக்குத் தெரியும்.

ஆனால் தீமையினின்றும்
நன்மையை வரவழைப்பார்

என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது!

என் உதவியுடனே மோட்ச வாசலைத் திறப்பார்

என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது

இப்போதுதான் அவர் ஏன் தீமையை அனுமதிக்கிறார் என்று புரிகிறது.

இனிப் புரிந்து என்ன பயன்?

இனி புலம்பிதான் என்ன பயன்?"

"ஹலோ! சாத்தான் கொஞ்சம் புலம்புவதை நிறுத்தீரங்களா? "

"யாருய்யா நீ? மனுசனா? "

"பார்த்தவுடனே தெரியல? யாருட்ட புலம்புற?

'படுபாவிப்பயலுக'ன்னு யாரச் சொன்ன?"

"நான் புலம்ப ஆரம்பிச்சவுடனே வந்திட்டியா?

ஒட்டுக் கேட்டுக்கிட்டிருந்தியா?"

"ஒட்டாம நின்னுதான் கேட்டுக்கிட்டிருந்தேன்.

யாரப்  படுபாவிப்பயலுகன்னு சொன்ன?"

"மனுசங்களத்தான் சொன்னேன்.

பைசாவுக்குப்பெறாத படுபாவிப்பயலுக உங்களக் காப்பாற்ற சர்வ வல்லப கடவுள் மனுசனாப் பிறக்கணுமா?

என்ன இப்படிப் புலம்ப வைக்கணுமா?

சம்மனசுக்கள் உங்களவிட எவ்வளவு உயர்ந்தவங்க தெரியுமா?"

"தெரியும். சம்மனசா இருந்திருக்க வேண்டியதுதான.  ஏன் சாத்தானா மாறுன?"

"நாங்களும் பாவம் பாவம் செய்தோம்.

நீங்களும் பாவம் செஞ்சீங்க.

உங்களுக்கு மட்டும்தான இரட்சகர் கிடைச்சிருக்காரு."

"முட்டாள்! முட்டாள்! நீங்க கொழுத்துப்போய் பாவம் செஞ்சீங்க.

நாங்க ஏமாந்து போய் பாவம் செய்தோம்.

இருந்தாலும், ரொம்ப நன்றி."

"நன்றியா? யாருக்கு?"

"உனக்குதான்."

"எனக்கா?  எதுக்கு? "

"நீ எங்கள ஏமாற்றாட்டா எங்களுக்கு இவ்வளவு பெரிய இரட்சகர் கிடைத்திருப்பாரா?

கடவுளே மனுசனா பிறந்திருப்பாரா?

அவரே எங்களுக்கு உணவாகக் கிடைத்திருப்பாறா?

இதற்கெல்லாம் நீ ஏமாற்றி,
நாங்க பாவம் செய்ததுதானே!

பாவம் ஒரு தீமைதான்.

ஆனால் அதிலிருந்தும் கடவுள் மிகப் பெரிய நன்மையை வரவழைச்சிட்டார் பார்த்தியா?"

"அப்போ நான்தான் ஏமாந்து போனேனா?

அது எப்படி நான் விட்ட அம்பு என்மேலே பாயுது?"

"ஹலோ!  சாத்தான்! Bye! Bye "

"ஹலோ! மனுசா! ஏமாந்தாலும் விடமாட்டேன்.

கடைசி வரை முயற்சிப்பேன்.

இயேசு பாவிகளத்தான தேடிவந்தாரு.

நான் பரிசுத்தவான்களத் தேடிப்போறேன்."

"எதுக்கு?"

"அவங்கள பாவிகளாக மாற்றுவதற்கு."

"பாவிகள தேடித்தான் இயேசு வந்தாரு.

நீயே பாவிகள Supply பண்ணப்போறியா? "

"என் குணம் கெடுப்பது. அதை யாராலும் மாற்ற முடியாது."

"இயேசுவின் குணம் இரட்சிப்பது. அதையும் யாராலும் மாற்ற முடியாது."

இறுதி வெற்றி இயேசுவுக்கே!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment